வேண்டாம் வேற்றுமை – சிறுகதை

0
gif 1

திருச்சியில் நடைபெற்ற
‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா’
சிறுகதைப் போட்டியில் சிறப்புபரிசு வென்ற சிறுகதை… தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சிறுகதைகளை வாரவாரம் வெளிவரும்…

“அம்மா, இன்னைக்கு நானு பள்ளிக் கொடத்துக்குப் போகமாட்டேன். ஒங்ககூட காட்டுக்கு வரேன்மா” அழுகுற மாதிரி சொன்னா சின்னப் பொண்ணு.

“அடி செருப்பால . . . பள்ளிக்கொடம் போமாட்டியா. . . .ஏங்கூட காட்டுக்கு வந்து என்ன செய்யப் போறீயாம்? படுக்காளப் பெய மகளே” பரிபூரணம் கத்துனா.

gif 3

செத்த நேரம் கம்முனு இருந்துட்டு திரும்பியும் மொதச் சொன்னதயே சொன்னா. இந்த வாட்டி சின்னப்பொண்டு அமுதா. “ஏம்டி போமாட்டேங்க? டீச்சரு அடுச்சாகளா? பிள்ளக்காடுக எதுனாச்சும் அடுச்சுப் போட்டாகளா, சொல்லுமா கண்ணு, எனக்கு நேரமாகுது. பிந்திப் போனா வேலை செய்ய உடமாட்டாக”.

சின்னப் பொண்ணுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனா பள்ளிக்கொடம் போகக் கூடாதுங்கறதுல மட்டும் உறுதியா இருந்தா. கெஞ்சுற கொரலுல மெதுவாச் சொன்னா. “ஏமா, இன்னைக்கு மட்டும் போகலம்மா, நாளையிலிருந்து போயிடுறேனுமா. அய்யாகிட்ட சொல்லாதம்மா”.

“இம்புட்டு நாளா ஒழுங்காத்தனாடி போயிகிட்டு வந்துகிட்டு இருந்த. . . இன்னைக்கு என்னடி ஆச்சு? இப்ப நாலெழுத்துப் படுச்சாத்தானடி நாளைக்கு நீ நல்லா இருப்பே. இல்லையினா எனிய கெணக்கா நாயி படாத பாடுபடணும் தெரியுமா? . . . .சரி. . . இந்தா. . . இந்த ஒத்த ரூவாய வாங்கித் திங்க வச்சிக்கோ. பைக்கட்ட எடுத்துக்கோமா?” சொல்லிகிட்டே சின்ன பொண்ணோட மொகத்த முந்தானைய தொடச்சு அட்டா பரிபூரணம்.

“எனக்கு துட்டு வேணாம்தா. நானு பள்ளிக் கொடம் போமாட்டேன்”. துட்டத் தூக்கி எறுஞ்சிட்டு அழுதா. ஒன்னா சேர்ந்து பள்ளிக்கொடம் போயிக்கிட்டு இருந்த கிட்ணம் மாளக் கூப்புட்டு பரிபூரணம் சொன்னா, “ஏத்தா. . .ஏ. . . தவசி மகளே, இந்தா ஏம் மகளையும் அப்பிடியே ஒங்கூட பள்ளிக் கொடத்துக் கூட்டிக்கிட்டுப் போத்தா. . . என் மகள், என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கி”.

“பெரீமா, நேத்து பள்ளிக் கொடத்துல கோயிலுத் தெரு பிள்ளைக ஒங்க மகளப் போட்டுப் போட்டு அடிச்சாக” கிட்ணம்மா சொன்னா.

“எதுகுத்தா? அதான் இவா போமாட்டேம்னு மருகி மருகி நிக்கிறா, கேட்டா ஒன்னுஞ் சொல்லவும் மாட்டேங்கா”.

