தமிழ் வேட்டியை போல, அது தமிழனின் மானத்தைக் காப்பாற்றும்

0
gif 1

தமிழகத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டபோது,” தமிழ் வேட்டி போன்றது என்றால் “இந்தி சட்டைபோல இன்றியமையாதது என்று ராஜாஜி கூறினார். அதற்கு உண்மைதான் தமிழனுக்கு தமிழ் வேட்டி போல இன்றியமையாதது தான்.அதை வைத்துக்காப்பாற்றினாலே அவர்களின் மானத்தைக் கப்பாற்றும்.அதை விட்டு விட்டு இந்தி என்ற சட்டையை மட்டும் அணிந்து தமிழ் வேட்டி இல்லாமல் இருப்பார்களே ஆனால் அதை விட அவமானம் வேறு ஒன்றும் இல்லை என்று சாட்டையடி கொடுத்தார் திருச்சியைச் சேர்ந்த முத்தழிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.

தமிழுக்குத் தொண்டு செய்த தமிழறிஞர்கள் பலர் வாழ்ந்து மறைந்துள்ளார்கள்.அவர்களில் பேச்சு, எழுத்து, அரசியல், சமுகசேவை, போராட்டங்கள் என அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்கியவர்கள் ஒரு சிலரே அதில் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் பிள்ளை தலைச்சிறந்தவர். தமிழின் சிறப்பையே தம் வாழ்வின் சிறப்பாகக் கருதி அதற்காக அயராது உழைத்தவரை நம்ம திருச்சி இதழின், திருச்சியின் அடையாளங்கள் பகுதியில் பார்ப்போம்.


கடந்த 1899-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி திருச்சி பெரியண்ணப்பிள்ளை-சுப்பம்மாள் தம்பதியருக்கு 16வது மகனாகப் பிறந்தார். இவரின் குடும்பம் வறுமையில் வாட, அதனால் காரணமாக பள்ளிக்கு சென்று பாடம் கல்வி பயில இயலாத நிலையில், திண்ணைப் பள்ளி ஆசிரியர் மருதமுத்து என்பவரிடம் 5 ஆண்டுகள் தமிழ் எழுத்தும் கணக்கும் கற்றார்.

gif 3

“திரிதிபுரம்” என்ற சித்தாந்த சபையில் கி.ஆ.பெ விசுவநாதத்தின் பொதுவாழ்க்கைப் பயணம் துவங்கியது.சைவ சித்தாந்த சபை வழியே கிடைத்த தமிழ் அறிர்களின் தொடர்புதான்.இவரது உள்ளத்தில் சைவப்பற்றோடு தமிழ்ப்பற்றையும் ஏற்படுத்தியது.இல்லத்திற்கு “மணிவாசகத் தமிழகம்” என்று பெயர் சூட்டினார்.

இவரின் அரசியல் வாழ்வு 1920ம் ஆண்டு இவரது 21வது வயதில் தொடங்கியது. இவரது கடின உழைப்பால் அரசியல் உச்சத்துக்கு வந்தார். நீதிக் கட்சி திராவிடர் கழகமாக இருக்க வேண்டும் என்றார், ஆனால் அது ஏற்கப்படவில்லை.இந்நிலையில் தமிழா?அரசியலா? என்ற கேள்வி எழுந்தபோது அரசியலைத் துறந்து தமிழின் பக்கம் நின்றார். தமிழுக்காக அரசியலில் பங்குகொண்டு,பின்பு தமிழுக்காக அதே அரசியலைத் துறந்த கி.ஆ.பெ.விசுவநாதம், தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை,முதல்வர் கருணாநிதி,ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அதனால் தான் செய்ய நினைத்ததை தமிழ்ப்பணிகளுக்காக செய்தார்.

இவர் மொத்தம் 25 நூல்களை இயற்றியுள்ளார். அளவில் சிறியதாக இருந்தாலும் இந்த நூல்கள், அரியவை.தமிழ் இனத்தின் வாழ்விற்கும் வளத்திற்கும் தமிழ்மொழியின் வாழ்வும்,வளமும்,வளர்ச்சியும் அடிப்படை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தமிழின் சிறப்பைச் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும் இந்த நூல்கள் விளங்குகின்றன.

