நடந்தால் நாடாது புற்றுநோய்

0
1

கடந்த சில வருடங்களில் அதிகமாக பரவும் நோயாக புற்றுநோய் மாறியுள்ளது. இந்த நோய்கு ஆண்பெண் பாரபட்சம் இல்லாமல் தாக்கம் அதிகமாக உள்ளது.

புற்றுநோய்க்கான பல மருத்துவ கண்டுபிடிப்புகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் என வளர்ந்து வந்தாலும், புற்றுநோயின் வீரியத்தை ஒழிக்க முடியவில்லை. உணவுப்பழக்கம், சிதைந்துபோன உடல் கூறுகள், தூக்கமின்மை என பலவற்றால் புற்றுநோய் பரவும் என செய்திகள் வலம்வரும் நிலையில், நம்ம திருச்சி வாசகர்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கிட, புற்றுநோய் குறித்த தகவல்களையும், தாங்கள் கடந்துவந்த பாதைகளையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் திருச்சி ஹா்ஷமித்ரா மருத்துவமனை புற்றுநோய் கதிரியிக்க சிகிச்சை நிபுணர் சசிபிரியா.

என்னோட கணவர் கோவிந்தராஜ் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர், எங்களுக்கு ஹர்சவரதன், மித்ரவதனா இரண்டு குழந்தைகள்.
மருத்துவனையைப் போலவே, குடும்பத்தையும் கவனிக்கவேண்டும் என்பதற்காக, மருத்துவமனையில் இருந்துகொண்டே, நான் எப்போதும் வீட்டையும் கவனிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளேன்.
பல நேரங்களில் குழந்தைகளோடு நேரம் செலவிட முடியவில்லை. இரவு 11 மணிவரை அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்து, கடைசியில் உறங்கிவிடுவதும்தான் வாடிக்கை.பிள்ளைகளிடம் கொஞ்சம் கறாராக இருப்பேன் அதனால் என்னை “போலிஸ் மம்மி” என்று கூப்பிட ஆரமித்துள்ளார்கள்.

நாங்கள் இருவரும் மருத்துவர்கள், அதனால் எங்களால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும். புற்றுநோய் இல்லா சமுதாயம் படைக்க வேண்டும் என்கிற ஆர்வம்தான், எங்களை நோயாளிகளைக் கூடுதலாக கவனிக்க தூண்டுகோலாக அமைகிறது. ஆனால் என்னுடைய குழந்தைகள் அதனை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு ஏற்றாற் போல் தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

இந்த வளர்ச்சியில் அவர்களின் பங்கும் இதில் உண்டு. அவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் நாங்கள் சிறந்த மருத்துவர்கள் என்றும், திருச்சியில் சிறந்த புற்றுநோய் மருத்துவமனை என்ற விருது, சிறந்த
புற்றுநோய் மருத்துவர்கள் மற்றும் கணவன் மனைவி 2015 விருது, 2016ன் தேசிய பெண்கள் தின விருது என பல விருதுகள் வாங்கி இருக்க முடியாது.
தொற்று நோயல்ல..

புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல பொதுவாகவே ஆண், பெண் என இருபாலருக்கும் வரக்கூடிய நோய்தான். அதில் 4வகையான நிலை உண்டு முதல் இரண்டு நிலைகளில் உள்ள நோயாளிகளை 90 சதவிகிதம் அவர்களை காப்பாற்ற முடியும். 3வது நிலையில் 50 சதவீதம் மட்டுமே காப்பாற்ற முடியும், 4வது நிலையை கடந்தவர்களுக்கு 5வருடங்கள் வரை வாழ வைக்க முடியும்.

புற்றுநோய் 2வகையான காரணங்களால் வருகிறது. முதலில் மரபுவழி, அடுத்து உணவு, பழக்கவழக்கங்கள், போன்ற பல்வேறு காரணங்களால் வருகிறது. இப்போது பெண்கள், ஆண்கள் என பலரும் ஜங்க் புட், துரித உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அதேபோல், பரோட்டா, சில்லிச் சிக்கன் உள்ளிட்டவற்றில் மொறுமொறுப்பாக உள்ள உணவுகள், அதிக தடவை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் செய்யப்படும் உணவு உள்ளிட்டவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

புற்று நோய் வைரஸ் என்பது, வழக்கமாக ஆண்களிடம் இருந்து தான் பெண்களுக்கு பரவுகிறது. காற்றில் கலந்துள்ள வைரஸ் திருமணம் ஆன ஆண்களின் பிறபுறுப்பின் மூலம் பெண்களுக்கு செல்வதால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருகிறது. பெண்களுக்கு அதிகளவில் வெள்ளைபடுதல், இரத்தபோக்கு,முறையான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணிகளால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருகிறது. இதை அலட்சியப்படுத்தக்கூடாது. மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 3 முறை இந்தத் தடுப்பூசியை போட்டு கொண்டால் பெண்ணுக்கு எந்தவிதத்திலும் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் .

