மனித மாண்பை உணர்த்தும் மனிதம் சமூகப் பணியாளர்கள்

சமூகத்தில் நடக்கும் அவலங்களின் போதும், பேரிடர்களின் போதும் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக அவர்களோடு நாங்கள் இருக்கிறோம். என்று உணர்த்தி காட்டிய மனிதம் சமூகப்பணி மையத்தைப் பற்றிய பதிவுதான் இது.
இன்றைய இளைஞர்கள் கேளிக்கைகள் கொண்டாட்டங்கள் என்று தங்களது வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொள்கிறார்கள் என்று பரவலான கருத்து சமூகத்தில் நிலவுகிறது ஆனால் இந்த இளைஞரோ சமூகத்திற்கு தேவையான பணிகள் செய்வதைத் தனது கடமையாக ஆக்கிக்கொண்டு செயல்பட்டு வருகின்றார்.
தினேஷும் அவருடைய நண்பர்கள் மற்றும் சமூகப் பணி மாணவர்களால் கடந்த 2011ம் ஆண்டு மனிதம் சமூகப்பணி மையம் துவங்கப்பட்டது.

கடந்த 9 வருடமாக மனிதம் குழு முதியோர் மட்டுமின்றி குழந்தைகளின் கல்வி, மருத்துவம், இளம் மகளிர் பெண்களுக்கான தொழில் பயிற்சி, இலவச மனநல ஆலோசனை, சாலையோர ஆதரவற்ற மனநோயாளிகளுக்கான சேவைகள் மற்றும் ஈழ தமிழர் மூகாமில் அகதிகளாக வாழும் கைம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு,இலவச கல்வி ஆகியவற்றை வழங்கிவருகிறது.
மேலும் மனிதம் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தன்னார்வலர்கள் குழுக்களை அமைத்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறது.. இதில் ஒரு அங்கமாக திருச்சியில் புத்தூர் பகுதியில் முதியோர் மற்றும் படுத்த படுக்கையில் உள்ளோர்க்கான தங்கும் இடம் கொண்ட முதியோர் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
‘கனவு படிக்கட்டு’ என்ற திட்டத்தின் கீழ் மனிதம் சமூக சேவை மையம் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் குழந்தைகள், HIV ஷி உடன் வாழும் குழந்தைகள், புற்றுநோயுடன் வாழும் குழந்தைகள்,தாய் தந்தை இழந்த குழந்தைகள் மற்றும் இலங்கை ஈழ தமிழர் முகாம்களில் வசிக்கும் குழந்தைகள் என பல்வேறு பிரிவில் இருக்கும் 125 குழந்தைகளுக்கு கல்வி உதவி, மற்றும் ஊட்டசத்துகள் வழங்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செம்பட்டு மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள குழந்தைகளின் திறமைகள் கண்டறியப்பட்டு அதை மேம்படுத்துவதற்கான வகுப்புகள் (ஆங்கில வகுப்பு, சிலம்பு பயிற்சி, வாழ்கைதிறன் மேம்பாட்டு பயிற்சி, கைவிணை பொருட்கள் செய்யும் பயிற்சி, மற்றும் கணினி பயிற்சி) நடத்தப்பட்டு வருகிறது.
மனிதத்தின் மேலும் ஒரு சிறப்பாக உறவோடு இணைப்போம் என்ற திட்டத்தின் கீழ் சாலையோர ஆதரவற்ற நிலையில் உணவின்றி முறையான மருத்துவ சிகிச்சை இன்றி மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களை மனிதன் குளிப்பாட்டி சுத்தம் செய்து மருத்துவ சிகிச்சை வழங்கி சாலையில் இருந்து மீட்டு அவர்களுக்கு அவர்கள் யார் என்று புரிய வைத்து அவர்கள் உறவினர்களோடு இணைக்கும் முயற்சியை செய்து வருகிறது. இவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ்சுமார் 75 முதியவர்களை அவர்கள் குடும்பத்துடன் இணைத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது இறுதி சடங்கு நடத்த கூட வழியற்ற ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மக்கள் உதவி என்று அழைக்கும் பொழுது அவர்களுடைய உறவாக இருந்து நல்லடக்கம் செய்யும் பணியையும் மனிதம் குழு செய்கிறது.
இப்படியாகத் தொடர்ந்து மீதம் தந்து மனிதம் காப்போம் என்ற திட்டத்தின் மூலம் திருமணங்கள் போன்ற சுபகாரியங்களில் மீதம் உள்ள உணவுகளை பெற்று சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு வழங்குகின்றன.
பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த புதுமைப்பெண்கள் திட்டம். மாணவர்களுக்கு அரசியல் அறிவை வளர்க்கவும், கற்பிக்கவும் அரசியல் பழகு திட்டம்.
மேலும் இளம் துளிர் என்ற திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதோடு நின்றுவிடவில்லை மனிதம் இன்ப ஒளி என்ற திட்டத்தின் கீழ் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஆகிய பண்டிகை காலத்தில் ஆண்டுதோறும் 200 குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது.
இயற்கைப் பேரழிவு காலத்திலும் தனது பணியை விடாது செய்து வருகிறது மனிதம். கஜா புயலின் போதும் கேரள பெரும் வெள்ளத்தின் போதும் இந்த கொரோனா கால பேரிடரின் போதும் பல்வேறு வகையான பணிகளை முன்னெடுத்து வருகிறது மனிதம். பணம் மட்டுமே வாழ்க்கையாய் போன இந்த சமூகத்தில் தான், மனிதத்தன்மை இன்னும் மறையவில்லை என்பதை இந்த மனிதம் இளைஞர்கள் நிரூபித்துக் காட்டு கொண்டிருக்கின்றனர்.
மனிதம் மலரட்டும்..
– இப்ராகிம்
