தென்னகத்தின் தெரசா : அன்னை வீரம்மாள் – பகுதி – 1

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு-26

0
1 full

1924ஆம் ஆண்டில், பட்டியலினப் பள்ளர் சமூகத்தில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, அந்தக் காலத்தில் பள்ளி இறுதி வகுப்பு முடித்து, திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்வில் வாழ்க்கைத் துணைவர் பொருத்தமில்லாப் பண்பு கொண்டவராக இருந்த நிலையில், துணைவரை விட்டு விலகினார்.

இரு பிள்ளைகளோடு வெள்ளை ஆடை அணிந்து துறவு வாழ்க்கை வாழ்ந்தார். சமூக அறிவும் நூலறிவும் கொண்டு, தான் பட்ட வேதனைகளைப் பெண்கள் பெறக்கூடாது என்ற உயரிய நோக்கில் பெண்கள் நலச் சங்கத்தை உருவாக்கி, பின்னர் அன்னை ஆசிரமம் என்னும் பெண்களுக்கான ஆலமரத்தை நிறுவி, இன்று அதன் நிழலில் பலரும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆலமரத்திற்கான சின்ன விதையை விதைத்தவர் அன்னை வீரம்மாள். தமிழகத்தின் தனிப்பெரும் சேவை மனம் படைத்தவர். இவரால் திருச்சியும் தென்னிந்தியாவும் பெருமை கொண்டது. தென்னகத்தின் தெரசா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

2 full

பிறப்பு

திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் முக்கொம்புக்கு மேற்கே அகன்று விரிந்தோடும் காவிரியாற்றின் தென்கரையில் தென்னை, வாழை, நெல், கரும்பு செழித்தோங்கிய மருதநிலப் பகுதி திருப்பராய்த்துறை என்று அழைக்கப்பட்டது. திருப்பராய்த்துறை நெல் நாகரிகம் போற்றிய உழவர்குடியில் 1924ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை வேம்பு மேஸ்திரி – பெரியக்காள் இணையருக்கு ஏழாவது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. எதிர்காலத்தில் இந்தப் பெண் குழந்தை வளர்ந்து மற்ற பெண்களைப் போல் கோழையாக இருக்கக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் பெற்றோர் வீராயி (வீரம் மிக்க ஆயி- ஆயி, ஆயா என்றால் அம்மா என்ற பொருள்) என்னும் பெயர் சூட்டினர்.

குழந்தைக்குத் தலைமுடி கருகருவெனச் சுருள்சுருளாக இருந்ததால் ஊரில் உள்ள அனைவரும் குழந்தைக்கு “சுருட்டை” என்னும் பட்டப்பெயர் வைத்து அழைத்தனர். தந்தை இரயில்வேயின் இருப்புப்பாதைகளைச் சீர்செய்யும் காங்கிமேன் துறையில் மேஸ்திரியாக இருந்தார். அதனால் வீராயியின் தந்தை வேம்புமேஸ்திரி என்று அழைக்கப்பட்டார்.

பள்ளிக்கூடம் சென்று கல்வி பெறாமல் எழுத, படிக்கத் தெரிந்த தன் நண்பரின் உதவியால் எழுத, படிக்கக் கற்றுக்கொண்டார். கிராம வழக்கு, கூட்டங்களுக்கு அவர்தான் தலைமையேற்பார். கிராமத்து மக்களின் குற்றங்களைக் குறைகளை, புகார்களைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதில் கெட்டிக்காரராக விளங்கியிருக்கிறார். தந்தையின் ஆற்றல்களைக் கண்டு வீராயியும் வியந்து வளரத் தொடங்கினார். தாய் பெரியக்காள் கடுமையான உழைப்பாளி. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார். குலவையிடும் குரூப்பின் லீடர் என்ற அளவுக்குப் பெருமை வாய்ந்தவர்.

ஆரம்பக் கல்வி

சிறுமி வீராயிக்கு 7 வயது முடிந்தும் பள்ளிக்கு வீராயியை அனுப்ப யாரும் முயற்சி எடுக்கவில்லை. சிறுமி கிராமத்து மற்ற உறவுப் பிள்ளைகளோடு சேர்ந்து சேற்றில் வீடு கட்டியும் மண் செப்பு சட்டிப் பானைகள் வைத்து மண்சோறு, பச்சைக் கீரை, காட்டுக் காய்கள் வைத்துச் சமையல் செய்தும், வயல்களில் நாற்று நட்டும் விளையாடிக் கொண்டிருந்தாள். வீராயியின் பக்கத்துக் கிராமமான எலமனூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கப் போகவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பெற்றோரும் அண்ணன், அண்ணியாரும் “பெண் பிள்ளைக்குப் படிப்பு எதற்கு” என்று வீராயியைப் படிக்க விரும்பவில்லை.

1931ஆம் ஆண்டில் ஒரு நாள் தெருவில் உள்ள மற்ற பையன்களுடன் சேர்ந்து வீட்டில் உள்ள ஒருவருக்கும் தெரியாமல் பள்ளிக்கூடம் சென்றாள். எலமனூர் பள்ளி ஓராசிரியர் பள்ளி. அங்கே 1 முதல் 5ஆம் வகுப்பு வரை நடைபெற்றது. மொத்தம் 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீராயி மட்டுமே மாணவி. என்றாலும் வீராயி பயம்கொள்ளவோ அச்சம் கொள்ளவோ இல்லை. ஆசிரியர் கொடுத்த மிட்டாயைச் சுவைத்துச் சாப்பிட்டுவிட்டு, அவர் கொடுத்த சிலேட்டு, புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவண்ணம் கல்வி கற்றாள். பள்ளிக்கு ஆய்வாளர் வந்தபோது அரிசி எங்கிருந்து கிடைக்கிறது,

எண்ணெய் எங்கிருந்து கிடைக்கிறது என்று பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டார். பிள்ளைகள் எல்லாம் கடையில் கிடைக்கின்றது என்று பதில் சொன்னபோது வீராயி மட்டும் அரிசி நெல்லிருந்து கிடைக்கிறது. எண்ணெய் எள்ளிலிருந்து கிடைக்கிறது என்று அறிவுபூர்வமாகப் பதில் சொல்லி ஆய்வாளரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். ஆய்வாளர் வீராயியைப் பாராட்டினார். அந்தப் பாராட்டுகள் வீராயியின் பெற்றோருக்கு மிகுந்த பெருமையாக இருந்தது. எலமனூர் ஓராசிரியர் பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை வீராயி படித்து முடித்தார்.

