“நம்பிக்கை இன்னும் குறையலை!”-கே.ஜெனித்தா ஆன்ட்டோ

0
1

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது உலக தனிநபர் செஸ் போட்டி சுலோவேக்கியா நாட்டின் ருசம்பர்க் நகரில் மே 28-ந்தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் உலகம் முழுவதும் இருந்து 12 நாடுகளை சேர்ந்த 40 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட கே.ஜெனித்தா ஆன்ட்டோ பங்கேற்றார். 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஜெனித்தா 5 சுற்றுகளில் வெற்றியும், 3 சுற்றுகளில் சமனும், ஒரு சுற்றில் தோல்வியும் கண்டார். 5.5 புள்ளிகள் எடுத்ததால் அவருக்கு சாம்பியன் பட்டமும், தங்க பதக்கமும் வழங்கப்பட்டது. ஜெனித்தா 5-வது முறையாக தங்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்மலைப் பட்டியில் மிகச் சாதாரண வீட்டில் பெற்றோருடன் வசித்துவரும் ஜெனித்தாவுக்கு வயது 27. போலியோ அட்டாக்கினால் இரண்டு கால்கள், முதுகுத் தண்டு, ஒரு கை செயலிழந்த நிலையில் இடது கையை மட்டும் வைத்துக்கொண்டு, தனது அப்பாவுடன் செஸ் ஆடிக்கொண்டிருந்த ஜெனித்தாவைச் சந்தித்தோம்.

”எப்படி சாத்தியமாச்சு இந்த வெற்றி?”
”எனக்கு மூணு வயசு இருக்கும்போது போலியோ அட்டாக் வந்திருக்கு. நான் உயிர் பிழைக்க மாட்டேன்னு பல மருத்துவர்கள் கை விரிச்ச நேரம், கடவுள் கருணையால் அதிசயமா உயிர் பிழைச்சிருக்கேன். என்னை எங்க அப்பா 23 வருஷமாத் தோள்ல சுமந்து வளர்த்துட்டு வர்றார். எங்க அப்பா தலைமை ஆசிரியரா இருந்தவர். நான் மூணாவது படிக்கிறப்ப திடீர்னு ஒருநாள் ‘வில் அப் ஸ்டீல்’ங்கிறமாற்றுத் திறனாளியின் வெற்றிக் கதையைச் சொன்னார்.
ஒருநாள் ‘செஸ் விளையாடக் கத்துக்கோ’னு அட்வைஸ் பண்ணினார்.

2

என்னிடம் பல குறைகள் இருந்தாலும் ஒரு விஷயத்தை யாராவது தெளிவாச் சொன்னா, உடனடியா மனசுல பதிஞ்சிரும். அப்படித்தான் செஸ் விளையாட்டில் ஆர்வம் வந்துச்சு. கத்துகிட்ட ஒரு வருஷத்திலேயே 15 வயசுக்குட்பட்ட மாவட்ட செஸ் சாம்பியன் அத்தனை பேரையும் தோற்கடிச்சிட்டேன்.

என் ஆட்டத்தைப் பார்த்த என் அம்மா, ‘ஒருநாள் நீ இந்த உலகத்துலயே பெரிய செஸ் வீராங்கனையா வருவே. நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன். நீ கவலைப்படாம விளையாடு’னு தைரியம் கொடுத்தாங்க. எனக்கு ஒரு அண்ணன், அக்கா இருக்காங்க அப்பாவோட ஒரு சம்பளத்தைத் தான் மொத்தக் குடும்பமும் நம்பியிருக்கு. இந்த நிலைமையில் என்னைப் போட்டி நடக்குற இடங்களுக்குத் தோள்லயே தூக்கிட்டு சுமந்தார் அப்பா. அவரோட 20 வருஷ அலைச்சலும் என் கனவும் இப்போ நனவாகி இருக்கு!”

”செஸ் நுணுக்கங்களை எப்படிக் கத்துகிட்டீங்க?”
”நான் தேசிய அளவிலான போட்டிகள்ல நல்லா விளையாடுனதைப் பார்த்த பெங்களூர் முன்னாள் சாம்பியன் ராஜா ரவிசேகர், எனக்குப் பயிற்சி அளிக்க முன்வந்தார். பெங்களூர்லயே தங்கிப் படிக்குறது செலவாகும்னு, ஆன்லைன்லயே கோச்சிங் கொடுத்தார். ஜெர்மனியில் ஒரு பெரிய கிராண்ட் மாஸ்டரிடம் ஆன்லைனில் ஒரு மணி நேர ஆலோசனை கட்டணம் 8,000 ருபாய். அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்? அதனால நானே இன்டர்நெட்ல தேடித் தேடிக் கத்துகிட்டு, எனக்குத் தெரிஞ்சதை வெச்சு விளையாடுறேன். என்னோட தன்னம்பிக்கை தான் எனக்கு மூலதனம்!” வீல் சேர்ல நடமாடிட்டு இருக்கேன். இன்னமும் நம்பிக்கை மட்டும் எனக்குக் குறையலை. அது ஒண்ணுதான் எனக்கு சந்தோஷம்!’ என்றார்.

அர்ஜீனா விருது… வழங்க கோரிக்கை
திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் தலைமையில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் சி.தங்கவேல், செல்லக்குட்டி, இளங்கோ, திருச்சி மாவட்ட விளையாட்டு ஊக்குவிப்போர் சங்க தலைவர் ஆடிட்டர் மோகன், தண்ணீர் அமைப்பு இணை செயலர் ஆர்.ஏ.தாமஸ், தனலட்சுமி, வெங்கடேஷ், மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

வரவேற்பு முடிந்த பின்னர் ஜெனித்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சர்வதேச அளவில் நடந்த போட்டியில் நான் இப்போது ஐந்தாவது முறையாக தங்கம் வென்று உள்ளேன்.

கடவுள் கிருபையாலும், எனது பெற்றோர் அளித்த ஊக்கத்தினாலும் எனக்கு இந்த பெருமை கிடைத்து உள்ளது.

கடந்த முறை நான் தங்கம் வாங்கி வந்த போது தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா எனக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார்.

விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்பட்டது. ஐந்து முறை நான் சாம்பியன் பட்டம் பெற்று இருப்பதால் தனக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.