அரசை மீறி சினிமா எடுக்க முடியாது – பளீர் பரதன்

500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வாங்கி விநியோகம் செய்து, 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த நிறுவனம் திருச்சி ஆர்.விஸ்வநாதன் அவர்களின் ‘பரதன் பிலிம்ஸ்’. இந்த நிறுவனத்தின் வாரிசான ஆர்.வி.பரதன் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘பாக்கணும் போல இருக்கு’.
தியேட்டர் ரெஸ்பான்ஸை பார்த்துவிட்டு வந்தவரை மடக்கி அவரிடம் சிலபல கேள்விகளை முன்வைத்தோம்.
பாக்கணும் போல இருக்கு எப்படி போய்க்கிட்டு இருக்கு?
‘நீ நான் நிலா’ படத்திற்கு பிறகு நான் நடித்த இரண்டாவது படம் இது. முதல்ல படத்தை 54 தியேட்டர்ல தான் ரிலீஸ் பண்ண முடிஞ்சது. ஆனா, இரண்டாவது நாளே நூறு தியேட்டர்க்கு மேல எங்க படத்துக்கு இடம் கிடைச்சது. படம் ரிலீசாகி ரெண்டாவது வாரம் நல்லா போய்க்கிட்டு இருக்கு. விமர்சனங்களும் பாசிட்டிவா வந்துக்கிட்டு இருக்குறதில் சந்தோஷம்.
முதல் படத்துக்கும், இரண்டாவது படத்துக்கும் ஏன் இந்த இடைவெளி?
இந்த இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் வந்தன. படத்தினை நாங்கள் தயாரிப்போம் என்கின்ற மன நிலையோடு தான் பலர் எங்களை அணுகினார்கள்.

ஆனால், என்னை விருப்பப்பட்டு படம் எடுக்க வருபவர்களுக்கு தான் படம் செய்து கொடுப்பது என்ற தெளிவான முடிவில் இருந்தேன். அதனால் தான் இந்த கேப். அதுமட்டுமில்லாம, கொஞ்சம் பர்சனல் வேலை. அதனால தான் தொடர்ந்து நடிக்க முடியலை. இனி வருடத்திற்கு ஒரு படம் என தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன்.
சிவகார்த்திக்கேயன், சந்தோஷ் நாராயணன், பிரசன்னா என சினிமா பின்புலம் இல்லாதவர்கள் எல்லாம் ரவுண்டு கட்டி அடிக்கையில், உங்களுக்கென்ன?
பரதன் பிலிம்ஸ்க்கு நெருக்கமாக பல இயக்குனர்கள், நடிகர்கள் இன்னும் தொடர்பில் இருக்காங்க. அவங்ககிட்ட வாய்ப்பு கேட்டிருந்தா இந்நேரம் நான் 50 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். எனக்கு அது தேவைப்படலை. இன்னைக்கு சினிமாவில் போட்டி அதிகமா இருக்கு. போராடி வாய்ப்பை பெற வேண்டிய சூழல். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சென்டிமென்ட் இருக்கு. ரெண்டு படம் பிளாப் ஆகிட்டா, ராசியில்லாதவன்னு முத்திரை குத்திடுவாங்க.
அப்பா நிறைய படம் பண்ண சொல்லி அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அடுத்து ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை போய்க்கிட்டு இருக்கு. பரதன் பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்கலாம்னு இருக்கேன். இனிமேல் தான் சினிமாவில் கொஞ்சம் கூடுதலா கவனம் செலுத்தணும்.
இன்றைய திரைப்பட விநியோகம் எப்படி இருக்கு?
இன்னைக்கு ஒரு படத்தை எடுக்குறதை விட, அந்தப் படத்தை வெளியிடுறதுக்கு பண்ற பப்ளிசிட்டிக்கான செலவு தான் அதிகம். அப்படி பப்ளிசிட்டி செஞ்சா தான் ஒரு படத்தை இன்னைக்கு மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க முடியும். இன்னைக்கு திருட்டு டிவிடி, பைரஸி பிரச்சினைகள் வந்ததால தான் படத்தோட வினியோகம் பாதிக்கப்படுது. முன்ன எல்லாம் ஒரு படத்தை 7 மாவட்டமா பிரிச்சு வினியோகம் செய்ய கொடுப்பாங்க. ஆனா, இப்ப ஒருத்தருக்கு படத்தை கொடுத்துடறாங்க. அவர் தமிழ்நாடு முழுக்க படத்தை வெளியிட்டுடுறாங்க. அந்தவகையில் பெரிய இழப்பு தான்.
இன்னைக்கு ஒரு படம் ரிலீஸ் ஆவதில் ஏன் இவ்வளவு சிக்கல்?
என்னுடைய படத்துக்கே பிரச்சினை வந்தது. முதல் நாள் வெறும் 54 தியேட்டர்ல தான் படத்துக்கு இடம் கிடைச்சது. அப்புறம் போகப்போக தான் நூறு தியேட்டர் வரை படத்தை ரிலீஸ் பண்ணோம். வினியோகஸ்தர் சங்கம், நடிகர்கள் சங்கம் மட்டுமல்ல எல்லா இடத்துலயும் பிரச்சினை இருக்கு.

