திருச்சி சென்டிமென்ட்

திருச்சி என்றால் திருப்புமுனைதான் எனும் சென்டிமென்ட், தமிழக அரசியல் கட்சிகளுக்கு எப்போதும் உண்டு. அது இப்போது சினிமாவிற்கும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
நடிகர் தனுஷுக்கு திருடா திருடி, நடிகர் சிவகார்த்திகேயேனுக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா, விஷாலுக்கு மலைக்கோட்டை என ஆரம்பகாலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் திருச்சியிலேயே எடுத்தார்கள். இந்த நடிகர்கள் இப்போது தமிழகத்தில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்போது மீண்டும் திருச்சியில் பல இடங்கள் ஷூட்டிங் பாயிண்ட்களாக மாறியிருப்பதால், படபிடிப்புகள், களைக்கட்ட துவங்கியுள்ளது. பசங்க 2, அடங்காதே என அடுத்தடுத்த படங்கள் திருச்சி கல்லணை, முக்கெம்பு, கல்லணை சாலை, திருச்சி உழவர் சந்தை மைதானம், சத்திரம் பேருந்து நிலையம் புதியபாலம், மலைக்கோட்டை பகுதியில் உள்ள வீடுகள் என பல இடங்கள் இப்போது கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஸூட்டிங் ஸ்பாட்டுகளாக உருமாறி உள்ளது.

அந்த இடங்களில் குவியும் கூட்டங்களைக் கட்டுப்படுத்த போலீஸார் திக்குமுக்காடிப் போகிறார்கள். நடிப்பதற்காக திருச்சி வரும் நடிகர்கள், திருச்சி முழுக்க ஜாலியாக ஊர் சுற்ற ஆரமித்துள்ளார்கள். அடங்காதே திரைப்படத்தில் நடிப்பதற்காக திருச்சி வந்திருந்த நடிகர்களான சரத்குமார், ஜி.வி.பிரகாஷ்,தம்பி ராம்மையா உள்ளிட்டோர் திருச்சி கோவில்களுக்கு ரவுண்ட்ஸ் அடித்துவிட்டு வந்தனர். இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘அடங்காதே’ திரைப்படம் சென்னை, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது திருச்சியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி திருவளர்ச்சோலை சாலையில் உள்ள வயல்வெளிகளில் பாடல்கள் எடுக்கப்பட்டன.

இப்போது தனுஷ், சிவகார்த்திக்கேயன் ஆகியோருக்குக் கைக்கொடுத்த திருச்சி சென்டிமென்ட் இப்போது ஜி.வி.பிரகாஷ் இதே செண்டிமெண்டை நம்பி களமிறங்கியுள்ளார். குறிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார்.
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இன்னொரு படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் புரூஸ்லீ படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள், திருச்சியில் எடுக்கப்பட்டது. இதேபோல் ஜி.வி.பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லைனா நயன்தாரா படமும் திருச்சியில் எடுக்கப்பட்டது அப்படம் பெற்ற வெற்றி காரணமாக இப்போது திருச்சியில் ஜிவி.பிரகாஷ் படங்கள் அனைத்தும் திருச்சியில் எடுக்கப்படுகின்றன.
இதேபோல் சமீபத்தில் வெளியான நடிகர் ஜீவாவின் திருவிழா திரைப்படம் சரியாகப் போகாததால், ஜீவாவும் அடுத்த தனது பெரியரிடப்படாத அந்தப்படமும் திருச்சியில் எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தன்னை சந்திப்பவர்களிடம், திருச்சி நல்ல ஊர். இயற்கையான சூழல் நிறைந்த ஊர். இங்குள்ள மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனச் சொல்லி சிலாகித்து வருகிறாராம்.
திருச்சி என்றால் பாசக்கார ஊருதான பாஸ்..
15.1.2017
