ஆலயம் அறிவோம்

0
full

ஆலயம் அறிவோம்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான்.

poster

நம்மாழ்வார் மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார்.

திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் தருக்கோவில்
மூலவர் – வைத்தமாநிதி பெருமாள், நிஷேபவித்தன்

தாயார் – குமுதவல்லி, கோளூர்வல்லி

உற்சவர் – நச்சியப்ப பவித்திரர்

விமானம் – ஸ்ரீகர விமானம்

தீர்த்தம் – குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி )

திருநாமம் – ஸ்ரீ கோளூர்வல்லீ ஸமேத ஸ்ரீ வைத்தமாநிதி ஸ்வாமிநே நமஹ:

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்பெயர்: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்

புராணபெயர்: திருக்கோளூர்

மாவட்டம்: தூத்துக்குடி

மாநிலம்: தமிழ்நாடு

மங்களாசாசனம்_பாடியவர்கள் : நம்மாழ்வார் , மணவாள மாமுனிகள

வழித்தடம்:

ஆழ்வார் திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சற்றே தென்கிழக்கில் உள்ளது. ஆழ்வார் திருநகரிலியிருந்து பேருந்து வசதி இருப்பினும் நடந்து சென்று சேவித்து வரலாம். இது ஒரு மிகச் சிறிய கிராமம்.

பாசுரம்:

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.
-திருவாய்மொழி (3293)

நம்மாழ்வார் மட்டும் 12 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பாசுரம் பதவுரை:

உண்ணும் சோறு – உண்டு பசீதீர்க்க வேண்டும் படியானசோறும்
பருகும் நீர் – குடித்து விடாய் தீர்க்க வேண்டும் படியான நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் – தின்று களிக்கவேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப்பொருள்களும்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே – (எனக்கு) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே யென்றுபலகாலும் சொல்லி கண்கள் நீர்கள் மல்கி – கண்ணீர தாரைதாரையாகப் பெருகப்பெற்றிருந்த

என் இள மான் – இளமான் போன்ற என்மகள்
மண்ணினுள் – பூமண்டலத்துள்ளே
சீர் வளம் மிக்கவன் – சீரும் சிறப்பும் மிகுந்தவனான
அவன் – அப்பெருமானுடைய
ஊர் – திவ்யதேசத்தை
வினவி – விசாரித்துக்கொண்டு சென்று
புகும் ஊர் – சேர்ந்தவிடம்
திருக்கோளூரே – திருக்கோளூராகவே யிருக்க வேணும்
திண்ணம் – இதில் ஸந்தேஹமில்லை

பாசுரம் விளக்க உரை:

படுக்கைத்தலையிலே மகளைக்காணாத திருத்தாயார் ‘என்மகள் திருக்கோளூர்க்குத்தான் சென்றிருக்கவேணும்‘ என்று அறுதியிட்டுக் கூறுகின்றாள். ஆழ்வாருடைய உண்மையான தன்மை முன்னிரண்டடிகளிற் கூறப்படுகின்றது. ஆசர்யஹ்ருதயத்தில் ரிஷிகளிற்காட்டில் ஆழ்வார்க்கு நெடுவாசியருளிச் செய்யுமிடத்து “அவர்களுக்குக் காயோ டென்னுமிவையே தாரகாதிகள், இவர்க்கு எல்லாங் கண்ணனிறே“ என்றருளிச்செய்துள்ள சூர்ணை இங்கு அநுஸந்தேயம்.

ரிஷிகளானவர்களுக்கு காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து என்றும் வீழ்கனியு மூழிலையு மென்னுமிவையே நுகர்நதுஎன்றும் சொல்லுகிறபடியே பலமூல பத்ரவாயு தோயங்களே தாரக போக்ஷக போக்யங்களா யிருக்கும், க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் என்னும்படியான இவ்வாழ்வார்க்கோ வென்னில் தாரகாதிகள் அவைய்ன்று உண்ணுரு சோறு பருகும் சீர் தின்னும் வெற்றிலையுமான வெல்லாம் எம்பெருமானேயாம் என்கை.

“சோறும் நீரும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்“ என்றால் போதுமே, உண்ணுஞ்சோறு என்றும், பருகும் நீர் என்றும், தின்னும் வெற்றிலை யென்றும் அடைமொழி கொடுத்துப்பேசவேணுமோ? சோறாகில் அது உண்ணக்கடவதுதானே, நீராகில் அது பருகக் கடவது தானே வெற்றிலையாகில் அது தின்னக் கடவதுதானே, உண்ணும் பருகும் தின்னும் என்கிற இவ்வடை மொழிகள் வியர்த்தமேயன்றோ என்று நினைக்கவேண்டா.

