குருவை மிஞ்சிய சிஷ்யன்

0
1

பெரியாரின் மண்ணை அவர் மறைந்த 44 ஆண்டுகளாய் உயிர்ப்புடன்.
பெரியாரின் பெயரை கேட்டால் அவர் உயிரோடு இருந்தபோது அவரை எதிர்த்த ஆதிக்க சக்திகள் இன்னும் அதே சுருதியுடன் ஏன் அதைவிட அதிகமாகவே கோபம் கொப்பளிக்க யார் காரணம்….

இலட்சோப லட்ச திராவிட தொண்டன் இருந்தாலும் அத்தனை தொண்டனையும் ஒரு புள்ளியில்…

ஒரு தலைமையில் ஒரு தலைவனில் நிறுத்தியது காலம்.
அவர்தான் இறந்த காலம்… அவர்தான் நிகழ்காலம்… அவர்தான் எதிர்காலம்,
அவர்தான் முத்தமிழ் அறிஞர்… 5 முறை தமிழக முதல்வர், கதை வசனத்தில் நூற்றாண்டு தமிழ் சினிமாவின் உச்சகட்ட அடையாளம், பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர், மூத்த பத்திரிக்கையாளர்.

வானளவு தமிழ் சமூகத்தால் புகழப்பட்டும், தரையளவு அதே சமூகத்தால் தாழ்த்தபட்டும், விமர்சிக்கப்பட்டும் தமிழ்நாட்டின் முகவரியாய் தன் முதுமையிலும் தன் இயக்கத்தை நிறுத்தாமல் என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என்ற ஒற்றை வார்த்தைக்கு தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4-ல் ஒரு பங்கு தவம் இருந்து காண துடிக்கும் தமிழின தலைவர்.

2

உலக சரித்திரத்தில், ஜனநாயக தேர்தல் முறையில் 60 ஆண்டுகள் மக்கள் மன்றத்தின் மூலம் சட்டமன்றத்தை ஆண்ட போராளி கலைஞர் கருணாநிதிக்கு வைரவிழா வாழ்த்துக்களை நம்ம திருச்சி வார இதழ், அவருக்கும் தி.மு.க கட்சியினருக்கும், திராவிட உணர்வு கொண்ட அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கின்றது.

டாக்டர்.நடேசனராக, டாக்டர்.டி.எம்.நாயராக, சர்.பி.டி.தியாக ராயராக, தந்தை பெரியாராக, அறிஞர் அண்ணாவாக இவர்களெல்லாம் விட்டு சென்ற திராவிட விடுதலையை – திராவிட வளர்ச்சியை தன்னை வீழ்த்த எத்தனை எத்தனை சக்திகள் முயன்று காயப்படுத்தி – கவிழ்த்துவிட்ட போதும் மீண்டும் மீண்டும் எழுந்து நின்று தன் குருக்கள் கண்ட கனவுகளை நிஜமாக்கி குருவை மிஞ்சிய சீடனாய் திராவிட இனத்தின் அடையாளமாய் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் சரிபாதி வரலாறு தலைவர் கலைஞரின் வரலாறு என்பதும் நிஜம்.

வைரவிழா நாயகனுக்கு தமிழ்நாடு கடன்பட்டிருப்பதும் வைரவிழா கொண்டாட்டமும் காலத்தின் கட்டாயமே.

தான் குருவாய் ஏற்றுக்கொண்ட பெரியாரின் கனவுகளை நிஜமாக்கி ஒருபடி முன்னேறிய கலைஞர்.. வாழும் ஆயுள் காலத்திலும் பெரியார் வாழ்ந்த 93 ஆண்டுகளை முறியடித்து 94-ல் அடியெடுத்து வைக்கும் நீண்ட ஆயுள் என்ற வரத்தை கடவுள் மறுப்பாளனுக்கு கொடுத்ததில் புரிகிறது. கலைஞர் பக்கம் கடவுள் நிற்கிறார். இல்லை இல்லை பகுத்தறிவாதிகளுக்கு பின்னாள் கடவுள் இல்லாமல் இல்லை. உடல் சுகத்துடன் மீண்டும் பணி செய்ய இறைவனும் இயற்கையும் பணிக்க வரம் கேட்போம் கலைஞருக்கு.
– சா. கோன்ஷா

3

Leave A Reply

Your email address will not be published.