திருச்சியின் சாதனையாளரை அடையாளப்படுத்தும் முயற்சி – தொடர் -3

சிறுவர் சீர்திருத்த பள்ளியில்

0
1

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் , பாகம் 3

(உண்மைக் கதையின் உண்மை நிலையை பதிவு செய்யும் எங்களின் பயணம் இந்த வாரமும் தொடர்கிறது)

சாமானியனாக இருந்தது பல இன்னல்களையும் வேதனையும் சந்தித்து சரித்திரம் படைத்த மனிதரின் கதை.

2

துறையூர் பிரசன்னா திரையரங்கு மாலை காட்சி, பிறகு துறையூர் பாரத் திரையரங்கில் இரவு காட்சி என்று கதையின் கதாநாயகன் பொழுது போக்கில் தனது பயணத்தை செலவழித்து கொண்டிருக்கிறார். கடின உழைப்பால் சேகரித்த பணத்தை பொழுது போக்கின் மீது கொண்ட ஆர்வத்தினால் வீண் விரயம் செய்து கொண்டு நேரத்தையும் காலத்தையும் கழித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது வேல்முருகன் என்ற பையன் துறையூரில் நான் வேலை செய்த ஹோட்டலுக்கு அருகில் இன்னொரு ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார், அவருடன் பழக்கம் ஏற்படுகிறது. பிறகு நாங்கள் இருவரும் இணைபிரியாத நண்பர்கள் ஆகிவிட்டோம். இப்படியாக மூன்று மாதம் ஓடுகிறது.

அப்போது நண்பர் வேல்முருகன் வேலை செய்த ஓட்டல்காரர் அடித்தும் தட்டியும் கொண்டு இருந்தார். அதனால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். அவர்களிடம் அடி வாங்கி கொண்டு வேலை செய்ய முடியாது என்று முடிவெடுத்து.

ஓவியம் : ரமேஷ்

இங்கு இருந்தாலும் சரிப்பட்டு வராது சென்னைக்கு செல்வோம் அங்கு ஏதேனும் வேலையை பார்ப்போம் என்று முடிவெடுத்து வேல்முருகன் உடன் திருவள்ளூர் பஸ்ஸில் ஏரி சென்னைக்கு புறப்பட்டு சென்றோம். எக்மோர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். சென்னை எங்களுக்கு மிக பிரம்மாண்டமாக காட்சி அளித்தது. வாகனங்கள் வேகமாக ஓடுவது போல் எங்களின் வாழ்க்கையும் வேகமாக அடுத்த கட்டத்திற்குச் சென்று விடும் என்ற எண்ணம் எங்களுக்கு ஆர்ப்பரித்தது. வேலை செய்து சேகரித்த காசு கையில் இருந்தது. அதில் அருகில் இருந்த ரோட்டுக் கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டோம். பிறகு அங்கு இருந்த ஆல்பர்ட் திரையரங்கில் இந்தியன் படம் ஓடிக்கொண்டிருந்தது.தொடர்ச்சியாக இரண்டு காட்சி ஆல்பட் தியேட்டரில் படத்தை பார்த்தோம். இரண்டு முப்பது மணிக்கு தான் படம் முடிவடைந்து. தியேட்டரை விட்டு வெளியே வந்து வாசல் ஓரத்தில் படுத்து உறங்கினோம்.

சூரியன் காலை உதித்தது நண்பர் பீச்சுக்கு செல்வோம் என்று கூற இருவரும் பீச்சுக்கு செல்கிறோம். அன்றுதான் முதன் முதலில் கடலைப் பார்த்தேன். கடலில் இருவரும் விளையாடினோம். மதியம் ஆனது பசியும் வந்தது. பீச் ஓரத்தில் இருந்த ரோட்டுக்கடையில் இருவரும் சாதம் சாப்பிட்டோம். இறுதியாக எங்கள் கையில் வெறும் 5 ரூபாய் பாக்கி இருந்தது. அந்தப் பணமும் அடுத்த நாள் காலை வரை தான் எங்கள் கையில் இருந்தது.