பின்னாளில் முத்தமிழ்க்காவலர் என அழைக்கப்பட்ட கி.ஆ.பெ.விசுவநாதம்பிள்ளை ஓர் இதழாளர் என்பது பலரும் அறியாத செய்தி. கடந்த 1949ம் ஆண்டு “தமிழ்நாடு” என்ற திங்கள் இதழைத் தொடங்கி நடத்தினர். இந்த இதழ், தமிழ் மருத்துவம், தமிழ் ஆட்சிமொழி, எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் என்பதாக அமைந்திருந்தன.தமிழுக்காகத் தமிழகம் முழுவதும் மேடையேறி உழைத்த இவர். மொழிப் போராட்டம் நடந்த காலத்தில் மேடைப்பணியாற்றிய போது இவர் அடைந்த துன்பங்கள் பல,ஆனால் அவற்றையெல்லாம் தமிழுக்காக தாங்கிக்கொண்டார்.

கி.ஆ.பெ.பேச்சாற்றலில், குறித்த நேரத்தில் தொடங்குதல் ,குறித்த நேரத்தில் முடித்தல் தான் பேசும் கருத்துக்களை திறம்பட கூறுதல் எனும் தனக்கென தனியொரு அணுகுமுறையைக் கையாண்டவர். சிறுபள்ளி ஆண்டுவிழா மேடைகள் முதல் திருமண மேடைகள் வரை தமிழ்மொழி இன பன்னாட்டு உணர்வை விதைத்தார். தமிழகத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டபோது,” தமிழ் வேட்டி போன்றது என்றால் “இந்தி சட்டைபோல இன்றியமையாதது என்று ராஜாஜி கூறினார்.

gif 4

அதற்கு கி.ஆ.பெ.உண்மைதான் தமிழனுக்கு தமிழ் வேட்டி போல இன்றியமையாதது தான்.அதை வைத்துக்காப்பாற்றினாலே அது அவர்களது மானத்தைக் கப்பாற்றும்.அதை விட்டு விட்டு அவர்கள் இந்தி என்ற சட்டையை மட்டும் அணிந்து தமிழ் வேட்டி இல்லாமல் இருப்பார்களேயானால் அதை விட அவமானம் வேறொன்றும் இல்லை என்று சாட்டையடி கொடுத்தார்.

தமிழுக்குத் தொண்டு செய்யும் எந்த அமைப்புடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர் கி.ஆ.பெ என்றாலும் இவர் தாமே திட்ட மிட்டு தொடங்கிய தமிழக புலவர் குழு தனி சிறப்புடையது. கடைச்சங்கத்தில் 49 புலவர்கள் இருந்தது போல தமிழக புலவர் குழுவில் 49 புலவர்களை உறுப்பினராக்கினார்.அரசாங்க ஆட்சிமொழி நகராட்சி ஊராட்சி மன்றங்கள் தொழில் வணிகத்துறை பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் பிற கல்வி நிலையங்கள் கலைக்கூடங்கள் என எல்லாவற்றிலும் தமிழ் நிறைந்திருக்க வேண்டும் எனப் புலவர் குழுவின் வழி எடுத்துரைத்தவர் கி.ஆ.பெ.தமிழகத்துத் தமிழ் சான்றோர்களில், முத்தமிழ்க்காவலர் என்றும் பட்டம் பெற்றவர் கி.ஆ.பெ. ஒருவர் தான் தமிழுக்கு இழுக்கு நேர்கிறபோதல்லாம் அவற்றை எதிர்த்து போராடி வெற்றிகண்டார்.இப்போராட்டங்கள் தான் இவரை முத்தமிழ்காவலர் என்னும் பட்டத்திற்கு உரியவராக்கின.1956ல் நடத்த இந்தி போராட்டம் முதல் தனது 94 வயதில் கலந்து கொண்ட தமிழ் ஆட்சி இந்தி எதிர்ப்பு போராட்டம் வரை இவர் நிகழ்த்திய போராட்டங்கள் கி.ஆ.பெ ஒரு தமிழ்மொழி போராளி என்பதை எடுத்துக்காட்டும் சான்றுகளாக திகழ்கின்றன.

