அப்பாவின் சைக்கிள்

திருச்சியில் நடைபெற்ற ‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா’ சிறுகதைப் போட்டியில் பரிசுவென்ற சிறுகதை...

0
1

“அம்மா.. அம்மா… எங்க இருக்கீங்க” என மித கோபமாக கத்திக்கொண்டே நான் உள்ளே வந்தேன். “என்னடா ஆச்சு” அமைதியாக வந்தாள் அம்மா.

நான் வீட்டிற்கு ஒரே பிள்ளை, எனது பள்ளிப் படிப்பை வீட்டிற்கு அருகில் இருக்கும் அரசு பாடச்சாலையில் படித்தேன். இப்போது 20கி.மீ. தொலைவில் உள்ள கல்லூரியில் இறுதி வருட மாணவன். வறுமையான குடும்பம் என நான் வெளியில் சொல்லிக் கொண்டது கிடையாது.

ஏதோ அப்பாவின் தேநீர் கடையால் என் குடும்பத்தின் வண்டி ஓடுகிறது. நான் கல்லூரி சேர்ந்த நாட்களில் என் சக மாணவர்களின் கிண்டல் கேலிப் பேச்சுக்களுக்கு ஆளானவன் நான். ஆனால் அப்போது எல்லாம் வராத கோவம் இன்று அவர்கள் என் ஏழ்மையைத் தொட்டபோது எல்லை மீறிவிட்டது. “ஒரு மனிதனின் மானம் தீண்டிப் பார்க்கப்படும் போது அவன் தன்னிலை மறந்து சென்று விடுவது இயல்புதான்”.

2

“இனி நான் காலேஜ்க்குப் போறதா இருந்தா எனக்குப் புது சைக்கிள் வாங்கித் தரணும்”. “புதுசா?” உங்க அப்பாவே ஒரு பழைய சைக்கிளை வச்சுதான் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்காரு. அந்த மனுசன்கிட்ட போய் புதுசு வாங்கித் தான்னு சொன்னா அவரு எங்கப் போவாரு.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குப் புதுசு வேணும். இனிமேல் பஸ்ல எல்லாம் என்னாலப் போகமுடியாது. ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கேலி பண்றாங்க” என்று கோபத்தோடு அறைக் கதவை அடைத்துவிட்டு உள்ளே போய் படுத்துக் கொண்டேன்.

தன் பழைய புராணங்களை அப்பா ஒருபோதும் பகிர்ந்து கொண்டது இல்லை. அம்மா தான் அடிக்கடி அப்பாவின் பழைய ஏடுகளை வாசிப்பான். அப்போதெல்லாம் “அம்மா… உன்னோட அறுவைய்ய நிப்பாட்டுறியா” என்று முற்றுப்புள்ளி வைத்து விடுவேன். இப்போது என் தேவை எல்லாம் கல்லூரி போக சைக்கிள் அதுதான். அது மட்டும் தான். கணநேர சிந்தனைக்குப் பிறகு அப்பாகிட்ட கடைக்குப் போய் விஷயத்த சொல்லிட்டு வந்திருவோம்னு அம்மாகிட்ட சொல்லாமலேயே கிளம்பி விட்டேன். அப்பாவின் கடை வீட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருந்தது. கோவமும், ஆத்திரமும் உந்த ஒரு வழியாக நடந்தே வந்து சேர்ந்து விட்டேன்.

“அப்பா… அப்பா…”

எப்போதும் கேட்கும் அதே கேள்விதான். நானும் எதிர்பார்த்தது தான். “இங்கயெல்லாம் நீயேன் வர்ற” என்றார். “உங்களோட கொஞ்சம் பேசனும்”. “எதுவா இருந்தாலும் வீட்டுல பேசிக்கலாம்” என்று கூறினார். “இல்லப்பா…”

“தன் கஷ்டங்களை எந்த அப்பாக்களும் தன் பிள்ளைகளுக்குக் காட்டியதில்லை” என் அப்பாவும் விதிவிலக்கானவர் அல்லவே. “சரி” அதற்குமேல் ஒன்றும் பேச அவர் இடம்தரவே இல்லை.

நான் அங்கிருந்து சற்று நகர்ந்தேன். . . நில்லுடா நடந்தா வந்த… “என்னோட சைக்கிளைக் கொண்டு போ” என்று கூறினார். பின் கடைக்கு வந்த ஒருவரைப் பார்த்து “இது என்னோட பிள்ளை, காலேஜ் படிக்கிறான்” என்று பெருமையாகக் கூறுவதைக் கேட்டேன்.

ம்… சைக்கிள்!!! அப்படி சொல்ல மிச்சமா அதுல இரண்டு சக்கரம் மட்டுமே இருந்தது. பல இரும்புப் பொருட்களை ஒட்டவச்ச மாதிரி இருந்துச்சு. மேலும் அதுல ஆயிரம் இடங்களில் பஞ்சர் போடப்பட்டு இருந்தது.

இத ஓட்டிக்கிட்டு வீட்டுக்குப் போறதுக்கு நடந்தே போலாம்னு தோணுச்சு… ஆனா 3 கி.மீ. அதான் சைக்கிளை எடுத்து… மிதித்து…

ஒருவழியா வீடுவந்து சேர்ந்துவிட்டேன். இப்போது ஒரு எண்ணம்… நான் சைக்கிள் வாங்குவதைவிட “வேலை கிடைச்சதும் அப்பாவுக்கு முதலில் நல்ல வண்டி ஒன்று வாங்கணும்”. உங்களுக்கும் அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் அப்பாவின் சைக்கிளையோ, வண்டியையோ ஒருமுறை ஓட்டிப் பாருங்கள்..

 

செ.ரக்ஷந்தா

பிஷப்ஹீபர் கல்லூரி

3

Leave A Reply

Your email address will not be published.