இனி நான் என்ன செய்ய? கீழ் வீட்டில் வாடகைக்கு குடியிருப்போருக்கு கூட மரணச்செய்தி தெரியவில்லை.

2
D1

இனி நான் என்ன செய்ய?

காலையில் செல்போனில் படித்த செய்தி…

நடிகரும் எழுத்தாளருமான ரூபன் திருச்சியில் காலமானார்.

D2

இச்செய்தியை நீங்கள் கடந்து செல்வது போல, நானும் கடந்து சென்றேன்.

மாலையில் இதை நண்பர் செல்வா மூலமாக தெரிந்துக்கொண்ட பின்னர், ரூபன் வீட்டுக்கு எனது மகனையும், எனது நண்பரையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.

வீட்டின் வழி தேடி , ஒருவழியாக சென்று சேர்ந்தோம். கீழ் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு கூட ரூபனின் மரணச்செய்தி தெரியவில்லை. கொரோனா தொற்று நம்மை அந்த அளவுக்கு ஊமையாக்கிவிட்டது. மாடிக்கு வழி கேட்டு மேலே சென்றோம். அங்கு ரூபனின் மனைவி கண்ணீருடன் கதவை திறந்தார்.

ஆறுதல் சொல்ல வார்த்தையில்லாமல் மவுனமானோம்.

50 பேர் வந்தாலும் தன் வீட்டில் அனைவரையும் சாப்பிட வைத்து
அனுப்புவார். எனக்கு ATM இயந்திரத்தில் பணம் எடுக்கத்தெரியாது. பால்காரர் , சிலிண்டர் போடுபவர் என யார் வந்தாலும், அவர்களிடம் எனக்கு பேசக்கூடத் தெரியாது. வீட்டுக்குள் ஒருமுறை பேசிப் பார்த்துவிட்டு, பின்னரே அவர்களிடம் பேசுவேன். திருமணத்துக்கு முன்பு வரை எனது தாயின் கையின் மீது தலைவைத்து படுத்துக்கிடந்தேன். அவரரை கைப்பற்றிய பின்னர், அவருடைய கைகளில் தான் தலைவைத்து தூங்குவேன்.

ஒரு அரசு ஊழியராக அலுவலகத்தில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், அவர்தான் சொல்லிக் கொடுப்பார். எதையும் மறைக்காமல், எல்லாவற்றையுமே அவரிடம் சொல்லிவிடுவேன். நான் சொன்னதற்காக 10 வருடத்துக்கு முன்பே, புகைப்பிடிக்கும் பழக்கத்தை, அவர் விட்டுவிட்டார். எனக்கு ஒரு தாயாக, தந்தையாக இருந்து என்னை பராமரித்தார். எனது முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை எற்பட்டபோது ஒரு மருத்துவராக என்னை கவனித்துக்கொண்டார். நான் இன்று எழுந்து நடப்பதற்கு, அவர் தான் காரணம். அவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தன்னை பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையை பெற்றிருந்தார். சக நண்பர்கள் புகைப்பிடிக்கும் இடத்தில், தொடர்ந்து இவரும் உடன் இருந்ததால், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இணையாகவே இவரது உடல்நிலை மாறிப்போனது.

அவர் 50 வயதை கடந்த நிலையில், பொதுவான மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார். எல்லா முடிவுகளும், அவர் ஆரோக்கியமாக இருப்பதாக காட்டியது. காலதாமதமாக வந்த எக்ஸ் ரே முடிவு மட்டும், அவருக்கு லேசாக சளி இருப்பதாக காட்டியது. ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாததால், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குச் சென்றோம். அங்கு சித்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

N2

அங்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவரது நண்பருக்கு தன்னால் முடிந்த உதவிகளை உதவிகளை செய்தார்.

அந்த நண்பர் , தனது 6 வயது மகன் சுவாச பிரச்சனையால் இறந்து போனதால், மனநலம் பாதிக்கப்பட்டு, பக்கவாத நோயிக்கு ஆளாகியிருந்தார். அவருடன் சேர்ந்துவாழ மனமில்லாமல், அவரது மனைவி பிரிந்து போய்விட்டார் என்பது தெரிய வந்ததும் வேதனை அடைந்தோம். சிகிச்சையின் பலனால் அந்த நண்பர் குணமானார். மன அழுத்தத்தில் இருந்து மட்டும் அவரால் முழுமையாக வெளிவர முடியவில்லை. இப்படியாக நாட்கள் நகர்ந்தன.

எனது கணவரை முழுமையாக குணமடையச் செய்துவிட்டு, பின்னர் பணம் வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி, சித்த மருத்துவர் சிகிச்சைக்கான கட்டணத்தை வாங்க மறுத்துவிட்டார். சளித்தொல்லை நாளடைவில் அவரை பேச முடியாதவராக மாற்றிவிட்டது. எழுத்தும் நடிப்புமாக வாழ்ந்தவரின் பேச்சு, நான் மட்டுமே புரிந்துக்கொள்ளும் படியாக மாறிப்போனது. அவருக்கு வந்திருப்பது நுரையீரல் புற்றுநோய் என்பது தெரிந்ததும் அதிர்ந்துப்போனேன்.

