தீவிரவாதம் – சிறுகதை

0
Business trichy

திருச்சியில் நடைபெற்ற
‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா’
சிறுகதைப் போட்டியில் இரண்டாம்பரிசு வென்ற சிறுகதை… தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சிறுகதைகளை வாரவாரம் வெளிவரும்…

நீண்ட நாள் கழித்து நண்பனைப் பார்த்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பார்த்தீபனுக்கு நண்பன் இசாத் அலியைக் கேள்விக் கணைகளைத் தொடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் நின்ற இடம் யாராலும் கண்டுபிடிக்க முடியாத மலை அடிவாரத்திலுள்ள குகை வெளியே மழைப் பொழிய துவங்கியது.
“ஏன்டா, இப்படி ஆயிட்ட நீ, உனக்கு என்ன பிரச்சனை, உன்னைத் தேடி நான் எங்கெல்லாம் திரிஞ்சேன் தெரியுமா? ஆனால் நீ இந்த தீவிரவாதக் கூட்டத்தில் சேர்ந்து நம் நாட்டுக்கெதிரா எப்படிடா உன்னால வேலை பார்க்க முடியுது? சொல்லுடா, சொல்லு”

loan point

கேள்விகேட்ட நண்பனைப் பார்த்துக் கொண்டிருந்த இசாத் அலியின் நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கி உருண்டோடின.
ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் இசாத் அலி படிப்பில் படுசுட்டி. வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் வாங்குவான். விளையாட்டிலும் அவனே முதல் இடம். அவனின் நெருங்கிய நண்பன் பார்த்தீபன். அவனும் இவனுக்கு நிகர். இருவருக்கும் அதிக வித்தியாசம் இசாத் அலி மிக மென்மையானவன், அதிக ரசனைத்தனம் கொண்டவன். அவனின் கவிதைக்கு மயங்காதவர்கள் பாஷை தெரியாதவர்களாக இருப்பர்.
கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகே வாழ்க்கையின் யதார்த்தம் இசாத்தை வாட்டி வதைக்கியது.

nammalvar

வேலை தேடி சென்ற இடமெல்லாம் இவனுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. கிடைத்த வேலையும் பாதியில் பறிபோனது. திறமை அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலை இவனிடம் ஏதோ சிபாரிசு கடிதமும், பணமும் இல்லாத காரணத்தால் கிடைக்காமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது.
நண்பன் பார்த்தீபனோ படிப்பிற்கும் செய்யப்போற வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டுக்குப் பறந்தான்.

வாழ்க்கையின் விரக்தியில் ஓட்டிக்கொண்டிருந்தான் இசாத் அலி. அவனுக்கு மிகப் பேரிடியாக செய்தி வந்தது. அது அவனின் தந்தை முசாரப்க்கு நெஞ்சு வலி.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தந்தைக்கு இதயத்தில் பல இடங்களில் அடைப்பு. அதை சரிசெய்ய பல இலட்சங்கள் தேவைப்படுகின்றன.

பணம் வேண்டி சென்ற இடங்களில் எல்லாம் ஏமாற்றமே மிஞ்சியது. அம்மாவின் அழுகை மனதைத் தாக்க வீட்டிற்குப் போகாமல் தவிர்த்தான். மருத்துவமனையில் தந்தையின் முகம் கண்டு தவித்தான். எங்கும் செல்லாமல் அவனுக்குப் பிடித்த பூங்காவிற்கு சென்று தனியாக ஒரு பென்ஞ்சில் அமர்ந்தான். மாலைவேளை என்பதால் பரவலாகக் கூட்டம் இல்லை. ஆங்காங்கே சிலபேர் மட்டுமே இருந்தனர்.
“அஸ்லாம் மலேக்கும், அலி ஏன் சோகமாக உட்காந்திருக்க?” என்றார் பெரியவர் ஒருவர்.

பார்க்க வாட்டசாட்டமாக ஆனால் கண்களில் ஏதோ ஒரு சொல்ல முடியாத வேங்கையின் பார்வை.

“மலேக்கும் அஸ்லாம், பாய் ஒன்றுமில்லை” என்று கூறி யார் என்ற கேள்வியுடன் பார்த்தான் இசாத்.

“உன் அப்பாவின் மருத்துவ செலவுக்குப் பணம் வேண்டும். அது கிடைக்கவில்லை என்பதற்காக இவ்வளவு சோகமாகவா இருப்பது” என்றார் பெரியவர்.

