ஆலயம் அறிவோம் அருள்மிகு பூமிபாலகர் பெருமாள் திருக்கோயில்

0
Business trichy

ஆலயம் அறிவோம் அருள்மிகு பூமிபாலகர் பெருமாள் திருக்கோயில்

திருப்புளிங்குடி

திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது.

loan point

இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார். நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட தலம் இதுவாகும். இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களால் பாடல் பெற்றுள்ளது

nammalvar

இத்தலத்திலுள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். வேறு கோயில்களில் காணவியலாத காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியகாட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.

சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் வடக்குப்புற சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு சன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.

திருப்புளியங்குடி அருள்மிகு பூமிபாலகர் பெருமாள் திருக்கோயில்

மூலவர் – காய்சின வேந்தர் பூமிபாலர்

தாயார் – மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளியங்குடிவள்ளி

உற்சவர் – காய்சினவேந்தர்

விமானம்- வேதசார விமானம்

தீர்த்தம் – வருண தீர்த்தம், நிருதி தீர்த்தம், இந்திர தீர்த்தம்

திருநாமம்- ஸ்ரீ மலர்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ காய்சின வேந்தன் ஸ்வாமிநே நமஹ:

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்பெயர்: திருப்புளிங்குடி

புராணபெயர்: திருப்புளிங்குடி

மாவட்டம்: தூத்துக்குடி

மாநிலம்: தமிழ்நாடு

மங்களாசாசனம்_பாடியவர்கள் : நம்மாழ்வார்

வழித்தடம்:

திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில்அமைந்துள்ளது. திருநெல்வேலி திருச்செந்தூர் இரயில் மார்க்கத்தில் ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

பாசுரம்:

கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கு இடர் செய்

கடுவினை நஞ்சே என்னுடையமுதே கலிவயல் திருப்புளிங்குடியாய்

வடிவினை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை

கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே

– திருவாய்மொழி (3577)

நம்மாழ்வார் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பாசுரம் பதவுரை:

கொடுவினைபடைகள் வல்லையாய் – (விரோதிகள் திறத்துக்) கொடுந் தொழில் புரியவல்ல ஆயுதங்களை கொண்டு காரியஞ்செய்ய வல்லவனே!

அமரர்க்கு இடர் கெட – தேவர்களுக்கு இடர் கெடும்படியாக

அசுரர்கட்கு இடம் செய் – அசுரர்களுக்கு துக்கத்தை வினைக்குமிடத்து

கடு வினை நஞ்சே – விரைவில் முடிக்கவல்ல நஞ்சானவனே!

என்னுடைய அமுதே – எனக்குப் பரம போக்யமான அம்ருதமே!

கலிவயல் திரு புளிங்குடியாய் – செழித்த வயல் சூழ்ந்த திருப் புளிங்குடியில் வாழ்பவனே!

வடிவு இணை இல்லா மலர் மகள் – வடிவழகில் ஒப்பற்ற பெரிய பிராட்டியாரும்

மற்றை நிலமகள் – அப்படிப்பட்ட பூமிப் பிராட்டியாரும்

பிடிக்கும் மெல் அடியை – வருடுகின்ற ஸுகுமாரமான திருவடியை

கொடு வினையேணும் பிடிக்க ஒரு நாள் – தௌர்ப்பாக்ய சாலியான நானும் வருடுமாறு ஒரு நாளாகிலும்

கூவுதல் வருதல் நீ செய்யாய் – என்னை யழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ செய்ய வேணும்

பாசுரம் விளக்க உரை:

கடுவினை நஞ்சே! என்னுடையமுதே! = ஒரு வஸ்துதானே சிலர்க்கு விஷமாயும் சிலர்க்கு அமுதமாயுமிரா நின்றதாயிற்று. *வஞ்சஞ்செய் சஞ்சனுக்கு நஞ்சானனை* என்றார் திருமங்கை யாழ்வாரும் “என்னுடையமுதே” என்று சொல்லப்பட்ட இவ்வமுதம் எங்கிருக்கிறதென்ன, கலிவயல் திருப்புளிங்குடியாய்! என்கிறார். இங்கே ஈடு:– “இவ்வம்ருதத்துக்குக் கடல் கடைதல் ஸ்வர்க்கத்திலே போதல் செய்யவேண்டா;

திருப்புளிங்குடியிலே ஸந்நிஹிதமாயிற்று இவ்வம்றுதம்” திருப்புளிங்குடியா யென்றழைத்து அவனுக்கு ஸமாசாரம் சொல்லுகிறார் பின்னடிகளால் வடிவழகுக்கு ஒப்பில்லாத பெரிய பிராட்டியாரும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரும் தங்களுடைய பரம ஸுகுமாரமான திருக்கைகளாலே பிடிக்கும்போதும் கூசிப்பிடிக்க வேண்டும்படி அத்யந்த ஸுகுமாரமான திருவடிகளை பாவியேனும் பிடிக்குமாறு என்னை அங்கேயழைத்துக் கொள்ளுதல், அன்றிக்கே இங்கே வந்தருளுதல் ஒருநாள் செய்ய வேமென்றாராயிற்று.

