தென்னகத்துத் தெரசா : அன்னை வீரம்மாள் பகுதி -2

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

0
1

தென்னகத்துத் தெரசா – அன்னை வீரம்மாள் பகுதி – 1 ஐ படித்துவிட்டுப் பலரும் வீரம்மாள் குறித்து அறியப்படாத பல செய்திகள் இடம் பெற்றிருப்பதைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். இதுதான் காதில் விழுந்த வரலாற்றின் தனித்துவமாகும். என்திருச்சி மின்இதழ் இப்படித்தான் வரலாற்றை எழுதவேண்டும் என்று ஒரு நோக்கத்தை வரையறுத்ததன் விளைவாகவே இப் பாராட்டுகள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றைப் படித்தல், வரலாற்றை எழுதுதல் என்பது வரலாற்றைப் புதுப்பிக்க உதவும் என்ற வரலாற்றியல் கோட்பாட்டின்படி என்திருச்சியின் இந்த முயற்சிக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தருவது என்திருச்சியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே எண்ணுகிறோம். வாருங்கள்… அன்னை வீரம்மாள் அவர்களின் நெடிய வரலாற்றின் 2ஆம் பகுதியான நிறைவு பகுதிக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

பெரியாரின் பேரன்பில்

இல்லறவாழ்வைத் துறந்து துறவம் பூண்ட வீரம்மாள் அண்ணன் வீரசாமியின் பாதுகாப்பில் இருந்துவந்தார். வே.வீராசாமி பெரியாரின் தொண்டர்களில் ஒருவர். வீரம்மாளுக்கு பகுத்தறிவுப் பிரச்சார இதழான விடுதலை, குடி-அரசு ஆகிய இதழ்களைப் படிக்கத் தூண்டினார். வீரம்மாள் இதழ்களைப் படித்தார். பெரியார் உரைகள், பகுத்தறிவுப் பாதைக்கு வழிகாட்டுவதாகவும், பெண் உரிமைக்காகப் போராடுவதாகவும், பெண் அடிமையை ஒழிப்பதாகவும் இருந்தன. திராவிடர் கழகத்தின் கொள்கைகள் வீரம்மாளை ஈர்த்தன. 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாளிலிருந்து சுயமரியாதை இயக்கத்தின் சீர்திருத்தவாதியாகி விட்டார். “சகோதரிகளே, சிந்தியுங்கள்” அறியாமையும், மூடநம்பிக்கைகளும்” என்ற தலைப்புகளில் சீர்திருத்தக் கட்டுரைகள் எழுதிக் குடி-அரசு இதழுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் “இல்லற வாழ்க்கைக்கு இன்றியமையாதவை” என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடும்படி தந்தை பெரியார்களை ஒரு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். இந்தக் கடிதம் பெரியார் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றுத் திருச்சிக்கு வரும்போது வீரம்மாளை நேரில் சந்திக்க விரும்புவதாக அவரிடமிருந்து பதில் கடிதமும் வந்தது.

2

சில நாள்களில் திருச்சி வந்த தந்தை பெரியார் அவர்கள் தென்னூரில் உள்ள திராவிடர் கழகத் தலைவர்களில் ஒருவரான பிரபல வழக்கறிஞர் திரு.டி.பி.வேதாச்சலம் வீட்டில் தங்கியிருந்தார். வீரம்மாளைச் சந்திக்க வரச் சொல்லித் தந்தை பெரியார் தகவல் அனுப்பினார். மகிழ்ச்சியோடு வீரம்மாள் தந்தை பெரியாரைச் சந்தித்து உரையாடினார். அவர் வீரம்மாளின் எதிர்காலத்திற்குப் பல ஆலோசனைகளையும் கூறினார். பின்னர்த் திருச்சியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வீரம்மாள் தன் 7 மாதக் குழந்தை வீரக்குமாருக்குப் பெயர் சூட்டப் பெரியாரிடம் கொடுத்தார். பெரியார் அக் குழந்தைக்கு ‘இளம்சேரலாதன்’ என்று பெயர்சூட்டினார்.

அறிஞர் அண்ணாவுக்கு மறுப்பு

1949இல் தந்தை பெரியார் தன்னைவிட 40 வயது குறைவுடைய மணியம்மையைப் பதிவு திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி நாளிதழ்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டன. பெரியாரின் திருமணத்திற்கான காரணங்களை அண்ணன் வீராசாமி மூலம் வீரம்மாள் அறிந்துகொண்டார். பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டது நியாயமாகவும் ஓர் இராஜதந்திரமாகவும் வீரம்மாளுக்கு மனதில் பட்டது. திராவிடநாடு இதழில் அண்ணா அவர்கள் ‘ரோமாபுரி சரிந்தது, ரோமாபுரி ராணிகளால் பகுத்தறிவுபுரி சரிந்தது மணியம்மையால்’ என்று எழுதியிருந்தார். ரோமாபுரி ராணிகளுக்கு ஒரு தமிழ்ப் பெண்மணி மணியம்மையாரை ஒப்பிட்டு அறிஞர் அண்ணா எழுதியிருந்ததை வீரம்மாள் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரியார் திருமணம் எப்படிப்பட்ட இராஜதந்திரம் என்பதை விளக்கி அண்ணா அவர்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றைப் பழங்குடி மகள் என்ற புனை பெயரில் வீரம்மாள் எழுதினார். அந்த நீண்ட கடிதம் விடுதலை நாளிதழில் இரண்டு முழுபக்கஅளவு வெளியிடப்பட்டிருந்தது. அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் ‘பதறிவிட்ட பழங்குடி மகளின் பார்வைக்கு’ என்ற தலைப்பில் வீரம்மாளின் கடிதத்திற்குப் பதில் எழுதி வெளியிட்டார்.

