நட்பு தான் முதல்ல, தொழில் அப்புறம்தான்

0

‘நண்பர்கள் ஒற்றுமையாக சேர்ந்து செயல்பட்டால் எந்த ஒரு விஷயத்திலும் ஜெயிச்சிடலாம் என்பதை உண்மை என நிரூபித்திருக்கிறார்கள் பெரம்பலூரைச் சேர்ந்த நண்பர்கள் இருவர்.

திருச்சி-திண்டுக்கல் சாலையில் ராம்ஜி நகரில் ராக்ஃபோர்ட் இண்டஸ் கோ என்னும் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். 30+ வயதைக் கடந்த இந்த நண்பர்களின் வெற்றிக் கதையை அறிய அவர்களுடைய அலுவலகத்தில் சந்தித்தோம்.

ராக்ஃபோர்ட் இண்டஸ் கோ நிறுவனத்தின் நிறுவனரான ரவிக்குமாரிடம் பேசுகையில், “பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை அடுத்த காரை கிராமம் தான் என்னோட சொந்த ஊர். என்னோட தாத்தா பாரம்பரியமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஆனால், என்னோட அப்பா ஒரு அரசு ஊழியர். அதனால காலப்போக்கில் விவசாயத்தை கைவிட்டுட்டோம்.

எனக்கு பத்தாவது படிக்குறப்பவே ஃபேஷன் டிசைனரானும்னு ஆசை. ஆனா, நான் படிச்சது பி.டெக் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங். படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் ‘ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்’-ல் டெரிட்டரி மேனேஜராக மூணு வருஷம் வேலை பார்த்தேன்.

அதுக்கப்புறம் எங்களோட சொந்த வாட்டர் கம்பெனியில் 4 வருஷம் வேலை பார்த்தேன். ஒரு கட்டத்துல தான், சொந்த ஃபீல்டை விட்டு நாம விலகிப் போறோம்கிறது புரிய ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் தான் ஆட்டோமொபைல் சம்பந்தமா நம்ம எதாவது சொந்தமா தொழில் தொடங்கணுங்குற யோசனை வந்துச்சி. உடனே, என் ப்ரெண்ட் சுபாஷ் சந்திரபோஸுக்கு போன் அடிச்சேன். அந்த டைம்ல அவன் ஃபாரீன்ல இருந்தான். நான் வந்ததுக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்லாம்னு சொன்னான்.

அப்படி நண்பர்கள் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிச்சது தான் ராக்ஃபோர்ட் இண்டஸ் கோ. 2016 ஆகஸ்ட் மாசம் ஆரம்பிச்சது இன்னைக்கு சிறப்பா போய்க்கிட்டிருக்கு” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ஆட்டோ மொபைல் துறையில் எனக்கும் சரி, என் நண்பனுக்கும் சரி சர்வீஸ் சம்பந்தமான விஷயங்கள் தான் தெரியும். சேல்ஸ் பற்றிய எந்த அனுபவமும் இல்லை. டிராக்டர்கள், கலப்பைகள் என முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்றோம்.

இதற்காக ஆரம்பத்தில் திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசினோம். அப்படி ஒரு நாளைக்கு 300 கி.மீ வரை பைக்கிலேயே பயணம் செய்து எங்களுடைய வாடிக்கையாளர்களை நாங்கள் உருவாக்கினோம்.

எங்களிடம் உள்ள ‘சோனாலிகா’ நிறுவன தயாரிப்புகள் மற்ற நிறுவன தயாரிப்புகளின் விலையை விட குறைவு. ஒரு டிராக்டரை 10 லட்சத்துக்கு வாங்கி அதுக்கு வருஷத்துக்கு 30 ஆயிரம் செலவு பண்றது நஷ்டமான ஒன்னு தான். ஆனா, எங்களிடம் உள்ள சோனாலிகா டிராக்டரின் பராமரிப்பு செலவு குறைவு தான்”.

