கருத்து பயிர்கள் செழித்திருந்த திராவிடப் பண்ணை

0
1 full

காதில் விழுந்த (திருச்சி) வரலாறு

கருத்து பயிர்கள் செழித்திருந்த திராவிடப் பண்ணை

-ஆசைத்தம்பி

2 full

தமிழ்நாட்டின் வரலாற்றில் திராவிட இயக்கத்திற்கென்று ஒரு தனி வரலாறு இருக்கின்றது. திராவிட இயக்கத்தில் அரசியல் பரிணாமம் வீறுகொண்டு எழுந்தது திமுக என்றும் திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிடர் கழகத்தின் பொருளாளராக இருந்தபோதே இயக்கக் கொள்கைகளை மக்களைச் சென்றடையத் திராவிடப் பண்ணை என்னும் பதிப்பகத்தை நடத்த 20 வயது திருச்சி இளைஞனுக்கு அண்ணா என்னும் அண்ணாதுரை அனுமதி வழங்கினார். திராவிடப் பண்ணையின் சார்பில் 50 நூல்கள் வெளியிடப்பட்டன. சாதனைகளையும் சோதனைகளையும் தாங்கி வெளியிட்ட அந்த இளைஞனுக்கு இப்போது வயது 99 நிறைவடைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 22ஆம் நாள் நூற்றாண்டு விழா காண இருக்கும் அந்த இளைஞன்தான் திராவிடப் பண்ணை முத்துகிருட்டிணன். அண்ணாவோடு நெருக்கமாக இருந்த அந்த இளைஞன் கட்சியில் ஆட்சியில் எந்தப் பதவிகளையும் பெற்றிடாது, இயக்கத்தை மட்டுமே வாசித்த…. சுவாசித்த பெருமை அந்த முத்துகிருட்டிணன் என்னும் அந்த இளைஞனுக்கு மட்டுமே உரியது. அச்சடித்த நூல்களால் இந்தச் சமுதாயத்தைப் புரட்டிப் போடமுடியும் என்பதை உலகிற்குச் சொன்ன முத்துகிருட்டிணன் வரலாறு திருச்சியின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது எனில் மிகையிலா உண்மையாகும்.

கண்டியில் பிறந்த முத்து

இலங்கையின் கண்டி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, திரைப்படத்தில் மக்கள் திலகம் என்று பெயரெடுத்துத் தமிழ்நாட்டின் முதல்வராக 3 முறை தொடர்ந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.ஜி.ஆரின் பூர்வீக மண் என்பதை அறிவோம். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குச் சிலை அமைவதற்கு முன்பே, கண்டியில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டது. இலங்கை வாழ் தமிழ்மக்கள் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளைக் கண்டியில் மிகவிமரிசையாகக் கொண்டி வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரில் வீராசாமி – பொன்னம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 22.08.1921ஆம் ஆண்டு பிறந்தவர்தான் முத்துகிருட்டிணன். இவருக்கு 3 சகோதரர்கள் 3 சகோதரிகள். முத்துகிருட்டிணன் கண்டியில் பள்ளிக்கூடம் சென்று படிக்கவில்லை. தன் முயற்சியால் தானே எழுத்துக்கூட்டிப் படிக்கக் கற்றுக் கொண்டு, இளமையில் நூல்களைப் படிக்கத் தொடங்கினார். தானே எழுதவும் கற்றுக்கொண்டார்.

திருச்சியில் முத்து குடும்பம்

1932ஆம் ஆண்டு வாக்கில் முத்துகிருட்டிணன் குடும்பத்தினர் தமிழகத்தின் திருச்சியில் குடியேறுகின்றனர். இவரின் கடைசி சகோதரர் பொன்னுசாமி மட்டும் 1933ஆம் ஆண்டு வாக்கில் திருச்சியில் பிறந்தார். முத்துகிருட்டிணன் குடும்பம் தொடக்கத்தில் தெப்பக்குளம் ஆண்டாள் தெருவின் கடைசியில் உள்ள பாபு ரோட்டில் குடியிருந்தனர். தொடக்கத்தில் இக் குடும்பத்தினர் சுருட்டு (புகைப்பதற்குப் பயன்படும்) விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர். பின்னர்ச் சிறுசிறு புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்து வந்தனர்.

