தனித்தமிழ் வித்திட்ட மறைமலையடிகள்

மொழி என்பது மானுட சமுதாயத்தின் இணைப்புப் பாலம். இது எந்த மொழிக்கும் பொருந்தும். படையெடுப்பு, புலம்பெயர்வு, பிறமொழிக் கலப்பு இம்மூன்றும் ஒரு மொழியைச் சிதைக்கும் வல்லமை பெற்றவை. தமிழ்மொழி சங்க காலத்தில் மிகத் தூய்மை தன்மையைப் பெற்றிருந்தது. ஆரியர் வருகைக்குப்பிறகு வடமொழி ஆதிக்கம் தமிழகத்திலும், தமிழ் நூல்களிலும் கோலோச்சத் தொடங்கியது. இத்தகைய நிலையிலிருந்த தமிழை மீட்டெடுக்கப் பிறந்தவர் மறைமலையடிகள் என்றால் மிகையாகாது. இன்றைய தமிழின் வளர்நிலைக்கு 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய மறைமலையடிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்துப் பிறமொழித் தாக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுத்துப் புத்துயிர் ஊட்டியவர் மறைமலையடிகளார்.
மறைமலையடிகள்
நாகப்பட்டினம் (நாகை) மாவட்டத்திலுள்ள காடம்பாடி என்னும் ஊரில் சொக்கநாதபிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் 1876ம் ஆண்டு ஜூலை 15ம் நாள் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் வேதாசலம். நாகை வேதாசலம் என்று அழைக்கப்பட்ட இவர், பின்னாளில் துறவு பூண்டமையால் சுவாமி வேதாசலம் என்று அழைக்கப்பட்டார். தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த பிறகு மறைமலையடிகள் ( வேதம் – மறை, அசலம் – மலை, சுவாமி – அடிகள்) எனத் தம் பெயரை மாற்றிக்கொண்டார். தமிழ், ஆங்கிலம், வடமொழி மும்மொழிகளிலும் வல்லவராகத் திகழ்ந்தார். ஐம்பத்து நான்கு நூல்களை இயற்றிய மறைமலையடிகளார். 1950ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் இயற்கை எய்தினார்.
தூய ஆங்கில இயக்கமும் – தனித்தமிழ் இயக்கமும்
1913-ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் ‘தூய ஆங்கில இயக்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே வேற்றுமொழிச் சொற்கள் ஆங்கிலத்தில் கலந்திருப்பதை ஆங்கிலேயர் வெறுக்கத் தொடங்கினர். இலத்தீன், கிரீக் எனப் பல்வேறு மொழிச்சொற்களைக் கடன்பெற்று உருவான ஆங்கிலம் ஒரு முறையான கட்டமைப்பிற்குள் வந்தவுடன் தூய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதைக் கொள்கையாகக் கொண்டனர். ஆங்கிலேயரின் தூய ஆங்கில இயக்கத்தால் இன்றைக்கு அம்மொழி வானளாவிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இன்று உலகின் மிகச்சிறந்த வணிக மொழியாகவும் திகழ்கின்றது. இதற்குக் காரணம் அந்நாட்டினரின் மொழிப் பற்றே எனலாம்.

முப்பத்து மூன்று ஆண்டுகளே வாழ்ந்த சூரியநாராயண சாத்திரியார் (1870-1903) தமிழ்மொழியின்பால் கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் (பரிதி-சூரியன், மால்(திருமால்)-நாராயணன், சாஸ்திரி-கலைஞன்) என மாற்றிக்கொண்டார். இவரே தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர்.
இராபர்ட் கால்டுவெல் (1814-1891) 1856-ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழைச் செம்மொழி என்று கூறினார். அதன் தொடர்ச்சியாகத் தமிழைச் செம்மொழி என்று 1887-ஆம் ஆண்டில் பரிதிமாற் கலைஞர் குரல் கொடுத்தார். 1913-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட் ‘தூய ஆங்கில இயக்கம்’ போலத் தமிழகத்தில் மறைமயைடிகளார் அடுத்து மூன்றாண்டுகளில் 1916-ஆம் ஆண்டு ‘தனித்தமிழ் இயக்கத்தை’ தோற்றுவிக்கலானார்.
ஆங்கிலத்தில் புலமை பெற்ற மறைமலையடிகள் 1913-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தூய ஆங்கில இயக்கத்தைப் பற்றி அறிந்திருப்பார். அதன் காரணமாகவே தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார் எனலாம்.
இரு நிகழ்வுகள்
மறைமலையடிகளின் வாழ்க்கையில் நடந்த இரண்டு நிகழ்வுகள் தனித்தமிழ் இயக்கத்திற்கு எழுவாயாக அமைந்தன எனலாம். முதல் நிகழ்வு மறைமலையடிகளும் அவரது மூத்த மகள் நீலாம்பிகையும் ஒருநாள் மாலைப்போழ்தில் இன்னிசை பாடிக்கொண்டிருந்தபோழ்து,
பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறுந் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின் றிமைப்பது மறந்தாலும்
நற்ற வந்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே (திருவருட்பா)