மாணவியர் விடுதி

இந்தக் காலக் கட்டத்தில், 6ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவியர் திருச்சி நகரத்தில் தங்கிப் படிக்க ஒரு விடுதியைத் தொடங்க எண்ணினார். இதற்குப் பெரியாரின் மனைவியின் பெயரில் “நாகம்மையார் மாணவிகள் விடுதி” என்று பெயர் வைக்கவும் வீரம்மாள் முடிவு செய்திருந்தார். இதற்காகப் பட்டியலினத்தில் கொஞ்சம் படித்திருந்த 7 பெண்களைக் கொண்ட ஒரு நிர்வாகக் கமிட்டியை அமைத்தார். விடுதி நடத்த அரசாங்க நிதி உதவி கிடைக்கும் வரை, கிராமங்களில் உள்ள தலைவர்களிடம் ஆதரவு திரட்டினார். ஒவ்வொரு கிராமமாகச் சென்று 5ஆம் வகுப்பு முடித்து 6 வகுப்பு செல்லும் மாணவியர்களின் பட்டியலைத் தயாரித்தார். வானொலி நிலையத்தில் கிடைக்கும் ஒருநாள் விடுமுறையையும் இந்த மாணவியர் விடுதி உருவாக்கத்திற்காகவே செலவு செய்தார். மாணவியர் விடுதி நடத்த வாடகை வீடும் பார்த்தாகி விட்டது. வீரம்மாளின் வீட்டில் 5 ஏழைப் பெண்கள் தங்கி உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகள் வீரம்மாளை வரவழைத்து “பட்டியலின மாணவியர்கள் தங்கிப் படிக்க என்று தமிழக அரசால் இந்த ஆண்டு விடுதி ஒன்று தொடங்கப்படவுள்ளது. நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் மாணவியர்களின் பட்டியலை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் விடுதியில் மாணவிகளைச் சேர்த்துக்கொள்கிறோம். நீங்களும் இந்த விடுதியில் ஒரு ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்து செயலாற்றுங்கள்“ என்ற செய்தி வீரம்மாளின் காதில் தேனாய்ப் பாய்ந்தது. மகிழ்ச்சி கொண்டு தமிழக அரசைப் பாராட்டினார்.

வீராசாமியின் பணி விலகல்

அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றி வந்த வீரசாமி அவர்கள் பணியிலிருந்து விலகினார். முழுநேரச் சமூகச் சேவையில் ஈடுபட்டார். “தொண்டு” என்ற மாதமிருமுறை சமூக இதழை நடத்திவந்தார். இந்த இதழுக்குத் திரு.பி.கருணாகரன் துணையாசிரியராக இருந்தார். தொண்டு இதழில் வீரம்மாள் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். ”இல்லற வாழ்க்கையில் கணவனின் கடமைகள், மனைவியின் கடமைகள், குழந்தை வளர்ப்பு, தாழ்த்தப்பட்ட பெண்கள் முன்னேற்றம், அறியாமை மூடநம்பிக்கைகள், பெண்ணுரிமை, பெண்கல்வி, பெண் சக்தி” போன்ற தலைப்புகளில் சீர்திருத்தக் கட்டுரைகளை எழுதினார். அண்ணனைப் பார்த்துத் தங்கையும் முழுநேரச் சேவையில் ஈடுபட எண்ணினார். அதற்கு வீரசாமி அனுமதிக்கவில்லை. வானொலியில் வேலை பார்த்துக்கொண்டே வீரம்மாள் சமூகசேவை செய்யலாம் என்று அறிவுரை வழங்கினார். அண்ணனின் அறிவுரை தங்கை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வீரம்மாள் சமூகச் சேவையில் ஈடுபட்டு வந்தார். இந்த ஈடுபாடுகளுக்குக் காரணம் தந்தை பெரியார். பிற்காலத்தில் பெரிய அளவில் சேவை செய்யவும் தந்தை பெரியாரே காரணம் என்று வீரம்மாள் குறிப்பிட்டுள்ளார்.

மணமுறிவு

வீரம்மாளின் துணைவர் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்துகொண்டிருந்தார். இதனைக் கேள்வியுற்று வந்த வீரம்மாளின் மாமியார்.‘தன் மகனை நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்து செய்தால்தான் அவன் அடிக்கடி வந்து உன்னைத் தொந்தரவு செய்யமாட்டான்” என்பதை வலியுறுத்தினார். இது தொடர்பாக அண்ணன் வீரசாமியிடம் கலந்துபேசினார். பெரியார் தொண்டர்களில் ஒருவரான வழக்கறிஞர் திரு.டி.பி.வேதாச்சலம் அவர்களிடம் விவாகரத்து கேஸ் எழுதிக் கொடுக்கப்பட்டது. இந்த முயற்சிகள் இல்லறத்துவறம் ஏற்ற மூன்றாண்டுகள் கழித்து அதாவது 1951இல் நடைபெற்றது. ‘திருமணம் ஆன சிறுவயது பெண் எப்படித் தனித்து வாழமுடியும்’ என்று நீதிமன்றத்தில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. விவாகரத்துக்காக முன்வைத்த காரணங்களின் அடிப்படையில் நீதிமன்றம் வீரம்மாள் கோரியிருந்து விவாகரத்தை ஏற்றுத் தீர்ப்பு வழங்கியது. பெண்கள் தனித்து வாழமுடியாத அந்தக் காலத்தில் மணமுறிவு பெற்ற வீரம்மாளின் மனவுறுதி இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்துவிட்ட பெண்ணினத்திற்கு வருமா? என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. கல்லானாலும் கணவன் என்று சொல்லப்பட்ட அந்தக் கோட்பாட்டை வீரம்மாள் உடைத்தெறிந்தார்.