நடுநிலை பள்ளியில் படிக்க மறுப்பு

தாழ்த்தப்பட்ட தெருவில் இருந்த ஆரம்பப்பள்ளியில் 5ஆம் வகுப்பு முடிந்ததும் வீராயியை 6ஆம் வகுப்பு சேர்த்துவிட அவரின் தந்தை தனது சொந்த ஊரான திருப்பராய்த்துறை அக்ரஹாரத்தில் இருந்த நடுநிலை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். ‘‘அந்தப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாமா“ என்று ஆலோசனை கேட்கத் தலைமை ஆசிரியர் கிராம முன்சீப் அவர்களிடம் சென்றார்.

“இது பிராமணக் குழந்தைகள் மற்றும் சாதி இந்து குழந்தைகள் மட்டுமே படிக்கக்கூடிய பள்ளி, இதுவரை ஒரு தாழ்த்தப்பட்ட பிள்ளையைக்கூடச் சேர்த்துக் கொண்டது கிடையாது. வேண்டுமானால் இப்போது வேம்பு மேஸ்திரி பெண்ணைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவள் மற்ற மாணவர்களோடு சேர்த்து இருக்காமல் தனியாகத்தான் அமரவைக்கவேண்டும்.

மற்ற பிள்ளைகள் கல்லால் அடித்து விரட்டினாலும் விரட்டுவார்கள். இதற்கு நான் பொறுப்பில்லை” என்று பிராமண வகுப்பைச் சார்ந்த முன்சீப் சொல்லிவிட்டார். இதைக் கேட்ட தந்தை வேம்பு மகளைப் பள்ளியில் சேர்க்காமல் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். வீராயி படித்த பள்ளியின் ஆசிரியர் மரியபிரகாசம் 3.50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜீயபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்த்துவிடும்படி ஆலோசனை கூறினார்.

ஜீயபுரம் பள்ளி – பெயர் மாற்றம்

வீராயி படிக்கவேண்டும் என்ற உறுதி கண்டு தந்தை வேம்பு, வீராயியை அழைத்துக்கொண்டு ஜீயபுரம் அரசு நடுநிலைப்பள்ளி சென்றார். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கட்ராமசர்மா. இவர் ஒரு பிராமணச் சமூகத்தவர். மேலும் காந்தியவாதி என்பதால் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். வீராயியை 6ஆம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார். தொடர்ந்து வீராயி என்ற பெயர் உன் அழகுக்குப் பொருத்தமில்லாமல் உள்ளது பதிவேட்டில் ‘வீரம்மாள்’ என்று எழுதி விடுகிறேன்.

இனி ஆசிரியர் மாணவர்கள் அனைவரும் உன்னை வீரம்மாள் என்றே அழைப்பார்கள் என்றவுடன் வீராயிக்கு மனத்தில் பெருமகிழ்ச்சி அணையுடைத்த வெள்ளமாய் வேகம் கொண்டிருந்தது. வீரம்மாள் 6ஆம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்தார். ஆனால் ஆங்கிலப் பாடம் வாசிக்க வீரம்மாளுக்கு சிரமமாக இருந்தது.

ஆங்கிலத்திற்கு டியூசன் என்னும் தனிவகுப்பு வைத்து ஆங்கிலம் படித்தார். மாதம் அந்தக் காலத்தில் டியூசன் படிக்கப் பீஸ் ரூ.2/- (காலை முதல் மாலை வரை வயல்களில் வேலை செய்தால் கூலியாகக் கால் ரூபாய் 25.00 பைசாதான் கிடைக்கும்) கொடுத்துப் படித்தார். தொடர்ந்து ஆங்கிலப் பாடத்தை மட்டும் மிகவும் சிரமப்பட்டு வீரம்மாள் படித்தார். பிரமாண மாணவ, மாணவியர் நன்றாகப் படித்தார்கள். வீரம்மாளிடம் தீண்டாமையைக் கடைபிடித்தனர். வீரம்மாள் இந்தப் பள்ளியிலும் தனியேதான் அமர வைக்கப்பட்டார். தவறி வீரம்மாளைத் தொட்டுவிட்டால் ‘தீட்டுப்பட்டுவிட்டது’ என்றும் ‘வீட்டுக்குப் போனவுடன் குளிக்கவேண்டும்’ என்று அவர்கள் சொல்லும் வார்த்தைகள் வீரம்மாளை கவலை கொள்ளவைத்தது.

அப்போது “இவர்களைப் படிப்பில் வெல்லவேண்டும்’ என்று உறுதி எடுத்துக் கொண்டார். பிராமணப் பிள்ளைகளைப் போலப் பேசுவதைப் பழகிக் கொண்டார். கல்வியைக் கண்ணும் கருத்துமாகக் கற்று வந்தார். அரசாங்கத்திலிருந்து வருடத்திற்கு 6ரூபாய் உபகாரச் சம்பளம் என்றும் உதவித் தொகை வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் வீரம்மாள் மீது மிகுந்து அன்புகொண்டு கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்தார். இதனால் மற்ற மாணவியர் வீரம்மாள் மீது பொறாமை கொண்டார்கள். ஆனால் வீரம்மாள் எல்லாரிடத்தும் பதிலுக்கு அன்பாகவே பழகினார்.

கற்றதும் – பெற்றதும்

6ஆம் வகுப்பில் சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் பாடங்கள் ஆசிரியரால் நடத்தப்பட்டது. பகவான் புத்தர்பிரானின் பஞ்சசீலத்தைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். அதாவது 1. பொய் சொல்லக் கூடாது 2. திருடக் கூடாது 3. உயிர்வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற பஞ்சசீலக் கொள்கைகளைக் கடைபிடிக்க அந்தச் சிறுவயதில் வீரம்மாள் உறுதி எடுத்துக் கொண்டார். இனி வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து விளையாட மாட்டேன். மாமிசம் உண்ணும் பழக்கத்தையும் இனி விட்டுவிடுவேன் என்ற உறுதி எடுத்துக் கொண்டு இறுதி வரை அதில் பிடிப்புடன் இருந்தார். புத்தர், மகாவீரர் போன்றவர்கள் கருத்துகள் வீரம்மாளின் நெஞ்சில் பசுமரத்தாணியாகப் பதிந்தது என்பது வியப்பாக உள்ளது.

கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் குரு என்று அந்தக் காலத்தில் அழைக்கப்படுவார். வீரம்மாள் தனக்குக் கிடைத்த 6ரூபாய் உதவித் தொகையைத் தனக்கே எடுத்துக்கொள்ளாமல் ஜீயபுரம் தலைமையாசிரியருக்கு ஒரு அழகான கருப்பு குடையும், ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கு ஒரு ஜோடி வேஷ்டியும் துண்டும் வாங்கிக் கொடுத்துத் தன் குருப் பக்தியை வெளிப்படுத்தினார். பள்ளி விட்டு மாலை வீடு திரும்பியவுடன் மாட்டுத் தொட்டிகளில் நீர் நிரப்புவார். பசுக்களுக்குக் கஞ்சி கழுநீர் வைப்பார். கோழி, புறாக்களுக்குத் தீனி வைப்பார். கோழிக்குஞ்சு, நாய்க்குட்டிகளைப் பிடித்து விளையாடுவார்.

பக்கத்து வீட்டார் வளர்க்கும் முயல்களுக்கு அருகம்புல் கொடுப்பார். இல்லத்தில் இரவு உணவு சமைப்பதில் ஆர்வம் கொண்டு சமைப்பார். இரவு 8 மணிக்குச் சின்னச் சிம்னி விளக்கு அருகில் உட்கார்ந்து படிப்பார். வீட்டுப் பாடங்களை உடனே முடிக்கவேண்டும் என்று ஆர்வத்தோடு எழுதி முடிப்பார். காலையில் சூரிய உதயத்திற்கு முன்பே தமிழ், ஆங்கிலப் பாடங்களை மனப்பாடம் செய்வார். காலை நேரத்தில் கொஞ்சம் அதிகநேரம் படித்தால் அண்ணியார்கள் “என்ன சீமை படிப்போ… இப்படி விழுந்து விழுந்து படிக்கிற” என்று எச்சரிலுடன் பேசுவதைக் கேட்டு, இந்த வீட்டில் யாரும் தன்னைப் படிக்க ஊக்குவிக்கவில்லையே என்ற வருத்தம் வீரம்மாளிடம் மிகுந்திருந்தது.

வீரம்மாளிடம் முருகப் பக்தியும் மிகுந்திருந்தது. தன் அக்கா, அத்தானுடன் அய்யம்பாளையத்தில் நடைபெற்ற திருவிழாவிற்குச் சென்றபோது கோவில் இருந்து முருகனை வணங்கி, தானே இயற்றிய பாடலையும் பாடினார்.

 

அய்யம்பாளையத்தில் வீற்றிருக்கும் ஆறுமுக ஜோதியே

தூய மனதால் உமை நான் துதிக்கின்றேன்

பொறுக்காத குற்றங்கள் பெரிதும் இருப்பினும்

பெறுக்காமலே ஏற்று விரும்பியதைத் தந்திடுவாய்”

 

படிப்பைத் தொடர்வதில் சிக்கல்

1939இல் 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஆரம்பப்பள்ளியில் முதல் மாணவியைப் போன்று இங்கே முதல் மாணவியாகத் திகழ முடியவில்லை என்றாலும் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார். 7ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார் என்று ஆசிரியர் தெரிவித்தது வீரம்மாளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம் 8ஆம் வகுப்பு நடத்த அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. இந்தச் செய்தியைத் தலைமையாசிரியர் தெரிவித்தபோது வீரம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

8ஆம் வகுப்பு படிக்கவேண்டும் என்றால் 12 மைல் தொலைவில் உள்ள திருச்சி அல்லது குளித்தலைச் சென்று படிக்கவேண்டும். இரயிலில் செல்லப் பாஸ் வாங்கவேண்டும். படிப்பதற்குத் தொகை கட்டவேண்டும். புத்தகங்கள் வாங்கவேண்டும். அம்மாவும் அப்பாவும் வயதாகி விட்டார்கள். அண்ணன்கள் படிக்க உதவி செய்யும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் இல்லை. எல்லாம் அன்றாடக்கூலிகள். கோடை விடுமுறை நாட்களில் கூலிக்கு மண் சுமந்து வயலுக்குக் குப்பை சுமந்து வாழைக்குக் களைவெட்டி, சித்தாள் வேலை செய்து கொஞ்சம் காசு சேர்த்து வைத்துக்கொண்டு 8ஆவது வகுப்பில் எந்தப் பள்ளியிலாவது சேர ஆவலோடு காத்திருந்தாள்.

கோடை விடுமுறை ஒவ்வொரு நாளாக வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. நாட்கள் செல்லச் செல்ல வீரம்மாளுக்குக் கவலையும் அதிகரித்தது. தன் படிப்பிற்குத் தடை ஏற்பட்டுவிடுமோ என்ற கவலைதான் அடிப்படைக் காரணமாகும்.. 1940ஆம் ஆண்டு மே மாதம் கடைசி வாரம் வந்துவிட்டது. வீரம்மாளுக்குக் கவலை அதிகரித்துக் கொண்டே இருந்தது. தன் அப்பாவிடம் மட்டும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

படிக்கவேண்டும் என்பதற்கான ஆலோசனை பெறுவதற்குத் தலைமையாசிரியர் திரு.வெங்கட்ராமசர்மா அவர்களை வீரம்மாள் சந்தித்தார். அவர் திருச்சி மாவட்ட அரிசனச் சேவா சங்கத் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசவைத்தார். தன் நிலையைக் கண்ணீர் மல்க வீரம்மாள் அவரிடம் எடுத்துக்கூறினார். வீரம்மாள் தொடர்ந்து படிக்க இரயில் பாஸூக்காக மாதம் 4ரூபாய் உதவித்தொகையும், குளித்தலை அரசு உயர்நிலை பள்ளியில் சேர்ந்து பணம் கட்டாமல் படிக்கலாம் என்ற செய்தி கிடைத்தது.

