
திருச்சியில் பத்திரிகை உலகின் முன்னோடியாகவும் சமூகத்தின் ஏற்றதாழ்வுகளை நேரடியாக விமர்சித்தவறுமான மணவை திருமலைச்சாமி பற்றி நம்ம திருச்சியின் அடையாளம் பகுதியில் காண்போம்.
‘குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும். திட்டுப்பட்டாலும் திருமலைச்சாமி பேனா முனையால் திட்டுப்பட வேண்டும்’ என்று அறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர்.
மணப்பாறையில் ராமசாமி செட்டியா, முத்தாளாயி அம்மாள் மகனாக 1901-ஆம் ஆண்டு பிறந்தவர் திருமலைச்சாமி. 17வயதில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் பத்திரிக்கையில் செய்தியாளராகச் செயல்படத் தொடங்கினார்.

1930இல் நீதிக்கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் வளர்ச்சிக்கு இம்மாவட்டத்தில் உழைத்தவர்களில் முன்னோடியாக இவர் திகழ்ந்தார். நீதிக்கட்சிக்கு வலுவூட்டும் வகையில் 1931இல் இவர் நகரதூதன் என்ற இதழைத் திருச்சிராப்பள்ளியில் தொடங்கினார். நீதிக்கட்சியின் போர்வாளாக நகரதூதன் விளங்கியது.

அக்காலத்தில் சமூக சீர்கேடுகளையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கடுமையாக விமர்சித்த இதழ் நகரதூதன். இவ்விதழில் இவர் “பேனாநர்த்தனம்” என்ற பெயரில் எழுதிய தலையங்கம் அப்போது எல்லோராலும் விரும்பி வாசிக்கப்பட்ட பகுதி.
கேசரி என்ற பெயரிலும் இவர் பல படைப்புகளை எழுதியுள்ளார். 1938இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்ட இந்தி எதிர்ப்புப் பேரணிக்கு போர்ப்படைத் தளபதிகளில் ஒருவராகத் தலைமை ஏற்று நடத்தியுள்ளார் திருமலைச்சாமி. இவர் சுயமரியாதை சிங்கம், பேனாநர்த்தனம் என புகழப்பட்டார்.
ஆரம்ப காலத்தில் ஜனநாயகம் என்ற வார பத்திரிகையின் ஆசிரியராகவும் சில காலம் விடுதலை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
1947இல் துவே~புயல் போன்ற நூல்களைச் சிறுசிறு வெளியீடுகளாக வெளியிட்டுள்ளார். வாளின் முனையைவிடப் பேனா முனையே வலியது என்று பேனாவை நர்த்தனமிட வைத்த முணவை திருமலைச்சாமி 1971ஆம் ஆண்டு காலமானார்.
