அச்சுதான் ஊடகங்களுக்கு அச்சாணி!

0
D1

“இனிமேலே பிரிண்டெல்லாம் வேலைக்கு ஆவாது சார். விஷூவல் மீடியா வளர்ந்துடிச்சி. எல்லாரும் ஆன்லைன்தான் பார்க்குறான்” என்று, ‘இப்போவெல்லாம் யாரு சார் சாதி பார்க்குறா?’ ரேஞ்சுக்கு பேசுகிறார்கள்.
பிரபலமான ஊடகங்களின் முதலாளிகளுக்கே கூட இந்த எண்ணம் இருப்பதாகதான் தோன்றுகிறது.

பல நண்பர்களும், “பிரிண்டுலயா இருக்கீங்க? ஏதாவது டிவி சேனலுக்கு போயிடலாமே?” என்று பரிதாபப்பட்டு அட்வைஸ் செய்கிறார்கள்.
வெயிட் எ மினிட் ஜென்டில்மென்.

2006-ல் இந்தியாவில் நாளிதழ்களின் விற்பனை 3.9 கோடி.

D2

2016 இறுதியில் அது 6.28 கோடியாக உயர்ந்திருக்கிறது.

அதாவது வருடத்துக்கு சராசரியாக 4.87 சதவிகிதம் நாளிதழ் விற்பனை மட்டுமே அதிகரித்துக் கொண்டே போகிறது (தென்னிந்தியாவில் மட்டுமே 4.95 சதவிகிதம்) – ஆதாரம் : ABC July – Dec. 2016.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் தினசரி பத்திரிகைகளின் விற்பனை 2 கோடியே 37 லட்சம் பிரதிகள் உயர்ந்துள்ளதாக ஆடிட் பீரோ ஆப் சர்க்குலே‌ஷன் அறிவித்துள்ளது.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பத்திரிகைகளின் விற்பனையை இந்த அமைப்பு கணக்கிடும். ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு கால அளவாகவும், ஜூலை முதல் டிசம்பர் வரை மற்றொரு கால அளவாகவும் நிர்ணயித்து, ஆண்டுக்கு 2 முறை பத்திரிகை விற்பனை கணக்கிடப்படுகிறது.

இந்த அமைப்பில் தினசரி பத்திரிகைகள், வாராந்திர பத்திரிகைகள் 910–ம், மேகசீன் என்ற பருவ இதழ்கள், ஆண்டு இதழ்கள் 57–ம் சேர்த்து மொத்தம் 967 பத்திரிகைகள் உறுப்பினர்களாக உள்ளன. உறுப்பினர்களாக உள்ள பத்திரிகைகளின் விற்பனையை மட்டும் இந்த அமைப்பு கணக்கிடும்.
டி.வி.க்கள், ரேடியோ, இணையதளம் உள்பட மற்ற ஊடகங்கள் போட்டியாக இருக்கும் நிலையிலும்கூட, பத்திரிகைகளின் வளர்ச்சி அமோகமாக இருப்பதாக இந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு காரணம், கல்வி அறிவு உயர்வு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தினசரி பத்திரிகைகளை படிக்கும் பழக்கம்.

N2

வீடுகளுக்கே பத்திரிகை வருவது, குறைந்த விலையில் செய்திகளை அறியும் வசதி, சரியான மற்றும் நம்பத்தகுந்த செய்திகளை வழங்குவது ஆகியவையும் பத்திரிகை எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக உள்ளன.
2006–ம் ஆண்டு 3 கோடியே 91 லட்சம் என்றிருந்த தினசரி பத்திரிகைகளின் விற்பனை, கடந்த 10 ஆண்டுகளில் 6 கோடியே 28 லட்சமாக உயர்ந்துள்ளது. அதுபோல 2006–ம் ஆண்டு 659 என்ற அளவில் இருந்த இந்திய பத்திரிகைகளின் எண்ணிக்கை தற்போது 910 ஆக உயர்ந்துள்ளது.

இந்தி பத்திரிகைகள் விற்பனை 8.76 சதவீத வளர்ச்சியையும், தெலுங்கு பத்திரிகைகள் 8.28 சதவீதம், கன்னட பத்திரிகைகள் 6.40 சதவீதம், தமிழ் பத்திரிகைகள் 5.51 சதவீதம், மலையாள பத்திரிகைகள் 4.11 சதவீதம், ஆங்கில பத்திரிகைகள் 2.87 சதவீதம் என விற்பனையில் வளர்ச்சியை அடைந்துள்ளன.

பத்திரிகை விற்பனையில் முதல் 10 பத்திரிகைகளில், தமிழில் ‘தினத்தந்தி’க்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிரிண்ட் சர்க்குலேஷன் வருடாவருடம் வீழ்ந்துக் கொண்டே போக, இந்தியாவில் மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்வதை கண்டு, விளம்பரங்களுக்காக ‘மீடியா எஸ்டிமேட்’ போடும் உலகளாவிய அட்வர்டைஸிங் ஏஜென்ஸிகளின் உயரதிகாரிகள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

இங்கே டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலைக்கு ஆகாது என்பதை ரொம்பவே லேட்டாகதான் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘பாகுபலி’, ஏன் ஆயிரம் கோடி வசூலித்திருக்கிறது என்பதை மாதிரி, இந்தியாவில் மட்டுமே பிரிண்ட் மோகம் ஏன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதற்கு சரியான காரணத்தை யாராலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

“அச்சில் வருவதற்குதான் இந்தியர்களிடையே நம்பகத்தன்மை அதிகம்” என்று குத்துமதிப்பாக ஒரு தியரியை சொல்கிறார்கள்.
“அந்த காலத்துலே குமுதம் அஞ்சு லட்சம் காப்பி போச்சு…” என்று அவநம்பிக்கையோடு புலம்பும் நண்பர்களே…
அந்த காலத்தில் ‘குமுதம்’ மட்டும்தான் இருந்தது.

‘சிநேகிதி’, ‘ஜோதிடம்’, ‘ரிப்போர்ட்டர்’, ‘பக்தி’, ‘ஹெல்த்’, ‘தீராநதி’, ’மண்வாசனை’ என்று குமுதச் செடி இப்போது ஏராளமாக கிளைபரப்பி வளர்ந்திருக்கிறது. இந்த மொத்த பத்திரிகைகளின் சர்க்குலேஷன், விற்பனை, விளம்பர வருவாய் எல்லாவற்றையும் கூட்டி, கழித்து, வகுத்து கணக்கு போட்டுப் பாருங்கள். வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பது புரியும். இதேதான் மற்ற பத்திரிகைக் குழுமங்களுக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அச்சுதான் ஊடகங்களுக்கு அச்சாணி!

 

இந்த கட்டுரை 2019 நம்ம திருச்சி மே மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது

N3

Leave A Reply

Your email address will not be published.