அண்ணாவின் நட்பு

பெரியாரின் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகள் இளைஞன் முத்துகிருட்டிணனைக் கவர்கின்றன. பெரியாரின் கருத்துகளுக்கு எழிலுட்டி பேசும் திராவிடர் கழகப் பொருளாளர் அண்ணாவின் பேச்சும் முத்துகிருட்டிணனைக் கவர்கின்றது. 1937ஆம் ஆண்டு வாக்கில் தன் 18 வயதில் இளைஞன் முத்துகிருட்டிணன் திருச்சி வந்தால் அண்ணா தங்கும் சங்கரன்பிள்ளை சத்திரத்தில் (தற்போதைய எஸ்.ஆர்.கல்லூரி சாலை) சந்திக்கின்றார். அந்தச் சந்திப்பின் நோக்கம், “அண்ணாவைப் பார்க்கவேண்டும்” அவ்வளவுதான். தனக்குப் பிடித்த அண்ணாவை முத்துகிருட்டிணன் பார்த்துவிட்டார். தன்னைப் பார்க்க வந்த இளைஞன் முத்துகிருட்டிணனை அண்ணாவிற்குப் பிடித்துவிடுகின்றது. பின்னர்த் திருச்சி வரும்போது இளைஞன் முத்துகிருட்டிணன் அண்ணாவின் இடையே நட்பு வலுப்பெற்றது. அண்ணாவின் மிக நெருங்கி நண்பர்களாக அன்பில், இராபி, எம்.எஸ்.மணி, பராங்குசம் போன்றவர்கள் முத்துகிருட்டிணனுக்கும் நண்பர்களாக மாறினார்கள். அண்ணாவின் நட்பு வட்டத்தில் முத்துகிருட்டிணனும் இணைந்தார். முத்துகிருட்டிணன் நடத்தி வந்த புத்தக வெளியீட்டு பணிகளில் திராவிட இயக்கச் சிறுவெளியீடுகளையும் வெளியிட்டு வந்தார்.

தமிழ்ப் பண்ணை

தமிழ்ப் பண்ணைக்கு எதிராக அண்ணாவால் தொடங்கப்பட்டதுதான் திராவிடப் பண்ணை என்பதால் தமிழ்ப் பண்ணையைப் பற்றி அறிந்துகொள்வது அடிப்படை தேவையாகும். 1920இல் பிறந்து இந்த மாதத்தில் காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு விழா கொண்டாடிக்கொண்டிருக்கும் சின்ன அண்ணாமலையால் தொடங்கப்பட்டதுதான் தமிழ்ப் பண்ணை. காரைக்குடியில் பிறந்து இந்திய விடுதலை தாகம் கொண்ட சின்ன அண்ணாமலை 1941-இல் சென்னையில் குடியேறினார். இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டங்கள் அடங்கிய நூல்களையும், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களையும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் பேச்சுகளை நூல் வடிவில் வெளியிடத் தியாகராய நகரில் உஸ்மான் ரோடில் இருந்த திரு. வெ. சாமிநாத சர்மா அவர்களின் இல்லத்திற்கு அருகில் காலியாக இருந்த கட்டிடத்தில்தான் தமிழ்ப் பண்ணை புத்தக நிலையம் தொடங்கப்பட்டது. 21 வயது மட்டுமே நிரம்பிய சின்ன அண்ணாமலையைப் பொறுப்பாளராகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழ்ப் பண்ணையை  1941ஆம் ஆண்டில் இராஜாஜி துவக்கி வைத்தார்.  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றி வைத்தார். சக்தி வை. கோவிந்தன் புதுக்கணக்கு எழுதினார். தமிழ்நாட்டின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் விழாவிற்கு வந்தனர். தமிழ்ப்பண்ணையின் முதல் புத்தகமான ‘தமிழன் இதயம்’ என்ற நூலைப் பார்த்து அனைவரும் பிரமிப்படைந்தனர். அப்புத்தகத்தை மிகஅழகாகப் போட்டுக் கொடுத்தவர் சக்தி வை. கோவிந்தன். தமிழ்ப் பண்ணை எழுத்தாளர்களுக்கும், தேசப் பக்தர்களுக்கும் நிழல் கொடுத்து வந்தது. தமிழ்ப்பண்ணையின் மூலம்  நாமக்கல் கவிஞர் இராமலிங்கத்திற்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது.