பெரியார் ஊட்டிய உண(ர்)வு

திருச்சி வந்த பெரியார் வீரம்மாளை அழைத்துப் பேசினார். பல்வேறு சமூக நலன் சார்ந்த செய்திகள் உரையாடப்பட்டன. இறுதியில் பெரியார்,‘வக்கீல்…. டைவர்ஸ் ஆயிடுச்சி என்று சொன்னார். நீ இன்னொரு கல்யாணம் செய்துக்கோ’ என்றவுடன் வீரம்மாள் நான் இன்னொரு திருமணத்தைப் பற்றி நினைக்கவில்லை அய்யா என்று கதறி அழுதுவிட்டார். இந்த நிகழ்ச்சி திராவிடர் கழகச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்தவர்களின் அனைவரின் முன்னிலையில் நடந்தது. உணவு நேரத்தில் வீரம்மாளை உணவு உண்ண வீரம்மாளைப் பெரியார் அழைத்தார். வீரம்மாள் கோபத்தின் காரணமாக ‘சாப்பிட முடியாது’ என்றவுடன், ‘நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்’ என்று அய்யா பந்தியில் வீரம்மாளை அமரவைத்துச் சோற்றைக் குழந்தைக்கு ஊட்டிவிடுவதுபோல் வீரம்மாளுக்கு ஊட்டிவிட்டார். வீரம்மாள் மீது தந்தை பெரியார் வைத்திருந்த அன்பைக் கண்டு அனைவரும் வியந்து பாராட்டிப் பேசினர். தந்தை பெரியாரும் வீரம்மாளின் நெஞ்சுறுதியை நேரில் உணர்ந்து வியந்தார் என்றே சொல்லவேண்டும்.

சங்கம் கட்டும் முயற்சி

1954-இல் குளித்தலையை அடுத்துள்ள திம்மாச்சிபுரம் திரு.மகாமுனி அவர்களின் மகள் காமாட்சிக்குப் பள்ளி இறுதித் தேர்வு முடித்தவுடன் திருச்சி தொலைபேசி நிர்வாக அலுவலகத்தில் வேலை கிடைத்தது. காமாட்சி அவர்கள் வீரம்மாள் வீட்டிலிருந்தே வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். வீரம்மாளின் சிந்தனையோட்டத்திற்கு ஆதரவாகவும் ஒத்தநிலையில் காமாட்சியின் சிந்தனைகளும் அமைந்திருந்தன. இதன் அடிப்படையில் “தமிழ்நாடு ஷெடியூல்டு வகுப்பு பெண்கள் நலச் சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான அமைப்புக் கூட்டத்தையும் நடத்த வீரம்மாள் தீர்மானித்தார். இதைக் கேள்வியுள்ள வீரம்மாளின் அண்ணன் இலட்சுமணன் எழுதிய கடிதத்தில்,‘‘ஆண்கள் நாங்கள் சேர்ந்து ‘திருச்சி ஜில்லா தாழ்த்தப்பட்டோர் நலச் சங்கம்’ அமைத்தோம். எங்களாலேயே அதைச் சரியாக நடத்தமுடியவில்லை. பெண்ணான உன்னால் ஒரு சங்கத்தை நடத்தமுடியுமா? நடத்தினால் அதன் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளமுடியாது என்பதால் சங்கம் ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் செய்திகள் அனைத்தும் வீரம்மாளின் மனஉறுதிக்கு முன் தோற்றுப்போய் ஓடி மறைந்துக்கொண்டன என்பதை வருங்காலம் அவற்றை உறுதி செய்தன என்பதே உண்மையாக இருந்தது.

சங்கம் தொடக்கம்

1954ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு உறையூர் வார்னர்ஸ் பங்களாவாகிய ருக்மணி கருணாகரன் அவர்களுடைய இல்லத்தில் சங்கத்தின் அமைப்புக் கூட்டம் வை.நீலாம்பாள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஷெட்யூல்டு வகுப்பு பெண்கள் நலச் சங்கம் என்ற பெயரில் சங்கம் தொடங்கப்பட்டது. அதன் தலைவராகத் திருமதி தனம் சிவஞானம், செயலாளராகத் திருமதி வீரம்மாள், பொருளாளராக எஸ்.முத்துமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் தொடக்கவிழா அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மலையப்பன் தலைமையில் நடைபெற்றது. அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் முன்னிலையில், மத்திய அரசின் உதவி சுகாதார அமைச்சர் திருமதி மரகதம் சந்திரசேகர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றிவைத்துச் சங்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இவ்விழாவில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், நாடாளுமன்ற உறுப்பினர் வீராசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சங்கம் பதிவு பெற்றது

1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் பதிவு அலுவலகத்தில் சொசைட்டி ஆக்ட்-இன் அடிப்படையில் சங்கம் பதிவு செய்யப்பட்டது. சங்கத்தின் நோக்கமும் திட்டங்களும் வெளியிடப்பட்டன. பெண் கல்வி, குழந்தைகள் நலம், தீண்டாமை ஒழிப்பு, இலவச முதியோர் கல்வி வகுப்பு நடத்துதல், சத்துணவு மையம் நடத்துதல், பெண்களுக்கான கைத்தொழில் நிலையங்களை அமைத்தல், அனாதை குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லம் முதலியன நடத்துதல் ஆகியன குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்சியின் புகழ்பெற்ற மருத்துவர், சிறந்த சமூகச் சேவையாளருமான டாக்டர் ஆர்.சாம்பசிவம் ஐயர் அவர்கள் சங்கத்தின் ஆலோசகராக இருந்து உதவிகள் பல செய்துவந்தார். சத்தியம், நேர்மை, நாணயம், அன்பு, அஹிம்சை, ஈவிரக்கம், நல்லொழுக்கம், அடக்கம், கடுமையான உழைப்பு ஆகிய நவரத்தினங்கள் போன்ற விலைமதிக்க முடியாத சொத்துகளை மூலதனமாகக் கொண்டு சங்கத்தைத் தோற்றுவித்து நடத்திக் கொண்டிருந்தார். தான் வாழ்ந்துகொண்டிருந்த பீமநகரையொட்டி இருந்த மார்சிங்பேட்டையில் இருந்த நகரச் சுத்தித் தொழிலாளர், (தற்போது தூய்மைப் பணியாளர்கள்) பெண்கள் மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு எனச் சுமார் 16 ஆண்டுகள் கௌரவ ஆசிரியராக வீரம்மாள் பணியாற்றினார். சங்கத்தின் நோக்கங்களைக் கிராமப்புறங்களில் பரப்பி வந்தார். வானொலி பணிக்கு இடையூறு இல்லாமல் இந்த அறப்பணியைச் செய்துவந்தார்.

