கோழியூரைப்பற்றி தெரியுமா?

0

முற்காலத்தில் சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் ஒருமுறை சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர்.
அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கியகோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்றுமறைந்தது.
அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான்.
பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும்போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத் தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார்.அதனாலேயே உறையூருக்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு.
பல யுகங்களுக்கு முன் பிரம்மா, இத்தலத்து சிவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை,செம்மை (சிவப்பு), கருமை, புகைமை(புகைநிறம்)ஆகியஐந்து நிறங்களைவெளிப்படுத்தினார்.
பொன்மை நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமை யிலிருந்து காற்றும். புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார்.
பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கி இங்கே உறைவதால் இந்த ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்“ என்று இவரைப் பற்றியே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக விளங்கிய உதங்க முனிவருக்கு காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்காலவழிபாட்டில் ஸ்படிக லிங்கமாக வும், மாலை வழிபாட்டில் பொன் லிங்க மாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்கு காட்சியளித்தார். இதனாலும் அவர் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்பட்டார். இதனால் அவரது மனம் அடங்கி அமைதியானது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.