ராஜாஜியின் நூல்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி, வ.ரா., டி. எஸ். சொக்கலிங்கம், பொ. திருகூடசுந்தரம் பிள்ளை, நாடோடி, தி.ஜ.ர. இப்படி ஏராளமானவர்களின் நூல்களை வெளியிட்டு, பெரிய விழாக்கள் நடத்தி எழுத்தாளர்களுக்குக் கெளரவம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியது தமிழ்ப் பண்ணையே! ஆண்டுதோறும் பாரதிவிழா, பாரதி பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. திரு.வி.க. மணிவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது தமிழ்ப் பண்ணையே காந்தியடிகளின் ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் நடத்தியதும் தமிழ்ப் பண்ணையே! தமிழ்ப்பண்ணை புத்தகப் பதிப்பகத்திற்கு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் வருவார்கள். வ.ரா., புதுமைப் பித்தன், தி.ஜ.ர.  போன்றவர் தவறாமல் வருவர். தமிழ்ப்பண்ணைக்கு அடிக்கடி புத்தகம் வாங்க வந்த  நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடன் நெருங்கிய பழக்கம் சின்ன அண்ணாமலைக்கு  அப்பொழுதுதான் ஏற்பட்டது. 1969இல் அகில இந்தியச் சிவாஜி கணேசன் இரசிகர் மன்றத்தைச் சின்ன அண்ணாமலை தொடங்கினார்.

திராவிடப் பண்ணை

தமிழ்நாட்டின் திராவிட இயக்க முன்னோடிகளின் நூல்களையும் முத்துகிருட்டிணன் வெளியிட்டு வந்தார். திராவிடர் கழக மாநாடு, பொதுக்கூட்டங்களில் மட்டுமே இந்த நூல்கள் விற்பனை செய்யப்பட்டன. மக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் கோபம் கொண்டனர். காரணம் காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த பக்தி, தேசியம், இந்திய விடுதலை, புராணம் போன்ற அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. இதற்குப் பதில் சொல்லமுடியாமலும், எதிர்த்து நூல் வெளியிடும் கருத்துச் செறிவும் இல்லாத காங்கிரஸ் அரசு, திராவிட இயக்க நூல் எழுதிய ஆசிரியர்களைக் கைது செய்தது. அவர்களைத் தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைத்தது. இதனால் திராவிட இயக்கத்திற்கென்று ஒரு நூல் வெளியீட்டு நிறுவனம் வேண்டும் என்று அண்ணா எண்ணினார். அந்த நிறுவனத்தைத் திறம்பட நடத்த ஆற்றல்மிகு இளைஞர் ஒருவர் வேண்டும் …… அவர் அச்சம் இல்லாதவராக இருக்கவேண்டும்…. துணிச்சல் மிகுந்தவராக இருக்கவேண்டும்….. நூல் வெளியீட்டிற்குச் சொந்தப் பணத்தையும் செலவு செய்யும் நிதித்திறன் படைத்தவராகவும் இருக்கவேண்டும் என்று அண்ணா விரும்பிய வண்ணம் அவருக்குக் கிடைத்தவர்தான் (1941இல்) 20 வயதே நிரம்பிய இளைஞன் முத்துகிருட்டிணன். ஏற்கனவே சிறுவெளியீடுகளை அச்சடித்து வெளியிட்ட அனுபவம் முத்துகிருட்டிணனுக்கு இருந்ததால் அண்ணாவின் வேண்டுகோளை அவர் உடனே ஏற்றுக்கொண்டார். அண்ணா திருச்சியில் 1941-இல் திராவிட இயக்க வெளியீடுகளுக்காகத் தொடங்கப்பட்ட அந்த அமைப்புக்கு “திராவிடப் பண்ணை” என்னும் பெயரைச் சூட்டினார். தமிழ்ப் பண்ணை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினர் புராணங்களை வெளியிட்டால் திராவிடப் பண்ணை புராண எதிர்ப்பை வெளியிடவேண்டும். இந்திய விடுதலையை அவர்கள் பேசினால் நாம் சமூக விடுதலையைப் பேசவேண்டும். அவர்கள் தேசியக் கவிஞர் என்று அடையாளப்படுத்தி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளைக்குப் பொற்கிழி வழங்கினால், நாம் திராவிடக் கவிஞர் என்று பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கவேண்டும் என்று எதிர்நிலைப்பாட்டை அண்ணா எடுத்துத் திராவிடப் பண்ணையின் நோக்கங்களையும் வடிவமைத்தார். திராவிட இயக்க முன்னோடி என்.வி.நடராசன் மூலம் பாரதிதாசனைத் தொடர்பு கொண்டு, பின்னர்ப் பாரதிதாசனுக்கு அண்ணா பொற்கிழி வழங்கினார் என்பது வரலாறு. அண்ணாவைத் திராவிடப் பண்ணை என்ற ஓர் அமைப்பைத் தொடங்க உந்தித் தள்ளியது தமிழ்ப் பண்ணையே என்றால் மிகையில்லை. காங்கிரஸ் தேர்வு செய்த 21 இளைஞர் சின்ன அண்ணாமலைக்கு எதிராக அண்ணா 20 வயது நிரம்பிய முத்துகிருட்டிணனைத் தேர்வு செய்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பண்ணையின் வெளியீடுகள்