முதலமைச்சர் முன் வீரஉரை

1958ஆம் ஆண்டில் திருச்சியில் “பெண்கள் பாதுகாப்பு இல்லம்” என்ற ஒன்று தொடங்கப்பட்டது. ஒழுக்கம் தவறி நடக்கும் பெண்களையும், சாலைகளில் விருப்பம்போல் திரியும் பெண்களையும், காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தித் தண்டனை வழங்கப்பட்ட பின் மேற்படி இந்த இல்லத்தில் சில ஆண்டுகள் தங்க வைத்துப் பிறகு விடுதலை செய்வார்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் மலையப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் பக்தவச்சலம் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வீரம்மாள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அரசியல்வாதிகளைப் போல் வீரம்மாள் காரசாரமாகப் பேசாவிட்டாலும், மக்களுக்கு வேண்டிய கருத்துகளை எடுத்துரைப்பதில் ஆணித்தரமாக – புரட்சிகரமாக நன்றாகவே பேசினார் என்பதை அப்போதைய நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன.

வாசிக்க நூல் நிலையம்

1956ஆம் ஆண்டில் “அவ்வை நூல்நிலையம் என்ற பெயரில் பெண்கள், குழந்தைகளுக்கான ஒரு இலவச நூல் நிலையம் – வாசகசாலையை வீரம்மாள் ஏற்படுத்தினார். அந்த வாசகசாலைக்குத் தமிழ்நாட்டில் வெளிவரும் அத்தனை இதழ்களும் வரவழைக்கப்பட்டன. இது தவிர இலவச நூல் நிலையத்திற்காக, அன்பளிப்பாக இலவசமாகப் புத்தகங்கள் கட்டுக்கட்டாகப் பார்சலில் வந்த வண்ணமிருந்தன. இந்த வகையில் சுமார் 4000 புத்தகங்கள் நூல் நிலையத்தை அலங்கரித்தன என்றால் வீரம்மாளின் முயற்சி எத்துணை உயர்வுடையது என்பதை எண்ணிப்பார்க்கும்போது வியப்புதான் மேலிடுகின்றது.

சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பிற பணிகள்

 1. இரவுப் பள்ளி (முதியோர் கல்வி வகுப்பு)
 2. குழந்தைகள் பொழுதுபோக்கு மன்றம்
 3. கைக்குத்தல் அரிசி மையம்
 4. இலவசக் குழந்தைகள் காப்பகம் (6யூனிட் – 150 குழந்தைகள்)
 5. கறவை மாடு வழங்கும் யூனிட்
 6. குழந்தைகளுக்குச் சத்துணவு மையம்
 7. சிறிய மருத்துவமனை
 8. பணிபுரியும் பெண்கள் விடுதி
 9. இலவச முதியோர் இல்லம்
 10. அம்பர் சர்க்கா யூனிட்
 11. அகர் பத்தி யூனிட்
 12. உடல் ஊனமுற்ற குழந்தைகள் இல்லாம்

தாயும் நோயும்

ஓயாத உழைப்பின் காரணமாக வீரம்மாளின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. வானொலி நிலைய வேலையோடு சங்கப் பணிகளுக்கு என்ற வீரம்மாள் கடுமையாக உழைத்தார். நாள்தோறும் நள்ளிரவு 12 மணிக்குத் தூங்கப் படுக்கைக்குப் போவதும் அதிகாலை சுமார் வானொலி நிலைய வேலையோடு சங்கப் பணிகளுக்கு என்ற வீரம்மாள் கடுமையாக உழைத்தார். நாள்தோறும் நள்ளிரவு 12 மணிக்குத் தூங்கப் படுக்கைக்குப் போவதும் அதிகாலை சுமார் 4மணிக்கே விழித்து எழுந்துவிடுவதும் அவரின் வாடிக்கையாகிவிட்டது. கடுமையான இருமல், கபம், நெஞ்சுவலி என உடல் நலம் குறையத் தொடங்கியது. சில சமயம் திரும்பிப் படுக்கக்கூடச் சக்தி இருக்காது. பிறகு பிராங்க்கோ கிராம் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்துக் கிரானிக் பிராங்க்கைட்டீஸ் நோய் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார்கள். கோடை காலத்தில் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒருமாதம் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்வார். இந்நிலையிலும் சங்கத்தின் கணக்கு வழக்குகளை எழுதிக்கொண்டே இருப்பார். வீரம்மாள் தனக்கு வந்தது நோயாக அவர் நினைக்கவில்லை. எதிர்த்து நின்று தன் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அந்த அளவுக்கு மனபலம் மிக்கவராக வீரம்மாள் இருந்தார்.

