கருணாநிதியின் முதல் கன்னிபேச்சு ‘திருச்சி நங்கவரம் பண்ணை’

கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்சனைக்கு வந்து.. ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார்.
உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் பேசி பேச்சை முடித்தார்.

முடித்ததும் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் ‘Very good speech’ என்று எழுதிய துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார்.

“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
