திருச்சி விமானநிலைய ஒப்பந்த ஊழியர் தற்கொலைக்கு தள்ளப்படும் அவலநிலை !

0
1

திருச்சி விமானநிலைய ஒப்பந்த ஊழியர் தற்கொலைக்கு தள்ளப்படும் அவலநிலை !

 

திருச்சி விமான நிலையம் தனியார் மயமாக உள்ள  நிலையில் திருச்சி விமான நிலையத்தில் டிராலி தள்ளுவண்டி பணியாளர்கள் தற்கொலைக்கு தள்ளப்படும் அவல நிலை உள்ளது.

 

இது குறித்து விமானநிலைய ஊழியர்கள் வட்டாரத்தில் பேசுகையில்,

 

2

டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட சில விமான நிலையங்களை தனியார் பராமரித்து வருகிறது. தனியார் மயமான பின் திருச்சி விமான நிலைய பராமரிப்புக்கான முதலீட்டை 100 சதவீதம் தனியார் நிறுவனமே செய்யும். அதேசமயம் வருவாயில் குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்தும்.

 

அரசு, தனியார் துறை பங்களிப்புடன் விமான நிலைய பராமரிப்பு பணி நடைபெறும். திருச்சி விமான நிலையம் கடந்த 1980ல் துவங்கப்பட்டது. தற்போது நிரந்தரமாக அதிகாரிகள், பணியாளர்கள் 165 பேர், ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 700 பேர் பணிபுரிகின்றனர். இதுதவிர சுங்கப்பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 350 பேர் பணியாற்றுகின்றனர்.

 

இங்கிருந்து துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர் ஆகிய இந்திய பெருநகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 2,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர சரக்கு விமான சேவையும் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் விமானங்கள் இயக்கத்தில் தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி 3ம் இடத்தில் உள்ளது. தமிழகத்திலேயே இந்த விமான நிலையம் தான் முதன் முதலாக தனியார் மயமாக உள்ளது.

 

விமான நிலையத்தை தனியார் மயமாக்க அதன் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தள்ளுவண்டிகள் மீதான விளம்பர உரிமை மற்றும் பேக்கேஜ் தள்ளுவண்டியை பராமரிப்பதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) அழைப்பு விடுத்து ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

 

இந்த டெண்டரின் கீழ், 400 தள்ளுவண்டிகளின் உரிமைகள் ஒரு டிராலிக்கு ரூ .413 என்ற உரிமக் கட்டணத்தின் குறைந்தபட்ச முன்பதிவு விலையிலும், 3 வருட காலத்திற்கு பொருந்தக்கூடிய வரி மற்றும் கட்டணங்களுக்கும் ஏலம் வென்றவருக்கு ஒப்பந்தம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து, தள்ளுவண்டிகளின் எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்புக்கு, உரிமக் கட்டணத்தில் விகித சார்பு அதிகரிப்பு இருக்கும். ட்ராலியை ஒப்பந்தக்காரர்கள்  பராமரிக்கவேண்டும் அதில் வரக்கூடிய விளம்பர வருவாயை கொண்டு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது நடைமுறையாகும்.  கோடீஸ்வரன், மதுரை செந்தில் தற்பொழுது விமலா என்பவர் ஒப்பந்தங்களை எடுத்துள்ளார்கள்.

ஒப்பந்தக்காரர் கோடீஸ்வரன் காலங்களில் மட்டுமே தொழிலாளர்களுக்கு பிடிக்கக்கூடிய PF, EPF முறையாக கட்டப்பட்டது பின்பு வந்த ஒப்பந்தக்காரர்கள் யாரும் கடைபிடிக்கவில்லை. தற்போதைய ஒப்பந்தக்காரர் விமலா பெயரில் அவரது கணவர் கோவை சுந்தர்  செயல்பட்டு வருகின்றார்.

 

இதில் உள்ளூர் பிரமுகரான மூவேந்தன் அனைத்து பணிகளையும் பார்ப்பது பிரச்சினைகளைத் தீர்ப்பது என செயல்பட்டு வருகிறார்.

 

ஒப்பந்தகாரர்களே டிராலி  பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள கோவை சுந்தரிடம் ட்ராலி பணியாளர்கள் ரூபாய் 600 கொடுத்தால் தான் பணியிலேயே நீடிக்க முடியும். இத்தொகை வெளிநாட்டு பயணிகளிடம் டிப்ஸாக வசூலித்து ஒப்பந்தக்காரர்களிடம் 600 ரூபாய் கொடுத்து வருகின்றனர். மேற்கொண்டு வரக்கூடிய பணத்தை வருவாய் ஆகவும் வைத்துக் கொள்ளக்கூடிய கொத்தடிமை நிலையே தற்போது சர்வதேச விமான நிலைய டிராலி தள்ளக்கூடிய பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