கொடுவினையேனும் என்றது–ப்ராப்தியுடையேனாயும் அதில் போக்யதையை யறிந்த வனுயுமிருந்து வைத்து நெடுங்காலம் இழந்திருக்கும்படி கொடிய பாபத்தை யுடையேனான நானும் என்றபடி. கூவுதல் வருதல் செய்யாயே = இரண்டு காரியங்களை விகற்பித்துச் சொல்லுமிடங்களில் பெரிய காரியத்தை முன்னே சொல்லுவதும், சிறிய காரியத்தை பின்னே சொல்லுவதும் இயல்பு.

எம்பெருமான் தானே வருவதென்பது பெரிய காரியமாயும், ஆழ்வாரைக் கூவிக் கொள்வதென்பது சிறிய காரியமாயுமிருப்பதால் “வருதல் கூவுதல் செய்யாயே” என்று சொல்ல ப்ராப்தமாயிருக்க, கூவுதல் வருதல் செய்யாயே யென்று சொல்லியிருப்பதேன்? என்று சங்கை தோன்றும் ; இதற்கு நம்பிள்ளை யருளிச் செய்வது காணீர்– “முற்பட ‘வருதல்’ என்றிலராயிற்று

web designer

அஸ்ஸமுதாயத்தைக் குலைக்க வொண்ணா தென்னுமத்தாலே” என்று. அதாவது, *வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் ஸந்நிவேசத்தைத் தாமம் கண்டுகளிக்க ஆழ்வார் ஆசைப்பட்டவராகையாலே அந்தச் சேர்த்தி யழகைக் குலைக்க மனமில்லாமை பற்றி, வருதலை முன்னே சொல்லிற்றிலரென்கை.*

ஸ்தல வரலாறு:

இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தாலும், தாமிரபரணி ஸ்தல புராணத்தாலும் அறிய முடிகிறது. ஒருசமயம் மஹாவிஷ்ணு இலக்குமி தேவியுடன் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு இப்பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் அழகழகாக வரிசைக்கிரமமாக மணல்மேடு அமைந்துள்ள பகுதியில் சற்றே உல்லாசத்துடன் தனித்திருக்க, இப்பூவுலகில் வந்ததும் தன்னை விட்டுவிட்டு இலக்குமி தேவியுடன் இவர் மகிழ்வெய்தியுள்ளாரே என்று எண்ணி பொறாமை கொண்டார்.

பூமிப்பிராட்டி மிகவும் சினங்கொண்டு பாதாளலோகம் புகுந்து மறைய உலகம் வறண்டு இருளடைய தேவர்கள் எல்லாம் இந்நிலை மாறவேண்டுமென ஸ்ரீமந்நாராயணனைத் துதிக்க அவரும் பாதாள லோகம் சென்று பூமிப்பிராட்டியைச் சமாதானப்படுத்தி இருவரும் தமக்குச் சமமே என உபதேசம் செய்து இருவருக்கும் நட்பு உண்டாக்கி, அவ்விரண்டு தேவிமார்களும் சூழ இவ்விடத்தில் காட்சி தந்தார்.

பூமியைக் (பூமிப் பிராட்டியைக்) காத்ததாலும் பூமிபாலர் என்னும் திருநாமம் இப்பெருமானுக்கு உண்டாயிற்று. காசினி வேந்தர் என்ற சொல்லே நம்மாழ்வாரின் பிற பாக்களில் காய்சின வேந்தர் என்று பயின்று வருகிறது.

இத்தலத்தில் நடைபெற்ற இன்னொரு புனித வரலாற்றையும் புராணம் பேசுகிறது. யக்ஞசர்மா என்னும் அந்தணன் தனது பத்தினியுடன் இன்பம் நுகர்ந்துகொண்டிருக்கையில், வசிட்டரின் மகனான சக்தியென்பவர் தமது ரிஷிகள் புடைசூழ வந்தவிடத்து அவர்களை மதியாதிருந்ததோடு, தட்சிணையுங்கொடுக்காது அவர்களை தீச் சொற்களால் நிந்தனையும் செய்வித்தான்.

அக்கணமே அம் முனிவர்கள் அனைவரும் யக்ஞசர்மாவை ஓர் அரக்கனாகும்படி சபிக்க, தன் நிலை மாறிய அவ்வந்தணன், அம்முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து சாப விமோசனமும் வேண்டி நின்றான். அதற்கு முனிவர்கள் இத்திருத்தலத்தில் பின்னொரு காலத்தில் இந்திரன் யாகம் செய்வான். அப்போது அந்த யாகத்தை அழிக்க நீ எத்தனிக்கும் போது திருமாலின் கதையால் அடிபட்டு சாபவிமோசனம் பெறுவாய் என்றனர்.