ஆச்சரியப் பார்வையுடன் “யார் நீங்க, என்னைப் பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான் இசாத்.

“அலி எனக்கு இது மட்டும் இல்ல. நீ யார், எங்க படிச்ச, எங்கெல்லாம் வேலை தேடின, உன்கிட்ட உள்ள திறமை என்ன எல்லாமே எனக்குத் தெரியும்” என்றார் பெரியவர்.

மேலும், “நீ என்கிட்ட வேலை பார்த்தால் உன் குடும்பத்தை நான் வாழ வைக்கிறேன். உன் அப்பா ஆப்ரேசன் செலவை நான் ஏத்துக்கிறேன்” என்றார்.

“யார் சார் நீங்க? என்னைப் பத்தி எல்லாமே தெரியுமா? எனக்கா நீங்க ஏன் இவ்வளவு செய்யுறீங்க? எனக்கு என்ன வேலை தரப்போறீங்க?” என்றான் இசாத்.

என்னோட இயக்கத்தில் உன்னை மாதிரி நிறைய இளைஞர்கள் தேவைப்படுறாங்க. எங்க இயக்கத்துக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டியிருக்கு. நாங்க யாருன்னு இந்த உலகத்துக்குக் காட்டவேண்டிய தருணம் இது” என்று ஆவேசமாகப் பேசினார் பெரியவர்.

web designer

“உங்க இயக்கம் அப்படினா என்ன? எந்த மாதிரி வேலையை செய்யுறீங்க?” என்று கேட்டான் இசாத்.

சற்றுத் தாழ்வான குரலில் “தீவிரவாத இயக்கம், எங்கள் வேலை எங்களுக்காக ஒரு நாட்டை உருவாக்குவது” என்றார் பெரியவர்.
அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான் இசாத்.

மழைப் பெய்து கொண்டிருந்தது அதிர்ச்சியுடன் நண்பன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் கோபமாகப் பேசத் தொடங்கினான் பார்த்தீபன்.

“ஏன்டா, அவன் பணம் கொடுத்தானு நீ அவன் இயக்கத்துல சேர்த்து இப்படி நம்ம நாட்டுக்கு எதிராக வேலை செய்யிறியே உன்னை மாதிரி கேவலமான ஒரு மனிதனைப் பார்த்ததேயில்லை.

சொந்த நாட்டை விட்டு, வளர்ந்த வீடு, பழகின நண்பர்கள் என எல்லாரையும் பிரிச்சிப்போய் அனாதை மாதிரி வெளிநாட்டு வேலை செய்யறது எல்லா ஒரு வேலையானு மனசு வெறுத்துப்போய் நம்ம நாட்டுலேயே ஏதோவொரு வேலையைப் பார்க்கலாம். முடியலன்னா பெட்டிக்கடையாவது வைத்துப் பிழைப்பை ஓட்டலாம்னு திரும்பி வந்துட்டேன்.

வந்ததும் உன் ஞாபகம் உன்னைத் தேடி வீட்டுக்குப் போன வீட்டைக் காலி பண்ணிப் போயிட்டேன்னு சொன்னாங்க. எங்கெங்கோ உன்னைத் தேடினேன். நீ கிடைக்கல. கடைசியா நான் இந்த ஊருல உள்ள என் மாமா வீட்டுக்கு வந்தேன். அப்போ நீ ரோட்டோரத்தில் நடந்துப் போன. பார்த்து உன் பின்னாடியே வந்தேன்,

ஆனா உன் நடையில வேகம் அப்போ நான் கேட்ட சத்தம் அம்மாடி என்னோட ஈரக்குலையே நடுங்குது, எத்தனை பேர் செத்துப்போயிருப்பாங்களோ அந்த குண்டு வெடிப்புல உன் பின்னாடியே வந்ததுனாலதான் என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது. நீதான் இதற்குக் காரணம், சொல்லுடா எப்படி உன்னால செய்ய முடிஞ்சது” ஆவேசமாகக் கத்தினான் பார்த்தீபன்.