வயிறு நிறைய உண்டவனுக்குப் பரமான்னம் கிடைத்தாலும் அது உண்ணுஞ் சோறாகாது, கங்கைக் கரையிலே திரியும்வனுக்குக் கிணற்றுநீர் பருகுநீராகாது, அவ்வவற்றுக்கு அபேக்ஷை சில மையங்களிலும் அநபேக்ஷைக சில ஸமயங்களிலும் இருப்பது உலகவியல்பாதலால், பெரும் பசியனுக்குக் கிடைத்த சோறுதான் உண்ணுஞ் சோறு, பெருவிடாயனுக்குக் கிடைத்த நீர்தான் பருகுநீர் என்று கொள்ளவேணும். பெரும் பசியனுக்குச் சோற்றிலும் விடாய்த்தவனுக்கு நீரிலும் எப்படிப்ட்ட அபிநிவேசமோ எப்படிப்பட்ட அவிநிவேசம் ஆழ்வார்க்கு பகவத்விஷயத்தில் என்றதாயிற்று.

எல்லாம் கண்ணன் – வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப என்று கீதாசார்யன் இழவோடே பேசினான் (அதாவது) எல்லாம் கண்ணன்“ என்றிருக்கிற மஹாத்மா கிடைப்பது மிகவும் அரிது என்கை. அவ்விழவுதீர வகுளாபரண மஹாத்மா வந்து தோன்றினாராயிற்று.

கண்ணனெம்பெருமா னென்றென்றே கண்கள் நீர்கள்மல்கி – எனக்கு ஸகலவிதமான தாரகபோஷக போக்யங்களும் கண்ணனெம்பெருமானே‘ என்று பலகால் சொல்லிக்கொண்டு நீர்மல்கு கண்ணினராயிருப்பதே ஆழ்வாருடைய இயல்பாம். இப்படிப்பட்ட பராங்குசநாயகிமான திருக்கோளூர் எங்கிருக்கிறது? எத்தனைதூரம் போரும்?“ என்று கேட்டுக்கொண்டே திருக்கோளூர்க்கே சென்று புகுந்திருப்பாள், வேறு எங்கும் போயிருக்க ப்ரஸக்தியில்லை, இது திண்ணம் என்கிறாள் திருத்தாயார்.

ukr

புகுமூர் என்றவிடத்து ஈட – “காட்டுத்தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப்புகுமாபோலே ஸம்ஸாரமாகிற பாலைநிலத்தில் காட்டுத்தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் “புகுமூர் என்கையாலே புக்கார் போகுமூர் அன்றென்கை.“

எம்பெருமானார் திவ்ய தேசயாத்திரையாக எழுந்தருளுகையில் திருக்கோளூர்க்கு எழுந்தருளாநின்றார், அப்போது அங்கு நின்றும் வெளியேறுகின்றாளொரு அம்மையாரைப் பார்த்து ‘எங்கு நின்றும் புறம்பட்டபடி? என்று கேட்க, அவள் ‘திருக்கோளூரில் நின்றும்‘ என்று சொல்லப் அதுகேட்டு எம்பெருமானார் “அவ்வூரில் புக்க பெண்களும் வெளியே போகக் கடவராயிருகப்பர்களோ?“ என்றாராம். புகுமூர் என்ற சந்தையின் சுவடையறிந்து அருளிச்செய்தபடி.

திருக்கோளூர் – பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று, திருக்குருகூர் முதலாய நவதிருப்பதிகளுள் ஒன்று. ஸ்ரீமதுர கவிகளின் திருவ்வதாரஸ்தலம் இதுவே.
-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

ஒன்பது வகையான நவநிதிகளுக்கும் எண்ணிலடங்காப் பெருஞ் செல்வத்துக்கும் தலைவனாகி (காப்பாளனாக) அளகாபுரியிலிருந்து அரசாண்ட குபேரன் சிறந்த சிவபக்தனாயிருந்தான் ஒரு சமயம் அவன் சிவனை வழிபடக் கைலாயம் சென்றான். அப்போது சிவன் தனது பத்தினியான உமையவளோடு அன்போடு பேசிக் கொண்டிருக்க உமையவளின் அழகில் மயங்கி ஒற்றைக் கண்ணால் பார்த்தான் குபேரன்.

இதைப் பார்த்து விட்ட உமையவள் மிக்க சினங்கொண்டு “நீ கெட்ட எண்ணத்துடன் பார்த்ததால் ஒரு கண்ணை இழப்பதுடன் உருவமும் விகாரமடையக் கடவது” என்று சபித்து நவநிதிகளும் உன்னை விட்டகலக் கடவதென்றார். உடனே நவநிதிகளும் குபேரனை விட்டகன்று, தாங்கள் தஞ்சமடைவதற்குத் தகுந்த தலைவன் இல்லையென்றும், தம்மைக் காத்து அபயம் அளிக்குமாறும், பொருனை நதிக்கரையில் நீராடித் திருமாலைத் துதித்து நின்றனர்.

