தீபாவளி ஃபண்டு : வெடிக்குமா பட்டாசு?

0
1

இப்படி ஒரு வாய்ப்பு இல்லையென்றால் பல நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு தீபாவளி என்பது கொண்டாடப்படும் பண்டிகையாக இல்லாமல் பணம் படைத்தவர்கள் கொண்டாடுவதை வேடிக்கை பார்க்கும் பண்டிகையாகவே இருந்திருக்கும்.

அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள் தரும் போனஸை நம்பி தீபாவளி கொண்டாடும் ஒரு தரப்பினர் உண்டு. அவர்களுக்கான கடைகள் தான் சாரதாஸ், சென்னை சில்க்ஸ், போத்தீஸ் போன்ற கடைகள். போனஸ் வருமானமின்றி, பெரும் வியாபாரிகள், வசதி படைத்தவர்கள் தீபாவளி முதல் நாளன்று தரும் பணத்தை (யாசகத்தை..?) பெறும் ஒரு தரப்பினர் உண்டு.

அவர்களுக்கான கடைகள் தான் ரோட்டுக் கடைகள் எனக் கூறப்படும் தரைக்கடைகள். தீபாவளி முதல் நாளன்று தற்காலிக சந்தை உருவானது இப்படியான மக்களுக்காகத் தான் என்றே கூட சொல்லலாம். இந்நிலையை மாற்றி நடுத்தர, அடுத்தட்டு மக்களும் சாரதாஸ், போத்தீஸ் கடை வாசலை நுழைய வைத்தது தான் தீபாவளி பண்டு.
மாதாமாதம் ஐநூறோ, ஆயிரமோ கட்ட வேண்டும். 12ம் மாதம் முடிவில் கட்டிய பணத்துடன், கூடுதலாக பணமாகவோ, பரிசுப் பொருட்களாகவோ தருவர். இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்கி 12ம் மாத முடிவில் நிறைவுறும்.

2

இது பல கோடி புரளும் வியாபாரமாகும்.! திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை தீபாவளி பண்டு வசூலிக்கும் நபர்கள் நூற்றுக்கானோர் உண்டு. ஒருவர் 100, 200, 500 என மாத சீட்டுதாரரை (தீபாவளி பண்டு கட்டுபவர்.!) வைத்திருப்பார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுதாரரை வைத்திருப்போரும் உண்டு. மகளிர் சுயஉதவிக் குழு கட்டமைப்பில் உள்ளவர்களில் ஒரு சிலர் 10, 20 பேரிடம் வசூலித்து தரும் பணியில் ஈடுபடுவர். அவருக்கு சீட்டு நடத்துபவர்கள் சிறப்பு போனஸ் தரும் நடைமுறையும் உண்டு.

ஒருவரிடம் ஆயிரம் என வசூலித்தால் ஆயிரம் பேரிடம் ஒரு மாதத்தில் வசூலிக்கும் தொகை மட்டுமே பத்து லட்சமாகும். இந்த பத்து லட்சம் பணத்தை அவர் பிறருக்கு வட்டிக்கு கொடுத்து முறையாக வசூலித்து லாபம் பார்த்து 12ம் மாத இறுதியில் தனது சீட்டுதாரர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தர வேண்டும். ஒருவருக்கு 12ம் மாத இறுதியில் பனிரெண்டாயிரம் மற்றும் கூடுதலாக இரண்டாயிரம் பணமாகவோ அல்லது ஸ்வீட் பாக்ஸ், வெடி பாக்ஸ், குடம், புடவை, தங்க காசு என தருவார்கள். ஒருவருக்கு 12ம் மாத இறுதியில் சுமார் பதினாலாயிரம் தருகிறார் என்றால் ஆயிரம் பேருக்கு ஒரு கோடியே நாற்பது லட்சமாகும். இப்போது புரிந்திருக்கும் இது பல கோடி புரளும் வியாபாரம் என்று சொன்னதன் காரணம்.

பத்தாண்டுக்கும் மேல் தீபாவளி பண்டு நடத்தும் ஒருவர் இது குறித்து நம்மிடம் கூறுகையில், ‘ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறோம் என்றால் அவருக்கு அந்த மாதம் ரூ.1,165 எடுத்து வைக்கும் அளவிற்கு சம்பாதிக்க வேண்டும்.