வீரம்மாளும் அவரின் அப்பாவும் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாது. தொடர்ந்து குளித்தலை அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு சேர்ந்து தன் கல்வியைத் தொடர்ந்தார். போகவர இரயில் பயணம் 20 மைல். பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இரயில் பெட்டியில் இவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்து படித்தார். இரயில் பயணத்தின்போது நேரத்தை வீணாக்காமல் தேவையான பாடங்களைப் படிப்பது என்று நேரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொண்டார். குளித்தலை அரசு உயர்நிலை பள்ளியின் அப்போதைய தலைமையாசிரியர் திரு.ரெங்கசாமி அய்யங்கார் வீரம்மாளின் கல்வி முயற்சியை மற்ற மாணவர்களிடம் புகழ்ந்துரைத்தார். ரெங்கசாமி அய்யங்கார் காட்டிய அன்பு வீரம்மாளுக்குக் கல்வியைத் தொடர்வதில் நம்பிக்கை ஏற்பட்டது.

திருமண நிச்சயதார்த்தம்

வீரம்மாள் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தன் இல்லத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீஇராமகிருஷ்ணா தபோவனத்தில் நடைபெறும் ஆன்மீகச் சொற்பொழிவில் கலந்துகொள்வார். ஒருநாள் “ஏழை எளிய மக்களுக்குச் செய்யும் தொண்டு கடவுளுக்குச் செய்யும் தொண்டாகும்” என்ற சுவாமி விவேகானந்தரின் உபதேச மொழி வீரம்மாளின் மனதில் ஆழமாகப் பதிந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் இழிவுகள், தொல்லைத் துயரங்கள், தீண்டாமைக் கொடுமைகள் எல்லாம் அகற்றப்பட வேண்டும். அந்த மக்களுக்கு உழைக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டது.

தபோவனத்துடன் தொடர்பு வைத்துக் கொண்ட பிறகு வீட்டில் ஸ்ரீஇராமகிருஷ்ணா பரமஹம்சர் படம், அன்னை சாரதாம்பாள் படம், சுவாமி  விவேகானந்தர் படம் ஆகியவைகளை வீட்டில் வைத்து வணங்கிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் இதுபோன்ற படங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் வைக்கமுடியாத படங்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்நிலையில் திருச்சி மண்ணச்சநல்லூருக்கு அருகில் உள்ள ஸ்ரீதேவிமங்கலத்தை சொந்த ஊராகக் கொண்டு, இலங்கை நுவரேலியாவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கங்காணியாக வேலை பார்க்கும் பொன்னுசாமி என்பவர் தன் மூத்தமகன் அவினாசிக்குப் பெண் கேட்டு 2,3 முறை இல்லம் வந்தார். அந்தக் காலத்தில் படித்த பெண்கள் இல்லாத காலத்தில் வீரம்மாள் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பது பொன்னுசாமிக்குப் பிடித்துப்போய்விட்டது.

இதற்கிடையில் திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடானது. வீரம்மாள் நான் எஸ்.எஸ்.எல்.சி. (11 பள்ளி இறுதி வகுப்பு) படித்து முடிக்காமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று தன் தந்தையிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார். இலங்கைக்காரர்கள் திருமணத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இப்போது திருமணத்தை நிச்சயம் செய்துகொள்வோம் என்று கூறினார்கள். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் கல்யாணம் போல் விருந்து படைத்து நடந்தது.

பருவம் அடைதலும் – சிக்கல்களும்

17 வயதை அடையும் வரை வீரம்மாள் பருவம் எய்தாமல் இருந்தார். வீட்டில் உள்ள அனைவரும் இது குறித்துக் கவலை கொண்டனர். வீரம்மாள் கவலை கொள்ளவில்லை. காரணம் வயது வந்துவிட்டால், படிப்பிற்குத் தடை போட்டுவிடுவார்களோ என்பதுதான். 8ஆவது வகுப்புத் தேர்வு எழுதிய பின் கோடை விடுமுறை விடப்பட்டது. வீட்டில் தங்கி இருக்கும்போதே வீரம்மாள் பூப்பெய்தினார்.

அந்தக் காலத்தில் பூப்புநீராட்டு விழாவைத் திருமண நிகழ்வைப் போல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் நடத்துவார்கள். அப்படித்தான் வீரம்மாளுக்கும் நடந்தது. உறவினர்கள் இனிப்பு பலகாரங்கள் கொண்டு வருவதும் போவதுமாக வீடு கலகலப்பாக மகிழ்ச்சிகரமாக இருந்தது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. வயசுக்கு வந்துவிட்ட பெண் இனிப் பள்ளிக்குச் செல்வது சரியல்ல என்ற கருத்து வீட்டிலுள்ளவர்களிடம் வெளிப்பட்டது.

“பூப்பெய்திய பின் பள்ளிக்குச் செல்வது ஒருபோதும் குற்றம் அல்ல. எனக்குத் தெரியும், எந்த முறையில் போய்விட்டு எப்படி அடக்கமாகத் திரும்பி வரவேண்டுமென்று, ஒருவித அசம்பாவிதமும் நேராமல் என்னைப் பாதுகாத்துக்கொள்ள எனக்கு மனப்பக்குவம் உண்டு” என்று தந்தை உட்பட அனைவரும் பதில் தந்தார். மேலும் இலங்கையில் உள்ள தன் வருங்கால மாமனாருக்கும் கடிதம் எழுதி 11ஆம் வகுப்பு முடியும் வரை எனக்குத் திருமணம் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்யவேண்டாம் என்று எழுதினார்.

அவரும் எதிர்கால மருமகளின் படிப்புக்கு அவ்வப்போது பணம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தார். அதனால் வீரம்மாள் எந்தவொரு சிரமமும் கவலையும் இல்லாமல் தொடர்ந்து கல்வியைப் பயின்று கொண்டிருந்தார்.

திருச்சியில் கல்வி

குளித்தலைப் பள்ளியில் ஒரு நாள் மாலையில் சீரடி பாபா பக்தர் ஒருவர் மஹான் சீரடி பாபாவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற அற்புதங்கள் குறித்தும் உரையாற்றினார். வீரம்மாளுக்கு இந்த உரை அவரை வெகுவாகக் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற சீரடி பாபா குறித்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

10ஆம் வகுப்பு முழுஆண்டுத் தேர்வு எழுத 3 மாதங்கள் இருக்கும் நிலையில் இரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதனால் வீரம்மாள் குளித்தலைச் செல்லக் காலை 6.10 மணிக்கு இரயில் நிலையம் செல்லவேண்டும். இரவு குளித்தலையிலிருந்து திரும்புவது என்பது இரவு 8.20ஆகிவிடும். இந்த இரயில் திருப்பராய்த்துறை நிலையத்தில் நிற்காது. ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலமனூரில்தான் நிற்கும். அங்கிருந்து வீரம்மாளை அழைத்துவர அவரின் அண்ணன்கள் செல்லவேண்டும்.