தையல், தட்டச்சுப் பயிற்சி

பெண்களுக்காகத் தையல் பயிற்சி நிலையம் தொடங்க வீரம்மாள் தனக்குத் துணையாகச் செல்வி காமாட்சியை அழைத்துக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் சென்று தையல் எந்திரத்தை நன்கொடையாகப் பெற்றார். மொத்தம் 7 தையல் எந்திரங்களைக் கொண்டு இலவசத் தையல் நிலையம் தொடங்கியது. பின்னர் 10 தையல் எந்திரங்களாக உயர்ந்தது. டெல்லியில் உள்ள Indo German Social Service Society-யிலிருந்து 5 தையல் எந்திரம், 5 தட்டச்சுப் பொறிகள் வாங்கிக் கொள்ள ரூ.25,000/- நன்கொடையாகக் கிடைத்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வசந்த நகரில் 2 வாடகை வீட்டில் சங்கத்தின் சார்பில் தையல் வகுப்பும் , இலவசத் தட்டச்சு நிலையமும் தொடங்கப்பெற்றன. தட்டச்சுப் பயிற்சி நிலையத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, அக்கவுண்ட்டன்சி ஆகிய மூன்றையும் சேர்த்து Secretrial Course-ஐ தொடங்கி இலவசமாகவே நடத்தி வந்தார். மத்தியச் சமூகநல வாரிய மான்ய உதவி நிதியைக் கொண்டு தங்கும் விடுதி, உணவு, தட்டச்சுப் பயிற்சி முதலியன இலவசமாகவே அளித்து வந்தார்.

தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கம்

1970ஆம் ஆண்டு “தமிழ்நாடு ஷெட்யூல்டு வகுப்புப் பெண்கள் நலச் சங்கம்” என்ற நடைபெற்று வந்த சங்கத்தின் பெயரில் இருந்த ஷெட்யூல்டு வகுப்பு என்ற இரு வார்த்தைகள் நீக்கப்பட்டு “தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கம்” என்று மாற்றியமைக்கப்பட்டது. இதனால் சாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாமல் எல்லாப் பெண்களும் பயன்பெறும் வகையில் புதிய சங்கத்தின் பெயர் மீண்டும் பதிவு செய்யப்பட்டது. இது வீரம்மாளின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். வீரம்மாளின் விசாலப் பார்வை விரிந்து எல்லாச் சமூகத்தின் பெண்களுக்கான வீராங்கனையாக விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் கொண்டு உயர்ந்து நின்றார்.

அரசியல் தேவையில்லை

வீரம்மாளின் சமூகச் சேவைக் கண்டு திருச்சி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வை.சாமிநாதன் அவர்கள் அம்மாவை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். அம்மா அரசியல் இயக்கத்தில் இணைவதில் சாத்தியமில்லை. நான் ஓர் அரசு ஊழியர் என்பதால் உங்களின் கோரிக்கை ஏற்கமுடியாது மன்னிக்கவேண்டும் என்று மடல் எழுதித் தெரிவித்துவிட்டார்.

பெட்டிச் செய்தி – வீரம்மாள் வகித்த பிற பொறுப்புகள்

 1. திருச்சி ஜுவனைல் கோர்ட்டு முதல் வகுப்பு கௌரவ மாஜிஸ்திரேட்
 2. முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் துணைத் தலைவர்
 3. திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை
 4. பாரதச் சேவக் சமாஜம்
 5. கில்டு ஆஃப் சர்வீஸ்
 6. செஞ்சிலுவை சங்கம்
 7. குழந்தைகள் நலக் கவுன்சில்
 8. சர்வோதயச் சங்கம்
 9. காந்திஜி பீஸ் பவுண்டேஷன்
 10. கள விளம்பரச் செய்தித் தொடர்பு மன்றம்
 11. குடும்பக் கட்டுப்பாடு மன்றம்
 12. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம்
 13. பெண்கள் பாதுகாப்பு இல்லம்

ஆகிய நிறுவனங்களில் ஆலோசனைக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் வீரம்மாளை அரசு நியமனம் செய்து சிறப்பித்தது.

தாய் நடத்திய கலப்பு மணம்

தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த மருத்துவர் சாம்பசிவம் இறந்துபோனார். இறக்கும் தறுவாயில் அவர்,“ நான் இன்னும் சில நிமிடங்கள்தான் உங்களுடன் பேசிக்கொண்டிருப்பேன்” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,“யாரும் அழாதிங்க, பணித்தாய் வீரம்மாள்… சின்ன டாக்டர் சேகரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி இறந்துவிட்டார். அன்று முதல் டாக்டர் சேகர் வீரம்மாளின் மூத்த மகனாக மாறினார். வீரம்மாளுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய நோய்களுக்கு ஏற்ற மருந்துகளை அளித்துத் தன் தாயைப் போலச் சேகர் கவனித்து வந்தார்.

டாக்டர் சேருக்கு விரைவில் திருமண ஏற்பாடுகளை வீரம்மாள் செய்துவந்தார். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் Staff Nurse-ஆகப் பணியாற்றி வந்த காமாட்சியின் தங்கை செல்வி காந்தாமணியைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இது ஒரு கலப்பு திருமணம். சேகர் பிராமணர், காந்தாமணி பட்டியலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் சேகரும் காந்தாமணியும் ஏற்றுக்கொண்டனர் என்பதுதான் மிகப்பெரிய சிறப்பு என்றால் மிகையில்லை. மக்களிடையே நிலவிவரும் சாதி வெறி மனப்பான்மை நீங்க இந்தத் திருமணத்தை எல்லோருக்கும் எடுத்துக்காட்டான ஒரு கலப்பு திருமணமாக நடத்திக் காட்ட வேண்டுமென வீரம்மாள் முடிவு செய்தார். 1968ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ஆம் நாள் மருத்துவர் சேகருக்கும் செவிலியர் காந்தாமணிக்கும் திருமிகு கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அவர்கள் தலைமையில் திருச்சி வாசவி மஹாலில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் காய்கறி மாலை

மணமக்கள் மாலைக்குப் பதில் காய்கறிகள் அடங்கிய மாலையை மாற்றிக் கொண்டார்கள். கையில் பிடித்துக்கொள்ளப் பூச்செண்டுக்குப் பதிலாகக் காலிஃபிளவரை அலங்காரம் செய்து கொடுக்கப்பட்டது. திருமண விழாவில் தேசியத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் மனைவி, சர்வோதயத் தலைவர் ஜகந்நாதன், விடுதலைப் போராட்டத் தியாகி அருணாசலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, தொண்டு வீராசாமி, முத்தமிழ்க்காவலக் கி.ஆ.பெ.விஸ்வநாதம், ஆட்சியர் மலையப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எல்லாருடைய உரையும் சமுதாயத்தில் கலப்பு திருமணங்கள் நடைபெறவேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினர். இதன் மூலம் வீரம்மாளின் எண்ணம் நிறைவேறியது. மக்கள் மனதில் கலப்பு மணங்களின் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதைத் தலைவர்களின் உரைகளின் வழியாக மக்கள் மத்தியில் புதியதோர் எழுச்சியை ஏற்படுத்தினார். இந்தப் புரட்சிகரமான கலப்புத் திருமணத்தைப் பற்றி அனைத்துத் தினசரி இதழ்களும் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டு வீரம்மாளுக்குப் பெருமை சேர்த்தன.

