நடிகவேள் எம்.ஆர்.ராதா

திருச்சியின் அடையாளங்கள் பகுதியில் திருச்சியில் வாழ்ந்து மறைந்த பிரபலங்களின் வரிசையில் நாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா. சினிமாவில் வில்லனாகவும், நகைச் சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் கொடிகட்டிப் பறந்தவர். “நடிக வேள்” என்று பட்டம் பெற்றவர். இன்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவை பற்றி திருச்சியின் அடையாளங்கள் பகுதியில்…
20-ம் நூற்றாண்டின் திரையுலகில் ரத்தக் கண்ணீரால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் எம்.ஆர்.ராதா. இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.
இவர் 1907-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி சென்னை சூளைமேட்டில் பிறந்ததார். இவரது தந்தை ராஜகோபால் நாயுடு. தாயார் ராஜம்மாள்.
எம்.ஆர்.ராதாவுக்கு ஜானகிராமன் (ஜே.ஆர்.நாயுடு) என்ற அண்ணனும் உண்டு.
பள்ளிக்கு சரிவர செல்லாத எம்.ஆர்.ராதா, பள்ளிவேளைகளில் சைக்கிளில் சென்னை முழுவதும் சுற்றி வந்தார். இந்த விஷயம் அவரது தாயாருக்கு தெரிய வரவே எம்.ஆர்.ராதாவை திட்டி, அடித்துள்ளார். இதனால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ராதா, ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார். ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தில் பால கிருஷ்ணன் வேடமிட்டு தனது கலையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

திருப்பாதிரிப்புலியூரில் நாடக கம்பெனி முகாமிட்டிருந்த போது எம்.ஆர்.ராதாவின் பாட்டி அவரை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சில நாட்கள் மட்டுமே வீட்டிலிருந்த ராதா அங்கிருந்து தனது அண்ணனுடன் மைசூர் சென்று ராவண கோவிந்தசாமியின் நாடக கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் சென்னை வந்த அவர், பல்வேறு நாடக கம்பெனிகளில் இணைந்து நடித்தார்.
பெரம்பூரில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடக கம்பெனியில் இணைந்து பணியாற்றிய போது தான் விழுப்புரத்தை சேர்ந்த சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் கழித்து சரஸ்வதியின் தங்கை தனலட்சுமியையும் 2வது திருமணம் செய்து கொண்டார்.
ராதா – சரஸ்வதி தம்பதியின் மகன் தான் எம்.ஆர்.ஆர்.வாசு. 2-வது மனைவி தனலட்சுமிக்கு ராதாரவி என்ற மகனும், ரஷியா, ராணி, ராதிகா ஆகிய மகள்களும் உள்ளனர்.
பின்னர் அந்த நாடக கம்பெனியிலும் இருந்து பிரிந்த எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராமச்சந்திரன், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து நாடகக்குழு ஒன்றை தொடங்கினர். இக்குழு கோலார் தங்கவயலில் முகாமிட்டிருந்த போது தான் ராதா, திரைப் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 1937-ம் ஆண்டு சாமிநாதன் என்ற பணக்காரர் ராதாவின் ‘ராச சேகரன்’ நாடகத்தை படமாக தயாரித்தார். பின்னர் ராதாவே ‘பம்பாய் மெயில்’ என்ற படத்தை தயாரித்தார்.
பின்னர் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய பகுதிகளில் பல்வேறு கம்பெனிகள் மூலம் மீண்டும் நாடகங்களை நடத்தத் தொடங்கினார்.
1967, சனவரி 12-ஆம் நாள் எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் வீட்டில் எம்.ஆர்.ராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற ராதா 1967 பிப்ரவரி 12- ம் தேதி முதல் 1971 ஏப்ரல் 27 -ம் தேதி வரை சிறையில் இருந்தார். அப்பொழுது ராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. ராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின் பேரில்தான் ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, ஈ.வெ.ராமசாமி தலைமையேற்றார்
. திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்கு மேடை, ரத்தக் கண்ணீர், லட்சுமி காந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார்.
ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் ஈ.வெ.ராமசாமி யின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டனர்.
இக்காலத்தில் தான் எம்.ஆர்.ராதா திருச்சிக்கு வந்து செல்ல தொடங்கினார். தஞ்சாவூரில் இருந்த நாடகக்குழு திருச்சி வந்தது. திருச்சியில் புதிய நாடகத்தை நடத்த எண்ணிய ராதா, திருவாரூர் கே.தங்கராசு எழுதிக் கொடுத்த ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தை நடத்தினார்.

