ஒரு தடவை பார்க்கலாமே!! (திருச்சியின் சுற்றுலா தலங்கள்)

0
full

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு, இந்த வருடம் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை 40நாட்கள் வரையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்  திருச்சியில் இருந்து 2 மணிநேரத்தில் செல்லக்கூடிய சுற்றுலாத் தலங்களை பார்ப்போம். திருச்சி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் மலைக்கோட்டை, ஶ்ரீரங்கம், கல்லணை, முக்கொம்பு அணை, திருவானைக்காவல் உள்ளிட்ட இடங்களை தவிர மற்ற வரலாற்று சிறப்பு மிக்க, இயற்கை எழில்மிகு இடங்களைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

பழங்கால பொருட்களை பார்த்து மகிழ்ந்திட
அரசு அருங்காட்சியகம்
திருச்சி அரசு அருங்காட்சியம் 1983ம் ஆண்டு ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1997ல் இது டவுன் ஹால் வளாகத்தில் உள்ள நாயக்கர்களின் ராணி மங்கம்மாள்
தர்பார் ஹாலுக்கு மாற்றப்பட்டது. ஏறத்தாழ 2000 பொருட்கள் இங்கு காட்சிக்காக வைக்கப் பட்டடுள்ளன. இங்கு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால செதுக்கப்பட்ட பொருட்கள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள், கற்சிலைகள், பழங்கால ரூபாய் நோட்டுகள், போர்த்தளவாடங்கள் மற்றும் கருவிகள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இதர நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் இயங்கும். அனுமதி இலவசம்.

இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலை
திருச்சியில் இருந்து 72கி.மீ தொலைவில் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடம் புளியஞ்சோலை. கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப் பசேலென்ற மரங்களும் புளியந்தோப்புகளும், சலசலக்கும் சிறு ஓடைகளும் குளுமையான வானிலையும் புளியஞ்சோலைக்கு எழில் சேர்க்கின்றன.
இதன் மேல் பகுதி மலையில் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி உள்ளது. இங்குள்ள நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. புளியஞ்சோலையிலிருந்து ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு 5மணிநேர நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். வழியில், பழமை வாய்ந்த பாறைகள், பித்துக்குளி குகை என பார்வையிட்டு மகிழும் வகையில் அவ்வளவு இடங்கள் உள்ளன. இங்கு தங்கும் விடுதியும், குடில்களும் உள்ளன.

poster
half 2

பல்லவ மன்னன் கட்டிய ஸ்ரீநிவாசநல்லூர் கோரங்கநாதர் கோவில்
இந்த கோவில் திருச்சிலிருந்து சேலம் செல்லும் வழியில்
50கி.மீ தொலைவில் காவிரிக்கரை ஓரம் அமைந்துள்ளது. இது முற்கால சோழர்களின் கட்டிடக்கலைக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இந்தக் கோவில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனால் கட்டப்பட்டது. இதனால் இந்த இடம் மகேந்திரமங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. இது 50அடி உயர இரண்டு விமானங்களைக் கொண்ட கிழக்கு நோக்கி அமைந்த கோவிலாகும். இந்தக் கோவிலின் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல்லவர்களின் கலைநுட்பத்துக்கு சான்றாக விளங்குகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் ஒரு பாதுகாப்பபட்ட நினைவுச் சின்னமாகும்.

சுல்தானாக இருந்த நத்தர்ஷாவின் தர்கா
நத்தர்வலி என்று அழைக்கப்படும் இந்த மசூதி திருச்சியிலிருந்து 4கி.மீ தொலையில் மெயின் கார்டு கேட் அருகில் உள்ளது. இந்த தர்காவின் அழகிய குவிமாடம் இந்திய சாராசெனிக் கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டு உள்ளது. உலகிலுள்ள சிறந்த இஸ்லாமிய குருமார்களின் பாபா நாதர்வாலிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அவர் சுல்தானாக இருந்த போதும்,
அல்லாவின் போதனைகளைப் பரப்பிட தன் பதவியைத் துறந்து தன் சகோதரரை சுல்தானாக முடிசூட்டி விட்டு புனித பயணம் மேற்கொண்டார். இந்தக் காலக்கட்டத்தில் அவர் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். திருச்சியில் உள்ள பூந்தோட்டத்தில் தன் புனித சேவையைத் தொடர்ந்தார். இவருடைய உடல் முன்னொரு காலத்தில் ஈஸ்வரன் கோயிலாக இருந்த இடத்தில் ஒரு அறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தேக்கடி போன்று காட்சியளிக்கும்
பொன்னணியாறு அணை
இந்த அணை திருச்சிக்கு தெற்கே மணப்பாறையில் இருந்து 24கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெருமாள் மலை மற்றும் செம்மலை நடுவே கட்டப்பட்டுள்ள இந்த அணை ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு மலை ஏறுதல், சுற்றுச்சூழல் முகாம், இயற்கை சிகிச்சை மையம் மற்றும் மீன்பிடிப்பு போன்ற பலவித பொழுது போக்கு மற்றும் பயனுள்ள நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

மகிழ்ந்திருக்க பச்சைமலை
திருச்சி துறையூர் வழியாக 80கி.மீ தொலைவில் உள்ளது இந்த பசுமையான மலைத்தொடர். இந்த மலைத்தொடர் பழங்குடியின மக்களின் வாழ்விடமானவும் கலாச்சார உறைவிடமாகவும் திகழ்கிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 500மீ முதல் 1000மீ வரையில் உள்ளது.
இந்த மலைத்தொடர் தென்பரநாடு, கோம்பைநாடு, ஆதிநாடு மற்றும் வன்னாடு போன்ற பல சிறு பகுதிகளை தன்னுள் கொண்டுள்ளது. இந்த மலைத்தொடர் மலை ஏறுவதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் வன விலங்குகளை ரசிப்பதற்கும் ஏற்ற இடம். இந்த மலையின் அடிவாரத்தில் மயிலூத்து என்னும் அருவி உள்ளது.

half 1

Leave A Reply

Your email address will not be published.