திராவிடப் பண்ணையின் வெளியீடுகள் அண்ணா திராவிட நாடு இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் பணியை மேற்கொண்டது. அண்ணா 1939இல் குடியரசு, விடுதலை திராவிட நாடு இதழ்களில் வெளிவந்த ஆரியமாயை, கபோதிபுரத்துக் காதல், ரோமாபுரி ராணி போன்ற தொடர்கள் 1941ஆம் ஆண்டு தொடங்கி நூல்களாக வெளிவந்தன. அண்ணாவின் நூல்கள் மட்டுமின்றி நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, கே.ஏ. மதியழகன், சி.பி.சிற்றரசு, இராம. அரங்கண்ணல், தில்லை வில்லாளன், முரசொலி மாறன், ஜே.ஜே.இராதாமாணாளன் ஆகியோர் எழுதிய நூல்களும் வெளியிடப்பட்டன.

“முதலில் திராவிடர் கழகத்தின் கருத்துகளையும் பின்னர்த் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகளையும் குறைந்த விலையில் மக்களைச் சென்றுசேரவே திராவிடப் பண்ணை திருச்சியில் தொடங்கப்பட்டது. திராவிடப் பண்ணை இலாபத்தை நோக்கமாகக் கொண்டு அண்ணாவால் தொடங்கப்படவுமில்லை, அண்ணாவின் நண்பர் முத்துகிருட்டிணனும் இலாப நோக்கில் நடத்தவுமில்லை. கொள்கை பற்றோடு திராவிடப் பண்ணை நடத்தப்பட்டது” என்பதைத் திருச்சி திமுகவின் முன்னோடி எஸ்.ஏ.ஜி.இராபி குறிப்பிடுகின்றார்.(நேர்காணல்-1999) ”1943இல் ஆரியமாயை என்னும் நூல் வெளியிடப்பட்டது. இது தொடக்கத்தில் 5000 படிகள் அச்சடிக்கப்பட்டன. 3 மாதத்தில் 15000 படிகள் அச்சடிக்கப்பட்டது. மக்களாலும் விரும்பி வாங்கப்பட்டது. இதைத் திராவிடப் பண்ணை தன் சொந்தப் பொறுப்பில் வெளியிட்டது. நிதி வேண்டி யாரிடமும் திராவிடப் பண்ணை கையேந்தி நிற்கவில்லை. தன்மானம், சுயமரியாதை, கொள்கைப்பிடிப்போடு வெளியிட்டது என்பது பெருமைக்குரிய செய்தியாகும்” என்று திராவிட இயக்கப் பேரூரையாளர் புலவர் செந்தலை ந.கவுதமன் என்திருச்சி மின்இதழுக்காக உரையாடினார்.

