ஓவியர் பெயிண்டராக மாறிய சோகம்

0
D1

இந்திய திரையுலகில் 70,80 களில் ஓவியர்களின் பங்கு என்பது மிக முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் இருந்தது. அவர்களுடைய கைவண்ணத்தில் பல ஹீரோக்கள் 100 அடி உயர கட்ட அவுட்டுகளாக உயர்ந்து நின்று புகழின் உச்சத்தை அடைய வைத்துள்ள பெருமை இவர்களுக்கும் உண்டு.

அப்படிபட்ட திரை உலகில் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த மிகப்பெரிய நடிகா்கள் எல்லாரும் இவருடைய கட்அவுட்டில் இடம்பெற்றவா்கள் தான். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் புதுத்தெருவில் வசித்து வரும் கஸ்பா் மிக சிறந்த ஓவியராக இந்திய திரை உலகில் வலம் வந்தவர்.

நம்ம திருச்சி இதழுக்காக நேரில் சந்தித்து பேசிய போது…
அடிப்படையிலேயே நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். படிக்கும் வயதில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படம் வரைவதில் ஆர்வத்தை காட்டிய நான் சென்னைக்கு சென்று ஓட்டலில் வேலை பார்த்து வந்தேன். எனக்கு கிடைத்த 3 மணி நேர ஓய்வு நேரத்தில் ஊரை சுற்றி வந்த எனக்கு ஓட்டல் அருகாமையில் படம் வரையும் நிறுவனங்கள் இருப்பதை கண்டு ஓய்வு நேரத்தில் அங்கு வாய்ப்பு தேடி சென்றேன்.

D2

நீண்ட முயற்சிக்கு பிறகு உதவியாளராக சேர்ந்த போது ஆட்டுக்கார அலமேலு, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் வெளியானது அதற்கான விளம்பர பலகைகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

அதில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். அதில் எனது திறமையை பார்த்து பெங்களுரில் இருந்து வந்த என்னுடைய குரு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அம்பாகி என்னை அழைத்து கொண்டு டெல்லி, மும்பை, ஆந்திரா, என்று எல்லா மாநிலங்களுக்கும் சென்றார்.

பல படங்களில் 100 அடி உயர பேனர்களில் என்னுடைய திறமையை வெளிக்காட்டினேன். என்னுடைய குருவும்,நானும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நினைவுகள் எல்லாம் இன்றும் என்னை வாழ வைத்து வருகிறது என்றார்.

N2

ஆனால் எங்களுடைய திறமையை புதைக்கும் விதமாக வந்தது தான் இந்த ப்ளக்ஸ் கலாச்சாரம். துணியில் வரைந்து கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல வருடங்கள் ஆந்திராவில் உள்ள பல நடிகா்களை வரைந்து கட்டஅவுட்களாக வைத்து சிறந்த ஓவியராக புகழ் கிடைத்த எனக்கு நம்முடைய ஊரில் வாழ வேண்டும் என்ற ஆசையில் என்னுடைய சொந்த ஊரான திருச்சிக்கு வந்து ராஜா சினி ஆர்ட்ஸ் என்று துவங்கி நடத்தி வருகிறேன்.

இன்றை காலகட்டத்தில் ஓவியர்களும், ஓவியமும் அழிந்துவிட கூடாது என்பதற்காக என்னுடைய 4 மகன்களுக்கு, 1மகளுக்கும் ஓவியம் வரைய கற்று கொடுத்துள்ளேன். தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் நடைபெற்ற ஓவிய போட்டிகளில் என்னுடைய பிள்ளைகள் தான் எப்போதும் வெற்றி பெறுவார்கள். என்னுடைய மூத்த மகன் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

அதேபோன்று என்னிடம் பயிற்சி பெற்று கொண்டவர்களும் மிக சிறந்த ஓவியா்களாக உள்ளனா்.

ஆனால் வேதனை அளிக்க கூடிய செய்தி என்றால் அது ஓவியர் என்ற பெயர் மறைந்து பெயிண்டர் என்ற பெயர் வந்தது தான். எங்களுடைய வாழ்வாதாரத்திற்காக நாங்கள் பெயிண்டிங் வேலைக்கு செல்கிறோம். திருச்சியில் மட்டும் 300க்கும் அதிகமான ஓவியர்கள் உள்ளனா்.

நாங்கள் அரசிடம் வைக்கும் முக்கிய கோரிக்கையே ப்ளக்ஸ் கலாச்சாரத்தை தடை செய்ய வேண்டும். ஓவியங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். விளம்பர பதாகைகள், சுவர் ஓவியங்கள், என்று எங்களுக்கான வாய்ப்புகளை இழந்து இன்று கூலிக்காக வெள்ளையடிக்கும் வேலை செய்யும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதை அரசு உணர வேண்டும் திறமையான ஓவியர்கள் இன்று பெயிண்டர்களாக மாறிய நிலை மாற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்.

N3

Leave A Reply

Your email address will not be published.