பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பயிற்சி முகாம்:

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பயிற்சி முகாம்:
திருச்சியில், சமூகநலத்துறையின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பாக பயிற்சியாளர் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி அவர்கள் தலைமையில் நேற்று (02.12.2020) நடைபெற்றது.
பயிற்சி முகாமை தொடங்கி வைத்து மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி தெரிவித்ததாவது:

பெண்களுக்கு நிகழும் வன்கொடுமைகள், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும் அவற்றிற்கு பெண்களுக்குரிய இலவச உதவி எண்கள்
181,1091, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த இலவச உதவி எண் 1098, காவலன் செயலி,அவற்றிற்கு தீர்வு வழங்குவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு பல்வேறு துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு கிராமத்தில் குழந்தை திருமணங்கள் நடைப்பெறுவது குறித்து தகவல் பெறப்பட்ட உடன் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி சம்மந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு செல்வதுடன் மட்டும் அல்லாமல், காவல் துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அந்த கிராமத்தில் அடுத்த 5 முதல் 10 வருடங்களுக்கு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை முழுமையாக தடுக்க முடியும்.
குழந்தை திருமண தடுப்பு குறித்த இலவச சைல்டு லைன் எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கருவுற்றால் அவர்களின் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு மற்றும் ஊட்டசத்து குறைபாடு போன்ற பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவதன் விளைவு குறித்து பொது
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் பாலின விகிதம் 2018-19-ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற
விகிததிலும், 2019-20-ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்ற விகிதத்திலும் உள்ளதால், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாசாரத்தை உயர்த்துவற்கு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாசாரத்தை அதிகரிப்பதற்கும், பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கும் அரசின்
மூலம் செயல்படுத்தபடும் பல்வேறு திட்டங்களான தமிழ்நாடு அரசு தொட்டில் குழந்தை திட்டம்ரூபவ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், திருமண நிதியுதவி திட்டம், கிராமபுற பெண்களின் திறமையை மேம்படுத்துவற்கும், வேலைவாய்பினை உருவாக்குவதற்கும் தொடங்கப்பட்டுள்ள மகிளா சக்தி கேந்திரா திட்டம் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக சமூக நலத்துறையின் மூலம் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு தலா 25,000 வீதம் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பீலான வைப்பீட்டு பத்திரம் வழங்கப்பட்டது. மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாநில மகளிர் ஆணைய தலைவி அவர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
