திருச்சியின் சாதனையாளரை அடையாளப்படுத்தும் முயற்சி – தொடர் – 1

0
1

வாழ்க்கை என்பது நிலையானது அல்ல, இன்பமும் துன்பமும் இணைந்த ஒன்று. வெற்றி என்பது எளிதல்ல வாழ்வில் எத்தனை தடைகளை சந்தித்து, கேவலங்கள், அவமானங்கள், இழிவுகள், துன்பங்கள், பசி, காயம், வருத்தம், துக்கம் சோர்வு என அடுக்கடுக்கான சவால்களை சந்தித்து மேலே உயர்ந்த சாமானியனின் உண்மைக் கதைதான் இது.

(இந்த கதையின் கதாநாயகனின் பெயர் விபரம் இந்த கதையின் இறுதியிலேயே வெளியிடப்படும் )

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியில் பிறந்தேன். என் தந்தை தினக்கூலி நான் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே அவர் இயற்கை எய்திவிட்டார். குடும்பம் மிகவும் வறுமையில் வாடிக் கொண்டிருந்த சமயம். என் பாட்டியும் தாத்தாவும் அம்மாவும் தினம் வேலைக்குச் சென்று ஊதியமாக பெற்றுவரும் ரூபாயைக் கொண்டு எங்களது குடும்பம் இயங்கிக் கொண்டிருந்தது.
பசி என்பது எங்கள் வாழ்வில் இணைந்து ஒன்றாக மாறியது. இப்படி பசியின் கொடுமையால் எனது குழந்தைப் பருவத்திலேயே எனது தம்பி மரணித்தான்.

2

என் அம்மா மிகவும் மனம் சோர்வடைந்து, வாழ்க்கையே வெறுத்தார்கள். இறுதியாக எனக்காகவும் எனது தங்கைகளுக்காகவும் தான் வாழ்க்கையை தொடர்ந்ததாக எங்களிடம் கூறுவார்கள். இப்படியாகவே எங்களது குடும்பம் சென்று கொண்டிருக்க, முன்பு நடைபெற்ற தந்தையின் மரணமே எங்களை விட்டு நீங்காத நிலையில் மேலும் ஒரு பெரும் அடியாக தம்பியும் இறந்துவிட்டான்.

இந்நிலையில் எங்கள் குடும்பத்திற்கு எனது தாயின் அப்பாவான எனது தாத்தா எங்கள் குடும்பத்திற்கு நம்பிக்கையாக இருந்தார். அவரும் மரணிக்க பின்பு செய்வதறியாது எங்கள் குடும்பமே ஒருவேளை உணவுக்கும் மிகவும் சிரமப்பட்டது. அப்போது எனக்கு வயது ஆறு இருக்கும் மேலும் எனக்கு இரண்டு தங்கைகள். பசி எங்களை தினந்தினம் துரத்தியது. வாழ வழியில்லை என்ற நிலை வந்தது.

அப்பொழுது எனது பாட்டி உனது மாமா அத்தை எல்லாம் தமிழ்நாட்டில் திருச்சியில் இருக்கிறார்கள். அங்கு சென்று ஏதேனும் வேலையை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கூறி என் அம்மாவையும் என் தங்கையும் என்னையும் அழைத்துக்கொண்டு பாட்டி திருச்சிக்கு வந்தார்.
திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு அருகே நாங்கள் குடியேறினோம்.

எங்களது உறவினர்களும் உங்களுக்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை. அம்மாவும் பாட்டியும் திருச்சியின் கல்லுடைக்கும் வேலைக்கு சென்றார்கள். வேலை முடித்து வீட்டுக்கு வரும் பொழுது அவர்கள் கையெல்லாம் காப்பு காய்த்து, இறுகிக் காணப்படும். என் பாட்டியோ வயதில் மூத்தவர்கள் அவர்கள் அந்த வயதிலும் கல்லை உடைத்து எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். அப்பொழுதும் பசி எங்களை விட்டு நீங்கவில்லை தினமும் ஒரு வேளை மட்டுமே எங்களுக்கு உணவு அந்த நேரத்தில்தான் எனது இரண்டாவது தங்கை மரணமடைகிறார்.

