தீபாவளி பண்டிகை களை கட்டும்.. கல்லா கட்டுமா..? அச்சத்தில் தரைக்கடை வியாபாரிகள்..!

0

குளுகுளு ஏசி வசதி. கண்ணை கவரும் ரகங்கள். பரந்து விரிந்த கடை. பர்ஸில் எவ்வளவு காசு இருக்கிறதோ அதற்கேற்ப வாங்கிட வேண்டும். பேரம் எல்லாம் பேச முடியாது. எங்கள் வசதிக்கு அங்கெல்லாம் சென்று வாங்க முடியாது. ஆனால் பண்டிகைக்கு கடன் வாங்கியாவது துணி வாங்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களும், விலை அதிகமுள்ள துணிகளை ஜவுளிக்கடையில் வாங்கிவிட்டு வீட்டுக்குள் இருக்கும் போது போட்டுக் கொள்ள விலை குறைந்த துணிகளை வாங்க வசதி படைத்தவர்களும் நாடுவது ரோட்டுக் கடை என கூறப்படும் தரைக்கடைகளைத் தான்.

திருச்சி மாநகரில் மட்டும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் உள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் பதிவு செய்யப்பட்ட கடைகள். நிரந்தர கடையின்றி, தள்ளுவண்டி, கைகளில் வைத்துக் கொண்டு விற்பவர்களும் உண்டு. என்.எஸ்.பி ரோடு, நந்திகோவில் தெரு, தேரடி பஜார், சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு, பெரியகடை வீதி போன்ற பகுதிகளில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் உள்ளனர்.

வெயில், மழை, புயல் காலங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் கடையை திறக்க வேண்டும். இயற்கை பேரிடரை தாண்டி வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய தாக்குதல் கொரோனா. பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டால் அது அவர்களின் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் சிறுகடை வியாபாரிகளுக்கு தினமும் கடை திறந்து வியாபாரம் செய்தால் தான் சோறு.
“கொரோனா ஊரடங்கில் சிக்கி சிதலமானவர்கள் ஊரடங்கு தளர்விற்குப் பின் கடை திறந்தாலும் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை” என்கிறார் என்.எஸ்.பி. ரோட்டில் கடை வைத்திருக்கும் அன்சர்.

“அப்பாவுடன் சிறுவயதிலிருந்தே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருப்பூர், ஈரோடு மற்றும் கல்கத்தாவிலிருந்து துணிகளை வாங்கி விற்கிறோம். குறிப்பாக சிறுவர், சிறுமியர்களுக்கான ரெடிமேட் துணிகளை கல்கத்தாவிலிருந்து தான் தருவித்து விற்கிறோம். ஒவ்வொரு வருஷமும் கல்கத்தா சென்று தேவையான துணி வகைகளை தேர்வு செய்து வாங்கி வருவோம். இந்த வருஷம் கொரோனா பாதிப்பால் போக முடியவில்லை.

food

கல்கத்தாவில் உள்ள நண்பர் ஒருவரின் பழக்கம் காரணமாக அவர் மூலம் இந்த வருஷம் துணிகளை கொள்முதல் செய்து விற்று வருகிறோம். கல்கத்தா வியாபாரிகள் கடனுக்கும் துணிகளை அனுப்பி வைப்பார்கள். இந்த வருஷம் கொரோனா தாக்குதலால் கடன் தரமுடியாது எனக் கூறிவிட்டார்கள். வேறு வழியின்றி பெரும்பாலான கடைக்காரர்கள் வட்டிக்கு பணம் வாங்கித் தான் இந்த தீபாவளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

”வட்டிக்கு பணம் வாங்கி விற்பனையை தொடங்கிவிட்டோம். கடைவீதியில் மக்களின் வருகை குறைவாகவே உள்ளது” என்கிறார் ஏ.ஐ.டி.யு.சி. தரைக்கடை மற்றும் சிறுகடை சங்கத்தின் மாவட்ட செயலாளர் அன்சர்தீன்.
அவர் தொடர்ந்து கூறுகையில், கொரோனா காலத்தில் எங்களின் வாழ்வாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு மாதத்தில் செலுத்த வேண்டிய கடன் பாக்கி, வட்டி, கடை வாடகை செலுத்த முடியாமல் இருக்கிறோம். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10,000, கொரோனா கால நிதியுதவி இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் முக்கிய பண்டிகையான “தீபாவளி” வியாபாரிகளின் நம்பிக்கையாக காணப்படுகிறது. இந்த வருட வியாபாரம் எப்படி இருக்கப் போகின்றது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. முன்பெல்லாம் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு இரண்டு, மூன்று உடைகளை வாங்குவார்கள். தற்போது இருக்கக்கூடிய பொருளாதார சூழல், அவர்கள் ஒரு ஆடை வாங்கிச் செல்வதே பெரிதாக இருக்கிறது. பொது மக்களின் எண்ண ஓட்டம் என்பது அன்று ஒரு நாளை (தீபாவளியை) கடந்து சென்றுவிட்டால் போதும் என்ற நிலைக்கு மாறிவிட்டது.

தீபாவளி வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் எந்த அளவிற்கு ஒத்துழைக்கப் போகிறது எனத் தெரியவில்லை. இரவு பத்து மணி வரை கடை திறக்க அனுமதிக்கிறார்கள். பேருந்து போக்குவரத்து 10 மணிக்கு மேல் இல்லை என்பதால் 9 மணிக்கெல்லாம் கடைவீதி காலியாகிவிடுகிறது. சீரான போக்குவரத்து இல்லாததால் அருகாமை மாவட்டங்களிலிருந்து வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வீடுவீடாக சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது” என்றார்.

தீபாவளி ஜவுளி வாங்க வரும் மக்கள், கடன் வாங்கியாவது தீபாவளி கொண்டாட நினைக்கும் மக்கள் இது போன்ற சில்லறை வியாபாரிகளின் கடைகளிலும் கொஞ்சம் பொருள் வாங்கினால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.