காசாளர் இல்லாத கடை முன்னாள் மாணவர்களின் புதுமையான முயற்சி
பத்து ரூபாய்க்கு காலை உணவு அளிக்கும் திருச்சி கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் செயலானது திருச்சி பொது மக்களால் பாராட்டப்படுகிறது. இதுகுறித்து கேம்பியன் பள்ளியின் முன்னாள் மாணவர் தாமஸ் ஞானராஜிடம் பேசுகையில், கரோனா பேரிடர் காலங்களில் ஏழை, எளியோருக்கு உணவளிக்க முடிவு செய்தோம். அவ்வாறு செயல்பட்ட நாங்கள் 150 நாட்களை கடந்து தொடர்ந்து 300 நபர்களுக்கு சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.
தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் வறியவர்களும் வயிறார சாப்பிட 10ரூபாய் காலை உணவு திட்டத்தை துவங்கி இருக்கின்றோம். 1992 ஆம் ஆண்டு கேம்பியன் பள்ளியில் படித்த வகுப்புத் தோழர்கள் ஒன்பது நபர்களுடன் நண்பா சாரிட்டபிள் டிரஸ்ட்டினை செயல்படுத்தி வருகிறோம்.

நண்பா சாரிட்டபிள் டிரஸ்ட்டில் தாமஸ் ஞானராஜ், மோகன் லாரன்ஸ், மருத்துவர் செந்தில் குமார், சொக்கலிங்கம், சரவணன்,சிவராமன், ராஜாசங்கர், செல்லா ராமசாமி உள்ளிட்ட பள்ளி வகுப்பு தோழர்களுடன் இணைந்து செயல்படுகிறோம். காசாளர் இல்லாத கடையாகத்தான் நடத்துகின்றோம்.
சாப்பிட வருபவர்கள் நன்கொடையாக பத்து ரூபாயை உண்டியலில் செலுத்தி விட்டு சாப்பிடலாம்.
நல்லவிதமாக இத்திட்டம் செயல்பட்டால் மூன்று மாதத்திற்கு பிறகு மதிய உணவு வழங்கும் திட்டமும் உள்ளது. இச் செயல் திட்டத்தினை மூச்சு உள்ளவரை தொடருவோம். இதுகுறித்து ஆசிரியர் பெருமக்களிடம் சொல்லும் பொழுது கண் கலங்கினார்கள். ஆண்டவர்,
பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் காலை உணவு திட்டம் நடக்கின்றது.
மருத்துவ உதவியையும் செய்ய உள்ளோம் தற்போது முடிந்ததை செய்கிறோம் தற்பொழுது ஆண்டவன் கொடுத்த சக்தியினை மக்களுக்கு சேவையாக வழங்கி வருகிறோம். கோவையில் சாந்தி நிறுவனத்தினர் குறைந்த கட்டணத்தில் நிறைவான உணவு சேவையை வழங்கி வரும் செயல்பாடும் எங்களுக்கு செயல் ஊக்கியாக இருந்தது என்றார்.
காசாளர் இல்லாத கடையும் பெரியவர்களும், சிறியவர்களும் தானாக முன்வந்து பத்து ரூபாய் நன்கொடை அளித்து காலை வெண்பொங்கல், இட்லி, சாம்பார், சட்னியுடன் சாப்பிடுவது வறியவர்கள் வயிறார உதவுகிறது.
நண்பா சாரிட்டபிள் டிரஸ்ட் காலை உணவுத் திட்டமானது திருச்சி
130, மேலப்புலிவார் முகவரியில் செயல்பட்டு வருவது முன்னோடித் திட்டமாக பொது மக்களால் பார்க்கப்படுகிறது.