என்ற இராமலிங்க அடிகளாரின் பாடலை மறைமலையடிகளார் பாடினார். அப்போது அவர் நீலாம்பிகையைப் பார்த்து ‘நீலா இப்பாடலில் தேகம் என்னும் வடசொல் வந்துளது. இச்சொல்லை நீக்கி யாக்கை என்னும் சொல்லை இட்டிருந்தால் எத்தனை ஓசையின்பம் கிடைத்திருக்கும்’ என்றார். இரண்டாம் நிகழ்வு அந்நாளில் சென்னையில் சைவ சித்தாத்தங்களில் புலமையுடையவராக விளங்கிய சோமசுந்தர நாயகருடன் (1846-1901) அடிகளார் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
மறைமலையடிகள் 1898 – ஆம் ஆண்டில் ‘வடசொல் கலந்த தங்களது உரைநடையைப்போலவே யாம் எழுதவோ?’ எனச் சோமசுந்தர நாயகரிடம் வினவ, சோமசுந்தர நாயகரவர்கள் ‘வடசொல் கலவா உனது உரைநடையே அனைவருக்கும் விளங்கும்படியாகவும், இனிமையாகவும் உள்ளது. எனவே உனது நடையிலேயே எழுது’ என்றார். 1916-ஆம் ஆண்டு மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவிக்கும் முன்பே 1898-ஆம் ஆண்டிலேயே தனித்தமிழில் எழுதத் தொடங்கிவிட்டார் என்றால் அது வியப்புக்குரியதன்றோ!
தனித்தமிழ் வளர்ச்சி
தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த பிறகு சுவாமி வேதாசலம் என்னும் தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார். தாம் தொடங்கிய சமரச சன்மார்க்கச் சங்கத்திற்கு ‘பொதுநிலைக் கழகம்’ எனப் பெயரிட்டார். தாம் நடத்தி வந்த ஞான சாகரம் என்னும் இதழிற்கு ‘அறிவுக் கடல்’ எனப் பெயர் சூட்டினார். திருஞான சம்பந்தத்தை ‘அறிவுத் தொடர்பு’ என்றும், மாணிக்கவாசகத்தை ‘மணிமொழி’ என்றும், சுந்தரமூர்த்தியை ‘அழகுரு’ என்றும், திரிபுர சுந்தரியை ‘முந்நகரழகி’ என்றும் பெயரிட்டார்.
தொல்காப்பியரின் ‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ’ என்னும் இலக்கணத்தைப் பின்பற்றிய கம்பர் லட்சமணனை இலக்குவன் என்றும், சீதாவை சீதை என்றும் தமிழாக்கம் செய்தார். ஆனால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் பலருக்குத் தமிழில் பெயரில்லை. வடமொழியினது பொருள் தெரியாமலேயே பலரும் பெயர் (மகிசா – எருமைமாடு, நிசா – இருள் (கருப்பாயி)) வைத்துக்கொள்கின்றனர். எனவே தூய தமிழில் பெயரிடுவதை அனைவரும் கொள்கையாக ஏற்க வேண்டும். நாள்தோறும் ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான சொற்கள் ஆங்கில மொழியை வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பிறமொழிச் சொற்கள் தமிழில் கலவாமல் இருக்க அதற்கீடான தமிழ்ச் சொற்கள் நாள்தோறும் உருவாக்க அரசு முன்வர வேண்டும்.
தனித்தமிழ் இயக்கம் தொடங்கி நூறு ஆண்டுகள் (1916 – 2016) கடந்த பின்னரும் அற (நீதி) மன்றங்களில் வழக்காடு மொழியாக, பள்ளி, கல்லூரிகளில் பயிற்று மொழியாக, கோயில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லை என்பது கவலைக்குரியதேயாகும். மறைமலையடிகளார் 1940-ஆம் ஆண்டு தமிழர் மத மாநாடு நடத்தித் தமிழர் சடங்குகள், கோயில் வழிபாடு என அனைத்தும் தமிழிலேயே நடத்தப்படுதல் வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
இந்தி எதிர்ப்பு
1937-ஆம் ஆண்டில் இராசாசி சென்னை அரசின் முதலமைச்சரானவுடன் 5 முதல் 7ம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டுமென்று சட்டம் கொண்டுவந்தார். அதனை எதிர்த்து மறைமலையடிகளால் பல இடங்களில் உரையாற்றினார். 4.10.1937-இல் சென்னை கோகலே மண்டபத்தில் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்ததோடு மட்டுமல்லாமல் ‘இந்தி பொது மொழியா?’ என்னும் நூலினையும் இயற்றித் தந்தார். தமிழ்ப் பற்றின் காரணமாக அவர் மட்டுமல்லாது, அவரது குடும்பமே சிறைதண்டனைப் பெற்றது.
செ.மணிகண்டன்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழாய்வுத்துறை,
தேசியக்கல்லூரி,
திருச்சி.