அன்னை ஆசிரமம் – ஆலமரம்

1975இல் அகில இந்திய மாதர் மகாசபையின் தலைவராக இருந்த திருமதி சரோஜினி வரதப்பன் அவர்கள் வீரம்மாளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “உங்கள் தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஏன் ‘திக்கற்ற குழந்தைகள் இல்லம்’ என்ற ஒன்றை நடத்தக்கூடாது? இதற்காக இப்போது மத்திய அரசு நிதி நல்கை அளித்து வருகிறது. முதலில் 25 குழந்தைகளைக் கொண்டு ஒரு காட்டேஜ் துவங்க முயற்சி செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 25 குழந்தைகளுடன் 1976 ஜூன் மாதம் 2ஆம் தேதி  திக்கற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை ஆரம்பித்தார். அகில இந்திய வானொலி புகழ் கலைஞர் திரு.டி.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் “அன்னை ஆசிரமம்” தொடங்கி வைக்கப்பட்டது. 25 குழந்தைகள் வரிசையாக அமர்ந்து உணவு உண்ணும் காட்சியைக் கண்டு வீரம்மாள் ஆனந்தக் கடலில் மூழ்கினார்.

திக்கற்ற குழந்தைகளின் அன்னை

அரசு மானியம் உடனே கிடைக்கவில்லை. வீரம்மாள் தொடர்ந்து முயற்சிகளைச் செய்துவந்தார். தன் சம்பளத்தில் பாதியைக் குழந்தைகள் நலனுக்குக் கொடுத்து உதவினார். இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் 1978இல்தான் திக்கற்ற குழந்தைகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி தொடர்ந்து கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 1979 ஜூன் மாதம் முதல் தேதி 2ஆவது காட்டேஜ் துவக்கப் பெற்றது. அடுத்து 6 காட்டேஜ் 150 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டன. அன்னை ஆசிரமம் குழந்தைகளின் சிரிப்புகளால் பூத்துக் குலுங்கியது. ஆசிரமத்தில் இருந்த அத்தனைக் குழந்தைகளுக்கும் வீரம்மாள் அன்னையாகப் புதிய அவதாரம் எடுத்துச் சாதனை படைத்தார்.

பொன்விழாவும் வெள்ளிவிழாவும்

சங்கத்தைத் தொடங்கிய வீரம்மாளுக்கு 50 வயது நிறைந்து பொன்விழா. சங்கத்திற்கு 25 ஆண்டுகள் நிறைந்து வெள்ளிவிழா. இந்நிலையில் திக்கற்ற குழந்தைகள் இல்லத்திற்குக் கட்டிடம் கட்டுவதற்காக நிதி உதவி கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் சங்கத்திற்குச் சொந்தமாக நிலம் இருக்கவேண்டும். நிலம் வாங்குவதற்கு அரசின் நிதி உதவி கிடையாது. இதைத் தொடர்ந்து புறம்போக்கு நிலங்களைத் தேடி வீரம்மாளும் காமாட்சியும் பல மாதங்கள் அலைந்து தோல்வியைச் சந்தித்தனர். பிறகு விமான நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு பூமிதான வாரியத்திற்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்றனர். இதில் அன்றைய பூமிதான இயக்கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவர் சுவாமி வித்யானந்த சரஸ்வதி அவர்களின் பங்கு மகத்தானது. 1979ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத் தினத்தன்று அன்றைய தமிழ்நாடு ஆளுநர் மேதகு பிரபுதாஸ்பட்வாரி அவர்களால் சங்கத்திற்கு நிலப் பட்டா வழங்கப்பட்டது.

கோபால்தாஸ் கொடை

கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திரு ஹஸ்முக்லால்ஜி அவர்கள் மூலமாக ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. அரும்பாவூர் பெரிய நாட்டார் திரு முத்து வெங்கடாஜல ரெட்டியார் அவர்கள் தந்த ரூ.30ஆயிரம் மற்றும் பொதுமக்களின் நன்கொடையைக் கொண்டும், வெள்ளிவிழா மலர் விளம்பரங்கள் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டும் சங்கத்தின் வெள்ளிவிழா கட்டடம் முடிக்கப் பெற்றது. வெள்ளிவிழா கட்டடத்தில் அச்சகமும் தொடங்கப்பட்டது. வெள்ளிவிழா கட்டடத்திற்கு “GOPALDAS JEWELLERS BLOCK“ என்ற பெயர் சூட்டப்பட்டது. வெள்ளிவிழா கட்டடங்களைத் திறந்து வைக்கத் தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கோமதி சீனிவாசன் வருகை தந்து சிறப்பித்தார். ஆசிரம வளாகத்தில் ஒரு சிறிய சுகாதார நிலையத்தைத் திருச்சிராப்பள்ளி மெயின் ரோட்டரி கிளப் வழங்கிய 6ஆயிரம் ரூபாய் நன்கொடையைக் கொண்டும், அதன் தலைவர் எஸ்.பி.சுவாமி அவர்களின் நன்கொடை ரூ.10ஆயிரம் கொண்டும் அவர்களே கட்டிக் கொடுத்தார்கள். மத்திய அரசின் நிதி உதவியுடன் சுமார் ரூ.18 இலட்சம் செலவில் பணிபுரியும் மகளிர் விடுதி 1988இல் கட்டப்பட்டது.