இது அண்ணன்களுக்குச் சிரமமாக இருந்தது. 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் குளித்தலைச் சென்று படிப்பதில்லை என்று முடிவு எடுத்தார். திருச்சியில் உள்ள ஹோலிகிராஸ் உயர்நிலை பள்ளியில் படிப்பது என்று வீரம்மாள் முடிவெடுத்தார். அதன்படி 11ஆம் வகுப்பு படிக்கத் திருச்சி ஹோலிகிராஸ் பள்ளியில் சேர்ந்தார். அவரின் தலைமையாசிரியர் இங்கே சேருவதற்கு உதவியாக இருந்தார்.

1942இல் அரசுப் பள்ளிகளில்தான் இலவசக் கல்வி. அரசு மான்யம் பெறும் பள்ளிகளில் படிப்பதற்குப் பணம் கட்டவேண்டும் என்ற நிலை இருந்தது. வீரம்மாள் உதவித் தொகை பெறுவதால் முழுத்தொகை செலுத்தவேண்டும் என்று பள்ளி கட்டாயப்படுத்தியது. தான் தாழ்த்தப்பட்ட சமுதாயம் சார்ந்தவள் என்பதால், அரசு வழங்கியுள்ள சலுகை ஆணையைக் காண்பித்து முழுசம்பளம் கட்டவில்லை. இதனால் ஆசிரியர்கள் வீரம்மாள் மீது இனம்புரியாத கோபம் கொண்டிருந்தனர். வீரம்மாள் கல்வியில் காட்டிய அக்கறையின் அடிப்படையில் இரசாயனம் என்ற வேதியியல் பாடத்தில் அந்தப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துச் சாதனை படைத்தார்.

தொண்டு வீராசாமி அண்ணன் ஆனார்

1942இல் உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது War Front Lecturer ஆகப் பணியாற்றிக் கொண்டே, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக முடிந்தவரை சேவை செய்துகொண்டிருந்தார். அவர் பெயர் வி.வீராசாமி. சொந்த ஊர் பூதலூர். அவர் எலமனூர் வருகை தந்து, இந்த ஊரில் பெண்கள் யாரும் படிக்கின்றார்களா? என்று கேட்டார். வீரம்மாள் படித்துக் கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி கொண்டார். தங்கை வீரம்மாளை பி.ஏ., எம்.ஏ.வரை படிக்க வையுங்கள் என்று தந்தை வேம்புவிடம் கூறினார்.

வீரம்மாளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட செய்தி அறிந்தார். வீரம்மாளுக்கு அடிக்கடி கடிதம் எழுதிப் படிப்பில் இருந்த வீரம்மாளின் ஆர்வத்தைத் தூண்டி கொண்டிருந்தார். அது முதல் “V.வீராசாமியின் தங்கை V. வீரம்மாள்” என்று அழைக்கப்பட்டு இருவரும் உடன்பிறந்த சகோதரச் சகோதரி போல் ஆகிவிட்டார்கள்.

வீராசாமி மிகுந்த சமுதாயப் பற்றுள்ளவர். சமூகச் சேவையில் அதிக நாட்டம் உள்ளவர். பெரியார் ஈ.வே.ரா.அவர்களின் கொள்கைப் பிடிப்புள்ளவர் நல்லொழுக்கமும் நற்பண்பும் நாணயமும் அன்புடன் அடக்கமும் நிறைந்த நல்லவர். சேவைத்துறையில் இவர் வீரம்மாளுக்கு உடன்பிறந்த அண்ணனாகவே ஆகிவிட்டார்.

பின்னர்ச் சமூகசேவை செய்துவந்தார். தொண்டு என்னும் சமூக முன்னேற்ற இதழ் நடத்தியதால் அவர் தொண்டு வீரசாமி என்று அழைக்கப்பட்டார். இவர் வீரம்மாளின் தந்தை வேம்புக்குக் கடிதம் எழுதி, “சிலோன் மாப்பிள்ளைக்குப் படித்த வீரம்மாளைத் திருமணம் செய்துகொடுக்கவேண்டாம்” வேண்டுகோள் வைத்தார். வீரம்மாள் எழுதிய பதிலில்,“ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவரைத் தவிர வேறொருவருக்கு என் மனதில் இடம் இல்லை…….. தயவு செய்து நீங்கள் எனக்காகப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை நான் மறுப்பதற்கு மன்னிக்க வேண்டும் அண்ணா” என்று எழுதினார்.

பின்னர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வந்து 7 நாள்கள் ஆகியும் தேர்ச்சியைத் தெரிந்து கொள்ளமுடியவில்லை. பெங்களூரிலிருந்த தொண்டு வீராசாமி அவர்கள் வீரம்மாள் தேர்ச்சி பெற்ற செய்தியைக் கடிதம் மூலம் தெரிவித்தார்.

திருமணம் நடந்தது

11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் தான் படித்த ஹோலிகிராஸ் கல்வி வளாகத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கவேண்டும் என்று வீரம்மாள் விரும்பினார். காரணம் ஆசிரியராக இருந்தால் நல்லக்குடிமக்களை உருவாக்க முடியும் என்று எண்ணினார். தனக்குத் திருமணம் நடைபெறவுள்ளது என்றும், அதனால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு ஒரு மாதக் காலம் தாமதமாக வருவேன் என்றும், ஒரு இடத்தைத் தனக்காக வைத்திருக்கும்படி தோழிகள் மூலம் பயிற்சி பள்ளிகளுக்குச் செய்தி தெரிவித்தார்.

1943 ஜூன் மாதம் முதல் வாரத்தில் வீரம்மாளைத் திருமணம் செய்துகொள்ளும் இலங்கை மாப்பிள்ளை திருச்சி வந்து அல்லூரில் தங்கியிருந்தார். ஒருநாள் பெண்ணைப் பார்க்க இலங்கை மாப்பிள்ளை திருப்பராய்த்துறை வந்தார். மாப்பிள்ளையைப் பார்த்த வீரம்மாள் பொருத்தமற்றவராக இருக்கின்றாரே என்று அதிர்ச்சியடைந்தார்.

உடல் ஊனமில்லாமல் இருக்கிறாரே என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டார். ஊர் மக்களுக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. காரணம் வீரம்மாளின் அழகுக்கு எந்தவிதத்திலும் பொருத்தமாக இல்லை என்பதாகும். எனினும் தந்தை வேம்பு 3 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியின்படி திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது.