“நாங்க இந்த பிஸ்னஸை ஆரம்பிக்குறப்பவே இதோட சாதக, பாதகங்கள் எங்களுக்கு தெரியும். அதனால், ஆரம்பத்தில் ஏற்பட்ட பொருளாதார ரீதியான நெருக்கடியை சுலபமாக கையாண்டோம். விவசாயம் நிரந்தரமான ஒன்னு. அதை அழிக்க முடியாது. இயற்கை மேல நம்பிக்கை இருக்கு. அது நிச்சயம் நம்மை காப்பாத்துங்குற நம்பிக்கையோட தான் செயல்பட்டுக்கிட்டு இருக்கோம்னு உற்சாகத்துடன் கூறினார்.

இந்த நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான சுபாஷ் சந்திரபோஸோ, “பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் தான் என்னோட சொந்த ஊர். எனக்கும் ரவிக்குமாருக்கும் 11-வது படிக்குறப்ப தான் நட்பு உருவாச்சு. அதுக்கப்புறம் திருச்சியில், பாரதிதாசன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஒன்னா தான் பி.டெக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிச்சோம். ஆனா, நான் படிச்சு முடிச்சதுக்கு அப்புறம், ஓமன் நாட்டுக்கு வேலைக்கு போய்ட்டேன்.

ஜாயிண்ட் ஃபேமிலி, நண்பர்கள்னு எப்பவுமே சுற்றிலும் எல்லாரும் இருந்துக்கிடே இருப்பாங்க. ஆனா, வெளிநாட்டுல 6 வருஷம் தனியாத் தான் இருந்தேன். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்துச்சி. அப்ப தான் முடிவு பண்ணேன். அடுத்தமுறை நம்ம ஊருக்கு போறப்ப சொந்தமா ஒரு தொழில் ஆரம்பிச்சு செட்டிலாகிடனும்னு முடிவு பண்ணேன். அப்ப தான் நண்பன் ரவிக்குமார் போன் பண்ணி பிஸ்னஸ் ஐடியா சொன்னான்.

2015-ல் இந்தியாவுக்கு வந்ததும் பேசி முடிவு பண்ணி 2016-ல் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணிட்டோம். ஆரம்பிச்ச முதல் 4 மாசம் வரைக்கும் எந்த பிஸ்னஸும் இல்லை. அதுக்கப்புறமும் மாசத்துக்கு 1-2 வண்டி தான் போகும். இருந்தாலும் எங்களுக்கு நம்பிக்கை குறையலை. இப்ப ஓரளவிற்கு 5-10 வண்டி வரை மாசத்துக்கு போகுது. ஒரு வருஷத்துல இதையே எங்களுடைய வெற்றியாக பார்க்கிறோம்.

நண்பர்கள் சேர்ந்து ஒரு தொழிலை வெற்றிகரமா செஞ்சிட முடியுமாங்குற கேள்வி எல்லாருக்கும் வரும்! நட்புல எப்பவுமே நம்பிக்கை இருக்கணும். எந்த விஷயமாக இருந்தாலும், ரெண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து பேசி தான் முடிவெடுப்போம். ஒருசில நேரத்துல நான் எங்கயாவது ஃபேமிலியோட வெளிய போய்ட்டா முழு பொறுப்பையும் என் நண்பன் தான்

பாத்துக்குவான். அது மாதிரி தான் நானும். என்னடா இது, எல்லாத்தையும் நம்ம தலையில கட்டிட்டு போய்ட்டானேங்குற அந்த நெனப்பு வந்தா தான் பிரச்சினையே! ஃபிரெண்ட்ஷிப் தான் முதல்ல, பிஸ்னஸ் எல்லாம் அப்புறம் தாங்குறதுல நாங்க தெளிவா இருக்கோம். இந்த தெளிவான புரிதலோட நாங்கள் பயணிச்சுக்கிட்டு இருக்கோம்” என்றார்.

– கிருஷ்வின்

Leave A Reply

Your email address will not be published.