“நேத்து மத்தியானம் சத்துணவு சாப்பிடும்போது ஒங்க மகா பெளேட்டு கொண்டு வரலயா. . . இவா போயி அந்தத் தெரு சோதிலச்சுமி பிள்ளைட்ட டிபனு பாக்சக் கேட்டுருக்கா, அதுக்குத்தான்”.

“ஏம்டி. . . . கேட்டியாக்கும்டி?. . . மகட்ட கேட்டா. “க்கும். கேட்டேன். அவா தரமாட்டேனுட்டா. பெறகு நம்ம தெரு முனியம்மாளும் நானும் ஒரே பெளேட்டுல வாங்கித் தின்னோம்”. “இதுக்கெதுக்கு ஒனிய அடிச்சாக?”

பரிபூரணத்துக்கு ஒன்னுஞ் சரியா வௌங்கல. “இல்ல பெரீமெ, அது வந்து இவா போயி அந்தத் தெரு பிள்ளைட்ட டிபன் பாக்சைக் கேட்டாள்ள. அதுக்குத்தான்” அந்தத் தெருவ அழுத்தமாச் சொன்னா கிட்ணம்மா.

“நீ எதுக்குடி அந்தத் தெருப் பிள்ளைட்டப் போயி கேட்டெ? நம்ம தெருவுலருந்து எம்புட்டு புள்ளைக படிக்குதுங்க? இவுகள எல்லாம் உட்டுட்டு நீ எதுக்கு அந்த பெயமக்க கிட்டப் போயி கேட்டெ?”

gif 4

“நம்ம தெருப் பிள்ளைக எல்லாரும் சோறு வாங்கிக்கிட்டு இருந்தாக. அவுக தெருப் புள்ளைதான் வீட்ல இருந்து டிபனுகள்ள சாப்பாடு கொண்டாந்து சாப்புடுவாக. சோதி பிள்ள சீக்கிரமாச் சாப்டுட்டு டிபன்பாக்சை சும்மாதான் வச்சுருந்தா. அதான் அவாகிட்டே கேட்டேன்”, சின்னப் பொண்ணு வௌக்கமாச் சொன்னா.

பரிபூரணத்துக்கு தாம் மகா மேல இருந்த கோவம் போயிருச்சு, “படிக்கிற எடத்துல சின்னப் புள்ளைக ஒண்ணுக்குள்ள ஒண்ணு குடுத்துக்குங்க, வாங்கிக்கங்க. இதுல என்ன தப்புன்னு ஏம்பிள்ளையப் போட்டு அடிச்சிருக்காக”. தனக்குத்தானே சொல்லிகிட்டே பரிபூரணம் மகளப் பார்த்துக் கேட்டா.

“சரி அந்தத் தெருப்புள்ளைக ஒனியப் போட்டு அடிக்கயில நீ போயி ஒங்க டீச்சருட்ட சொல்ல வேண்டியதுதானடி?” “நாங்க போயிச் சொன்னம்ல. அதுக்கு டீச்சரு சின்னப் பொண்ணுத்தான் வஞ்சாக,” கிட்ணம்மா சொன்னா.
“எதுக்காம்?” “நீ எதுக்கு பிள்ள எங்க தெரு பிள்ளைட்ட கேட்ட? ஒங்க தெருப் பிள்ளைகளோட தட்ட வாங்கிச் சாப்புட வேண்டியதுதானன்னு சொன்னாங்க”.

“பாடஞ்சொல்லி குடுக்குற டீச்சர்மார்களே சாதியப் பார்த்து பிள்ளைகள நடத்துனா என்னத்த வௌங்கப் போகுது” தனுக்குள் சொல்லிக் கொண்ட பரிபூரணம் மகளப் பார்த்து சொன்னா “நீயி ஒம் பைக்கட்ட எடுடி. எனக்கு வேல கெட்டாலும் பரவாயில்ல, வா பள்ளிக்கொடத்துக்கு. நா வந்து என்னன்னு கேக்குறேன். எப்பிடிப் போட்டு அடுச்சுருந்தாகன்னா பள்ளிக் கொடமே போமாட்டேம்னு அடம்புடுச்சு அழுவா”. சொல்லிட்டு மகளப் புடுச்சு இழுத்துக்கிட்டே ஆத்துரத்தோட பள்ளிக்கொடம் போயிச் சேந்தா பரிபூரணம்.