சினிமாவில் அரசியல் தலையீடு அதிகரிக்கிற மாதிரி இருக்கே?
இது வெளிப்படையா இல்ல. மத்தபடி மறைமுக அரசியல் சினிமாக்குள்ள அதிகமா இருக்கு. அரசாங்கத்தை நம்பி தான் சினிமா இயங்கிகிட்டு இருக்கு. லொக்கேஷன் முதற்கொண்டு, படத்தை முடிச்சி சர்டிபிகேட் வாங்கி, வரிச்சலுகை வரை அனைத்தும் அரசை சார்ந்து தான் இயங்கிக்கிட்டு இருக்கு. அப்படியிருக்கையில், அவங்களை பகைத்திட நேரும் போது தான் பல பிரச்சினைகள் வருது. அதுதான் பட ரிலீஸ் வரை பாதிப்பை உண்டாக்குது.
நீங்க தயாரிக்கிறதா இருந்த சிம்புவோட ‘கெட்டவன்’ படம் என்னாச்சு?
கெட்டவன் படம் ஆரம்பிச்சு 30 நாள் சூட்டிங் போச்சு. சிம்புவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான பிரச்சினையால் தான் படம் நின்னுபோச்சு. கிட்டத்தட்ட 2 நடிகையை சரியா நடிக்கலைன்னு மாத்திட்டாங்க.
அதுலயே எங்களுக்கு 3 கோடி வரை நஷ்டமாச்சு. அதுக்கப்புறம் சிம்பு மூணாவதாக ஒருத்தரை செலக்ட் பண்ணி நடிக்க வைக்கலாம்னு எங்ககிட்ட பேசினார். சரிப்பட்டு வராதுன்னு விலகிட்டோம். இப்ப முழு ரைட்ஸூம் சிம்புகிட்ட தான் இருக்கு. அந்த படத்தை அன்னைக்கு நாங்க தயாரிச்சிருந்தா, இந்நேரம் 30-க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கிற அளவுக்கு வளர்ந்திருப்போம். அந்த படத்தை பண்ணாதது எங்களுக்கு வருத்தம் தான்.
ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி, டிக்கெட் விலை உயர்வு போன்றவை சினிமாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
இன்னைக்கு ஜி.எஸ்.டி மட்டுமல்லாது மாநில அரசோட கேளிக்கை வரி என மொத்தம் 58 தவிகிதம் வரியாக கட்ட வேண்டியிருக்கு. அதுமட்டுமில்லாம குடும்பத்தோட வந்து படம் பார்த்தா குறைஞ்சது ரெண்டாயிரம் ரூபாயாவது செலவு ஆகும். அப்படியிருக்க தியேட்டருக்கு யார் வருவாங்க. அந்தவகையில் சினிமா துறைக்கு பாதிப்பு இல்லாமலில்லை.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, சின்ன பட்ஜெட் படங்களுக்கு இருக்கிறதா?
இன்னைக்கு நிமிஷத்துக்கு ஒரு தடவை டி.வியில் காசு கொடுத்து விளம்பரம் போட்டா தான் படத்தை மக்கள்கிட்ட சேர்க்க முடியும். சின்ன பட்ஜெட் படங்களுக்கு இந்த வசதி சாத்தியமில்லை. தியேட்டர்களிலும் சின்ன படத்துக்கு இடம் கிடைக்குறதில்லை.
படத்தை பார்த்தா தானே ரசிகன் ஒப்பீனியன் சொல்ல முடியும். படம் பார்க்கவே இங்க வாய்ப்பு கொடுக்குறதில்லையே. அங்கயே சின்ன பட்ஜெட் பங்கள் நல்லாயிருந்தாலும் அடிபட்டு போகுது.
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சவுண்ட் அதிகமா கேக்குதே?
அடுத்தவங்க பணத்தை எடுக்கக்கூடாதுன்னு நினைக்குறவங்க யார் வேணுமுன்னாலும் அரசியலுக்கு வரலாம். அந்தவகையில், யாரையும் வரக்கூடாதுன்னு சொல்லுற உரிமை யாருக்கும் கிடையாது. தமிழக மக்களுக்கு சினிமா மேல இன்னைக்கும் மோகம் இருக்குது. நடிகர்கள் மேல எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாததால மக்கள் நிச்சயமாக ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள்.
நடிகர்கள் அரசியலுக்கு வரணுமுன்னு உள்ளுக்குள்ள ஆசைப்பட்டாலும். அதை முடக்க ஒருசிலர் கொடுக்கும் அழுத்தம் தான் அவங்களை வெகுண்டெழ வைக்க காரணமாகிடுது. மத்தபடி மக்கள் யாரை நம்புறாங்களோ அவங்க தான் சேர்ல உக்கார முடியும்”. என்றார்.

Valthukkal Anna! 🔥