அன்னை வீரம்மாள்

1
full

திருச்சியில் உள்ள அரசியல்வாதிகள் டாக்டர்கள்,வக்கீல்கள்,கலைஞர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து திருச்சியில் குறிபிடத்தக்க மனிதர்களாக வாழ்ந்தவர்களை பற்றி திருச்சியின் அடையாளங்கள் பகுதியில் பதிவு செய்து வருகிறோம். இன்றைய திருச்சியின் அடையாளங்கள் பகுதியில் திருச்சியில் சமூக வேவைக்காக வாழ்ந்து மறைந்த அன்னை வீரம்மாள் பற்றி பார்ப்போம்.

டாக்டர்கள் ,வக்கீல்கள் அரசியல்வாதிகள் ,கலைஞர்கள் ,செல்வந்தர்கள் என்று எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் தன்னலம்பாராது சமூகத்திற்காக சேவை செய்பவர்களுக்கு கிடைக்கும் பெருமையும் புகழும் அளவிட முடியாதது.அந்த வரிசையில் அன்னை வீரம்மாள் ஆதரவற்றோருக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் என கூறலாம்.
திருப்பராய்த்துறையில் 1924ம் ஆண்டு ஏழை விவசாய குடும்பத்தில் வேம்பு-பெரியக்கா தம்பதிக்கு ஏழாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு வீராயி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்ட அன்றைய காலச்சூழலில் 52 சிறுவர்கள் படித்த ஆண்கள் பள்ளியில் வீராயி மட்டுமே பெண் குழந்தை.

அங்கு படிப்பு முடித்த பின்னர் தினமும் 6 கிலோமீட்டர் நடந்து சென்று ஜீயபுரத்தில் நடுநிலைப்பள்ளியில் படித்தார்.அங்குதான் வீராயி என்ற பெயரை வீரம்மாள் என்று மாற்றினார் அந்த பள்ளியின் தலைமையாசிரியை.

poster

சிறு வயது முதலே விவேகானந்தர் ,புத்தர்,மகாவீரர் போன்ற மகான்களின் போதனைகள் காந்தியடிகளின் அன்பு,அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் வீரம்மாள்.


தொடர்ந்து குளித்தலை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும்,பின்னர் திருச்சி ஹோலிகிராஸ் உயர்நிலைப்பள்ளியிலும் படித்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வு பெற்றார்.எஸ்.எஸ்.எல்.சி முடித்த பிறகு வீரம்மாளுக்கு திருமணம் நடந்தது.4 ஆண்டுகால இல்லற வாழ்க்கையில் 2 குழந்தைகளுக்கு தாயானார் வீரம்மாள்.அப்போது கணவரின் அனுமதியுடன் அல்லூரில் ஆதிதிராவிடநல தொடக்கப் பள்ளியை நிறுவினார்.இதுதான் அன்னை வீரம்மாளின் சேவைக்கு பிள்ளையார்சுழி.

பின்னர் காலமாற்றத்தால் குடும்ப வாழ்க்கையில் தோல்வி கண்ட அன்னை வீரம்மாள் ,கணவரிடமிருந்து விலகி சேவை ஒன்றையே மூச்சாக நினைத்து முழுவீச்சில் சேவை புரிய ஆரம்பித்தார்.

அப்போது திருச்சி ரேடியோவில் நிலைய கலைஞராக பணிபுரிந்து கொண்டு வீட்டு திண்ணையை இரவுப் பள்ளியாக மாற்றி முதியோர்களுக்கு கல்வி கற்பித்தார்,அப்போது திம்மாச்சிபுரத்தில் இருந்து காமாட்சி என்பவர் தொலைபேசி அலுவலகத்தில் வேலை கிடைத்து அன்னை வீரம்மாளுடன் தங்கி பணிபுரிய ஆரம்பித்தார்.இருவருக்கும் ஒரே கருத்து சமுதாய சிந்தனை ,இதனால் இருவரும் இணைடந்து சமூக சேவை செய்ய ஆரம்பித்தனர்.

பின்னர் 1956ம் ஆண்டில் பாலர்பள்ளி ஒன்றை தொடங்கினார் அன்னை வீரம்மாள் ,இன்றுவரை இந்த பள்ளி திறம்பட நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தாழ்த்தப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்க்காக வீரம்மாளும் ,காமாட்சியும் இணைந்து தமிழ்நாடு செட்யூல்டு வகுப்பு என்ற வார்த்தை எடுக்கப்பட்டு பெண்கள் நலச் சங்கம் என்ற அமைப்பை தொடங்கினர்,பின்னர் இவரின் சமூக பணிகள் முழுவேகத்தில் தொடங்கின.

அனைத்து பெண்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 1980ம் ஆண்டு செட்யூல்டு வகுப்பு என்ற வார்த்தை எடுக்கப்பட்டு பெண்கள் நலச் சங்கம் என்ற பெயரில் செயல்பட துவங்கியது.1976ம் ஆண்டு ஆதரவற்ற25 பெண் குழந்தைகளுடன் அன்னை ஆசிரமத்தை துவங்கினார்.

ukr

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆதரவற்ற பெண் குழந்தைகள் இங்கு சேர்க்கப்பட்டனர்.குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாயிற்று .இதனால் ஆசிரமத்திற்கென சொந்தமாக ஒரு இடத்தை வாங்க முயற்சி செய்தார்.பெரும் முயற்சிக்கு பின்னர் ஏர்போர்ட் அருகே ஒரு இடத்தை அரசிடமிருந்து தானமாக பெற்றார்.சேவை மனப்பான்மையுள்ள பலரின் முயற்சியால் இங்கு கட்டடமும் கட்டப்பட்டது.