டிராலி பணியாளர்கள் ஒவ்வொருவரும் பத்து பதினைந்து வருடங்கள் பணி புரிபவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந் நிலையில் விமான நிலைய இயக்குனர் தர்மராஜை  டிராலி தள்ளும் பணியாளர்கள் நேரில் சந்தித்து மனு அளித்து உள்ளார்கள். அதில், விமான நிலையத்தில் ஒப்பந்தம் எடுக்கக் கூடியவர்கள் தொழிலாளர் உரிமம் எடுத்து தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியை கொடுக்க வேண்டும். அதற்கான பதிவேடுகள் பிரதி மாதம் விமான நிலைய அதிகாரியிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

 

தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளத்திலிருந்து 12 விழுக்காடு PF பிடித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியினை பிரதி மாதம் கட்டி ஒப்புகை சீட்டை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இதனால் தொழிலாளி 58 வயதிற்கு பின் ஓய்வு ஊதியம் கிடைக்கும் தொழிலாளரும் அவர் தம் குடும்பமும் மருத்துவ வசதி பெற ESI பிரதி மாதம் கட்ட வேண்டும். இன்னும் பல சலுகைகள் தொழிலாளர் நல சட்டங்கள் வழங்கியிருந்தாலும் ஒப்பந்தக்காரர்கள் எதுவும் செய்வது இல்லை. தற்போது உள்ள ஒப்பந்தகாரர் விமலா எங்களுக்கு சம்பளம் தருவது இல்லை.

 

டிராலி பணியாளர்கள் ஒப்பந்தகாரர்க்கு பணம் கொடுத்து பணிபுரிந்து வருகிறோம். 2018ஆம் ஆண்டு ஒரு நாளிற்கு 300 ரூபாய் ஒப்பந்தகாரர் பெற்றார். மீட் அண்ட் கிரீட் ஒப்பந்தத்தின் போது தினசரி 600 ரூபாய் பணத்தை ஒப்பந்தக்காரர்கள் பெற்றார்கள்.

 

கரோனா நோய் தொற்று காலங்களில் கூட ஒப்பந்தக்காரர் மேலாளர் 200 ரூபாய் பெற நிர்ப்பந்தம் செய்தார். தர மறுத்ததால் வேலையிலிருந்து நிறுத்திவிட்டனர். இதனால் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளக் கூடிய சூழலில் இருக்கின்றோம். இதற்கு தற்போதுள்ள ஒப்பந்தகாரர் விமலா  காரணம் ஆவார்.

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளத்தை ஒப்பந்தக்காரர் கொடுக்கும் பட்சத்தில் வெளிநாட்டு பயணிகளிடம் டிப்ஸ் பெற வேண்டிய அவசியமில்லை. பயணிகளிடம் பெரும் டிப்ஸ் ஆனது ஒப்பந்தக்காரர் எங்களிடம் வசூல் செய்து விடுகிறார்கள் சம்பளம் கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் டிப்ஸ் வாங்க மாட்டோம்.  புகார் அளித்த விவரம் ஒப்பந்தகாரர்க்கு தெரியவரும் பட்சத்தில் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.ஒரு வழியும் இல்லாததால் தங்களிடம் முறையிடுகிறோம் என கண்ணீர் வடித்துள்ளனர். எங்களுக்கு விமான நிலையத்தில் தொடர்ந்து பணி வழங்குமாறு  முருகானந்தம், முத்துராஜ் ,சிவராமன், ஜெயசீலன், நாதன், துரை உட்பட எட்டு நபர்கள் மனு அளித்து உள்ளார்கள்.

திருச்சிராப்பள்ளி விமான நிலையம் தமிழ்நாட்டில் சர்வதேச போக்குவரத்தின் இரண்டாவது பெரிய இயக்கத்தையும், மாநிலத்தில் மொத்த பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் மூன்றாவது பெரிய இடத்தையும் காண்கிறது. ஆனால்  வெளிநாட்டு பயணிகளிடம் பணியாளர்கள் ஒப்பந்தக்காரர்களின் நெருக்கடியால் பணம் பெறக்கூடிய அவலம் தமிழர்களின் நன்மதிப்பை கெடுப்பதாக உள்ளது. இதற்கு காரணமாக உள்ள ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

இதுதொடர்பாக ஒப்பந்தக்காரர் விமலாவை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் பொழுது அவரது கணவர் சுந்தர் அலைபேசியை எடுத்து பேசுகையில் எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் ஒப்பந்தம் முடியப்போகிறது. இந்த ஒப்பந்தம் எனக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. வங்கி கணக்கை கூட சீஸ் செய்து விட்டனர்.

ட்ராலி பணியாளர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை விமான பயணிகளிடம் டிப்ஸ் கேட்டுப் பெறுகிறார்கள் என்று கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.