ஏற்கனவே பல இழப்புகளை சந்தித்த எனது அம்மாவுக்கும் பாட்டிக்கும் எனக்கும் என் தங்கையின் மரணம் மேலும் ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. அதோடு மட்டும் முடியவில்லை அடுத்த இரண்டு மாதங்களில் எனது முதல் தங்கை மரணம் அடைகிறார். அப்பொழுது எனக்கு வயது 10 இருக்கும்.
விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் தினம் தினம் நான் அழுது கொண்டே இருப்பேன் ஒரு பக்கம் பசி மற்றொரு பக்கம் குடும்ப வேதனை என்று ஒருநாளும் உறக்கம் என்பது இல்லாமல் பசியால் இரவு முழுக்க வீட்டு வாசலில் அழுது கொண்டே இருப்பேன். எனது அம்மாவும் எனது பாட்டியும் என்னை பலமுறை சமாதானப்படுத்த முயற்சித்தும். பசியும் வேதனையும் என் அழுகையை நிறுத்த விடவில்லை.

பத்து வயதிலேயே பல இன்னல்களைக் அனுபவித்துக் இருந்ததால். என் தாயும் பாட்டியும் மிகவும் சிரமப்படும் வேளையில் அவர்களுக்கு மேலும் சிரமமாக நானும் இருக்க வேண்டுமா என்று எண்ணி பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்.

எங்கு செல்வது எப்படி செல்வது என்ற எவ்வித அறிவும் எனக்கு அப்பொழுது கிடையாது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் தினமும் வீதிகளில் உள்ள சாலை ஓரங்களும் நிழல் குடைகளுமே எனக்கு வீடாக அமைந்தன. கோயில்களின் போடும் உறவுகளே எனக்கு அப்போது சாப்பாடு. இப்படியிருக்க திருச்சி சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தினமும் எனக்கு உணவளித்து அவர் வீட்டிலேயே என்னை வைத்துக்கொண்டார்.

பிறகு நான் அவர் வீடுகளில் வளர்த்த ஆடு மாடுகளை வளர்த்து வந்தேன். அப்போது அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் எனக்கு நண்பர் ஆகினர். அவர்களுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டு திரிவேன். அப்பொழுது சீராத்தோப்பு பகுதிக்கு அருகே உள்ள இடத்தில் கமருதீன் பாய் என்பவர் டைலர் கடை நடத்தி வந்தார். அவர் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்.

காஜா கட்டுதல் பட்டன் கட்டுதல் போன்ற பணிகளை எனக்கு கற்றுக்கொடுத்தார் அவர் கடையில் வேலை செய்து அவர் கொடுக்கும் நாலணா சம்பளத்தைக் கொண்டு சாப்பிடுவது நண்பர்களுடன் விளையாடுவது என்று பொழுது கழிந்தது.

இப்படி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நண்பர்கள் என்னைக் கேலியும் கிண்டலும் செய்து அநாதை என்று கூறி கொண்டு இருப்பார்கள். அப்படி ஒருமுறை செய்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் என்னை கல்லால் அடித்தார். அதில் என் மண்டை உடைந்தது. நான் அழுது கொண்டிருக்க அருகில் இருந்தவர்கள் குழுமணி அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று எனக்கு சிகிச்சை அளித்தனர்.

அன்று முழுக்க அழுது கொண்டிருந்தேன். அன்று செல்வராஜ் அண்ணன் அவர்கள் குடும்பத்தோடு ‘ஆறு முதல் அறுபது வரை’ படத்திற்கு சென்றனர் உடன் என்னையும் அழைத்துச் சென்றனர். படத்தைப் பார்த்து அழுகை நின்றது.

– இப்ராஹீம் 

(அடுத்த வாரம் தொடரும்)

https://ntrichy.com/2020/09/07/original-story-part-2/

திருச்சியின் சாதனையாளரை அடையாளப்படுத்தும் முயற்சி – தொடர் -2

 

 

3

Leave A Reply

Your email address will not be published.