ஆயத்த ஆடைகள் சந்தையில் புத்தாநத்தம்..!

0

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் கூட தெரியாத ஒரு ஊர். ஆனால் ஆண்டுக்கு சுமார் ரூ.75 கோடி அளவிற்கான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் ஊர்… புத்தாநத்தம்.! திருச்சி மாவட்டம்,

மணப்பாறையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த புத்தாநத்தம். பெரிய ஜவுளி கடைகளில் விற்கப்படும் பிராண்டட் சட்டைகள் இங்கிருந்தே உற்பத்தியாகின்றன.

தமிழ்நாட்டின் ஆயத்த ஆடை உற்பத்தியில் புத்தாநத்தம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புனியமுத்தூர், தளவாய்புரம், மதுரை, நத்தம் வரிசையில் 5வது இடத்தில் புத்தாநத்தம் உள்ளது. விவசாயம் நிறைந்த புத்தாநத்தம் என்ற சிறிய கிராமத்தில் எப்படி திடீரென இப்படி ஒரு புதிய பாதை கண்டெடுக்கப்பட்டது.

இது பற்றி ஆயத்த ஆடைகள் தயாரிப்பாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் டி.ஏ.கே.ஹிதாயத்துல்லா கூறுகையில், புத்தாநத்தம் கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழில். 1970 காலகட்டத்தில் பருவநிலை மாற்றத்தினாலும், நீர்வரத்து குறைந்து போனதாலும் விவசாயம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது. அந்த சமயத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணியில் இறங்கினேன்.

முதலில் பெண்களுக்கான நைட்டி மற்றும் அன்றாயர் தயாரிக்கத் தொடங்கினோம். வாரந்தோறும் இங்கு சந்தை கூடும். அந்த சந்தையில் எங்கள் உற்பத்தி பொருட்களை விற்றோம். தொடர்ந்து மதுரைக்கு சென்று விற்பனையை தொடர்ந்தோம். நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து எங்களின் தயாரிப்பிற்கு வரவேற்பு அதிகரிக்க ஆயத்த ஆடைகள் தயாரிப்பை முக்கிய தொழிலாக மேற்கொள்ள தொடங்கினோம்.

பெரும் முன்னேற்றம் கண்ட இந்த தொழிலில் தற்போது 150க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களையும், 2000த்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளையும் கொண்ட வர்த்தக களமாக உள்ளது புத்தாநத்தம் பகுதி. நிறுவனங்களில் உற்பத்தி என்ற நிலை தாண்டி குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரும் ஈடுபடும் முக்கிய குடிசை தொழிலாக மாறியுள்ளது ஆயத்த ஆடைகள் உற்பத்தி. வீட்டிற்கு இரண்டு தையல் மிஷின் இருக்கும் என்று கூட சொல்லலாம்.

கேரளாவில் புத்தாநத்தம் ஆடைகளுக்கு பெரும் வரவேற்பு உண்டு. ஆரம்பத்தில் பல்வேறு மாடல்களில் பெண்களுக்கான ஆடைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது அதற்கு இணையாக ஆண்களுக்கான ஆடைகள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

கேரளாவின் ஓணம் பண்டிகைக்கு காலத்தில் விற்பனையாகும் ஆடைகள் பெரும்பாலும் புத்தாநத்தத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டதாகவே இருக்கும்” என்றார்.


தொடர்ந்து சங்க தலைவர் கே.எஸ்.அப்துல் ரஜாக் கூறுகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கிருந்து ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கேரள மாநிலம் புத்தாநத்தத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகை காலங்களில் அதிக அளவிலான உற்பத்தி மேற்கொள்ளப்படும்.

இந்த வருடம் கொரோனா பாதிப்பினால் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. மூன்று மாதங்கள் முழுமையாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது குறைந்த தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடைபெறுகிறது.

கடந்தாண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு 30 சதவீத உற்பத்தி குறைந்தே காணப்படுகிறது. ஆயத்த ஆடைகளுக்கான தேவைகள் அதிகரித்தாலும் உற்பத்தி நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த தொழிலாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

உற்பத்தியை காட்டிலும் உயிர் முக்கியமல்லவா” என்றார்.
சங்க பொருளாளர் ஏ.நிஜார் (எ) கமால் பாட்சா நம்மிடம், “தொய்வின்றி நடைபெற்ற இந்த தொழிலிற்கு முதல் பாதிப்பாக பணமதிப்பிழப்பு அமைந்தது. அடுத்து ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு. தற்போது கொரோனா தாக்கத்தால் உற்பத்தி மற்றும் விற்பனை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சிறிய, பெரிய உற்பத்தியாளரகள், வியாபாரிகள் என்ற பேதம் இன்றி இந்த தொழிலை நம்பியுள்ள இப்பகுதி மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரெடிமேட் ஆடைகள் உற்பத்திக்கான துணிகளை பாம்பே, அஹமதாபாத், சூரத் போன்ற நகரங்களில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். கடனிற்கும் துணிகளை அனுப்பி வைப்பார்கள். நாங்கள் தயாரித்து விற்ற பின்பு அவர்களுக்கு கடன் தொகையை திருப்பி செலுத்துவோம். ஆனால் இந்த ஆண்டு கடன் தர மறுத்துவிட்டார்கள்.

