சமயத்தில் காத்தருளும் சமயபுரம் மாரியம்மன்

0
1

சமயபுரம் மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். பார்வதி தேவியின் அம்சமாகக் கருதும் அம்மனைக் காண கண் கோடிவேண்டும். பக்தர்கள் தீராத நோய்கள் தீர வேண்டும், அம்மை நோய்களால் பாதிப்பு நீங்க வேண்டும் என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சமயபுரம் வருவார்கள்.

சமயபுரம் மாரியம்மனை தெரிந்திராத ஆன்மீக பக்தர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அம்மை நோய் வந்தவர்கள் அந்த நோய் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொண்டு பரிகாரம் செய்வார்கள். அப்படி குணம் அடைந்ததும் அவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்து வந்து நேர்த்திக் கடன்களை செய்வார்கள்.

இங்குள்ள அம்மன்தான் அனைத்து மாரியம்மன்களுக்கும் தலைவி என்கிறார்கள். தமிழில் மாரி என்றால் மழை என்பது அர்த்தம். ஆகவே மழையைப் போல அருளைப் பொழிபவள் என்பதினால் தேவி மாரியம்மன் என அழைக்கப்பட்டாள்.

2

பக்தர்கள் ஒருமுறை சமயபுரம் ஆலயத்துக்கு வருவதாக ஒரு முறை வேண்டிக் கொண்டால் வாழ்நாளில் ஒரு முறையாவது அங்குப் போகாமல் இருக்க மாட்டார்கள்.
களி மண் சிலையாக காணப்படும் இந்த ஆலய தேவி ஸ்வயமாக அவதரித்தவள் என்பது நம்பிக்கை ஆகும்.மூல விக்ரஹம் களி மண்ணால் ஆனதாக இருந்ததால் அதைப் போன்றே இன்னொரு சிலையை கல்லில் வடித்து மூல மூர்த்திக்கு முன்பாக வைத்து அதற்கே அபிஷேகம் பூஜை போன்றவற்றை செய்கிறார்கள்.

மாரியம்மன்-அரங்கனின் சகோதரி திருவரங்கத்தில் உபசன்னதியில் ஒன்றாக இருந்தது தனக்கு தனி சன்னதியும் சக்தி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை அன்றைய ஜீயரிடம் வெளிப்படுத்தியது அதன்பின் சமயபுரத்தில் குடி கொண்டது. திருவரங்கம் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது சுமார் 25 வருடத்திற்கு முன் சமயபுரம் தனி தேவஸ்தானமாகியது

வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் விக்கிரமாதித்த மகாராஜா காலத்தில் இருந்துதான் சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு துவங்குகிறது. திருச்சி மாவட்டம் கண்ணனூரில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில். இதுவே சமயபுரம் மாரியம்மனின் மூல கோவில். காலப்போக்கில் கட்டப்பட்டதே தற்போதுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில். இப்போது நாம் வழிபடும் சமயபுரம் மாரியம்மன் கோவில் 17-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், ஒரு போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்டது என்கிறார்கள்.

அன்னை சமயபுரத்தாள் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் தேவி சமயபுர மாரியம்மனின் சிலை மற்ற ஆலயங்களில் காணப்படும் கல்லினாலோ அல்லது உலோகத்தினாலோ வடிவமைக்கப்பட்ட சிலை இல்லை. களிமண்ணால் செய்யப்பட்டுள்ளது என்பதினால் அதைப் போலவே கல்லில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்திக்கே அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளை செய்கிறார்கள். இன்னும் சிலர் அம்மன் திருமேனி, சில மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.

அந்த ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்கள், அம்மன் தமக்கு உடல் நலத்தையும், செல்வத்தையும் வாரி வழங்குவாள் என நம்புகிறார்கள். அதன் காரணம் அவள் தன்னுள் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுடன் ஒன்பது நவக்கிரகங்களின் சக்திகளையும் அடக்கி வைத்துக் கொண்டுள்ளதான நம்பிக்கையே காரணம்.

சிவப்பு நிற மேனியோடு, பல அம்சங்களையும் அடக்கி வைத்துள்ள எட்டு கரங்களோடு, ஆயிரம் சூரிய ஒளி வெளிப்படுத்துவது போல தேவி காட்சி தருகிறாள். இரண்டு கைகளில் ஒன்றில் வாளும் இன்னொன்றில் குங்கும சிமிழும் உள்ளன. எட்டு கைகளுடன் உள்ள தேவி மாரியம்மனை உலகில் வேறு எங்குமே காண முடியாது. அதிகபட்சமாக நான்கு கைகளுடன் கூடிய தேவி மாரியம்மனையே சில ஆலயங்களில் காணலாம்.

தேவி சமயபுர மாரியம்மனின் ஆலயத்தில், பக்தர்கள் வந்து உடலின் சில பாகங்களில் வந்துள்ள வியாதிகள் குணமாக வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்வார்கள். பல்வேறு உலோகங்களில் செய்யப்பட்ட மனித உறுப்புகளைப் போன்ற உருவத்தைக் கொண்ட சின்ன உலோகத்திலான சின்னங்களை அங்குள்ள உண்டியலில் போட்டு அம்மனிடம் தம்முடைய உடலில் அந்த குறிப்பிட்ட உறுப்பில் ஏற்பட்டு உள்ள வியாதி குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வார்கள்.

உதாரணமாகக் கையில் உள்ள வியாதி குணமாக கையைப் போன்ற உருவம் கொண்ட உலோகத் தகட்டையும், காலில் உள்ள வியாதி குணமாக காலைப் போன்ற உருவம் கொண்ட உலோகத் தகட்டையும் உண்டியலில் போட்டு பிராத்தனை செய்வார்கள்.

சமயபுர அம்மனே தமது பக்தர்களுடைய நலத்துக்காக விரதம் இருப்பது அதிசயம் ஆகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்தியம் படையல் வைக்க மாட்டார்கள். இளநீர், பானகம், நீர் மோர், கரும்புச் சாறு உள்ளிட்ட பானங்களே அன்னையின் ஆகாரம். இதனை ‘பச்சை பட்டினி விரதம்’ என்கிறார்கள்.

இந்த விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் நடக்கும். அடுத்து சித்திரை தேரோட்டம். கடைசியாக தேர்த் திருவிழா நடக்கும். இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். கூடி, முடிக் காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை செலுத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். அதோடு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டுச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

– ஞா.குமரன்.

3

Leave A Reply

Your email address will not be published.