பெரியாரின் தோழராக வாழ்ந்த மு.அ. அருணாச்சல செட்டியார்

திருச்சியின் அடையாளங்கள் - 19

0
1

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான திருச்சி, பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் திருச்சியின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை “நம்ம திருச்சி வார இதழ்” மூலம் திரும்பிப் பார்ப்போம்.


இந்தவாரம் திருச்சியின் அடையாளமாக விளங்கிய மு.அ.அருணாச்சல செட்டியார். நகரத்தார் வகுப்பில் தோன்றிய இவர் இளம் வயதிலேயே சுயமரியாதைச் சிந்தனையுடன் வாழ்ந்தவர்.

1900ல் பள்ளத்தூரில் பிறந்து வளர்ந்த இவர், 1930-ம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளியில் நிதிநிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார். அப்போது வாழ்ந்த தமிழகத்தின் பெருந்தலைவர்களான தந்தை பெரியார், ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற சுயமரியாதைக்காரர்களோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.

2

புரோகித மறுப்பு சங்கம் ஒன்றைத் தொடங்கிக் கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் போன்ற சீர்திருத்தக் கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தவர் நீலாவதி அம்மையார். தென்னூரில் வசித்து வந்த நீலாவதிக்கு காரைக்குடி நகரத்தார் வகுப்பைச் சேர்ந்த ராமசுப்பிரமணியம் என்பவரைக் கலப்புத் திருமணம் செய்திட கடும் எதிர்ப்பு உண்டானது.

இந்த எதிர்ப்புகளுக்கு இடையே தந்தை பெரியார் தலைமையில் ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ.விஸ்வநாதம் ஆகியோர். கலந்து கொண்ட அந்த சுயமரியாதை திருமணத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தனது இல்லத்தில் நடத்தி வைத்தவர் அருணாச்சல செட்டியார்.
1938-ம் ஆண்டில் இவர் தம் இளைய மகன் அருணாசலம் நகரத்தார் சமூகத்தில் முதன்முதலில் பொறியாளர் பட்டம் (பி.இ) பெற்றவர்.

1932-ம் ஆண்டு இவரது முதல் மகன், திருச்சிராப்பள்ளியில் தொடங்கப்பட்ட தென் மதராஸ் மின் வழங்கும் கார்ப்பரேஷனில் இயக்குநராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். இவர் தம் முயற்சியினாலும் ஆதரவினாலும் தான் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், எஸ்.எம்.இ.எஸ்.ஸி. நிறுவனத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் தொடர்ந்து இருந்தார்.

திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தை தொடங்கிடவும் தற்போதுள்ள கட்டடத்திற்கு பெரும் நிதி உதவியும் செய்தார். அதேபோல் கண்டோன்மெண்ட்டில் உள்ள யூனியன் கிளப்பில் பல பொறுப்புக்கள் வகித்து அதனைத் திறம்பட நடத்திய பெருமைக்கு உரியவர்.

இன்றைய திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் தலைவரான அண்ணாமலைச் செட்டியாரையும், மகள் உமையாளையும் வங்காளத்தில் இருந்த ரவீந்திரநாத்தாகூர் நடத்திய “சாந்திநிகேதன்” கல்விக்கூடத்திற்கு அனுப்பிப் படிக்கச் செய்தார். அக்காலத்தில் மறைந்த பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரும் அவர்களும் ஒருசாலை மாணாக்கர்களாக இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1935ஆம் ஆண்டில் புத்தூர் (தற்போது பெரிய ஆஸ்பத்திரி இருக்கும்) மைதானத்தில் தந்தை பெரியார், கி.ஆ.பெ.விசுவநாதம், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களைக் கொண்டு சுயமரியாதை இயக்க மாநாடுகளை அருணாசலம் செட்டியார் அவர்கள் முன்னின்று நடத்தி உள்ளார். மிகவும் முற்போக்கான சிந்தனை கொண்ட இவர். 1967ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் இயற்கை எய்தினார்.

இவரது மூத்தமகன் அரு.அண்ணாமலைச் செட்டியார் தந்தையார் போலவே தற்காலத்தில் சின்மயா மிஷன் பள்ளி, கலைக்காவிரி, சேவாசங்கம் போன்ற பல கல்வி நிறுவனங்களுக்குக் கட்டடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். ஜோசப் கண்மருத்துவமனை போன்ற சமூக நிறுவனங்களுக்கும், திருக்குறள் பேரவை போன்ற பல அமைப்புகளுக்கு நிதி உதவியும், பட்டாபிராமன் பிள்ளைத் தெருவிலுள்ள அருள்மிகு பெருமாள் கோவிலைத் தன் சொந்தச் செலவில் கட்டி நிர்வகித்தும் வருகின்றார்.

அதோடு புத்தூரில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குப் பல லட்சக்கணக்கான ரூபாய் பொருட் செலவில் திருப்பணி செய்தும் மற்றும் பல அறப்பணிகளுக்கும், சமூகப் பணிகளுக்கும் தொடர்ந்து பொருளுதவி அளித்துவரும் கொடை வள்ளலாக அண்ணாமலைச் செட்டியார் விளங்கி வருகிறார்.

3

Leave A Reply

Your email address will not be published.