சாம்பியன்களை உருவாக்கும் சாம்பியன்

0
1

நேற்று நான் சாம்பியன்… இன்னைக்கு பல சாம்பியன்களை உருவாக்குகிறேன். தமிழகத்தின் முதல் பெண் பயிற்சியாளர் திருச்சி ஞானசுகந்தி.

பல மாணவர்களை விளையாட்டில் ஜெயிக்க உந்து சக்தியாக விளங்கும் தமிழகத்தில் மாணவர்களுக்கான முதல் பெண்பயிற்சியாளரும், திருச்சி வீராங்கனையுமான ஞானசுகந்தியை நேரில் சந்தித்து பேசினோம்.
திருச்சி புள்ளம்பாடி தான் சொந்த ஊா். அப்பா ஆஷ்வால்டின், அம்மா ஈக்லின், அப்பா டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றியதால் பள்ளிப் படிப்பை டால்மியா பள்ளியில் படித்தார்.

இயல்பாகவே விளையாட்டின மீது ஆர்வம் இருந்ததால் சிறுவயதில் பள்ளி முடிந்த உடன் மாணவர்களுடன் போட்டி போட்டு கொண்டு பள்ளியின் நுழைவாயில் கதவை யார் முதலில் தொடுவது என்று ஓடிக்கொண்டிருந்த எனக்கு நாளுக்கு நாள் அதை சாதாரண விளையாட்டாக இல்லாமல் அதை முழுநேரமாக மாற்றினேன். அப்பா காலை 5 மணிக்கு எழுப்பிவிட்டு விளையாட்ட மைதானத்திற்கு செல்ல ஊக்கப்படுத்துவார். நீ படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை விளையாட்டை முழுமையாக விளையாடு என்று கூறுவார். அவர் கொடுத்த தெம்பு தான் முதன் முதலாக 7ஆம் வகுப்பு படிக்கும் போது நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று திருச்சி மண்டல அளவில் தங்க பதக்கம் வென்றேன்.

அதன்பின் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்றேன். 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் 100 மீட்டர் தடை தாண்டி ஓடுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று 3 போட்டிகளிலும் தங்கபதக்கம் பெற்று சேம்பியன் பட்டம் பெற்றேன்.

அதன்பின் திருச்சி புனித சிலுவை கல்லூரியில் எனக்குக் கட்டணமில்லாமல் கல்லூரி படிப்பை தொடர வாய்ப்பு கொடுத்தது. 3ஆண்டுகளும் கட்டணம் இல்லாமல் படித்து, இளங்கலை பொருளாதாரம் முடித்தேன். இந்தக் காலகட்டத்தில் அண்ணா விளையாட்டு அரங்கிற்கு, பயிற்சி செய்ய வரும் நாட்களில், 1987-96 ம் ஆண்டு, உயரம் தாண்டுதலில் தேசிய அளவிலான வீரராக விளங்கிய அண்ணாவியின் மீது காதல் வயப்பட்டு 9 வருடங்கள் காதலித்தோம்.

கடந்த 1996-ம் ஆண்டு நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அவர் தேசிய அளவிலான வீரர் என்பதால் இரயில்வே துறையில் பணியாற்றினார்.

அதே காலகட்டத்தில் ஜீனியா் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பில் 400மீ தொடர் ஓட்டத்தில் வெண்கலபதக்கம் வென்றேன். இது தான் தேசிய அளவில் பெற்ற முதல் பதக்கம். என்னுடைய வெற்றிக்குப் பிறகு அரசுப் பணி வாய்ப்புகள் தேடிவந்தது. ஆனால் அதை அனைத்தையும் தவிர்த்துவிட்டேன்.

2

“அப்போது திருச்சியில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள விளையாட்டு விடுதி கண்காணிப்பாளராகவும், பயிற்சியாளராகவும் இருந்த ராமகிருஷ்ணன் அவர்களை பார்த்து நானும் பயிற்சியாளராக வரவேண்டும்” என நினைத்தேன். அதனால் கிடைத்த வேலைகள், அனைத்தையும் நிராகரித்துவிட்டு விளையாட்டில் சாதிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் பெங்களுரில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் இணைந்து பயிற்சியாளருக்கான படிப்புகளை முடித்து வெளியே வந்தேன்.

அந்தத் தேசிய விளையாட்டு கழகத்தில் படிக்க வேண்டும் என்றால், 3மாநில போட்டி அல்லது தேசிய அளவில் பங்கேற்று இருந்தால் மட்டுமே அங்குப் படிக்க வாய்ப்பு கிடைக்கும். படிப்பை முடித்து வெளியே வந்த உடன், பயிற்சியாளராக 2004ல் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள மாணவர்களுக்கான விளையாட்டு விடுதியில் பணியாற்றிட வாய்ப்புகிடைத்தது.

பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் இருந்த இடத்தில் நான் இப்போது பயிற்சியாளராக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

பயிற்சியாளர் என்பதைத் தாண்டி என்னுடைய பிள்ளைகளுக்கும் சாதிக்க வேண்டிய பல பயிற்சிகளைப் பயிற்றுவித்து வருகிறேன். முதலில் மகன் மோதி அருண் கடந்த ஆண்டு இளையோர் தேசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கபதக்கமும், இந்த ஆண்டு வெண்கலபதக்கமும் பெற்றுள்ளார். மகள் கெவினாஅஸ்வினி, கடந்த ஆண்டு நடைபெற்ற இளையோர் தேசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கபதக்கமும், இந்தாண்டு 10ஆம் வகுப்பு படிப்பததால் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றார்.

தமிழகத்தில் மாணவர்களுக்கான முதல் பெண் பயிற்சியாளர் நான் தான். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் 5சர்வதேச போட்டியாளர்களை உருவாக்கியுள்ளேன். அதில் அசாருதீன் ஜீனியா் காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கமும், நிகில் சிற்றரசு ஜீனியா் காமன் வெல்த் போட்டியில் தங்க பதக்கமும், ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார்.
அன்புராஜா ஜீனியா் காமன் வெல்த் மற்றும் உலக இளையோர் விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார். சந்தோஷ்குமார் ஜீனியா் உலக விளையாட்டு போட்டி, இளையோர் உலக விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார். ராஜேஷ் இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்.

இந்தச் சமூகத்தில் பெண்கள் விளையாட்டில் சாதிப்பது என்பது எட்டாகனியல்ல விளையாட்டில் பெண்கள் பங்கேற்பதில் சிக்கல்கள் உள்ளதாக பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். எனக்கு அதுபோன்ற எந்த பிரச்சினையும் வந்ததில்லை. குறிப்பாக பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருப்பதாக கூறுகின்றனர்.

பெண்கள் பயிற்சியாளருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்காமல் மரியாதை என்பது குறைந்து பெண்கள் சுதந்திரமாக செயல்படுவதாக நினைத்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வரும் ஒவ்வொரு தோல்வியும் நமக்கு புதிய யுக்திகளை கற்றுத்தரும், என்னை நம்பி விளையாட்டு போட்டிக்காக என்னுடைய தந்தை அனுப்பினார் என்றால் என்மீதும், என் விளையாட்டின் மீது உள்ள நம்பிக்கை தான். எல்லாப் பெண்களாலும் சாதிக்க முடியும் அதற்கு உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி மட்டும் தேவை என்கிறார்.

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

 

3

Leave A Reply

Your email address will not be published.