மாற்றமாய் மாறிய மாணவி..! – மாணவி சிந்து

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம் சமூகப் பணிகளை மேற்கொள்ளும் மாணவி

0
1 full

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பது இன்றைய சமூகத்தில் தேவையில்லை. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் உணவினை பகிர்வோம் என்பதே இன்றைய கால சூழலில் தேவையானதாக இருக்கிறது. பகிர்ந்து விடுவோம் என்பதை இன்றைய காலச் சூழலுக்கு தேவையானதாக இருக்கிறது. இதையே எங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

எனது குடும்பம்

எனது பெயர் சிந்து, என் அப்பா ஷேப்பாக உள்ளார், அம்மா ஹவுஸ் வொய்ஃப் ஆக உள்ளார். எனக்கு ஒரு அக்காவும் உள்ளார்கள். நான் ஹோலி கிராஸ் கல்லூரியில் MSW துறையில் இறுதியாண்டு படிக்கிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பிறருக்கு செய்வது உதவி அல்ல, அது என்னுடைய கடமை என்பதை உறுதியாக கொண்டே நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

2 full

சிறுவயதிலேயே ஆரம்பம்

பள்ளி படிக்கும் பொழுதே நண்பர்களுடன் இணைந்து நாங்கள் தினம் தினம் வீட்டில் பெற்று வரும் ஐந்து ரூபாய் பத்து ரூபாய்களைச் சேகரித்து. அதைக்கொண்டு மாதமொருமுறை முதியோர் இல்லங்கள் அனாதை இல்லங்களுக்கு சென்று உதவுவது எங்களுடைய வழக்கம். இதுவே என்னுடைய முதற்கட்ட பணியாக அமைந்தது. இப்படி தினம் தினம் எனக்கு வீட்டில் கொடுக்கும் பணத்தை வைத்து சாலையோரம் இருக்கும் ஒரு நபருக்காவது உணவுப் பொட்டலங்கள் வாங்கி தருவேன்.

முதல் முயற்சியில் பாராட்டு

இதுவே என்னை MSW படிக்கத் தூண்டியது. இந்த சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முதலில் நாம் மாற வேண்டும் என்று எண்ணினேன். ஆரம்பத்தில் தனியாளாக சென்ற மரம் நடுவது, சாலையோர மக்களுக்கு உணவு வழங்குவது, இவ்வாறு செய்த பணிகளை முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் பதிவு செய்தேன். அதைப்பார்த்து பலரிடமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வந்தன. அப்பொழுது சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வாலண்டியராக செல்ல தொடங்கினேன். இவ்வாறாக பணிகளை மேற்கொள்ளும் சமயத்தில் தான்  இதை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டுமென்று  எண்ணிய சமயத்தில் அறக்கட்டளை தொடங்கலாம் என்ற எண்ணம் வந்தது.

அறக்கட்டளை தொடக்கம்

அந்தக் காலகட்டத்தில்தான் 2019 ஜூலை 12 அன்று, ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையை தொடங்கினேன்‌. அதை நான் தனியாகவே தொடங்கினேன்.தினமும் தனியாகவே சென்று பணிகளை மேற்கொண்டு அதை முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும்  பதிவு செய்தேன். அதை பார்த்த என்னுடைய கல்லூரி நண்பர்களும் அண்ணன்களும் என்னோடு இணைந்து பணியை மேற்கொள்ள வந்தனர்.  அன்று முதல் ஒரு அமைப்பாக  ஒருங்கிணைந்து செயல்பாடுகளை செய்ய தொடங்கினோம்.

அறக்கட்டளை பணிகள்

‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை மூலமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு உணவளிப்பது, குழந்தை காப்பகங்களுக்கு சென்று  உணவளிப்பது. முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவளிப்பது. பனை விதைகளை சேகரித்து பள்ளிகள், கல்லூரிகள், கிராமப்புறங்களில் பராமரிப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து மரம் நட்டு வளர்ப்பது போன்ற பணிகளையும் மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவது, மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு மருத்துவ உதவி பெற்று தருவது போன்ற பணிகளை செய்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக  தமிழகம் முழுவதும் ரத்தம் தேவை என்று கேட்பவர்களுக்கு பிற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இரத்தம் பெற்றுத் தந்து வருகிறோம்.

