1 லட்சம் விதை பந்துகள் வீசிய அரசு பள்ளி மாணவர்கள்

மரம் தற்போதைய அவசியம் என்ற இலக்கை நோக்கி இன்றைய சமூகம் ஓடி கொண்டிருக்கிறது. ஆனால் இயற்கைக்கு எதிராக உள்ள கருவேல செடிகளை அகற்ற நீதி அரசர்கள் எடுத்த சாட்டை தற்போது தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. அதை மாணவர்கள் மனதில் பதிய வைப்பது ஆசிரியரின் கடமை.
அப்படிபட்ட முயற்சியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவா்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். மணப்பாறை ஓந்தப்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் இதுவரை சிறிய அளவிலான 1.50 லட்ச கருவேல முட்செடிகளை வேரோடு பிடிங்கி எரிந்துள்ளனர்.
இதுக்குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் துரைராஜிடம் பேசுகையில் கடந்த 20ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து கருவேல மரங்களின் பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திட மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து ஆசிரியர் ராஜசேகரன், தமிழ் ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டவா்களிடம் ஆலோசனை செய்தேன்.

உடனடியாக பள்ளியின் காலை இறைவணக்க நிகழ்ச்சியில் சீமைகருவேல மரங்களின் தீமை மற்றும் அவற்றினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவா்கிளடம் பேசினோம். அப்போது 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவா்களிடம் நம்மால் பெரிய அளவிலான மரங்களை அழிக்க முடியாது எனவே சிறிய அளவிலான முட்செடிகளை வேருடன் பிடிங்கி வந்தால் அவா்களுக்கு ஊக்க பரிசு வழங்கப்படும் என்று கூறினோம். அடுத்த நாள் காலையில் மாணவா்கள் தங்களுடைய புத்தக பைகளுடன், முட்செடிகளையும் வேருடன் பிடிங்கி கொண்டு வந்தனர். தினமும் எந்த மாணவா் அதிகளவில் பிடிங்கி வருகிறார்கள் என்று பதிவு செய்து வருவதோடு அவா்களுக்கு பேனா, பென்சில், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை ஆசிரியா்களின் உதவியோடு கொடுத்து வருகிறோம்.


முட்செடிகளை மட்டும் அழித்தால் போதுமா என்று யோசித்தோம். அப்போது எங்கள் பள்ளி ஆசிரியா் சார்லஸ் விதைகளுக்கு உயிர் கொடுப்போம் என்ற திட்டத்தின் கீழ் விதைகளை சாணம் மட்டும் செம்மண் பந்துக்குள் வைத்து அதை நிலப்பகுதிகளில் வீசி வருவதை அறிந்தோம். அவருடன் இணைந்து புதிய விதை பந்துகளை உருவாக்கி அந்த விதை பந்துகளை கருவேல செடிகளை பிடுங்கும் மாணவா்களிடம் கொடுத்து அதை நிலப்பரப்புகளில் வீசி வர சொல்லியுள்ளோம்
இதுவரை மொத்தம் 1 லட்சத்த்திற்க்கும் அதிகமான விதைபந்துகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் பாதி வளா்ந்தாலே போதும் நாம் எங்களுடைய முயற்சி வெற்றியடையும் என்கிறார். மேலும் இதற்க்கு குழி வெட்டவோ, மரக்கன்றுகளை நடவோ, மழைக்கு முன்னால் விதைப்பதால் 3 மாதங்களில் முளைத்துவிடும் பிறகு மழை காலங்களில் போதிய தண்ணீா் கிடைப்பதால் நன்கு வளா்ந்துவிடும் என்று பெருமையுடன் கூறினார்.
இவா்களின் பணியை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ராமசாமி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அதோடு பள்ளிக்கல்வி செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எங்களுடைய பணியினை செய்வோம் பசுமையை உருவாக்குவதில் எங்களுடைய பங்கு என்றும் இருக்கும் என்று கூறுகிறார் பள்ளி தலைமை ஆசிரியர்.
-பிரியதர்ஷன்
