நூற்றாண்டை நோக்கி வெற்றிநடை போடும் ஜோசப் கண் மருத்துவமனை
திருச்சியின் அடையாளங்கள்-1
திருச்சி மாநகரில் வாழ்ந்து மறைந்த பல ஆளுமைகள் திருச்சியின் அடையாளங்களாக விளங்கியுள்ளார்கள். நாம் திருச்சிக்காரர்கள் என பெருமைக் கொள்கிறோம் எனில் அவர்களைப் பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் திருச்சியின் வரலாற்றுப் பொக்கிஷமாய் விளங்கியவர்கள் பற்றிய தொடர் இது.
பலரின் வாழ்வில் பார்வை ஒளி வீச காரணாமாய் வாழ்ந்து மறைந்தவர் டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம். இன்று திருச்சியில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமான விளங்கும் ஜோசப் கண் மருத்துவமனையின் நிறுவனர்.
கடந்த 1990ஜுலை 14ம் தேதி, கோவையில் பிறந்த இவர், சென்னை ராயபுரம் மெடிக்கல் ஸ்கூலில், டிப்ளமோ மெடிக்கல் பயிற்சி பெற்றார். அடுத்துத் திருப்பத்தூரில் உள்ள ஸ்வீடிஸ் மிஷினரி மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்த டாக்டர் பிரட்ரிக் குகல் என்பரிடம் பயிற்சி மருத்துவராக பணியாற்றியவர். சிலவருடங்களுக்குப் பிறகு அதே மருத்துவமனையை நிர்வகிக்கும் தலைமை பொறுப்புக்கு உயர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 1936ம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ந்தேதி, திருச்சி மேலப்புதூரில் கண்சிகிச்சைக்கென தனியாக ஜோசப் கண் மருத்துவமனை துவங்கினார்.
அதில் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரமான கண் பாதுகாப்புக் கொடுக்க இலவச சிகிச்சை அளித்து அவர்களுக்குக் கண்ணொளி கொடுக்க வழிசெய்தார். அதுமட்டுமல்லாமல் ரோட்டரி சங்கம், செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் மூலம் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் சென்று முகாம்கள் நடத்தி, கண் அறுவை சிகிச்சை செய்து பலர் பார்வை கிடைக்க உதவினார்.
திருச்சி மாவட்ட மக்கள் நல்வாழ்வு கழகத்தின் உதவியுடன் பார்வையற்றோர் மறுவாழ்விற்காக விழி இழந்தோர் பள்ளி ஒன்றை நிறுவி, இதன்மூலம் பார்வையற்றவர்களுக்குத் தொழில்கள் கற்றுக்கொடுக்க வழிவகைச் செய்தார்.
1952ம் ஆண்டு, டாக்டர் ஜோசப் ஞானாதிக்கமான இவரின் முயற்சியினால்தான், சென்னை மாநில கண்மருத்துவக்கழகமே அமைக்கப்பட்டது. மேலும் கடந்த 1966ம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பார்வை இழந்தோர் கைத்தொழில் மையத்தை உருவாக்கினார். அடுத்து 1975ல் பார்வையற்ற மகளிருக்காக தோட்டவேலை, தையல் உள்ளிட்ட கைத்தொழில் கற்றுக்கொள்ள வழிவகைச் செய்தார். இவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான பார்வையற்றோர் வாழ்வு பெற்றுள்ளனர்.
இந்திய மருத்துவக் கழகத்தின் மாநில துணை தலைவராகவும், திருச்சி கிளையின் தலைவராகவும், திருச்சி கிருஸ்தவர் இளைஞர் மன்றம், திருச்சி ரோட்டரி கிளப் போன்றவை துவங்கிட இவரே முக்கியக் காரணமாக விளங்கினார்.
கடந்த 1983 ஜனவரி 14 ம் நாள் வாழ்வை முடித்துக்கொண்ட இவரின் முயற்சியில் துவங்கப்பட்ட ஜோசப் கண் மருத்துவமனை மூலம், சுமார் 5 மில்லியனுக்கும் மேலான, மக்களுக்கு உதவியதுடன், 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்குக் அறுவை சிகிச்சை செய்துள்ளது. மேலும் இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்று, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மருத்துவ மேற்படிப்பு, கண் பரிசோதனை பயிற்சி மூலம் ஆண்டுக்கு சுமார் 10க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள், 20 கண் பயிற்சியாளர்களையும் உருவாக்கி வருகிறது. இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கும் ஜோசப் கண்மருத்துவமனையில் ஆணிவேர் டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம் அவர்களைப் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது என் திருச்சி வார இதழ். அடுத்த இதழில் திருச்சியின் அடையாளமாக விளங்கிய இன்னொரு ஆளுமையின் வரலாறு..