பண்ணையின் பன்முகம்

திராவிடப் பண்ணை தனக்கென ஒரு சொந்த அச்சகமில்லாது நூல்களை வெளியிட்டன. இதனால் திருச்சியில் உள்ள பல அச்சகங்களில் திராவிடப் பண்ணைக்கு என்று தனியே அலுவலகத்தை அமைத்துக் கொடுத்தனர். திருச்சி மதுரை சாலையில் (பழைய இராஜா திரையரங்கம் எதிரில்) அமைந்திருந்த அச்சகத்தில் இயங்கி வந்த திராவிடப் பண்ணை அலுவலகத்தில் அண்ணா, கலைஞர், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் போன்ற அந்தக் காலத் திராவிட இயக்கத்தினர் அனைவரும் திருச்சி வந்தபோது தங்கினர். 1952இல் திராவிடப் பண்ணையின் அலுவலகம் மேலரண் சாலையில் உள்ள கிலேதார் தெருவில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே கலைஞர் தலைமையில் திருச்சி மாவட்டச் செயலாளர் தேர்தல் நடைபெற்றது. மேலும் தலைவர் வரும் நேரங்களில் திராவிடப் பண்ணை முத்துகிருட்டிணன் இல்லத்திலிருந்து நண்பகல் உணவு கொண்டு செல்லப்பட்டுத் தலைவர்களுக்குப் பரிமாறப்படும். அண்ணாவின் புகழ் உயர …. உயர …. திமுக தொண்டர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக அண்ணா திருச்சி வந்தால் தான் எப்போதும் சங்கரன்பிள்ளை சத்திரத்தில் மீண்டும் தங்கினார் என்பது வரலாறு. திராவிடப் பண்ணை என்பது புத்தக வெளியிட்டு நிறுவனமாக இல்லாமல் தலைவர்களின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்திருந்தது. பண்ணை வெளியீடுகளின் வரவு-செலவுகள் மற்றும் அலுவலகப் பணிகளை முத்துகிருட்டிணன் தம்பி பொன்னுசாமி கவனித்துக் கொண்டார் என்று முத்துகிருட்டிணன் இளைய மகன் இரவீந்திரன் குறிப்பிட்டார். மேலும் பொன்னுசாமி அவர்கள் தன் சொந்தப் பொறுப்பில் மெஸ் என்னும் உணவகமும் நடத்தி வந்துள்ளார்.

திமுக உதயத்தில் முத்து

அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949இல் பிரிந்து செப்டம்பர் 16ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் அமைப்பைத் தொடங்கினார். அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்த காலக்கட்டத்தில் தனக்கென ஒரு நட்பு வட்டத்தை வளர்ந்து வந்துள்ளார் என்பதை அறியமுடிகின்றது. 1947ஆம் ஆகஸ்டு 15ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது. தந்தை பெரியார் குடிஅரசு இதழில் “துக்கநாள்” என்று அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அண்ணா தான் நடத்திவந்த திராவிட நாடு இதழில் “இன்ப நாள் இது… இனிய நாள் இது….” என்று பெரியாரின் அறிக்கைக்கு எதிர் அறிக்கை வெளியிட்டார். பெரியாரிடமிருந்து அண்ணா முரண்பட்டார். இந்நிலையில் திராவிடப் பண்ணை முத்துகிருட்டிணன் பெரியார் மீது பற்று கொண்டிருந்தாலும் அண்ணா மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த நிலையில், அண்ணாவின் இன்ப நாள் இது ….. இனிய நாள் இது” என்னும் அறிக்கையைத் தன் பெயர் போடாமல் சிறுநூலாக வெளியிட்டுள்ளார்.

