திருச்சியின் வளர்ச்சிக்கு உதவிய எஸ். லாசர் உடையார்

திருச்சியின் அடையாளங்கள்-20

0
Business trichy

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான திருச்சி, பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் திருச்சியின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை “நம்ம திருச்சி வார இதழ்” மூலம் திரும்பிப் பார்ப்போம்.

இந்தவாரம் திருச்சியின் அடையாளமாக விளங்கிய லாசர் உடையார் பற்றி பார்ப்போம்.


இவர் 8.2.1925 இல் சாமுவேல்-மரியமுத்து அம்மாளின் மகனாக பிறந்தவர். வழக்கறிஞரான இவர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்துள்ளார். 1957 தேர்தலில் லால்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். இவரை தந்தை பெரியாரும் ஆதரித்தார்.

Half page

சுதந்திராக்கட்சி (ராஜாஜி)யும் ஆதரித்தது என்பது இவரது நேர்மை, மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்ற ஒன்றாகும். பிறந்த ஊராக கல்லக்குடியில் ஆர்.வெங்கட்ராமன் மூலமாக இவர் பெரும்முயற்சி எடுத்துக் கொண்டதன் விளைவாகவே இன்றைய டால்மியா சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்டது.

புள்ளம்பாடி வாய்க்கால் உருவாவதற்கு பெரும் முயற்சி எடுத்து அதனை காமராஜர் செயல்படுத்த அடிகோலியவர் லாசர் உடையார். அதனைப் போலவே, மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இவர் பணியாற்றிய போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பாய்லர் தொழிற்சாலை நிறுவிட முனைப்போடு பாடுபட்டவர். சட்ட மன்றத்தில் அமைச்சர் சி.சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக இவர் ஒருமுறை பேசியதற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடையிலான உறவு குறித்த முதல் வழக்கே (1959) இவரால் ஏற்பட்டதாகும்.

1960ஆம் ஆண்டில் இந்திய அரசின் பிரதிநிதியாக லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கு பெற்றதுடன் இவர் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தூய வளனார் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இவர் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார். தியாகி டி.எஸ். அருணாசலம் மாவட்டத் தலைவராக வருவதற்கு முன் ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இவர் பணியாற்றியுள்ளார். இன்றைய அருணாசல மன்றக் கட்டிடம் உருவாகிட இவரது உழைப்பும் பெரும் காரணமாகும்.

இம்மாவட்டதின் தொழில் வளர்ச்சிக்கும், லால்குடி தாலுக்காவின் விவசாய அபிவிருத்திக்கும் பெரிதும் துணை நின்றவர் லாசர் உடையார். பொது வாழ்க்கையில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதன் விளைவாக நோய்வாய்ப்பட்டு 24.8.1962 இல் இயற்கை எய்தினார்.

இவருக்கு ஜெயரத்தினம் என்ற மகளும், டாக்டர் பால்ராஜரத்தினம், வழக்கறிஞர் சபாரத்தினம் என்ற இரு மகன்களும் உள்ளனர். டாக்டர் பால்ராஜரத்தினம் தமிழக சமூகப் பணி மையத்தில் சிறப்பு மருத்துவ ஆலோசகராக உள்ளார்.

 

Full Page

Leave A Reply

Your email address will not be published.