திருச்சி அருகே வங்கி காசாளர் கைது:

திருச்சி அருகே வங்கி காசாளர் கைது:
திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(வயது 36). இவர் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர், மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார், மற்றும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதையடுத்து தாட்சர் இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் கோர்ட்டில் தாட்சர் முறையீடு செய்து தன்னிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்தார். இதையடுத்து எட்வின் ஜெயக்குமாரை உடனடியாக கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் எட்வின் ஜெயக்குமார் தலைமறைவானார். இந்த நிலையில் எட்வின் ஜெயக்குமார் தலைமறைவாக இருந்தாலும் கூட அவரின் வங்கிக் கணக்கில் இருந்து சில பணபரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அவரை கைது செய்யும் முனைப்பில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் 6 மாதமாக தலைமறைவாக இருந்த எட்வின் ஜெயக்குமார், நேற்று அதிகாலை மணப்பாறை-திருச்சி சாலை அருகே நடந்து சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மணப்பாறை மகளிர் போலீசார் அங்கு விரைந்து சென்று எட்வின் ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மணப்பாறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
