
சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் சம்மன் நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதியாண்டில் ரூ.75,000 கோடியும் ஒதுக்கியது. இந்தநிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதையறிந்து தகுதிகளை தளர்த்தி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. மேலும், இத் திட்டத்தில் புதிய பயனாளிகள் அதிகளவில் சேர்க்கப்பட்டனர். ஏப்ரல் மாதம் அதிகளவில் விவசாயிகள் இணைக்கப்பட்டு நிதியுதவி பெறப்பட்டது.

இதில், முறைகேடாக பலரும் சேர்க்கப்பட்டு நிதியுதவி பெறுவதாக பரவலாக புகார்கள் எழுந்தன. திருச்சியில் ஏப்ரல் மாதத்தில் சேர்க்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 8,650-கும் மேற்பட்ட கணக்குகள் போலியானவை என தெரியவந்துள்ளது.
விவசாயிகளே இல்லாத நபர்களும், ஒரே குடும்பத்தில் பலரும், நிலம் இல்லாதவர்கள் என பலரும் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையை மாவட்ட ஆட்சியர் மூலம் மீட்பதற்கான நடவடிக்கைகளில் வேளாண்மைத்துறையினர் ஈடுபட்டனர். இதில், முதல்கட்டமாக ரூ.94 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