பெட்டிச் செய்தி – அன்னையின் உயில் (1981)

நான் கடந்த 34 ஆண்டுகளாகச் சமூகச் சேவையில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். எனக்கு இப்போது 57 வயதாகிறது. நான் உயிருடன் இருக்கும்போதே என்னைப் பொறுத்தும் என் உடலைப் பற்றியும் என்ன செய்யவேண்டும் என்பதை எழுதி வைத்து, அதன்படி நடக்கவேண்டும என்று, இந்த உயிலை நான் எழுதிவைக்கிறேன்.

நான் இறந்தபிறகு என் மகன், மகள் உறவினர்கள் யாரும் எந்தவிதத் தடங்கலும் மாற்றுக் கருத்தும் கூறாமல் என் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும். நான் இறந்தவுடன் என் அருகில் இருக்கும் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் சிறிதும் தாமதம் செய்யாமல் உடனடியாகத் திருச்சி ஜோக் கண் ஆஸ்பத்திரிக்குத் தெரிவித்து என் கண்களைத் தானமாக வழங்கவேண்டும். உடலைத் தஞ்சாவூர் மருத்துவமனை உடற்கூறுப் பிரிவுக்குத் தானமாக வழங்கிடவேண்டும். என் உடலில் உள்ள தோல், தசை, நரம்புகள் முதலியன இனிப் பயன்படாது எனக் கருதி அழிக்கும்போது, அன்னை ஆசிரமம் பொறுப்பாளர்கள் அந்த உறுப்புகளை வாங்கிப் பழம் தரும் மரங்களுக்கு உரமாக இட்டு மூடிவிடவேண்டும்.

அன்னையின் மணிவிழா

அன்னைக்கு 60 வயது நிறைவடைந்தது. மணிவிழா காலம் அது. அந்த விழாக் காலத்தில்தான் வீரம்மாள் தான் பணியாற்றிய அகில இந்திய வானொலிப் பணியிலிருந்து 1984ஆம் ஆண்டு மேத் திங்களில் ஓய்வு பெற்றார். அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக 40 ஆண்டுகள் பணியை நிறைவு செய்து, சமூகப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அன்னைக்கு வானொலி நிலையம் சார்பில் விடைபெறுவிழா 23.06.1984இல் நடத்தப்பட்டது. நிகழ்வுக்குத் தலைமை வகித்த நிலைய இயக்குநர் திரு.சுப்பிரமணி அவர்கள் “வீரம்மாள் பணி ஓய்வு என்பது வானொலிக்குப் பெரிய இழப்பு” என்று புகழாரம் சூட்டினார். வானொலி நிலையம் சார்பில் பணியில் 40 வருடங்கள், சேவையில் 30 வருடங்கள் என்பதைப் பாராட்டி “வீரம்மாள் தென்னாட்டு தெரசா” என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அன்னையை அவர் உருவாக்கிய ஆசிரமத்திற்கு அழைத்து வந்தனர். குழந்தைகள் அன்னையின் மீது பூமாரி பொழிந்து வரவேற்றனர். மாலை தமிழ்நாடு பெண்கள் நலச் சங்கத்தின் சார்பிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

அன்னையின் மணிவிழாவை முன்னிட்டு 10 ஜோடி ஏழைகளுக்கு முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் அன்றைய தமிழக அமைச்சர் திரு.சௌந்தரராசன் முன்னிலையில் இலவசத் திருமணத்தைச் சங்கம் நடத்தியது. அதில் 8 ஜோடிகளக்குக் கலப்புத் திருமணம்.

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்கம்

அன்னை உருவாக்கிய தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்ற பிள்ளைகள் உயர்நிலை கல்விக்கு வெகுதூரம் செல்லவேண்டியிருந்தது. இந்நிலையைப் போக்க அன்னை 6ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையுள்ள அன்னை மகளிர் உயர்நிலை பள்ளியை 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கினார். திரு. பி.கருணாகரன் அவர்கள் அனைத்து ஆரம்ப வேலைகளையும் செய்து கொடுத்தார். அலுவலராகவும் அரும்பணியாற்றினார். பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்கும்வரை ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் ஊதியம் இல்லாமல் இலவசமாகப் பணிபுரிந்தனர். 1990-91ஆம் கல்வியாண்டிலிருந்து அப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. மேல்நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் கிடைத்தும் ஆசிரியர்களுக்கான அரசின் நிதியுதவி இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை. சங்க நிர்வாகம் வெகு சிரமத்துடன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கி வருகின்றது.

சத்யபாமாவின் சங்கமம்

1978ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தின் இயக்குநராகச் செல்வி சத்யபாமா அவர்கள் பதவி வகித்து வந்தார். அவர் வீரம்மாளின் சமூகச் சேவையை அறிந்து, பெண்கள் நலச் சங்கத்தில் ரூ.50/- செலுத்தி உறுப்பினராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டார். பிறகு சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராகவும் இணைத்துக் கொண்டார். சத்யபாமா அவர்கள் தமிழ்நாட்டின் பல சேவை நிறுவனங்களில் கௌரவப் பொறுப்புகளில் இருந்து வந்தார். அனைத்துப் பொறுப்புகளையும் இராஜினாமா செய்துவிட்டு 1986ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் பெண்கள் நலச் சங்கத்தில் சங்கமானார். ஏற்கனவே 10ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியவர் ஒரு இலட்ச ரூபாயை மேலும் நன்கொடையாக வழங்கினார். இத் தொகையைக் கொண்டு ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. சங்கத்தின் கௌரவப் பொருளாளராகவும் திட்ட இயக்குநராகவும் அவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியதாகும். புதுப்புதுக் கட்டங்களின் வேகமான வளர்ச்சிக்கும், கட்டாந்தரையைக் கனி தரும் மரங்களுடன் சோலைவனமாக்கிய பெருமை சத்யபாமா அவர்களையே சாரும். அவர் பயன்படுத்தி வந்த காரைச் சங்கத்திற்குத் தானமாகவும் அளித்துவிட்டார். 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் நெதர்லாந்து நாட்டிலுள்ள ‘டெரெடஸ் ஹோம்ஸ்’ என்ற நிறுவனத்திலிருந்து கிடைத்த நன்கொடைத் தொகை 13 இலட்சத்துடன் மேற்கொண்டு 3 இலட்சம் ரூபாய் செலவு செய்து அன்னை ஆசிரமக் குழந்தைகளுக்கான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