ஏறத்தாழ 60 நாட்கள் கழித்து தான் உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கான பணம் எங்களுக்கு வந்து சேர்கிறது. இதனால் நாங்கள் பெரிய அளவில் கடன் வியாபாரத்தை நம்பி தொழில் செய்து வந்தோம். தற்போது கடன் தருவதற்கு துணி உற்பத்தியாளர்கள் மறுப்பதால் நாங்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறோம். சிறு, குறு தொழிலுக்கு உதவும் வகையில் கடன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் எங்களுக்கு அத்திட்டத்தின்படி கடன் கிடைப்பதில்லை.

எங்கள் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற ஒரே ஒரு வங்கி தான் உள்ளது. வங்கி அதிகாரி கடன்தர மறுக்கிறார். ஒரு லட்சம் கடன் பெற ஒரு கோடி ரூபாய்க்கான ஆவணங்களை ஈடாக தரவேண்டி உள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்பு வாராக் கடன் 6 கோடியாக இருந்தது.

தற்போது ஒன்றரை கோடியாக குறைந்துள்ளது. இருந்தும் வங்கி மேலாளர் கடன் தர மறுக்கிறார். கூடுதலாக வங்கி தொடங்க கோரிக்கை வைத்தால் இவர்கள் என்.ஓ.சி. தர மறுக்கிறார்கள். இதனால் வங்கி சேவைகள் பெரும் சிரமமாகவே உள்ளது” என்றார் கவலையுடன்.
சங்க துணைத் தலைவர் டி.ஏ.கே.சதக்கத்துல்லா கூறுகையில், இந்த ஆண்டு வியாபாரம் புதிய படிப்பினைகளை கற்றுத் தந்திருக்கின்றது. தீபாவளியும் ஓணமும் தான் எங்களுக்கு மிக முக்கியப் பண்டிகையாக இருக்கிறது. இதைக் கொண்டே எங்களுடைய ஆண்டு வருமானம் அடங்கியிருக்கிறது.

துணி உற்பத்தி நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆடைகளின் கலர், டிசைன்களை தேர்வு செய்து ஆர்டர் கொடுப்போம். ஆனால் இப்போது போக்குவரத்து சிரமம் காரணமாக வாட்ஸ்-அப் மூலம் டிசைன், கலர்களை தேர்வு செய்து ஆர்டர் தருகிறோம். மீட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலை உயர்ந்து இருக்கிறது. அதனடிப்படையில் எங்களின் ஆடை உற்பத்தியிலும் விலை உயர்த்த முடியாது. காரணம் இந்தாண்டு மக்களின் வாங்கும் சக்தி குறைந்தே காணப்படும் என்பதால் லாபம் குறைவாக இருந்தாலும் அதிகரித்திருக்கும் உற்பத்தி விலையை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்.


கொரோனா காலகட்டமான இன்று நிலையற்ற வருமானம் கொண்ட பெரும்பாலான மக்கள் புதிதாக ஏதாவது தொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர். அவர்களில் பலர் எங்களிடம் ஆயத்த ஆடைகளை வாங்கி விற்பனை செய்ய முனைந்துள்ளனர்.

மகளிர் சுயஉதவிக் குழு கட்டமைப்பில் உள்ள பெண்கள் பெரும்பாலோர் குறைந்த அளவிற்கு ஆடைகள் வாங்கி விற்று வருகின்றனர். அத்துடன் கல்லூரி மாணவர்கள் பலர் வேலை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலை தருகிறோம். விற்பனை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு தொழில் நேர்த்தியை கற்றுத் தருகிறோம்” என்றார்.

மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்து வரும் சாதிக்பாட்சா கூறுகையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நான் சொந்த ஊரிலேயே தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலில் நான்கு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். கொரோனா தொற்று காரணமாக எல்லா தொழிலுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு போல் எங்களுக்கும் பாதிப்பு தான்.

ஆடை விற்பனையாளர்கள் முன்பு இருபதாயிரம், முப்பதாயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு ஐயாயிரம், பத்தாயிரமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை சந்தையிலும் பெரிய அளவிலான வியாபாரம் இல்லை.ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் ஊரடங்கு தளர்த்தியதால் ஓரளவு வியாபாரம் செய்தோம்.

தீபாவளிக்கு நாற்பது நாட்களுக்கு முன்பே விற்பனை தொடங்கிவிடும். புத்தாநத்தம் கடைவீதி சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் இந்த வருடம் அப்படியான நிலை இல்லை” என்றார்.

உலகப் பொருளாதாரமே முடங்கி இருக்கும் நிலையில் புத்தாநத்தமும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையே வியாபாரிகளின் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. வங்கிகளின் உதவி, சீரான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அரசு அமைத்து கொடுத்தால் புத்தாநத்தம் புத்துயிர் பெரும். புத்தாநத்தம் மட்டுமின்றி தமிழக பொருளாதாரமும் உயர்வு பெரும் என்பதே நிதர்சனம்.

Leave A Reply

Your email address will not be published.