1984ம் ஆண்டு 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிற்றுவிக்க ஒரு பள்ளியை தொடங்கினார்.மேலும் திருச்சி ரேடியோவிலிருந்தும் ஓய்வு பெற்றார்.ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் தான் ஆர்ம்பித்த சேவை நிறுவனங்கலுக்கே வழங்கினார்.இப்பள்ளி 1991 ம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாகதரம் உயர்த்த்ப்பட்டது.இதே ஆண்டில் ஆதரவற்ற ஏழை முதியோர்களுக்காக முதியோர் இல்லம் ஒன்றும் தொடங்கப்பட்டது.

வீரம்மாள் தொண்டுக்கு அங்கீகாரம்
தியாகம் நிறைந்த வீரம்மாளின் தொண்டை உணர்ந்த தமிழக அரசு, திருச்சி ஜுவனைல் நீதிமன்றத்தில் 1958 முதல் பத்தாண்டுகள் முதல் வகுப்பு கவுரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும், சில ஆண்டுகள் நீதிமன்றத் தலைவராகவும் நியமித்தது. மேலும் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, பாரத சேவக் சமாஜம், கில்டு ஆப் சர்வீஸ், செஞ்சிலுவைச் சங்கம், குழந்தைகள் நல கவுன்சில், சர்வோதய சங்கம், கள விளம்பரச் செய்தி தொடர்பு மன்றம், குடும்ப நலச் சங்கம், பிச்சைக்காரர்கள் மறு வாழ்வு மய்யம், பெண்கள் பாதுகாப்பு இல்லம், மாவட்ட சட்ட உதவி சங்கம், மாநில சமூக நல வாரியம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், அரசு சம ஊதியத் திட்டம், குழந்தை அடாப்ஷன் கமிட்டி, நுகர்வோர் கவுன்சில் பேரவை, நேரு வேலைவாய்ப்புக் கமிட்டி, விஜிலன்ஸ் கமிட்டி, திருச்சி நகர அபிவிருத்தி கமிட்டி, உடல் ஊனற்றோர் மறுவாழ்வுச் சங்கம் போன்ற அமைப்புகளில் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் வீரம்மாளை அரசும், அரசு சாரா நிறுவனங்களும் நியமித்துள்ளன.

தொண்டுக்கு ஏது எல்லை!
அநீதியான சமூகத்தில் அடைக்கலம் தேடி வந்த பெண்கள், குழந்தைகள் அனைவரும் சமூக அறிவும், பொது அறிவும் பெற்று சிறந்த மனிதர்களாக வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 1956 சனவரி 26 குடியரசு நாளில் “அவ்வை நூல் நிலையம்’ என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தைத் தொடங்கினார் வீரம்மாள்.

மேலும், வீரம்மாள் உருவாக்கிய களப்பட்டியல்:
1. ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கான அன்னை ஆசிரமம் 2. இலவச பாலர் பள்ளி 3. இலவச நூல் நிலையம் வாசக சாலை 4. இலவச தையல் பூ வேலை கைத்தொழில் நிலையம் 5. இலவச குழந்தைகள் காப்பகம் 6. தட்டெழுத்துப் பயிற்சி நிலையம் 7. பிரிண்டிங் பிரஸ், புக் பைண்டிங், ஸ்கிரீன் பிரிண்டிங் 8. அன்னை மகளிர் மேல் நிலைப்பள்ளி 9. புலவர் து. தேவராசன் தொடக்கப்பள்ளி 10. பணி புரியும் பெண்கள் விடுதி 11. இலவச முதியோர் இல்லம் 12. அகர்பத்தி, சந்தனமாலை யூனிட் 13. குழந்தைத் தொழிலாளர் பள்ளி 14. பணிபுரியும் பெண்கள் விடுதி என பதினான்கு சேவை மய்யங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவே “அன்னை ஆசிரமம்’ என இயங்கி வருகிறது

82 வது வயது வரை சேவை மனபான்மையுடன் ஏழை எளியவர்களுக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து வந்த அன்னை வீரம்மாள் 2006ம் ஆண்டு காலமானார்.

உயிருடன் இருக்கும்போது பிறருக்காக வாழ்ந்தது போல இறந்த பின்னரும் தன்னுடைய உடலும் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்ற அன்னையின் விருப்பத்திற்கிணங்க அவரின் உடல் தானமாக வழங்கப்பட்டது.

தற்போது அன்னை ஆசிரமத்தின் அன்னை வீரம்மாளின் நினைவுகளுடன் சேவை பணிகள் தங்கு தடையில்லாமல் நடந்து வருகிறது. பெண்கள் தின வாழ்வில் நமக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய ஒரு சமூக போரளியின் வாழ்க்கை பதிவு செய்வதில் நம்ம திருச்சி வார இதழ் பெருமை கொள்கிறது.

அடுத்த வாரம் மற்றொரு ஆளுமையுடன்…

(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)

half 1
1 Comment
  1. Nedunchezhian T says

    நன்றி. நல்ல கட்டுரை. வாழ்த்துகள்

Leave A Reply

Your email address will not be published.