அன்னையின் மறைவு

அன்னையின் 80 ஆவது ஆண்டு நிறைவு விழா முத்து விழாவாகவும், சங்கத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பொன்விழாவாகவும் 2005இல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தன் உடல் நலத்தைப் பற்றி கவலை கொள்ளாது ஓயாது உழைத்த அன்னை அவர்கள் தனது 82ஆவது வயதில் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 24ஆம் நாள் சூரியன் விழித்த காலைப் பொழுதில் தான் தொடங்கிய அனைத்தும் சீரும்சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து மனநிறைவுடன் இயற்கை எய்தினார்.

அவர் உயிலில் தெரிவித்த வண்ணம் அவரின் விழிகள் ஜோசப் கண் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது. உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது. சமூகத்தில் விலக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் எனக் குழந்தைகளுக்குப் பெண்களுக்குக் காவல் அரணாக இருந்த வீரம்மாள் ஆசிரமத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மரணம் என்பது மூச்சுவிட மறப்பது அல்ல. நினைவிலிருந்து மறைந்து போவதுதான். மரணம் பலரைக் கொல்லும், சிலர் மரணத்தை வென்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உத்தமர் காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்னை தெரசா போன்றவர்கள் தங்களின் தியாக வாழ்வால் சமூகத்தில் இன்றும் உயிர்ப்போடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் அன்னை வீரம்மாளும் இணைந்து இன்றும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லா உண்மையாகும்.

அன்னையின் இருபிள்ளைகள்

அன்னையின் மகள் திராவிடமணி என்னும் சுப.செல்வம் அவர்கள் பட்டங்கள் பல பெற்று, 1977ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகப் பணியில் இணைந்தார். 2004ஆம் ஆண்டு பணிநிறைவு பெற்று, அன்னை ஆசிரமம் அருகில் அன்னையின் நினைவுகளோடும், அவர்தம் ஆசியோடும் நலமுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் அன்னை படித்த புனிதச் சிலுவைக் கல்லூரியில்தான் தன் பட்டப்படிப்பை முடித்தவர். புனிதச் சிலுவைக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். மகன் வீரக்குமார் (எ) இளம்சேரலாதன் பொறியியல் பட்டதாரி. இவர் படித்த கோவைப் பொறியியல் கல்லூரியின் முதல் மாணவனாகச் சிறப்பு பெற்றவர். பின்னர்ச் சென்னை கிண்டி டெலிபிரிண்டர் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியில் இருந்து வந்தார். 2008ஆம் ஆண்டு பணி நிறைவு செய்தார். பின்னர் உடல்நலக்குறைவின் காரணமாக 2013இல் காலமானார். புகழால் உயர்ந்து நின்ற அன்னையின் இரு பிள்ளைகளும் கல்வியிலும் வாழ்விலும் உயர்ந்து, சிறந்து இருந்தமை அன்னையின் புகழுக்கு ஒளி சேர்ப்பதாகவே அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.

அன்னையின் நூற்றாண்டு

அன்னை மறைந்து தற்போது 14 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. அன்னையின் வயது தற்போது 96 நிறைவு பெற்றுள்ளது. அன்னையின் நூற்றாண்டு விழாவுக்கு இன்னும் 4 ஆண்டுகளே உள்ளன. அன்னையின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட ஆசிரமம் இப்போதே ஆயத்தமாகி வருகிறது. அன்னையின் சேவையை உலகறிய விரைவில் இணையத் தளம் தொடங்கப்படவுள்ள செய்திகள் காதில் விழுந்து தேனாக இனிக்கின்றது. பலர் வரலாற்றில் வாழ்கிறார்கள். சிலர் வரலாறாகவே வாழ்கிறார்கள். அன்னையின் வரலாறு ஏழைகளுக்கான மகத்தான வரலாறு. அன்னையின் நூற்றாண்டு விழாவில் உலகின் உயரிய பரிசான ‘நோபல் பரிசு’ சேவை ஒன்றையே தன் வாழ்வாகக் கொண்டு வாழ்ந்த அன்னை வீரம்மாளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற குரலை என்திருச்சி உலகத்தின் செவிகளுக்கு உரக்கச் சொல்லும். அதுவே அன்னைக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம் ஆகும். அன்னையின் புகழ் அகிலம் முழுவதும் பரவவேண்டும் என்ற முயற்சியோடு இயங்கிவரும் ஆசிரம நிர்வாகிகளை நெஞ்சார வாழ்த்துவோம். அன்னையை வணங்குவோம். அவரின் சேவை மனப்பான்மையை நெஞ்சில் நிறுத்துவோம்.

(இக் கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய மருத்துவர் கோமதி இராஜேந்திரன், ஆசிரமக் கண்காணிப்பாளர் உமா, எழுத்தாளர் பூங்குழலி, திருமதி அனுராதா கோராநிதி, திருமதி தி.சு.வேலாம்பிகை ஆகியோருக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்)

-ஆசைத்தம்பி                                                                                                                                                                                                              

 

3

Leave A Reply

Your email address will not be published.