பன்முக தோற்றத்துடன் திருச்சி மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட்ட டாக்டர் ஜி. சிற்றம்பலம்
திருச்சியின் அடையாளங்கள் - 42

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்….
ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், ஜப்பான் நிபுணர் ஒருவரிடம் பல்மருத்துவம் பயின்று அத்துறையில் தனது 25வது வயதில் அங்கீகாரம் பெற்ற பல் மருத்துவரானார்.
டவுன் ஹால் எதிரில் 1936ஆம் ஆண்டு தனது பல் மருத்துவமனையைத் தொடங்கினார். டாக்டர் சிற்றம்பலம் தொடங்கியதுதான் திருச்சியின் முதல் பல் மருத்துவமனை. ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் அன்று முதல் இன்று வரை இம்மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 1951ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினராகச் செயல்புரிந்த இவர், நகராட்சி உறுப்பினராகப் பொதுவாழ்விலும் ஈடுபட்டார். இவர் 1952ல் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபைக்குள் கருப்புத் துண்டு அணிந்து சென்ற முதல் துணிச்சல்காரர் இவர்தான்.


இவரது சமூகப் பணிகள் பல, குடிசை வாழ்வோர் சங்கத்தை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்தார். தோல் பதனிடும் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தை ஏற்படுத்தினார். திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்துள்ளார். திருச்சியின் அர்பன் கோ-ஆபரேட்டிவ் ஸ்டோருக்கு 15 ஆண்டுகள் தலைவராக இருந்தார்.
ஸ்ரீரங்கம் மாதர் சங்கத்தை உருவாக்கினார். பால்வாடிப் பள்ளி ஒன்று தொடங்கி அதற்கு அரசு மானியம் பெற்றுத் தந்தார். திம்மராயன் சமுத்திரத்தில் திருவளர்சோலைக்குள் இருக்கும். முதியோர் இல்லத்துக்கு ‘சிற்றம்பலம் அம்சவல்லி இல்லம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மருத்துவராக, சமூக சேவகராக, தொழிற்சங்கவாதியாக, அரசியல்வாதியாக பன்முகத் தோற்றத்துடன் திருச்சி மாவட்ட வளர்ச்சிக்குத் தூணாக இருந்த டாக்டர் சிற்றம்பலம் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி காலமானார்.
இவரது வாரிசுகள் ஜெயராமன், கேசவராஜ், வனஜா கருணாநிதி ஆகியோராவர். தந்தையின் வழியில் டாக்டர் கேசவராஜ் கல்விப் பணியிலும், சமூகப் பணியிலும் ஆர்வமிக்கவர். தற்போது கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி தாளாளராகவும், செவிலியர் பள்ளி இயக்குநராகவும் தொண்டாற்றி வருகிறார்.