இதற்கிடையில் மாப்பிள்ளை தன் தாயுடன் இல்லம் வந்தபோது வீரம்மாள் தான் 2 ஆண்டுகளுக்கு ஆசிரியர் பயிற்சி படிக்க இருப்பதாகச் செய்தியைத் தெரிவித்தார். மாப்பிள்ளையின் கல்வித் தகுதி பற்றி வீரம்மாள் கேட்டபோது, இலங்கை நுவரேலியாவில் 10ஆம் வகுப்பு வரை படித்து, தற்போது தேயிலை நிறுவனத்தில் டீ மேக்கராக பணியாற்றுவதாகத் தெரிவித்தார். அந்தக் கால இந்து மத முறைப்படி 5 நாட்கள் திருமண நிகழ்வுகள் நடந்தேறின.

மணமக்களை எல்லாரும் வாழ்த்தினர். வீரம்மாளை தங்கை என்றும் அவரின் துணைவரை அத்தான் என்று முறைவைத்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தார்கள். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கான ஒருமாத காலம் முடிந்த நிலையில், தலைமையாசிரியர் சிஸ்டர் வியானி அவர்கள் வீரம்மாளுக்காக ஒரு இடம் வைத்திருப்பதாகச் சொல்லி அனுப்பியிருந்தார். வீரம்மாள் உடனே புறப்பட்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.

திருமணம் முடித்துத் தன் கணவரின் ஊரான அல்லூரில் மாமியார், சிறிய வயது கொழுந்தனார், சிறிய வயது நத்தனார் இவர்களோடு தன் இல்லற வாழ்வை வீரம்மாள் தொடங்கினார். அல்லூர் முத்தரசநல்லூருக்கு அருகில் உள்ளது. தான் வாழ்க்கைப்பட்ட அல்லூரில் 1943இல் ஆதி திராவிடர் நலத் தொடக்கப் பள்ளியைத் தொடங்க முயற்சிகளை வீரம்மாள் எடுத்து வந்தார். அரசின் சார்பில் பள்ளி தொடங்கப்பட்டது. அதற்கான ஒரு விழாவையும் வீரம்மாள் நடத்தினார். தொடக்கவிழாவில் வீரம்மாள்,“பெண் கல்வியைப் பற்றி சிறப்புரை” ஆற்றினார். அப்பள்ளியில் ஏராளமான ஆதி திராவிட மாணவ மாணவிகளும் அங்குக் கல்வி கற்க வந்தனர். அந்தப் பள்ளி தற்போதும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றது.

துணைவரின் பண்பும் – குடும்பப் பாரமும்

தனக்கு வரப்போகும் துணைவர் நல்லபண்பு, நல்லொழுக்கம், பெற்றோர்களிடத்து அன்பு, மரியாதை இவைகள் அனைத்தும் ஒருங்கே பெற்றவராக இருக்கவேண்டும் என்று எண்ணுவது பெண்கள் வழக்கம். அப்படித்தான் திருமணம் ஆன வீரம்மாளும் கனவுகளுடன் இருந்தார். அவரின் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாகத் துணைவரின் பண்பு இருந்தமை கண்டு வீரம்மாள் பதறிப்போய்விட்டார்.  முதன்முதலாகத் தன்னுடைய துணைவர் அவரது பெற்றோர்களிடம் மரியாதையின்றி நடந்து கொண்ட முறையைக் கண்ணுற்று வீரம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

இலங்கையில் இருந்த மாமனாருக்கு எழுதிய கடிதத்தில் வீரம்மாள்,“என் எண்ணத்திற்கு முற்றும் மாறுதலாக இருக்கிறார். கூடுமானவரை அவரைத் திருத்த முயற்சி செய்வேன். என் வாழ்நாள் எப்படி இருக்கப் போகிறதோ எனப் பயமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தார்.

தொடர்ந்து வீரம்மாளின் வாழ்க்கை அலையில் சிக்கிய சிறுபடகாகத் தத்தளித்துக் கொண்டிருந்தது. இலங்கையிலிருந்து வந்த மாமனார் தன் மகன் இலங்கையில் ஒரு பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்தவன் என்ற உண்மையைக் கூற வீரம்மாள் செய்வது அறியாது தவித்தார்.

இலங்கை செல்லக் கணவர் எடுத்த முயற்சியை மண்டபம் முகாம் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதி வீரம்மாள் தடுத்தார். கீழஅல்லூரில் இருந்த மாமனார் குடும்பத்தில் பிள்ளைகள் அதிகம். அனைவரும் சிறுவயதினர். வாழ்க்கைத் துணைவர் எந்தப் பணிக்கும் செல்வது கிடையாது. தொடர்ந்து தூங்குவதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்வது கிடையாது. இதனால் குடும்பப் பொறுப்பு அனைத்தும் வீரம்மாளின் தலையில் விழுந்தது.

இதில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு வேறு. தனது மாமனார் அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு மிகவும் சிக்கனமாகச் செலவு செய்து சீராகக் குடும்பம் நடத்தி வந்தார். துணைவரின் நடவடிக்கையைக் கண்டிக்காமல் அவர் திருந்தும் வகையில் தன் நடவடிக்கையை வீரம்மாள் அமைத்துக்கொண்டார்.

திருச்சி வானொலியில் பணியாற்ற அழைப்பு

இதற்கிடையில் வீரம்மாள் 6 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். இரயில் பயணம் செய்து படிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பரீட்சைக்கு 2 மாதம் இருக்கும்போது பயிற்சிப் பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கத் திருச்சிக்கே வந்துவிட்டார். அப்போது 2ஆவது உலக மகாயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

திருச்சி அகில இந்திய வானொலியில் வீரம்மாளுக்கு உரையாற்ற அழைப்பு வந்தது. “யுத்தத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் வானொலியில் 10 நிமிடம் உரையாற்றினார். பிறகு 2 தடவை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. சிறிது நாட்களுக்குப் பிறகு திருச்சி வானொலி நிலையத்திற்கு நிலையக் கலைஞர் (Staff Artuste Drama Voice) வேலைக்கு வரும்படி உத்தரவு வந்தது.

ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வை மார்ச்சு மாதத்தில் எழுத வேண்டி இருந்ததால் வானொலியின் வாய்ப்பை ஏற்க மறுத்தார். தேர்வைச் சிறப்பாக எழுதி முடித்தார். கர்ப்பமுற்றிருக்கும்போது மனநிலை மகிழ்ச்சியாக இருந்தால்தான் குழந்தை நல்லபடியாகப் பிறக்கும் என்பதைப் பற்றி வீரம்மாள் படித்திருந்தார். அதன்படி மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார். 1945ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி பெண் குழந்தையை வீரம்மாள் கிராமத்தில் ஈன்றெடுத்தார். அன்றைய தினம் இந்தியா முழுவதும் 2ஆவது உலக மகா யுத்தத்தில் வெற்றி பெற்றமைக்காகக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மருமகளுக்குப் பெண் குழந்தை பிறந்த செய்தி அறிந்து இலங்கையிலிருந்த மாமனார் மகிழ்ச்சியடைந்தார். குழந்தை பிறந்த நாள், நேரத்தைக் கணித்து முதல் எழுத்து ‘செ’ என்று வரும் விதத்தில் “செல்வநாயகி” என்று பெயர் சூட்ட மருமகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். வீரம்மாள் தன் மகள் படிப்பிலும் சமூகச் சேவையிலும் ஆதிதிராவிடர் சமூகத்திலேயே, திராவிட நாட்டிலேயே மணி போல விளங்கவேண்டும் என்று நினைத்து “திராவிடமணி” எனப் பெயர் வைக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

மாமனார் எண்ணத்தையும் மதிக்கவேண்டும் என்று தன் மகளுக்கு வீரம்மாள் “செல்வத் திராவிடமணி” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

வானொலி பணியில் சேர்ந்தார்

மீண்டும் வானொலி நிலையம் வேலையில் சேரும்படி அழைப்பை விடுத்திருந்தது. பிள்ளை பெற்று உடல் பலவீனமாக இருந்த நிலையிலும்1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்தேதி திருச்சி வானொலியில் நிலையக் கலைஞராகப் பணியில் இணைந்தார். திருச்சி பீமநகரில் மாதம் 2 ரூபாய் வாடகைக்கு ஒரு வீடு மாமியாரால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வீட்டில் தன் வாழ்க்கையை வீரம்மாள் தொடர்ந்து நடத்தினார்.

அகில இந்திய வானொலி நிலையத்திலும், நிலையக் கலைஞராகத் தனது வேலைகளில் அதிகம் கடமை உணர்வோடு கவனம் செலுத்தி வந்தார். “தாழ்த்தப்பட்ட வகுப்பில் ஒருவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாட்டு ஞானம் ஏதும் இல்லாத இவரைப்போய் நிலையக் கலைஞராகப் பணியமர்த்தியுள்ளார்களே?” என்று வானொலி நிலையத்தில் சிலர் பேசிய கேலி கிண்டல் வார்த்தைகள் வீரம்மாளின் மனதைத் தைத்தது.

“தகுதியற்ற ஒருத்திக்கு நிலையைக் கலைஞராக உத்தியோகம் கொடுத்துவிட்டதாக ஒருவரும், ஒரு நாளும் குறை சொல்லக்கூடாத வகையில் நாம் உழைக்கவேண்டும்” என்ற மனதில் உறுதி எடுத்துக் கொண்டார். வானொலி நாடகங்களில் வீரம்மாளுக்குக் கொடுக்கப்படும் பாத்திரங்களுக்கு ஏற்றவகையில் அதற்குரிய ஒலி வடிவம் கொடுத்து நடித்தார்.

வானொலியில் நடிப்பும் – அம்பேத்கர் வாழ்த்தும்

பச்சைப் பாம்பு என்னும் நாடகத்தில், 3 வயது குழந்தை பாம்பைக் கையில் வைத்துக் கொண்டு தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா உள்ளிட்ட அனைவரையும் பயமுறுத்தி வருவதாகக் காட்சியில், 3 வயது குழந்தையைப் போன்று பேசி வீரம்மாள் வானொலி நேயர்களின் பாராட்டுதலைப் பெற்றார்.

அகிலப் பாரத நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாடு பற்றிய நாடகம் ஒன்றில், வீரம்மாள் மலையாளப் பெண்மணியாக, அனைத்து மாநில மக்களிடத்தும் அன்பைப் பொழிந்து “எந்தா அம்மே” என்று மலையாள மொழி பேசியதை வானொலி உலகம் இன்றும் மறக்கவில்லை. மேலும், ஈரோடு , கோயம்புத்தூர், சென்னை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பேசும் பாணியிலும் அநேக நாடகங்களில் நடித்திருக்கிறார்.

கிராமச் சமுதாயம் பகுதியில் வருடக்கணக்கில் தொடர்ந்து ஒலிபரப்பி வந்த “ஆப்பக்கார அங்காயி” என்ற ஒரு நிகழ்ச்சியில், வீரம்மாள் ஆப்பக்கார  அங்காயி ஆக இருந்து பலதரப்பட்ட மக்களுடன் அவர் அன்புடனும் குடும்ப உறவுடனும் நகைச்சுவையாகவும் பேசி அவர்களது இன்பத் துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு நடித்ததும் இன்றும் வானொலி வரலாற்றில் நிலைத்து நின்று கொண்டிருக்கின்றது.

திரைநட்சத்திரங்களான ஜெமினிகணேசன், சோ-இராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா ஆகியோருடன் வானொலி நாடகங்களில் அம்மாவாக நடித்துள்ளார். வானொலி நாடகங்களில் சுமார் 5000 நாடகங்களில் நடித்துள்ளார். வானொலியில் பணியாற்றினாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுக்கு உழைக்கவேண்டும் என்ற சிந்தனையை வீராசாமியிடமிருந்து வளர்த்துக் கொண்டிருந்தார்.

1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் இரயிலில் திருச்சி வழியாகச் சென்னைக்குச் சென்றார். திருச்சியில் நள்ளிரவு ஒரு மணிக்கு இரயில் வந்த அம்பேத்கரை வீராசாமியுடன் துணையோடு வீரம்மாள் சந்தித்தார். அந்த மேதையின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். தன் 7 மாதப் பெண் குழந்தை திராவிடமணியை அம்பேத்கர் கையில் கொடுத்து அம்பேத்கரின் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டார். அப்போது வீராசாமி திருச்சி வானொலியில் அறிவிப்பாளர் பணியில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் குழந்தை பிறப்பு

வீரம்மாளின் துணைவர் அவினாசி திருச்சி இராமகிருஷ்ணா திரையரங்கில் டிக்கெட் விற்கும் வேலையில் சேர்ந்து சில மாதங்களாகச் செய்து வந்தார். அவ்வேளைகளில் வீட்டிற்குக் காலம் தாழ்ந்து வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கேட்டால், திரையரங்கில் நிறைய வேலை என்று நள்ளிரவு நேரங்களில் இல்லம் வந்து கொண்டிருந்தார்.