திருச்சி சின்னையாபிள்ளை சத்திரத்தில் (தற்போதைய பெரியசாமி டவர்) திராவிடப் பண்ணை முத்துகிருட்டிணன் மதுரை சீதாலெட்சுமி திருமணம் அண்ணா தலைமையில் 14.09.1949ஆம் நாள் நடைபெற்றது. இம் மணவிழாவைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா பிரிவது என்ற முடிவு குறித்த ஆலோசனை திருச்சி சிந்தாமணியில் இயங்கி வந்த திராவிடப் பண்ணை அலுவலகத்தில்தான் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் திமுகவின் பல முன்னோடித் தலைவர்கள் கலந்து கொண்டனர். 16.09.1949ஆம் நாள் சென்னை இராபின்சன் பூங்காவில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கொட்டும் மழையில் தொடங்கினார். அந்நிலையில் திராவிடப் பண்ணை முத்துகிருட்டிணன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். தொடர்ந்து திமுகவின் முன்னோடித் தலைவர்களின் நூல்களைத் திராவிடப் பண்ணையின் மூலம் வெளியிட்டு வந்தார்.

ஆரியமாயைக்குத் தடை – வழக்கு

திராவிடப் பண்ணை வெளியிட்ட அனைத்து நூல்களும் வைதீகத்திற்கு எதிராக அமைந்திருந்தன. காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடுவதாக இருந்தன. குறிப்பாகப் பார்ப்பனர்களைக் குற்றம் சாட்டியும் அமைந்திருந்தன. 1943-இல் அண்ணா எழுதிய ஆரியமாயை தமிழகத்தில் மக்கள் ஆதரவைப் பெற்றுவந்தது. கிறித்தவப் பாதிரியார் ‘அபே துபே’ எழுதிய ஆரியர்களின் வாழ்க்கையும் பழக்கவழக்கமும் என்னும் ஆங்கில நூலின் உள்ளடக்கத்தின் அடிப்படையில்தான் அண்ணா ஆரியமாயை எழுதினார்.

இது பிராமணர்களின் மனத்தைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்று வெளிவந்து 7 ஆண்டுகள் கழித்து 1950ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பொறுப்பிலிருந்த குமாரசாமிராஜாவிடம் புகார் செய்தார்கள். இதன் அடிப்படையில் ஆரியமாயை நூலுக்குத் தடைவிதிக்கப்பட்டது. மேலும், நூலை எழுதிய அண்ணா மீது, நூலை வெளியிட்ட பண்ணை முத்துகிருட்டிணன் மீதும் திருச்சியில் வழக்கு தொடுக்கப்பட்டது.

தடைக்கு எதிர்ப்பு

இந்த வழக்கைப் பற்றி 1950இல் சென்னையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் அண்ணா,“ ஆரியமாயை வழக்குக்காகப் பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டுவிட்டுத் திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயணச் சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத்தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரிய மாயைக்கு அவர் தடைவிதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் மூலம் ஆரியமாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரியமாயை, இலட்சிய வரலாறு, இராவண காவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணாதுரை உள்ளதைத்தான் எழுதினான் என்று அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது. ஆரிய மாயை எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இனஎழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சிகளைத் திரட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. படிக்க மட்டுமேயன்றி, பிறருக்கு விளக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளர்களுக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா – பண்ணைக்குத் தண்டனை

1950 ஆகஸ்டு 18ஆம் நாள் திருச்சி நீதிமன்றத்தில் ஆரியமாயை நூல் தொடர்பாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அண்ணா எதிர்பார்த்ததைப்போலவே அமைந்திருந்தது. திருச்சி நீதிமன்றத் தீர்ப்பில்,“ ஆரிய மாயை  என்ற நூல் கா.ந.அண்ணாதுரை  எழுதிய ஒரு சிறு நூலாகும். மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்களைக் கடுமையாகச்சாடி எழுதப்பட்டுள்ளதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாக வழக்கில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. வழக்கில் வைக்கப்பட்ட கருத்துகள் உண்மையாகும். இந்தக் காரணங்களுக்காகவும், மக்களைக் கிளர்ச்சி  செய்ய வைக்கின்றன நூல் என்ற காரணத்திற்காகவும் கா.ந.அண்ணாதுரைக்கு ரூபாய் 700/- அபராதம் கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் , நூலை வெளியிட்ட முத்துகிருட்டிணனுக்கு ரூபாய் 500/- அபராதம் கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அண்ணா அபராதத் தொகை கட்டமுடியாது என்றும் சிறை செல்கிறேன் என்று அறிவித்தார். முத்துகிருட்டிணன் ரூ.500/- அபராதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டி விடுதலையானார். (1950இல் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.50/-இன்றைய மதிப்பில் சுமார் 4 இலட்சம்)

