அடையாளம் இழக்கும் திருச்சி கலையரங்கம்

0
1

தமிழகத்தின் மிக பிரமாண்டமான திரையரங்கம் என பெயர்பெற்ற திருச்சி கலையரங்கம் தனது வாழ்நாளை முடித்துக்கொள்ளப்போகிறது. பல அரசியல் தலைவர்களின் கால்தடம் பதிந்த கலையரங்கம் தியேட்டர் உருவான விதம் இப்படித்தான்.

1962-ம் ஆண்டு திருச்சி ஆட்சித்தலைவராக இருந்த குலாம் முகமது பாஷா என்பவர் கால்நடை சங்கம் விழா நடத்தும் பொறுப்பை கி.ஆ.பெ.விசுவநாதனிடம் ஒப்படைத்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து மீதம் இருந்த 642ரூபாயை, கி.ஆ.பெ.வி, அப்போதைய ஆட்சித்தலைவர் குலாம் முகமது பாஷாவிடம் ஒப்படைத்தார். ஆட்சித்தலைவரோ நீங்கதான் நிறைய நல்லது பண்றீங்க. அதனால் இந்த நிதியையும் வைத்துக்கொண்டு உங்களுடன் கொஞ்ச பேரைச் சேர்த்து நல்லது செய்யுங்கள் என்று சொன்னார். அதன்படிதான் திருச்சி மாவட்ட நலப்பணிக்குழு என்கிற அமைப்பு உருவானது.

அடுத்து 1964-ம் ஆண்டு கலெக்டராக இருந்த கே.சொக்கலிங்கம் சென்னை டி.கே.எஸ். பிரதர்ஸ் நாடக சபாவை திருச்சிக்கு வரவழைத்து திருச்சி தேவர் மன்றத்தில் 3நாட்கள், 3மிகப்பெரிய நாடகத்தை நடத்தினார். அதைக்காண மக்கள் கூட்டம் அலைமோதியதால், நிதி குழுவின் இருப்பு ரூபாய் 1,00,033.50 ஆக உயர்ந்தது.

ஜெயலலிதா நடனம்
மேலும் 1968-ம் ஆண்டு ஹரி பாஸ்கர் ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றபோது உலக தமிழ் மாநாட்டு நிதிக்காவும், மருத்துவக்கல்லூரி அமைப்பதற்காகவும் திட்டமிட்டு முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் ஜெயலலிதா அவர்கள் நடத்திய நாட்டிய நடனத்தின் மூலம் 25இலட்ச ரூபாய் வசூல் ஆனது. உலக தமிழ்மாநாட்டிற்கு பணம் தேவைப்படாமல் போனதாலும் மருத்துவக்கல்லூரி மற்ற மாவட்ட மக்களின் போராட்டத்தினால் திருச்சியில் வைக்க முடியாமல் போனதாலும் அந்த நிதி முழுவதும் மாவட்ட நலப்பணிக்குழுவிற்கு நிதியாகச் சேர்ந்தது.
அடுத்து 01.07.1971ல் திருச்சியில் விவசாய கல்லூரி ஆரம்பிப்பதற்காக மாவட்ட நலப்பணிக்குழு, அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் 14இலட்சம் கொடுத்தனர். இரண்டு ஆண்டுகள் ஆகியும் விவசாய கல்லூரி துவங்கப்படாததால் அந்தத் தொகை மீண்டும் மாவட்ட நலப்பணிக்குழு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

அதேபோல் 1974ம் ஆண்டு ஆட்சித்தலைவராக இருந்த வைத்திலிங்கம் நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி அமைக்க வசூல் ஆன தொகை ரூபாய் 4,50,000, அதே போல 1975ல் ராஜாஜி, சுகாதாரத்திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 15இலட்சமும், 1976ம் ஆண்டு மாவட்ட கழக நிதியிலிருந்து 4இலட்ச ரூபாயும் இந்த மாவட்ட நல பணிக்குழு கணக்கில் சேர்ந்தது.