இதை தெரிந்துக்கொண்ட நாள் முதல், முழு நோயாளியாக மாறத்தொடங்கிவிட்டார். ஆங்கில மருத்துவத்துக்கு மாறினார். கடந்த 6 மாதங்களாக திருச்சி மருத்துவனையில் தான் வாழ்நாள் முழுமையாக கழிந்தது. அதுவும் படுக்கையில் அல்ல. அமர்ந்திருந்த நாற்காலியில் தான், எங்களது உறக்கமும், வாழ்வும். அவரால் மருத்துவ மனை படுக்கையில் கூடா படுக்க முடியவில்லை. வலியால் வேதனையில் துடித்தார். அவரது நண்பர்கள் தங்களது வேலைகளுக்கு இடையே, இவரை பற்றி நலம் விசாரிக்கும் வேலையையும் பார்த்து வந்தனர். அவர்கள் நேரில் வந்து பார்த்தால் நலமடைந்து விடுவார் என்று கூட நம்பினேன். சோதிடமும் நாங்கள் படப்போகும் துன்பங்களை கணித்து சொன்னது. கடைசியில் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியாக வாழ்வீர்கள் என்று சோதித்து திடம் சொன்னது. வேண்டாத தெய்வமில்லை. ஸ்ரீரங்கத்து பெருமாளும், சமயபுரத்து மாரியம்மனும், அவரைக் காப்பாற்ற வேண்டுமென வேண்டிக்கொண்டேன். கைமாறாக எனது தாலியை காணிக்கையாக உண்டியலில் போடுவதாகவும் உறுதி எடுத்துக்கொண்டேன். கடவுள் நம்பிக்கை இல்லாத அவர், ‘நீ பிறந்து வளர்ந்தது ஸ்ரீரங்கம் என்பதால், பெருமாளுக்கே காணிக்கையாக கொடுத்து விடு’ என்றார்.

சிகிச்சையின்போது, ஒவ்வொரு நாளும் உற்சாகம் பெற்றார். மருந்து மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வில்லை. மருத்துவர்கள் ஆச்சரியப்படும் வகையில் தானாகவே சாப்பிடத் தொடங்கினார்.

சித்த மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து, அதே சமயம் மன அழுத்தத்தில் இருந்து வந்த, அந்த நண்பர் மட்டும் திருச்சிக்கு வந்து, அவரது சிகிச்சையின்போது, மருத்துவமனையில் துணையாக இருந்தார். அவருக்கும் நான்தான் ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது. எனக்கு தான் ஆறுதல் சொல்ல அருகில் யாரும் இல்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை கடைசிவரை பார்ப்பதற்கு,
மருத்துவமனை என்னை அனுமதிக்கவில்லை. அங்கிருந்து முதல்முறையாக ATM மைத்துக்குச் சென்று பணமெடுக்க கற்றுக்கொண்டேன். படிப்படியாக ₹ 5 லட்சத்தை எடுத்து மருத்துவமனையில் கட்டினேன். கையில் இருந்த ₹3 லட்சத்தையும் கட்டி முடித்தேன்.

கடைசியில், அவர் உயிர் பிரிந்துவிட்டது என்று சொன்னார்கள்.
அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. அவர்கள் எதைச் சொன்னாலும் சரி என்று மட்டுமே செல்லியிருக்கிறேன். அவரை மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்சில் ஏற்றி நேராக திருச்சி ஓயாமரி மின்மயானத்துக்கு அனுப்பிவைத்தது. அவருக்கு ஒரு மாலை கூட அணிவிக்கவில்லை. மயானத்தில் தனி ஒருத்தியாக என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை.

உன்னோடு யாரும் வரவில்லையா? என்ற கேள்வி மட்டும், எனக்கு வந்துகொண்டே இருந்தது.
கண்ணீருடன், காலையில் இருந்து, நின்றுகொண்டும் நடந்துகொண்டும் இருக்கிறேன். என் கால்கள் எல்லாம் வலிக்கிறது. எழுந்திருப்பா? என்னோடு பேசுப்பா? எனக்கு தான் யாரையுமே தெரியாதே!என்னை ஏன் தனியாக விட்டுவிட்டு போயிட்டீங்க. என்னையும் கூட்டிக்கிட்டு போயிடுங்க என்று கதறினேன். அவர் கடைசி வரை எழுந்திருக்கவே இல்லை.

எனக்கு அவரும், அவருக்கு நானும் குழந்தைகளாகவே வாழ்ந்துவிட்டோம்.

இனி நான் என்ன செய்ய?

(லெனின் அவர்களின் முகநூல் பதிவு)

N3
2 Comments
  1. ரஃபி says

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  2. saravanakumar says

    ‘கண்ணீருடன், காலையில் இருந்து, நின்றுகொண்டும் நடந்துகொண்டும் இருக்கிறேன். என் கால்கள் எல்லாம் வலிக்கிறது. எழுந்திருப்பா? என்னோடு பேசுப்பா? எனக்கு தான் யாரையுமே தெரியாதே!என்னை ஏன் தனியாக விட்டுவிட்டு போயிட்டீங்க. என்னையும் கூட்டிக்கிட்டு போயிடுங்க என்று கதறினேன்’. இதைப் படிக்கும்பொழுது இதயம் நொறுங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.