வீரம்மாள் இரண்டாவது குழந்தைக்குக் கருவுற்றிருந்தார். இரண்டாவது குழந்தை பிறக்க 2 மாதம் இருந்த சமயத்தில் அவரின் துணைவர் அதிக அன்புடன் வீரம்மாளை நேசித்து வந்தார். இதற்கான காரணம் பிள்ளை பிறந்தவுடன்தான் வீரம்மாள் அறிந்துகொண்டார்.

பிள்ளை பேற்றிற்காகத் தன் சொந்த ஊரான திருப்பராய்த்துறை வந்தார். இதற்கிடையில் துணைவருக்கு மதிய உணவைத் திருச்சிக்கு டிபன்கேரியரில் அனுப்பிக் கொண்டு, துணைவரின் மீது தான் கொண்ட அன்பை வெளிப்படுத்தினார். 1948ஆம் ஆண்டு ஜனவரி முதல்நாள் நள்ளிரவில் வீரம்மாள் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு நண்பர்கள், தோழியர்கள் கேட்டுக்கொண்டபடி “வீரக்குமார்” என்னும் பெயரைச் சூட்டினார்.

ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் துணைவருக்குத் தெரிவித்தார். அவர் உடனே வந்து பார்க்கவில்லை. 4 நாள்கள் கழித்தான் பார்த்தார். மனைவியிடம் அன்பாகப் பேசினார். “வாமடத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் அம்மாவோடு வந்து எனக்குச் சமைத்துப் போடுகிறார். நீ வந்துவிட்டாலும் உனக்கும் அந்தப் பெண் சமைத்துத் தருவாள்” என்று துணைவர் பேசியதைக் கேட்டு, இரண்டு நாள்களுக்கு முன்பு கொழுந்தனர் மூலம் கிடைத்த செய்தி உண்மையானது. ஆம். வாமடத்தில் காவேரி என்ற பெண்ணோடு இவருக்குத் தொடர்பு உள்ளது. வீரம்மாள் பிள்ளை பேற்றிற்காகத் திருப்பபராய்த்துறை வந்தவுடன் அந்தப் பெண்ணோடு இவர் இல்லறம் நடத்தியுள்ளார் என்ற உண்மை வெட்டவெளிச்சமானது.

இல்லறத் துறவு

வாழ்க்கைத் துணைவரின் இந்தத் துரோகத்திற்கு முடிவு கட்டவேண்டும் என்று பிள்ளை பிறந்த உடல் வலி தீராநிலையில் மனவலியோடு ஊர் உறவினர்களையும் படித்த பெருமக்களையும் அழைத்துக் கொண்டு, வாழ்க்கைத் துணைவரிடம் பிறந்த பிஞ்சுக் குழந்தையோடு நீதி கேட்டார். உடன் வந்தவர்களும் இது முறையா? என்ற கேள்வியை முன்வைத்தனர். துணைவர் அவினாசி அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவராக இல்லை. ஒரு கட்டத்தில் “நான் ஒண்ணும் அப்படி ஒருவரும் செய்யாத குற்றத்தைச் செய்துவிடவில்லை. என் இஷ்டப்படிதான் நடப்பேன். யாரும் என்னைக் கேட்கமுடியாது. நான் அந்தப் பெண்ணைப் பதிவுத்திருமணம் செய்துகொண்டால் உங்களால் என்ன செய்யமுடியும்?” என்றார். மேலும் வீரம்மாளை நோக்கி,“உன்னால் என்னை என்னடி செய்யமுடியும்? நீ படித்தவளாயிருந்தா உன் மட்டிலே. நீ இந்த வீட்டில் இருப்பதைப் பார்த்துக்கொள்கிறேன்.

நீ அழைத்து வந்திருப்பவர்களையும் ஒரு கை பார்த்துக்கொள்கிறேன்” என்று தான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதி காட்டி வெளியே சென்றுவிட்டார். பிரச்சனை வலுக்கவேண்டாம் என்று எண்ணி வீரம்மாள் தன் இரு குழந்தைகளோடு வீரசாமியின் இல்லம் சென்று தங்கினார். வாழ்க்கைத் துணைவரால் ஏவிவிடப்பட்டவர்கள் வீரம்மாள் தங்கியிருந்த வீரசாமி வீட்டின் மீது கல்லெறிந்து கலாட்டா செய்தார்கள். ஆண்கள் ஒழுக்கம் தவறி நடப்பது சகஜம் என்ற வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று வீரம்மாள் முடிவெடுத்தார்.

இருபாலரும் ஒழுக்கம் தவறி நடப்பது குற்றமே. ஆண்,பெண் இருபாலருக்குமே கற்பு அவசியம் என்பதைச் சமூகத்தினரிடையே பிரச்சாரம் செய்வேன் என்று வஞ்சினம் உரைத்தார். 1948ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து, தன் 23ஆவது வயதில் இல்லறத்தை விடுத்துத் துறவறம் மேற்கொண்டார். “நான் பரிசுத்த மனதையுடைய கற்புடைய உத்தமியாக இருப்பதால் எனது கணவனை, இனி ஒருபோதும் தீண்டவே மாட்டேன்.

இனிமேல் நான் இல்லறத் துறவியாகவே இருப்பேன்” என்று வெள்ளை உடை உடுத்திக் கொண்டு வீரம்மாள் இல்லறத் துறவியாக புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

(அடுத்த இதழில், வீரம்மாள் – பெரியார் சந்திப்பு, ஷெடியூல்டு பெண்கள் நலச் சங்கம், காமாட்சி இணைதல், பெண்கள் நலச் சங்கம் உருவாகுதல், அன்னை ஆசிரமம் உருவாகுதல், அன்னையாக வீரம்மாள் வாழ்வு நிறைவு – போன்ற செய்திகள் இடம்பெறும்)

-ஆசைத்தம்பி

 

3 half

Leave A Reply

Your email address will not be published.