கவனிக்கப்படுமா? புளியஞ்சோலை

0

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சிக்குட்பட்டது புளியஞ்சோலை. இந்த புளியஞ்சோலை சுற்றுலாத்தலமாக உள்ளது. புளியஞ்சோலை என்பது கொல்லிமலையின் அடிவாரமாகும்.

கொல்லிமலை திருச்சி மட்டுமின்றி சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய மலையாகும். இம்மலை இயற்கை அழகுடைய பச்சை கம்பளம் விரித்தது போல் காட்சிக்கு விருந்தாக இருக்கும். மலையின் உச்சியில் உள்ள மாசி பெரியண்ணன் கோயிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள் ஆடிமாதத்தில் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவதுண்டு, குறிப்பாக ஆடி 18, ஆடி 28-ம் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.

மலை உச்சிக்கு நாமக்கல் மாவட்டம், சேலம் மாவட்டம் வழியாகவும் செல்லலாம் என்றாலும், நடைபாதை வழியாக மட்டுமே புளியஞ்சோலை வழி பயன்படுத்தப்படுகிறது. இங்கு எந்தவித சாலையும் அமைக்கப்படவில்லை.

மலைக்கு செல்ல இயற்கையாக அமைந்த பாறைகளும், கற்களும் அதற்கு மத்தியில் உள்ள காடுகளும் தான் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது.
இந்த வழியாக செல்ல வேண்டுமானால் 7 கி.மீ தொலைவில் தான் கோயில் உள்ளது.

இங்கு ஏராளமான பக்தர்கள் இந்த வழியாக செல்வதை வழக்கமாகவே கொண்டுள்ளனர். மேலும் இங்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மலையிலிருந்து வரும் அருவிகளால் பெருக்கெடுத்து கீழே வரும் ஐயாற்றில் குளித்து மகிழ்கின்றனர்.

இந்த புளியஞ்சோலையை கடந்து அடர்ந்த காட்டிற்குள் நுழைந்தால் ஒரு வழிப்பாதை போல்தான். இது நாமக்கல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். வனச்சரகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் மழைக்கு செல்லும் போது எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களையோ, மதுபாட்டில்களையோ, பிளாஸ்டிக் பொருட்களையோ எடுத்து செல்லக்கூடாது. உள்ளே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. உள்ளே செல்ல அனுமதி இல்லை. மீறினால் வன பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

இதனால் எந்த பயனும் இல்லை. இங்கு வருபவர்கள் மது அருந்துகிறார்கள், பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்கிறார்கள், உள்ளே அனுமதி இல்லை என்கிறார்கள் உள்ளே 7 கி.மீ தூரம் வரை சென்றுதான் வருகிறார்கள். இங்கு வருபவர் பக்தர்கள் என்றாலும், குடித்துவிட்டு அருகில் குளிக்கும் இளைஞர்கள் அதிகம், குடும்பத்துடன் வருபவர்கள் முகம் சுழிக்கும் நிலைதான் உள்ளது. கழிவறை வசதிகள் கிடையாது.

பெண்கள் ஆடை மாற்றுவதற்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை. எந்த பாதுகாப்பும் இல்லை. எந்த உத்திரவாதமும் இல்லாத நிலைதான் உள்ளது. எனவே இங்கு வரும் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதோடு, அனுமதியின்றி விற்கப்படும் மதுக்கடைகளையும், அகற்ற வேண்டும்.

பாட்டில்களை நீரோடைகளில் போடப்படுவதால் குளிப்பவர்களுக்கு மிகவும் பெரிய தீமையாக அமையும். எனவே அரசு நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

– கே.எம்.ஆர்.

Leave A Reply

Your email address will not be published.