காசு தீர்ந்தவுடன் வேலைதேட வேண்டும் என்று முடிவெடுத்து பீச்சிலிருந்து நடந்தே வடபழனி வரை செல்கிறோம்.போகும் வழியில் இருந்த அனைத்து கடைகளிலும் வேலை கேட்டோம். யாரும் வேலை தரவில்லை.இறுதியாக வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று முருகனை கும்பிட்டு விட்டு. ஹோட்டல் சரவண பவனில் வேலைக்கு கேட்டோம். “சின்னப்பையனா இருக்கீங்க உங்களுக்கு என்னடா வேலை தரது” என்று கூறி வேலை தர மறுத்துவிட்டார் சரவணபவன் காசு வாங்கும் இடத்தில் உட்கார்ந்து இருந்த அண்ணன்.

அப்படியே அங்கிருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு சென்று வேலை கேட்டோம். யாரேனும் ஒருவரை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று டீக்கடைக்காரர் சொன்னார். நான் அங்கு வேலைக்கு சேர்ந்தேன். நண்பன் வேல்முருகனுக்கு வேலை கிடைக்கவில்லை. டீக்கடைக்கு அருகே இருந்த லாட்ஜ் காரர்கள் டீக்கடைக்கு டீ குடிக்க வந்தனர். அவர்களிடம் டீக்கடைக்காரர் இந்தப் பையனை வேலைக்குச் சேர்த்துகொள்கிறீர்களா என்று கேட்டார்.

அவர்களும் என் நண்பன் வேல்முருகனை லாட்ஜில் வேலைக்கு சேர்த்தனர். இருவரும் லாட்ஜிலேயே தங்கி கொண்டோம்.
நான் டீக்கடையில் வேலை செய்ய என் நண்பன் லாட்ஜில் வேலை செய்ய இப்படியாக வேலை முடிந்தவுடன். சென்னையை சுற்றி பார்க்கச் சென்று விடுவோம். நடந்தே சென்னை முழுக்க ரவுண்ட் அடிப்போம். அப்போது வடபழனியில் இருந்த ரோட்டுக் கடையில் பேண்ட் சட்டை விற்பதைப் பார்த்து முதல் முறையாக புது பேண்ட் சட்டை வாங்கி போட்டு கொண்டுன். எங்கும் நிலையாக தங்காத நான் வடபழனி டீக்கடையில் எட்டு மாதம் வரை பணியாற்றினேன்.

அப்போது எனக்கு வீட்டு ஞாபகம் வந்து, வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. வீட்டிற்கு செல்லவும் பயம். என்ன செய்வது என்று தெரியவில்லை அப்போது என் நண்பன் வேல்முருகனும் நானும் திருச்சிக்கு போக முடிவெடுக்கிறோம். டீக்கடைக்கார அண்ணனிடம் சொல்லிவிட்டு லாட்ஜில் ஒரு பையில் வைத்திருந்த பேன்ட் சட்டையை எடுத்துக்கொண்டு நானும் என் நண்பரும் விழுப்புரம் வரை செல்கிறோம். அப்போது காசும் கையில் இல்லை.விழுப்புரத்தில் ஏதேனும் வேலையை பார்த்து பிறகு திருச்சிக்கு செல்வோம் என்று முடிவு எடுக்கிறோம்.

மூன்று நாட்கள் விழுப்புரம் முழுக்க சுத்தி தெரிந்தும் எங்களுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. திருச்சி வரும் லாரியில் ஏறி மாலை 6 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தோம். வீட்டுக்குச் சொல்வதற்கும் தயக்கம் இருந்தது. என்ன செய்வதென்று புரியாது மீண்டும் வேலைக்குச் சென்று விடுவோம் என்று முடிவு எடுத்து. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள சந்திரபவன் ஹோட்டலில் வேலை கேட்டோ அவர்களும் எங்களை வேலைக்கு சேர்த்தனர். அன்று இரவு எங்களுக்கு ஆளுக்கு மூணு தோசை சாப்பிட கொடுத்தார்கள் சாப்பிட்டுவிட்டு இரவு அங்கேயே படுத்து உறங்கிவிட்டோம். காலை எழுந்தவுடன் நண்பன் வேல்முருகன் “நமக்கு ஓட்டல்ல மட்டும் தான்டா வேலை கிடைக்குது, இனி ஹோட்டல் வேலா வேண்டாம் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போகலாம் என்று கூற. காலையில் ஹோட்டல் காரரிடம் சொல்லாமல் திருச்சி ரயில் நிலையம் சென்றோம். அங்கு ரயில் நிலையத்தில் மப்டியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி எங்களைப் பிடித்து. டிக்கெட் இருக்கிறதா என்று கேட்க.இல்லை என்று சொன்னேன். பிறகு எங்களை விசாரிக்க ரயில்வே அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