இப்படி தினமும் தினமும் எங்களுடைய பயணம் விரிவடைந்து  சென்று கொண்டிருக்கிறது. இப்பொழுது 20 முதல் 25 வாலண்டியர்கள் நாம் எப்பொழுது அழைத்தாலும் வந்து பணிகளை செய்து தரும் அளவிற்கு இன்று ஒரு அமைப்பாக செயல்படுகிறோம்.

உதவும் சோசியல் மீடியா

இதில் ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள் என அனைவரும் இணைந்து செயல்படுகிறோம். இதில் எங்களிடம் எவ்வித வேற்றுமையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகிறோம். எங்களுடைய பேராசிரியர்களும்  எங்களது செயல்பாட்டிற்கு பெருமளவில் ஊக்கம் அளிக்கின்றனர்.

இன்று தினம் தினம் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. பல்வேறு வகையான உதவிகளை எதிர்பார்த்து மக்கள் எங்களை தொடர்பு கொள்கின்றனர். முடிந்த அளவிற்கு தேவைகளை நிறைவேற்றி தருகின்றோம் இதற்கு பெருமளவில் பேஸ்புக்கும்  வாட்ஸ்அப்புமே  எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. பலரும் பேஸ்புக் வாட்ஸ்அப் வழியாக எங்கள் செயல்பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உதவி புரிகின்றனர்.

இப்படி பணிகளை மேற்கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உள்ளது. ஆனாலும் என்னுடைய அம்மா என்னுடைய செயல்பாடுகளை ஏற்பதில்லை. ஆரம்பக்காலத்தில் செயல்பட தொடங்கிய பொழுது “நீ ஒரு பெண் வீட்டில்தான் இருக்க வேண்டும்,  இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள கூடாது”என்று கூறி. வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய செயல்பாடுகளைப் பார்த்து பெரிய அளவில் எதிர்ப்பு காட்டுவதை நிறுத்தினார்கள். இன்று சில தனியார் தொண்டு நிறுவனங்கள் சமூகப் பணிக்காக எனக்கு சில விருதுகளை வழங்கின. அதைப்பார்த்து இன்று பெருமளவில் என்னுடைய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்றாலும் அம்மா அவர்கள் அஞ்சுகின்றனர்.  ஆனால் என்னுடைய அப்பா எனக்கு பெரிதும் உதவியாக இருக்கிறார். நான் கேட்கும்  சில உதவிகளை அவரும்,  அவருடைய நண்பர்களிடமிருந்து கேட்டும் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறார்.

இப்படியாகவே மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையில் என்னுடைய செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. மேலும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை  நண்பர்களும் அண்ணன்களும் பெரிய பங்கு வகிக்கின்றனர்.

இன்றைய பெண்கள் நிலை

மேலும் இன்றைய சமூக சூழலில் பெண்கள் களத்திற்கு வருவதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் பல்வேறு நெருக்கடிகளும் இருக்கின்றது. ஏன் அவர்களுக்கும் கூட அச்சமும் இருக்கிறது. என்னுடைய அம்மாவின் அச்சம் என்பது ஒருவகையான பாசம். இது எனக்கு மட்டுமல்ல செயல்படும் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுமே இதுபோன்ற ஒன்றை சந்தித்தே வெளியே  செயல்பட வருகின்றனர்.  21ம் நூற்றாண்டில் பயணிக்கிறோம் இன்னும் அந்த நிலை மாறவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரை என்னுடைய செயல்பாட்டிற்கு என்னுடைய அப்பாவும் அம்மாவும் நண்பர்களும் அண்ணன்களுமே பெரிய துணையாக இருக்கின்றனர். என்று மாணவி சிந்து அவர்கள் கூறினார்கள்.

பிறர் படும் துன்பத்தை துடைப்பது என்பதே மகத்தான பணி. அந்தப் பணியையும் ஒரு பெண் செய்வது என்பதும், அந்தப் பெண்ணும் ஒரு மாணவியாக இருப்பது என்பதும் மிகவும் அரிய ஒன்றாகவே இந்த 21ம் நூற்றாண்டிலும் பார்க்கப்படுகிறது. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம். என்று மடமைகளை வீழ்த்தி வெளியே வர வேண்டும். இன்று சிந்து அவர்கள் வெளியே வந்தது மட்டுமல்லாது மக்களுக்கான பணியை முன்னெடுத்து கொண்டிருக்கிறார்கள் என்பது பாராட்டிற்கு உரியது.

– க.இப்ராகிம்

3 half

Leave A Reply

Your email address will not be published.