தமிழக அரசு கவனத்திற்கு ! நேர்மையே உந்தன் விலை என்னவோ! நேர்மைக்கு அங்கீகாரம் கிடைக்குமா ?

தமிழக அரசு கவனத்திற்கு !
நேர்மையே உந்தன் விலை என்னவோ! நேர்மைக்கு அங்கீகாரம் கிடைக்குமா ?
திருச்சி, மகாத்மா அரசு மருத்துவமனையில் ஒரு மரத்தின் அடியில் 74 வயது முதியவர் ஒரு கால் இன்றி, ஒரு கண் பார்வை இல்லாது அமர்ந்திருந்தபொழுது, வெகுநேரம் அவர் யாரையோ எதிர்பார்த்து இருப்பது புரிந்து அவர் அருகில் சென்று ஐயா யாரை தேடுகிறீர்கள் என்று கேட்டபோது…

இட்லி வாங்க என் மனைவி போயிருக்கா என்று சொல்லும்போதே சில அடி தூரத்தில் ஒரு சத்தம்.. என்னங்க என்னங்க என்று, உடனே முதியவர் தம்பி அந்த சத்தம் போடுபவள் என் மனைவி அவளுக்கு இரண்டு கண்ணும் மங்கிய பார்வை, காதும் கேட்காது… கொஞ்சம் இங்கு கூட்டி வாருங்கள் என்ற போது இவரின் வாழ்க்கை பாதையை கேள்வி கேட்கும் எண்ணம் வராமல் இருக்காது… அந்த அம்மாவை அருகில் அழைத்து விட்டுவிட்டு, இட்லியை சாப்பிடும் முதியவருக்கு உதவியவாறே அவரைப்பற்றி கேட்டபொழுது ராமமூர்த்தி என்ற நான் Rtd VAO ஜெயங்கொண்டம் சொந்த ஊர். கடைசியாக வெண்கொண்டான் மேற்கில் VAO வாக பணிபுரிந்தேன். எனக்கு பிள்ளைகள் இல்லை. என் மனைவிக்கு நான் பாரம். எனக்கு என் மனைவி பாரம்… இருதய ஆபரேஷன், ஒரு கால் எடுத்துவிட்ட சுகர் ஆபரேஷன், ஒரு கண்ணில் பார்வையில்லை. என் மனைவிக்கு கண்ணும் காதும் கேட்காது.. அதான் என் வாழ்க்கை. இப்போது கூட இன்னொரு காலில் இரத்த ஓட்டம் இல்லை என்று மருத்துவம் பார்க்க நேற்று திருச்சி வந்தேன். தஞ்சாவூர் இல்லை மதுரை போக செல்லிட்டாங்க.
10ரூ லஞ்சம் வாங்காமல் காசு சேர்க்காமல் வாழ்ந்ததற்கு.. நேர்மையாய் இருந்ததற்கு கடவுள் ஏன் இப்படி சோதிக்கணும் என்று கண்கலங்கினார்.
வெண்மான்கொண்டான் மேற்கில் VAO வாக பணியாற்றி பணி மாறுதல் வந்த போது இரண்டு லாரிகளில் ஊர் மக்கள் தாசில்தாரை சந்தித்து பணி மாற்றக் கூடாது என வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு நேர்மையாக வாழ்ந்தேன்.
இன்றைக்கு பென்சனுக்கு GO வந்தும் இன்னும் பென்சன் வரல தம்பி. எனக்கு அப்புறம் என் மனைவிக்காவது பென்சன் கிடைக்க உதவுங்கள் என்று கைகூப்பிய கணம் ….
நேர்மையாய் வாழ்வது தப்போ என நினைக்கும் வலியை தந்தது. பெரியவரின் கையைப்பற்றி சொன்னோம். ஐயா அவனவன் ஆயுசோடு வாழ அப்போல்லோவிலும், காவேரியிலும் தவம் கிடக்கிறான். நேர்மைதான் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து இருக்கிறது.
எங்களால் ஆன உதவியை செய்கின்றோம் என்று சொல்லி தஞ்சாவூருக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தோம்.
ntrichy.com இதழின்… கோரிக்கை
இக்கட்டுரையை வாசிக்கும் அரசின் அதிகாரிகள் ராமமூர்த்தி என்ற Rtd VAO (2002-ல்) பென்சன் G.O வந்தும் பென்சன் வராததற்கு ஆவண செய்து பென்சன் தருவதே அவரது நேர்மைக்கு அங்கீகாரம் என வேண்டுகோள் வைக்கின்றோம்.
78 ஓய்வு வி.ஏ.ஓ. 2002 ராமமூர்த்தி தொடர்பு எண் – 9655952481
– கோன்ஸா சிற்பிகா