சின்னப் பொண்ணு படுச்ச நாலாங் கெளாசுக்குப் போனா, டீச்சரு ஆபீசு ரூமுல இருக்காகன்னு பிள்ளைக சொல்லவும் விறுவிறுன்னு ஆபீசுக்கு போனா. அவா நடைக்கு ஈடு குடுக்க முடியாம சின்னப் பொண்ணு பின்னாலியே ஓடுனா. ஆபீஸ்ல கெட்மாஸ்டரு. டீச்சருக எல்லாரும் இருந்தாக. பரிபூரணம் மெதுவாக தொடங்குனா, அவா மனசுக்குள்ள அம்புட்டு ஆவேசம் இருந்தாக்கூட இங்க வந்த ஒடனே பெட்டிப் பாம்பா அடங்கிப் போனா, அவளுக்கே ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு. ரொம்ம அடக்கமான கொரலுல கேட்டா “ஐயா, சின்னஞ்சிறுசுக படிக்கிற லெக்குல ஒண்ணுக்குள்ள ஒன்னு குடுக்கும், வாங்கும். இந்த சின்ன விசயத்துக்குப் போயி ஒங்க தெருப்பிள்ளைக எம்மகளப் போட்டு அடுச்சிருக்காக. அவா பள்ளிக்கூடமே போமாட்டேனு மொரண்டு புடிக்கா”.

சின்னப் பொண்ணப் பார்த்த நாலாங் கெளாஸ் டீச்சர் ரேவது தலைமையாசிரியரிடம் மடமடன்னு என்னமோ சொன்னாக, ஒடனே தலமை ஆசிரியர் பரிபூரணத்துட்ட கேட்டாரு, “இதுக்குப் போயா வேலையை விட்டுட்டு இம்புட்டுத் தூரம் வந்துருக்க? என்ன இருந்தாலும் ஒம் மகா கேட்டது தப்புத்தான? கழுத கெடக்குறது கட்டச் செவராம், கனாக் காண்றது மச்சு வீடாம். சரி ஒம் மகா தொட்டு வாங்கிச் சாப்பிட்ட பிறகு எங்க தெருப் பிள்ளைக அதுல சாப்பிட சங்கடப்படுமா இல்லியா? நீயே சொல்லு. ஒம் மகளத் தட்டிக்குடுத்து வளக்குறத உட்டுட்டு இங்க வந்துட்டியே நாயங் கேக்க. . .போ. . .போ. .”

“அதுக்கல்லையா. இவளுக்கென்ன தெரியும்? ஒங்க பிள்ளைககிட்ட கேக்கக் கூடாது, வாங்கக் கூடாதுன்னு, அதுக்குப் போயி அடிக்கலாமாய்யா? ஒரே பள்ளிக் கொடத்துல படிக்கும் போது இதெல்லாஞ் சகசந்தானே ஐயா” பரிபூரணம் பரிதாபமாகச் சொன்னா.

“இதுக்குத்தான் ஒங்க தெருப் பிள்ளைகளப் பள்ளிக் கொடத்துல சேக்கக் கூடாதுங்கறது. பாவப்பட்டு சேந்தா, இப்படித்தான் பிரச்சனை வரும். நீங்கள்ளாம் இருக்க வேண்டிய எடத்துல இருந்தா எதுக்கு இந்த வம்பெல்லாம். பள்ளிக் கொடத்துக்கு வரமாட்டேன்னு சொன்னா நாலு பன்னிக்குட்டிகள வாங்கி உடு. மேச்சுக்கிட்டுத் திரியட்டும். ஒனக்கும் நல்லதுதான்! சரி சரி போ. காலங்காத்தல வந்து எங்க டயத்த வேஸ்டாக்கத”. சொல்லிட்டு எந்துருச்சிப் போயிட்டாக. பரிபூரணம் மகளக் கூட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டா. வீட்ல வந்து நடந்ததப் பூராம் புருசங்கிட்ட சொல்லவும் அவெங் கத்த ஆரம்பிச்சுட்டாள்.