1975ம் ஆண்டு மாவட்ட நலநிதிக்குழு அரசாங்க சட்டப்படி பதிவு செய்யப்பட்டது. இதற்கு ஆரம்பத்தில் செயலாளராகவும், பொருளாளராவும், கி.ஆ.பெ.விசுவநாதன் இருந்தார். பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உள்ளுர் பிரமுகர் உள்ளிட்ட 33 பேர் செயற்குழு உறுப்பினர்கள் கொண்டு செயல்பட ஆரம்பித்தது. இப்படி சேர்ந்த நிதிகளை கொண்டு
1976-ம் ஆண்டு கலையரங்கம் திரையரங்கத்தை மிகப்பிரமாண்டமாக கட்டுவதற்கு ஸ்ரீநிவாசன் கட்டிட மேதையின் ஆலோசனை பெறப்பட்டது. அதனடிப்படையில்தான், கம்பீரமாகவும் விசாலமாகவும், கலையழகு மிகுந்த திருச்சி கலையரங்கம் தியேட்டர், தென் கிழக்கு ஆசியாவிலே மிகப்பெரிய திரையரங்கமாக உருவானது.

2

பெயர் மாறிய கதை!
அந்த கால திரையுலக சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் அவருடைய சிறை வாழ்க்கை அவரை, முற்றும் துறந்த ஞானி போல மாற்றியது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். தவிர்க்கமுடியாத கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. ஆனால் அதை வெளியே தெரியாமல் பாகவதருக்கு உதவ நினைத்த எம்.ஜி.ஆர் மாளிகையை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார்.

காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் எம்.ஜி.ஆருக்கு தெரியவந்தது. அந்த நேரத்தில்தான் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த திருச்சியில் மாவட்ட நலப்பணிக்குழு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர்
எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு கூறினார்.

விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, பாகவதர் குடும்பமே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், மாவட்ட நலப்பணிக்குழு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என எம்.ஜி.ஆரே.பெயர் சூட்டினார். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம்.

ஏராளமான வசதிகள்
முதல் முறையாக திருச்சியில் மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே 1,417 இருக்கைகள் கொண்ட ஏசி திரையரங்கம் இதுதான். மாதம் 43,000 ஆயிரம் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு முதல்முறையாக பத்மா என்டர்பிரைசஸ் என்பவர்கள் ஏலம் எடுத்து நடத்தினர். அதன்பிறகு மருத்துவர் சிவக்கண்ணு, ஜோசப் லூயிஸ், மகாலிங்கம், வின்சென்ட் அடைக்கலராஜ், பாலசுப்ரமணியன் என்பவரின் பவர் ஏஜெண்ட் கஸ்தூரி மரியம்பிச்சை, வின்சென்ட் அடைக்கலராஜ், மீண்டும் பலசுப்ரமணியன் பவர் ஏஜெண்ட் கஸ்தூரி மரியம்பிச்சை என பலரும் இந்த தியேட்டரை நடத்தி வந்தார்கள். இதில் கடைசியாக மாதம் ஒன்றுக்கு 9 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்திருக்கிறார்கள்.

கஸ்தூரி மரியம்பிச்சை தரப்பினர் நிர்வாக தடங்களும், தியேட்டர் சீரமைப்பில் ஏற்பட்ட முரண்பாடு, வாடகை நிலுவை உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த 2 வருடங்களாக தியேட்டர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பெயரில் சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றம் போனது. இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிந்ததால், மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள் மாவட்ட நலப்பணிகள் குழு, தியேட்டருக்குள் பயன்பாட்டில் இருந்த கஸ்தூரி மரியம்பிச்சையின் பொருட்களை எடுத்துச்செல்ல உத்தரவிட்டனர். இதனால் கஸ்தூரி தியேட்டரை காலி செய்து கொடுக்க கலையரங்கம் கலையிழந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

கடைசியாக அவசரமாகக் கூடிய மாவட்ட நலப்பணிக்குழு, கலையரங்க தியேட்டரை மறு சீரமைப்பு செய்வது என்பது மிகவும் சிரமமான காரியம். அதனால் தியேட்டரை அப்படியே திருமண மண்டபமாக மாற்றலாமா என்கிற யோசனை முன்வைக்கப்பட்டு, நிதிக்குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் என தமிழகத்தின் பிரபலங்கள் வலம்வந்த திருச்சி கலையரங்கம் திரையேட்டர், இனி கலையழகை காண்பிக்கும் திரையரங்கமாக இயங்காது.அதனை இனி அப்படிச் சொல்லி அழைக்கவும் முடியாது.

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

3

Leave A Reply

Your email address will not be published.