2

இதேபோல் பெண்களுக்குப் பொதுவாக மார்பக புற்றுநோய்,கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகளவில் உள்ளது. பெரிய நகரங்களில் 25 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. எனவே மார்பகத்தில் சிறிய அளவிலான வலி இல்லாத கட்டி, அல்லது இயல்பான அமைப்பைவிட மார்பகம் மாறுபடுதல் போன்ற அறிகுறிகள் வந்தால், அந்தப் பெண்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பெண்கள் தங்களுக்கு உள்ள அறிகுறிகளை சுயபரிசோதனை செய்துகொள்ளலாம்.

எனவே குறைந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது பெண்கள், இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சில பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல் ஆண்களும் புற்றுநோய் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னால், கருமுட்டையில் புற்றுநோய் பாதிப்புடன் மருத்துவமனைக்கு ஒரு பெண் குடும்பத்துடன் வந்தார்கள். முழுமையான சிகிச்சை கொடுத்தோம். 6 மாதங்களுக்குப் பிறகு கட்டி வளர்ந்து இருந்தது அதற்கும் சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்தோம். அதன்பிறகு 1வருடம் அவர் சிகிச்சைக்குவரவே இல்லை. பொதுவாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களும், சிகிச்சை மூலம் குணமடைந்தவர்களும் தொடர் பரிசோதனையில் இருக்க வேண்டும்.

ஆனால் அதன்பிறகு அந்தப் பெண்மணி திடீரென வந்தார். அவருக்கு நோய் பாதிப்பு அதிகமாக இருந்ததால் நேரடியாக அவசரசிகிச்சை பிரிவில் அனுமதித்தோம். அவர்களிடம் செலவு செய்யக் கூட பணமில்லை. அவரை காப்பாற்றிவிட போராடினோம். ஆனால் 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றும் பலன் இல்லாமல் இறந்துவிட்டார்.

அவர் உயிர் பிரியும் வேளையில், தனது கணவரை அழைத்து, “நம்மிடம் மாம்பழ தோட்டம் இருக்கும்வரை இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மாம்பழம் கொடுங்கள் என்று சொல்லி இறந்தார். அன்றில் இருந்து இன்றுவரை மாம்பழ சீசன் வந்தால் அந்த பெண்ணின் கணவர் மருத்துவமனைக்கே மாம்பழம் வழங்கி வருகின்றார். இப்போதும் அவரை நாங்கள் மறக்கவில்லை என கண்களில் வழிந்த நீரை துடைத்தவர்.
நடக்க தயங்காதீங்க காலை11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். உணவிற்கும் புற்றுநோய்க்கும் அதிகளவில் தொடர்பு உண்டு. நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர், பழங்கள், காய்கறிகள் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

தற்போது பரோட்டா மீது உள்ள மோகம் இன்று பலரை மலக்குடல் புற்றுநோய்க்கு தள்ளி உள்ளது. எனவே நார்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு செரிமானம் சரியில்லை என்றால் புற்றுநோய் வரும். பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை, மலக்குடல் புற்றுநோய்கள் வரும் அடிப்படை மருத்துவ ஆய்வுகளைச் செய்து கொண்டாலே போதுமானது.

தினமும் குறைந்தபட்சம் 20நிமிடம் நடந்தாலே 50 சதவீதம் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும், அதேபோன்று கருகிபோனது, தீய்ந்துபோனது போன்ற உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்ள வேண்டும். 7 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பபைவாய் புற்றுநோயால் இறக்கிறார்கள். எனவே பெண்கள் உங்களைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடம்பில் வழக்கத்துக்கு மாறிய சிறிய மாற்றங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருமுறை உடல் முழு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
புற்று நோயை அலட்சியப்படுத்தினால் உயிரை பறிக்கும்.. கொஞ்சம் விழிப்புணர்வோடு ஒருந்தால் உயிர்வாழலாம் என்றார்.

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

3

Leave A Reply

Your email address will not be published.