இந்தநாடகம் 1949-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி திருச்சியில் கி.ஆ.பெ விசுவநாதம் தலைமையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நாடகம் தான் ராதாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 15ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் காங்கிரஸ் பிரமுகர்
பி.ஏ.பெருமாள் முதலியார் ரத்தக்கண்ணீர் நாடகத்தை ராதாவை வைத்தே திரைப்படமாக எடுத்தார்.
இப்படம் தமிழகத்திலும், சிங்கப்பூர், இலங்கை, ஆகிய நாடுகளிலும் பெரும் வெற்றி பெற்றது. பிறகு தொடர்ந்து பல படங்கள் வெளிவரவே 1959-ம் ஆண்டு முதல் 1965-ம் ஆண்டு வரை திரைப்பட உலகில் ராதாவின் புகழே கொடி கட்டிப் பறந்தது. 1937 முதல் 1979 வரை ராதா 125 படங்களில் நடித்திருந்தார்.
‘ரத்தக் கண்ணீர்’, ‘தூக்கு மேடை’, ‘லட்சுமி காந்தன்’, ‘பம்பாய் மெயில்’, ‘விமலா’, ‘விதவையின் கண்ணீர்’, ‘நியூஸ் பேப்பர்’, ‘தசா வதாரம்’, ‘போர் வாள்’ போன்ற நாடகங்களை நடத்தினார். இவற்றில் மிகவும் புகழ் பெற்றது ‘ரத்தக்கண்ணீர்’ 3,500 தடவை மேடை ஏறிய நாடகம் இது.
திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ராதா திருச்சியை தனது சொந்த ஊர் போல நினைத்து பல ஆண்டுகளாக திருச்சியிலேயே வசித்து வந்தார். சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனது வீட்டை எம்.ஆர்.ராதா காலனி என்று பெயர் வைத்தார். அங்கு தனது மூத்த மகன் எம்.ஆர்.ஆர். வாசுவுக்கு திருமணம் நடத்தினார். திருச்சியில் ராதாவின் நாடகங்களை ‘மலைக்கோட்டை மணி’ என்பவர் நடத்தி வந்தார். தேவர் மன்றத்தில் 1952-ல் ‘போர்வாள்’ என்ற நாடகத்தை ராதா நடத்திய போது தான், அவருக்கு ‘நடிகவேள்’ என்ற பட்டத்தை பட்டுக்கோட்டை அழகிரிசாமி வழங்கினார். மேலும் திருச்சியில் தான் ராதாவிற்கு ‘கலைத்தென்றல்’ பட்டத்தை குன்றகுடி அடிகளார் வழங்கினார்.
ராமாயணமா? கீமாயணமா?
ஈ.வெ.ரா.பெரியார் மீதும், அவருடைய கொள்கைகள் மீதும் மிகுந்த பற்று உடையவர், ராதா. தன் நாடகங்கள் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். “ராமன் ஒரு குடிகாரன். மாமிசம் சாப்பிடுகிறவன்” என்று சித்தரிக்கும் ராமாயணத்தை ராதா நடத்தினார். அதை “கீமாயணம்” என்று பிறர் வர்ணித்தபோது, “நான் நடத்துவதுதான் உண்மையான ராமா யணம். ராமனை நல்லவனாகச் சித்தரிப்பது தான் கீமாயணம்” என்று கூறுவார், ராதா.
ராதாவின் ராமாயணம் நாடகத்திற்கு அரசு தடை விதித்தது. இந்நிலையில் திருச்சி தேவர்மன்றத்தில் 1954-ல் டிசம்பர் 11-ம் தேதி ராமாயாணம் நாடகத்தை நடத்தப் போவதாக அறிவித்தார். அதற்கு திருச்சியிலும் தடை விதிக்கப்பட்டது. இத்தடையை மீறி டிசம்பர் 18-ல் மீண்டும் ராமாயணம் நாடகத்தை தேவர் மன்றத்தில் நடத்தப் போவதாக அறிவித்தார். ஆனால் நாடகம் நடத்தவிடாமல் அவர் வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு தனது நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் புரட்சிகளை ஏற்படுத்தினார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், செப்.17-ம் தேதி காலை 7.25 மணிக்கு இறந்தார். அப்போது அவருடன் அவரது மனைவிகள் சரஸ்வதி, தனலட்சுமி, மகன் ராதாரவி ஆகியோர் இருந்தனர்.
எம்.ஆர்.ஆர்.வாசு சென்னையில் இருந்து வந்தார். பின்னர் அவரது உடல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம், இசை அமைப்பாளர் கங்கை அமரன், மலேசியா வாசு தேவன், ராதிகா உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராதாவின் மறைவுக்குப் பின்னர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது காலனியில் ரூபாய் ஒரு லட்சம் செலவில் ‘நடிகவேள் ராதா நினைவகம்’ அமைக்கப்பட்டது. நினைவகத்தின் உள்ள ரூ25 ஆயிரம் செலவில் அவரது மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவகத்தையும், சிலையையும் கடந்த 1985-ம் ஆண்டு ஜுலை மாதம் 21ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது அக்காலனியில் ராதாவின் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஞானாம்பாள் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களே அக்காலனியையும் பராமரித்து வந்தனர்.
சமீபத்தில் நடிகை ராதிகாவின் அக்கா அந்த காலனி முழுவதையும் அப்பாட்மெண்ட் கட்டுவதற்கு விற்று தற்போது எம்.ஆர்.ராதா இருந்தற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அடுக்கு மாடி குடியிருப்பாக மாறியுள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் எம்.ஆர்.ராதாவுக்காக சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