அப்பொருனைக் கரையிலே நவநிதிகளுக்கும் காட்சி கொடுத்து எம்பெருமான் அந்நிதிகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல அவைகளை அரவணைத்துப் பள்ளி கொண்டான். நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து, பாதுகாப்பளித்து அதன் மீது சயனங் கொண்டதால் “வைத்தமாநிதிப் பெருமாள்” என்ற திருநாமம் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று. நிதிகள் எல்லாம் இங்கு தீர்த்தமாடியதால் இந்த தீர்த்தத்திற்கும் “நிதித் தீர்த்தம்” என்றே பெயர் உண்டானது.

முன்னொரு காலத்தில் தர்மத்தை (தர்ம தேவதையை) அதர்மம் தோற்கடித்தது. எங்கும் அதர்மம் பரவியது. தோற்றுப் போன தர்மம் இந்த நிதி வனத்திற்கு வந்து இப்பெருமானை அண்டி தஞ்சம் அடைந்திருந்தது. அதர்மத்தினால் உண்டான தொல்லை தாங்க முடியாத தேவர்கள், தர்மம் தஞ்சம் புக்கிருந்த இத்தலத்திற்கு வந்து சேர, அதை பின் தொடர்ந்து அதர்மமும் இங்கு வந்து சேர, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பெரும் யுத்தம் நடந்து, இறுதியில் எம்பெருமானின் அருள் பெற்ற தர்மம் வென்றது.

இஃதிவ்வாறிருக்க, தன் தவறுணர்ந்த குபேரன் பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்புக்கோர, அதற்கவர் பார்வதியிடமே மன்னிப்புக் கோருமென்று கூற, குபேரன் உமையவளின் பாதம் பணிந்து மன்னிப்புக் கோரினான். குபேரனை நோக்கிப் பார்வதி கூறுகிறாள். நான் சபித்ததைப் போலவே உனக்கு இனிமேல் ஒரு கண்ணும் தெரியாது. உன் மேனியின் விகாரமும் மறையாது.

ஆனால் நீ இழந்த நவநிதியங்களை மட்டும் பெற்று வாழ்தற்கு ஒரு உபாயம் உண்டு. உன்னைவிட்டுப் பிரிந்த நவநிதிகள் தாமிரபரணி நதி தென்கரையில் தர்மப் பிசுன ஷேத்திரத்தில் திருமாலைத் தஞ்சம் அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அங்கு சென்று ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே தவம் செய்து இழந்த நிதியினைப் பெறுக என்றாள்.

திருக்கோளூர் வந்து சேர்ந்த குபேரன், வைத்தமாநிதிப் பெருமாளைக் குறித்துப் பெருந்தவம் செய்து மன்றாடி நிற்க, ஒரு மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் எம்பெருமான் காட்சி கொடுத்து, “உன் தவத்தை நான் மெச்சினேன். இருப்பினும் செல்வம் யாவும் உனக்கு இப்போதே தரமுடியாது. கொஞ்சம் தருகிறேன் பெற்றுக்கொள்” என்று கொஞ்சம் செல்வத்தைத் தர அதைப் பெற்ற குபேரன் “இத்தகு நிதியாகிலும் வைத்திருக்கப் பெற்றோமே யென்று” எண்ணித் தன் இருப்பிடம் சேர்ந்தான்.

சிறப்பு:

வைத்தமாநிதி பெருமாள் அருள்புரியும் தலம் அங்காரகனுக்குரிய அதாவது செவ்வாய்க்குரியதலமாக வழிபடப்படுகிறது.

வியாச வம்சத்தில் வந்த தர்ம குப்தன் என்பவன் 8 ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மிகுந்த தரித்திரனாக ஆகி, வறுமையினின்றும் மீள முடியாத நிலையேற்பட தமது குலகுருவாகிய நர்மதா நதிக்கரையில் தவம்செய்து கொண்டிருந்த பரத்வாஜ முனிவரைச் சரணடைய, தமது ஞானக்கண்ணால் நடந்ததையறிந்து, தர்மகுப்தனை நோக்கினார்,

முற்பிறவியில் பெருஞ் செல்வத்திற்கு அதிபதியான ஒரு அந்தணனாகப் பிறந்த நீ, யாருக்கும் ஒரு தர்மமும் செய்யாது, பணத்தாசை பிடித்து அலைந்து திரிபவனாயிருந்தாய், உன் ஊர் அரசன் உன்னிடம் வந்து உனக்குள்ள செல்வம் எவ்வளவுயென்று கேட்க, நீ ஒன்றுமில்லை என்று பொய் கூறினாய் இதனால் உன் செல்வம் முழுவதும் கள்வர்களால் அபகரிக்கப்பட்டு, மன நோயால் பீடிக்கப்பட்டு இறந்தாய். பிராமணனாகவே இப்பிறவியில் பிறந்தாலும் உன் பழவினை உன்னைத் தொடர்கிறது.