“இவெ என்னடி நம்ம பிள்ளைகளைப் பள்ளிக் கொடத்துல சேக்கவே கூடாதுன்னு சொல்றது? இவுகப்பெ வீட்டுப் பள்ளிக்கொடமா என்ன? நம்ம தெரு பிள்ளைக போகாட்டி அவனுக்கு வேலையுமில்லை, ஒன்னுமில்லை. தலமையாசிரியருல இருந்து அம்புட்டுப் பேரும் அந்த தெருக்காரனுகளாக இருக்கானுக. நம்ம தெருவுலருந்து அத்திப் பூத்தாப்புல ரெண்டு பேரு படுச்சு வாத்தியாரானாலும் இந்தப் பெயலுக பொய்ப் பெராது குடுத்து தூரந்தொலவட்டுக்கு அவுகள மாத்தி உட்டுருரானுக.

“ஆமா இம்புட்டு வருசமா எல்லாஞ் சாதுச்சுட்டாக. இனி நீ போயி சாதிக்கப் போறியாக்கும். இவள சரிகட்டி நாளைக்கு பள்ளிக் கொடத்துக்கு அனுப்பி வையி. இல்லையின்னா படிப்பு வீணாப் போகும்” பரிபூரணம் சொன்னா.
“இவனுககிட்ட படுச்சா நம்ம பிள்ளைகதான் வீணாப் போகுங்க. நாளைக்குப் பாரு நாம் போயி கேக்குற கேள்வில இனிமேலு நம்ம தெரு பிள்ளைக மேல கைவைக்க மாட்டானுக.”

“ஏ. . .நீ வேற சும்மா கெட. . . நீ ஒம் பாட்டுக்குப் போயி மானாவாரியாப் பேசிட்டு வர. பெறகு இந்தப் புள்ளைத்தான் பெயிலாக்கிப் போடுவாக. எத்தன பிள்ளைகளை அப்பிடி பெயிலாக்கிட்டாகத் தெரியுமா. இத்தனைக்கும் நல்லா படிக்குற பிள்ளைகள்.
மறுநாளு சின்னப் பொண்ணுட்ட, அந்த தெருப் பிள்ளைக கூட சேரக்கூடாது. எதுவுங் கேக்கக் கூடாதுன்னு புத்திமதி சொல்லிக் கொண்டு போயி பள்ளிக் கொடத்துல உட்டுட்டு வந்தாக. சின்னப் பொண்ணு பயந்து பயந்து கெளாசுல போயி ஒக்காந்தா. அவளால முன்னப்போல படிக்கவோ, சந்தோசமா இருக்கவோ முடியல. எதுக்கு நம்ம அந்த தெரு பிள்ளைககூட சேரக் கூடாதுன்னு இவா மனசுக்குள்ளே ஒரே கேள்வி.
மனிதர்களே ஒரு நிமிடம் சிந்திப்போம். நம் நாட்டில என்னதான் அறிவியல் வளர்ச்சி அதிவேக பரவினாலும், இன்னும் மனிதாபிமானம், அனைவரும் பிறப்பால் சமம் என்ற எளிய கோட்பாடு, பண்பாடு பல பேரிடம் இல்லை. இனியாவது சிறு வயதில் நஞ்சை விளைக்காமல் நம் தாய்நாடு தலைநிமிர்ந்து நிற்க வழிகாட்டுவோம்.

ஜான்பால்
தூயவளனார் கல்லுரி
தொடர்புக்கு : 99 43 89 78 91

(இக்கட்டுரை 2017 மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.