இஃதிவ்வாறிருக்க, இமயமலையில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது தேவியுடன் இனிதே குலாவிக் கொண்டிருக்கும் போது அத்தடாகத்துக்கு அருகில் மானுருக் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மான் உருவில் உள்ள ரிஷியை அடித்து வீழ்த்த இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. அதைத் தீர்ப்பதற்கு கண்ட விடமெங்கும் பைத்தியன் போல் இந்திரன் அலைந்தான்.

இதைக் கண்டு மிகவும் மனம் நொந்த தேவர்கள் தமது குலகுருவான வியாழ பகவானைச் சரணடைந்து ஆலோசனை கேட்க, அவர், இந்திரனைத் திருப்புளிங்குடிக்கு அழைத்து வந்து பயப்பக்தியுடன் பூமிபாலரை வணங்கி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடச் செய்ததும் பிரம்மஹத்தி தோஷம் இந்திரனை விட்டு நீங்கியது. இந்த தீர்த்தத்துக்கும் இந்திர தீர்த்தம் என்ற பெயர் நிலைத்தது.

தனது சாப விமோசனத்தால் மிகவும் மகிழ்ந்த இந்திரன். திருமாலுக்கு நன்றி செலுத்தும் முகத்தான் இங்கு மிகப் பெரிய யாகம் துவங்கினான். அப்போது அரக்கனுருவில் உள்ள யக்ஞசர்மா திருமாலைக் குறித்து உள்ளுருகி வேண்டி கடுந்தவம் புரிந்து கண்ணீர் சிந்தி நின்றான். அப்போது யாக குண்டலியில் தோன்றிய ஸ்ரீமந் நாராயணன் தனது கதையினால் அவ்வரக்கனை அடித்து வீழ்த்த அவன் சாப விமோசனம் பெற்றான்.

சிறப்பு:

புஜங்க சயனத் திருக்கோலத்தில் இருக்கும் பெருமாளின் திருமேனி 12 அடி. திருப்பாதத்தையும் தாயார்களையும் வெளியே உள்ள சாளரம் வழியாகத் தரிசிக்கலாம். தமிழ்நாட்டு திவ்யதேசங்களில் வேறெங்கும் இல்லாத அமைப்பு. இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 120 படி எண்ணெய் தேவைப்படுகிறது.

இங்குள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திரு உருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிக மிகப் பெரியவை. பொதுவாகப் பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து செல்லும் தாமரைத் தண்டின் மலரில் தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம். இங்கு பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது அரிதான காட்சி.

சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப் புறமுள்ள ஒரு ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.

இராமானுஜர் இவ்வூருக்கு வந்து திருப்புளிங்குடி எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரும்போது, கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நெல்லிவாட்டிய (நெல்லைக் காயலிட்டுக் கொண்டு இருந்த) அக்கோவிலின் அர்ச்சகர் மகளைக் கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்றார். அது இன்னும் கூப்பிடு தொலைவில் உள்ளதென்பதை

“முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளா கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்தவியன் புனல் பொருநல் வழுதிநாடன் சடகோபன்”

என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தினாலேயே மறைமுகமாய் சுட்டிக்காட்டினாள்.

ஆழ்வாரின் பாசுரத்தைச் செவியில் கேட்ட மாத்திரத்தில், ஆழ்வார் மீதுள்ள பேரன்பால் (யாமும் கூப்பிடு தொலை எய்திவிட்டோமோ என்றெண்ணி) அப்படியே தரையில் வீழ்ந்து அப்பெண்ணை வணங்கினார்.

(இதைக்கண்ட அர்ச்சகர் தமது மகளை இராமானுஜரின் பாதத்தில் விழச் செய்து மன்னிப்பும் கோரினார்)

நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட ஸ்தலம்

தலவரலாறு

இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாம‌ரைக்‌கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. பாத தரிசனம் செய்ய ‌‌வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். இந்திரனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடம். வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம். வருணன் நிருதி தர்மராஜன் நரர் ஆகிய‌யோருக்கு காட்சி கொடுத்ததலம்.

தலபெருமை

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : ‌தென்திருப்பே

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலவில்லிமங்கலம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

தலசிறப்பு

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 94 வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 4 வது திருப்பதி(திருப்புளியங்குடி). நவகிரகங்களில் இது புதன் தலம்.

திருவிழா

வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை

அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

பொதுதகவல்

இத்தலத்தில் பூமிபாலகர் பெருமாள் வேதசார விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டலமாக (மரக்காலைத் தலையின் அடியில் வைத்துசயனத்தில் உள்ளார்) அருள்பாலிக்கிறார்.

ஆலயம் அறிவோம்

அருள்மிகு பூமிபாலகர் பெருமாள் திருக்கோயில் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.