அலுவலகத்தில் எங்கிருந்து வருகிறீர்கள் என்றெல்லாம் விசாரித்தார்கள். நான் எனக்கு யாருமில்லை என்று கூறினேன்.என் நண்பன் வேல்முருகன் அவனுடைய வீட்டு விபரத்தை ரயில்வே அதிகாரிகளிடம் கூறினார்.மதியம் ஆனது எங்களுக்கு தயிர்சாதம் வாங்கி கொடுத்தார்கள் சாப்பிட்டுவிட்டு இருவரும் உட்கார்ந்து இருந்தோம்.
அப்போது வேல்முருகனின் பெற்றோர்கள் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து என்னை பார்த்து ” உன்னால்தான் என் மகன் கெட்டு போகிறான்”என்று கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு நண்பன் வேல்முருகனை அவர்களோடு அழைத்துச் செல்கின்றனர்.

பிறகு என்னை பாலக்கரையில் ஹோமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றவுடன் நான் அழுது கொண்டிருந்தேன். அங்கிருந்த ஆசிரியர்களும் அதிகாரிகளும் எனக்கு சமாதானம் கூறி என் வீட்டைப் பற்றியும் பெற்றோர் பற்றியும் விசாரித்தனர். ஏற்கனவே என் தாய்க்கு சிரமத்தைக் கொடுத்து விட்டேன் மீண்டும் சிரமத்தைக் கொடுக்க நான் விரும்பவில்லை அதனால் அவர்களிடம் பெற்றோர் பற்றிய விவரத்தை கூற வில்லை. மேலும் எனக்கு ஹோமில் தங்கியிருக்கவும் விருப்பமில்லை அழுதுகொண்டே இருந்தேன். பிறகு என்னை சமாதனப்படுத்தி அங்கேயே தங்க வைத்தனர். ஹோமுக்கு வந்து தினமும் ஆசிரியர்கள் படங்கள் எடுப்பார்கள்.எனக்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. என் ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்கிறாயா என்று கேட்க நானும் செல்கிறேன் என்று சொன்னேன். இப்படி மூன்று மாதம் சென்றது.

என்னை தஞ்சை அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றினார்கள். அங்கு என்னை அடிப்பார்கள் திட்டுவார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் என்னை நான்காம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர்.

இப்போது எனக்கு தமிழ் வாசிக்கவோ எழுதவோ தெரியாது. அங்கிருந்த ஆசிரியர்கள் எல்லாம் எனக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்தனர் அப்படியும் நான் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் என்னை நான்காம் வகுப்பிலேயே படிக்கவைத்தார்கள். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழியை வாசிக்க கற்றுக் கற்றுக்கொண்டு புத்தகம் வாசிக்கும் அளவிற்கு சென்றேன்.

அப்படி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வாழ்க்கை சென்று கொண்டிருக்க ஒருநாள் இரவு பயங்கர வயிற்று வலி “ஐயோ, அம்மா” என்று கத்திய கத்தில் ஒட்டுமொத்த மாணவர்களும் அதிர்ந்துவிட்டனர். சிறுவர் சீர்திருத்தப்பள்ளி இருந்த அதிகாரி அந்த இரவு வேளையில் என்னை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.

– இப்ராஹீம்

( உண்மை கதை அடுத்த வாரம் தொடரும்)

முந்தைய தொடர்களை படிக்க —

https://ntrichy.com/2020/09/18/achiever-of-trichy-attempt-to-identify/

திருச்சியின் சாதனையாளரை அடையாளப்படுத்தும் முயற்சி – தொடர் – 1

 

3

Leave A Reply

Your email address will not be published.