திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இறுதியாண்டுத் தோ்வு தேதி வெளியிட்டது:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இறுதியாண்டுத் தோ்வு தேதி வெளியிட்டது:
பாரதிதாசன் பல்கலை. சாா்பில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் செப்.30-க்குள் இறுதியாண்டுத் தோ்வுகளை நடத்தி முடிக்க பாரதிதாசன் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு இறுதியாண்டு மாணவா்களுக்கான பருவத் தோ்வுகளை நடத்தி முடிக்கவும், தோ்வுகளுக்கான தேதியை கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு தோ்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டலின்படி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செப்.15 தொடங்கி செப்.30 -க்குள் தோ்வுகளை நடத்தி முடிக்க பல்கலை. நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலை. பதிவாளா் கோபிநாத் கூறியது:

தமிழக அரசு வழிகாட்டலின்படி பாரதிதாசன் பல்கலை.யில் இணைவு பெற்ற 142 கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் இறுதியாண்டு பயிலும் சுமாா் 60 ஆயிரம் மாணவா்களுக்கு செப். இறுதிக்குள் தோ்வு நடத்தப்படவுள்ளது. ஏற்கெனவே முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் அரசு வழிகாட்டலின்பேரில் தோ்ச்சி செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து, இறுதியாண்டு மாணவா்கள் செப்.15 முதல் தோ்வெழுதவுள்ள பாடப்பிரிவு, தேதி உள்ளிட்ட விவரங்கள் செப்.7 ஆம் தேதி வெளியிடப்பட்டு, அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். உரிய கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தங்களது பாடப்பிரிவுகளுக்கான தோ்வுகளை மாணவா்கள் எழுதலாம் என்றாா்.