4

பணத்தை வட்டிக்கு தரும் போது ஒருவருக்கு பெரும் தொகையை தராமல் பலருக்கும் பிரித்து தர வேண்டும். பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் புதிதாக இந்த தொழிலுக்கு வருபவர்கள் ஒருவருக்கு பெரும் தொகையை கொடுத்துவிட்டு அந்த நபர் திருப்பித் தராமல் போனால் பணச் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். மற்றொன்று கார் வாங்குவது, வீடு வாங்குவது என பணத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்துவது. நாங்கள் வசூலிக்கும் பணத்தை வட்டிக்கு விடுவதோடு தங்கத்திலும், நம்பிக்கையான சீட்டு நிறுவனத்தில் பெரிய தொகை சீட்டில் சேர்ந்தும் பணத்திற்கு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்கிறோம்‘ என்றார்.

அதெல்லாம் சரி.. இப்போது இதை இங்கே சொல்லக் காரணம் என்ன எனக் கேட்கிறீர்கள் தானே…? கொரோனா..! ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் முடக்கியது போல. பண்டிகை சீட்டுக்கான பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

‘பல கோடி ரூபாயை சந்தையில் போட்டுப் புரட்டி எடுத்த நாங்கள் இந்த ஆண்டு ‘கொரோனா’ காரணமாக வகையாக சிக்கிக் கொண்டோம்‘ என புலம்பத் தொடங்கி இருக்கிறார்கள் தீபாவளி சீட்டு வசூலித்தவர்கள். இது குறித்து ஒருவர் கூறுகையில்,
‘நாங்கள் மாதாமாதம் வசூலிக்கும் பணத்தை தேவைப்படுவோர்க்கு வட்டிக்குத் தருவோம். இதில் அடித்தட்டு மக்கள் முதல் பெரும் வியாபாரிகளும் அடங்குவர். இந்த பணப்பரிவர்த்தனை தான் எங்களுக்கு முக்கிய ஆதாரமாகும்.

ஆனால் இந்த வருடம் கொரோனால் அது பெருமளவு தடைபட்டுப் போனது. கொடுத்தவர்களிடம் வசூலிக்க முடியவில்லை. புதிதாக எவருக்கும் வட்டிக்கு பணம் தர முடியவில்லை. இதனால் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பணபரிவர்த்தனை ஸ்தம்பித்து போனது. மூன்று மாத தீபாவளி சீட்டு பணத்தை ஜூன் மாதம் தான் வசூலித்தோம். பலர் சீட்டு கட்ட முடியாமல் பாதியில் விட்டுவிட்டார்கள். எது எப்படியாகினும் இந்த மாத (அக்டோபர்) இறுதிக்குள் 12 மாதமும் தவறாமல் கட்டிய அனைவருக்கும் கட்டிய பணத்துடன் கூடுதல் தொகையை தர வேண்டும். நாங்கள் வெளியில் வட்டிக்கு பணம் வாங்கியோ அல்லது வீட்டிலிருக்கும் நகைகள், இது வரை சம்பாதித்த சொத்துக்களை அடகு வைத்தோ, விற்றோ திருப்பித் தர வேண்டும். இல்லையென்றால் தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளப்படுவோம்‘ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு சீட்டுதாரருக்கும் ஒரு கிராம் தங்கக் காசு தரும் திட்டம் உண்டு. தொடர்ந்து ஐந்தாண்டு எந்த பிரச்சனையும் இன்றி கொடுத்துவிட்டேன். ஆனால் இந்த ஆண்டு தங்கம் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.3,680 ஆக இருந்தது. ஆனால் இப்போது ஒரு கிராம் ரூ.5,000 ஆக உயர்ந்துள்ளது.

இது தான் எங்களை மிகவும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது’ என புலம்பினார். தீபாவளிக்கு சீட்டு பணத்தை கொண்டு புதுத்துணி, பலகாரத்துடன் கொண்டாடுவோரின் வீட்டு வாசலில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்குமா.. அல்லது சீட்டுப் பணத்தை தர முடியாமல் தவிப்பவர்கள், தராமல் ஏமாற்றி தலைமறைவானவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் குவியுமா.? போதும்டா சாமி… என தீபாவளி சீட்டு தொழிலை இந்த ஆண்டோடு தலை முழுகப் போகிறவர்கள் எத்தனை பேர் என்பதை அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சொல்லிவிடும்.

3

Leave A Reply

Your email address will not be published.