சாதாரணமாக “அது மிக சின்ன குண்டுவெடிப்பு. அதனால எந்த உயிர்சேதம் நடந்திருக்காது, கவலைப்படாதே, இது ஆரம்பம் என காமிக்க மட்டுந்தான். நீ முதல்ல இடத்தைக் காலிப் பண்ணு, நான் எங்க இடத்துக்குப் போகனும், இதுக்குமேல நீ என்னைத் தொடர்ந்து வரக்கூடாது” என்றான் இசாத் அலி.
“முடியாது, நான் நீயில்லாமல் போகமாட்டேன். இப்பவே நீ என்கூட வா, இந்த நரகத்தை தலையோட முழுகிட்டு வா. நாம இந்த ஊரை விட்டுப் போயிடலாம்” எனக் கூறிக் கொண்டிருந்தவனின் முகத்தில் ஏதோ அழுத்தியதுப் போல் இருந்தது. அப்படியே மயங்கி சரிந்தான்.
மீண்டும் பார்த்தீபன் கண் விழித்த பொழுது இருள் சூழ்ந்திருந்தது.

என்ன நடந்தது என யோசிக்க பார்த்தீபனுக்கு சற்றுநேரம் சென்றது.
உண்மை உரைக்க பட்டென எழுந்தான். அவன் மீது ஒரு போர்வை போர்த்தியிருந்தது. அருகில் குளிருக்கு இதமாக தீ மூட்டப்பட்டிருந்தது. அதன் அருகில் ஒரு கடிதம். அதில்

“அன்புள்ள நண்பா,

நீ என்னைத் தேடி கண்டுபிடித்துவிட்டாய். நான் யார் என்று தெரிந்தும் நீ என்னைக் காப்பாற்றவே துடித்தாய். எனக்குத் தெரியும். நீ என்மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளாய் என்று. ஆனால் நான் சென்றுகொண்டிருப்பது ஒற்றையடிப் பாதை. இதில் சென்ற நான் திரும்பி வர இயலாது.

ஆனால் என் ஆருயிர் நண்பனே நான் உன்னை நேசிப்பது போலவே என் தாய்த்திருநாட்டையும் நேசிக்கின்றேன். நான் இந்த இயக்கத்தில் சேர்ந்திருப்பது என் நாட்டை அழிக்க அல்ல. என் நாட்டை அழிக்க நினைக்கும் இவ்வியக்கத்தை அழிக்க. பார்த்தி, நான் உனக்கு உறுதியளிக்கின்றேன்.

என்னால் என் நாட்டு மக்கள் உயிர் போகாது, அதற்கு இன்று நடந்த குண்டு வெடிப்பே உதாரணம். இந்தக் கடிதத்துடன் 2 லட்சம் பணம் வைத்துள்ளேன். அதை வைத்து நீ நன்றாக வாழ வேண்டும்.

பிரியமுடன்,
உன் நண்பன்
இசாத் அலி

கடிதத்தைப் படித்த பார்த்தீபன் வருத்தத்துடன் நகரத்தை நோக்கி சென்றான். ஊருக்குள் நுழையும் வழியில் ஒரு டீ கடையில் பரபரப்பான செய்தி ஒன்று டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு அழகானப் பெண் வாசித்துக் கொண்டிருந்தாள். காலை நடந்த குண்டுவெடிப்புத் தொடர்ந்து மாலை மலைகளுக்கிடையே பதுங்கியிருந்த தீவிரவாதிகளின் ஆயுதக் கிடங்கு மற்றும் கூடாரங்கள் வெடித்து சிதறின. அங்குப் பதுங்கியிருந்த அனைத்து தீவிரவாதிகளும் இறந்தனர்.

இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று போலீஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வு செய்யத் தொடங்கினர் என்று அடுத்த செய்தி வாசிக்கத் தொடங்கினாள்.

பார்த்தீபனுக்கு மட்டும் புரிந்தது. அது தன் நண்பனின் தியாக செயல் என்று கண்களில் கண்ணீருடன் கையிலிருந்த பணத்தைப் பார்த்தான்.

அருகிலுள்ள அனாதை ஆசிரமத்தில் அதைக் கொடுத்துவிட்டு தன் சொந்த ஊருக்கு பஸ்சில் ஏறி பயணிக்கத் தொடங்கினான். அவன் மனதில் மட்டும் ஆறாத வடுவாக இருப்பான் இசாத் அலி.

எஸ். காயத்திரி
நான்காம் ஆண்டு பி.எஸ்.சி ஊட்டசத்து,
டாக்டர்.ஜி. சகுந்தலா செவிலியர் கல்லூரி

 

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

IAS academy

Leave A Reply

Your email address will not be published.