1937ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி திருச்சியில் கூட்டப்பெற்ற சென்னை மாநில தமிழர் மாநாட்டின் செயலாளராக கி.ஆ.பெ பணியாற்றினார் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்தபோது, அண்ணாதுரை திருப்பி பார் திருச்சியை என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதும்படி இப்போராட்டத்தில் பணியாற்றினார்.உணவே மருந்தாக மருந்தே உணவாக இருக்கிற சித்த மருத்துவத்தின் சிறப்பை வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திச் சொன்னார்.

தமிழைப் போற்றுவதும் தமிழறிஞர்களை போற்றுவதும் ஒன்றே என்பது கி.ஆ.பெ.யின் கொள்கை.தமிழுக்கு பகைவர்தன் பகைவர் என்பதோடு நின்றுவிடாமல் தமிழுக்கு உற்றார் என்பதையும் வாழ்வில் கடைப்பிடித்தார்.ந.மு.வேங்கட சாமிநாட்டார் மறைமலை அடிகள் பண்டிதமணி கதிரேசசெட்டியார் ஓளவை சு.துரைசாமி பிள்ளை பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தமிழறி ஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றிப் பெருமைப்படுத்தியவர் கி.ஆ.பெ. வசதியும் வாய்ப்பும் இருந்தபோதும் கூட தன் சொந்த பணிகளாக இருந்தாலும் பொது பணியாக இருந்தாலும் பேருந்தில் சென்று வந்த எளிமைக்கு சொந்தக்காரராக இருந்தார்.பொதுப் பணிக்கு ஏற்பாடு செய்பவர்கள் மகிழ்வுந்து எதற்கு?என மறுத்தார்.அதே நேரத்தில் தமிழுக்கும் பொதுப் பணிகளுக்கும் மனம் மகிழ்ந்து பொருள் கொடுத்த பண்பாளர்.

தமிழ் மொழிப்பனி மட்டுமின்றி தமிழ் சமூகத்திற்கான பல்வேறு பொறுப்புகளிலிருந்து கொண்டு பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டார் வறுமை காரணகமாக தான் பள்ளிக்கு செல்ல இயலாமல் போன நிலையை மனதில் கொண்டு ஏழைப்பிள்ளைகள் பயில வேண்டும் என்பதற்காக திருச்சி தில்லைநகரில் ஒரு பள்ளியை உருவாக்கினார். தொடக்கப்ள்ளியாக இருந்து அந்தப் பள்ளி தற்போது கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்து பல ஏழைகளைக்கு கல்வி வழங்கி வருகிறது.

கலையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கி.ஆ.பெ ஆரம்பித்த மாவட்டநலப்பணிக்குழுவும், அவர் கட்டிய கலையரங்கம் திரையரங்கும் அவர் திருச்சிக்கு ஆற்றிய சமூக பணிக்கு மற்றொரு மிகச்சிறந்த சான்றாக திகழ்கிறது. இத்தகைய முத்தமிழ்க்காவலரை சிறப்பிக்கும் வகையில் திருச்சியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கி.ஆ.பெவிசுவநாதம் பெயரைச் சூட்டி தமிழக அரசு அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. கி.ஆ.பெ வாழ்ந்த போதும் அவரது வாழ்வின் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்து நின்றது தமிழ்மொழி இன உணர்வு ஒன்றே.

தமிழை உணர்வுப்பூர்வமாக அணுகி அறிவுப்பூர்வமாகத் தெளிந்து தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றியவர் என்று இவரது வாழ்க்கையை ஓரிரு வரிகளில் சுருங்கி சொல்லி விடலாம்.இவரது 95 வது வயதில் 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி உடல் குன்றிய நிலையில் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார் .தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் 19.12.1994 அன்று காலை 7.30 மணிக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் இயற்கை எய்தினர்.

ஹிந்தி மீண்டும் வருகிறது. தமிழன் மானத்தைக்காக்க முத்தழிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் சொன்ன வார்த்தைகள் மீண்டும் நிற்கிறது கம்பீரமாக. தமிழ் மொழிக்காக வாழ்நாளெல்லாம் உழைத்த முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.வியை நம்ம திருச்சி இதழ் பெருமையுடன் நினைவு கூறுகிறது.

gif 2

Leave A Reply

Your email address will not be published.