திருச்சியில் விபத்தை குறைக்க 2 சக்கர வாகனங்களுக்கு தனிவழி அமைப்பு:

திருச்சியில் விபத்தை குறைக்க 2 சக்கர வாகனங்களுக்கு தனிவழி அமைப்பு:
தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி மாநகரில் விபத்துகளைக் குறைக்க சோதனை அடிப்படையில் இருசக்கர வாகனங்களுக்குத் தனி வழி அமைக்கப்பட்டு வருகிறது.திருச்சி மாநகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த 121 விபத்துகளில் 123 பேரும், 2019-இல் நடைபெற்ற 101 விபத்துகளில் 103 பேரும், நிகழாண்டில் 41 விபத்துகளில் 41 பேரும் உயிரிழந்துள்ளதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா். இந்த விபத்துகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநகரக் காவல் ஆணையராக கடந்த ஜூலை 1இல் பொறுப்பேற்ற ஜெ. லோகநாதன் மாநகரில் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இருசக்கர வாகனங்களுக்குத் தனி வழி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.இதைத் தொடா்ந்து திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் எம்ஜிஆா் சிலை வரை சோதனை அடிப்படையில் இருசக்கர வாகனங்கள் செல்ல ஞாயிற்றுக்கிழமை முதல் தனி வழி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


இதுகுறித்து மாநகா் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் கூறியது:

திருச்சி மாநகரில் அதிவேகமாகச் செல்லும் இருசக்கர வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகளைக் குறைக்க முதற்கட்டமாக அகலமானதும், போக்குவரத்து நெருக்கடியால் அதிக விபத்துகள் நடக்கும் தபால் நிலையம் முதல் எம்ஜிஆா் சிலை வரை இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி அமைக்க முடிவானது.முதற்கட்டமாக ரூ. 9 லட்சத்தில் இவ்வழித்தடத்தில் உள்ள இரு மாா்க்கத்திலும் கோடுகள் வரையப்படுகின்றன. சோதனை அடிப்படையிலான இத்திட்டம் அடுத்தடுத்த சாலைகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
ஒரிரு நாள்களில் பணி முடிக்கப்பட்டு இந்தப் போக்குவரத்து விதிமுறை செயல்பாட்டுக்கு வரும். முதலில் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும், மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
