நம்ம ஊர் பட்டாம்பூச்சி பூங்கா…

0

சுற்றுலா இடமாக மாறிவிட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா
திருச்சி மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை வரிசையில் லட்சக்கணக்கண பார்வையாளர்கள் வந்துபோகும் இடமாக மாறி உள்ளது ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா.

திருச்சி வழியே பாய்ந்தோடு, கொள்ளிடம்-காவிரி ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் பார்வையாளர்கள் போட்டோ எடுக்கவே குவிகிறார்கள்.

கடந்த 2012-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக இதனை அறிவித்தார். சுமார் ரூ.9கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்தப் பூங்காவில், வண்ணத்துப்பூச்சிகள், முட்டையிடுதல், புழு வளருதல், தேன் குடித்தல் என அதன் வாழ்க்கைச் சக்கரம் குறித்த படங்கள் மற்றும், வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, புலும்பாகோ, கோபி, அஸ்காப்பியா உள்ளிட்ட பூச்செடிகள், செண்பக மரம் மகிழம் மரம் என சுமார் 300-க்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்க்கப்படுகிறது.

அதோடு,செயற்கைப் புல்வெளிகள், குழந்தைகள் விளையாடத் தனி இடம். குடில்கள், செயற்கை நீரூற்றுகள், நடைபாதை, குகை வழிப்பாதைகள். மரங்கள் மற்றும் செடிகளுடன் கூடிய நட்சத்திரவனம். புல்தரைகள், குழந்தைகள் விளையாட்டுத் திடல்கள். அழகிய நடை பாலங்கள் எனப் பார்வையாளர்களை கவரும் வகையிலான வசதிகள் உள்ளன. பூங்காவில் உள்ள நட்சத்திர வனம், பல்வேறு நீர்த் தாவரங்கள் அடங்கிய குட்டைகள், மரப்பாலங்கள், பிரம்மாண்டமான வண்ணத்துப்பூச்சி சிலைகள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு பல்வேறு இடங்களில் உள்அரங்குகள் அல்லது திறந்தவெளிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

food

பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகளில், ஒரு நீரூற்றில், 100 அடி உயரத்துக்குத் தண்ணி பீய்ச்சி அடிக்கிறது. உள்ளே இருக்கும், சின்ன திரையரங்கில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது,

பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக, பூங்காவின் உள்ளே கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திரும்பும் திசையெங்கும் பசுமையாகவும், ரம்மியமான அழகாகவும் உள்ள இந்தப் பூங்காவுக்கு நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 10 ரூபாய். சிறியவர்களுக்கு 5 ரூபாய். அரசுப்பள்ளி மாணவர்கள் குழுவாக வந்தால், கட்டணம் கிடையாது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பூங்கா திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை வார விடுமுறை. செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை நாட்கள் வந்தால் மட்டும், விடுமுறை இல்லை.

ஸ்ரீரங்கத்திலிருந்து இந்தப் பூங்காவுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மினிபஸ் உள்ளது.

-விஜய்

gif 4

Leave A Reply

Your email address will not be published.