இதற்கு ஒரே மார்க்கம், நவநிதிகளும் சரணடைந்துள்ள, திருக்கோளுர் வைத்தமாநிதியைத் தொழுதால் உனது சாபந் தீருமென்று கூறினார். தர்ம குப்தனும் அவ்விதமே வந்து (தன் குடும்பத்துடன்) வெகு காலம் இப்பெருமானைச் சேவித்து எண்ணற்ற பணிவிடைகளைச் செய்து கொண்டிருக்க, ஒரு நாள் நீராடச் செல்லுங்காலை மாதனங் கண்டெடுத்து, மீளவும் பெருஞ் செல்வந்தனாகி நெடுங்காலம் சுகவாழ்வு வாழ்ந்திருந்தான்.

தலபெருமை

இத்தலத்துப் பெருமாள் (வைத்தமாநிதிப் பெருமாள்) தலைக்கு மரக்கால் வைத்துப் படுத்தார் இதற்கு காரணம் இப்பெருமாள் செல்வத்தைப் பாதுகாத்துச் செல்வமளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து கையில் அஞ்சனம், மை, போன்றன தடவி நிதி எங்கிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறுவர். மரக்கால் வைத்து எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்ய தேசமான திருஆதனூரில் மட்டுமே.

இவ்வூரில் கல்வி கேள்விகளில் சிறந்த “விஷ்ணுநேசர்” என்ற முன்குடுமிச் சோழிய ஸ்ரீவைஷ்ணவர் வாழ்ந்து வந்தார். வைத்தமாநிதிப் பெருமாளிடம் மாறாத அன்பு பூண்டிருந்த இவருக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று அவதரித்த தவப்புதல்வரே மதுர கவியாழ்வார் ஆவார். ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன் மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும். நம்மாழ்வாரான சூரிய உதயத்திற்கு “அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்) போன்றது இவர் அவதாரம் என்று பெரியோர் கூறுவர்.

திருப்புளிங்குடி நிகழ்ச்சியைப் போலவே, இராமானுஜர் இவ்வூரை அணுகியதும், வைணவ இலச்சினையுடன் எதிர்ப்பட்ட ஒரு பெண்ணை வணங்கி நீயெங்கு நின்று புறப்பட்டாய் என்று கேட்க, திருக்கோளுரிலிருந்து விடை கொண்டேன் என்று அவள் சொல்லவும் அவளை நோக்கி, இராமானுஜர் “ஒருவா கூறை யெழுவருடுத்துக் காய் கிழங்கு சாப்பிட்டு, திண்ணமென்னிள மான்புகுமூர் திருக்கோளுரே என்று” எல்லோரும் புகும் ஊர் உனக்குப் புறப்படும் ஊராயிற்றா என்றார்.

அதற்கவள் (இவ்வூரில் பிறந்து வடதேச யாத்திரை சென்று காய், கனி, கிழங்குகளைப் புசித்து வந்த மதுரகவியாழ்வார் ஜோதி தெரிந்து மீண்டும் இவ்வூருக்கே வந்து நின்றதை மனதிற்கொண்டே இராமானுஜர் இங்ஙனம் கூறுகின்றாறெண்ணி) பல அருஞ்செயல்கள் செய்த அடியவர்களைப் போல யானேதும் அருஞ்செயல் செய்தேனோ, முதல் புழுக்கை வயலில் கிடந்தென், வரப்பிலே கிடந்தென் என்று பதிலளிக்க, இதைக்கேட்ட இராமானுஜர் இவளதறிவு கண்டு வியந்து, இவளில்லத்தில் விருந்துண்டு சென்றார்.

இங்குள்ள விமானம் ஸ்ரீகர விமானம்.சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்க தலங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங் களாக செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

தலசிறப்பு

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93வது திவ்ய தேசம்.நவதிருப்பதியில் இது 3 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும்.

பெருமாள் இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம்.

திருவிழா வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை

நவக்கிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்

பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்கின்றனர்.

ஆலயம் அறிவோம்
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்

half 1

Leave A Reply

Your email address will not be published.