திருச்சி சிறையில் தந்தை – மகன்

1950ஆம் ஆண்டு ஆகஸ்டு 18ஆம் நாள் ‘பெரியாரின் பொன்மொழிகள்’ என்னும் நூலை வெளியிட்டமைக்காகத் தந்தை பெரியாருக்கும் 6 மாதச் சிறைத் தண்டனை என்று திருச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த பின்னர்ப் பெரியாரைச் சந்தித்துக் கிடையாது. இந்நிலையில் “திருச்சி சிறைக்கு ஒரே வேனில் தந்தை பெரியாரும் அண்ணாவும் எதிர்எதிரே அமர்ந்து சென்றனர். இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. வேனிலிருந்து சிறைக்குச் சென்ற இருவரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.

தந்தை பெரியார் அண்ணா மீது கோபம் கொண்டிருந்த நிலையிலும் அண்ணாவைத் தன் மகனாக எண்ணி வைத்திருந்த அன்பைக் குறைத்துக் கொள்ளவில்லை. தன்னைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் பழங்கள், ரொட்டி, பிஸ்கெட் போன்றவற்றைப் பெரியார் சிறையிலிருந்து காவலர்கள் வழியாக அண்ணாவுக்கு அனுப்பி வைத்தார். அண்ணாவும் பெரியார் அனுப்பிய பழங்கள் மற்றவைகளையும் ஏற்றுக்கொண்டார்” என்பதைத் திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக பொருளாளர் புலவர் வே.தியாகராசன் என்திருச்சி மின்இதழிடம் கூறினார்.

சிறையில் அண்ணாவின் முழக்கம்

அண்ணா சிறையில் அடைக்கப்பட்டவுடன், சிறையில் உள்ள கைதிகள் அண்ணாவைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் அண்ணாவை நோக்கி, “நீங்கள் எதற்காகச் சிறை படுத்தப்பட்டீர்கள்?” என்று கேட்டார்கள். அண்ணா சொல்கிறார், “என்னால் என்ன பதில் சொல்லமுடியும்? கன்னம் வைத்திருந்தால், சுவரேறிக் குதித்திருந்தால் சுலபமாகச் சொல்லியிருப்பேன். பேசாமல் இருந்தேன். மறுபடியும் கேட்டார்கள். “சர்க்காருக்கும் எனக்கும் சண்டை” என்றேன். அதிலே ஒரு கைதி சர்க்கார் பணத்தைக் கையாடல் செய்து உள்ளே வந்தவன். நானும் அதேபோல ஏதாவது செய்துவிட்டு வந்தேனா என்று கேட்டான். “இல்லை எதுவும் எடுத்துவிட்டு அதற்காக வரவில்லை. ஒரு புத்தகம் எழுதினேன் அதற்காகச் சிறை” என்றேன். புத்தகம் எழுதினால்கூடவா இந்தச் சர்க்கார் பிடிக்கிறார்கள்? என்று ஆச்சரியப்பட்டார்கள். “எதுவும் சர்க்காரைத் திட்டியிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். “சர்க்காரைத் திட்டவில்லை. பார்ப்பனியத்தைக் கண்டித்திருக்கிறேன். ஜாதி முறையைக் கண்டித்திருக்கிறேன்” என்றேன். உடனே ஒவ்வொருவரும், “ஐயோ, நாங்கள் படிக்கவில்லையே, படித்திருந்தால் நாங்களும் அதேமாதிரி புத்தகங்கள் எழுதுவோமே” என்று வருத்தப்படத் தொடங்கி விட்டார்கள் என்று அண்ணா திராவிட நாடு இதழில் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை – மகன் விடுதலை

அண்ணா திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட 1950 ஆகஸ்டு 18ஆம் நாள் அன்றே திருச்சி டவுன்ஹாலில் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. அண்ணா உடனே விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அண்ணா கைது செய்யப்பட்டதைக் கண்டித்துத் திமுகவின் சார்பில் “எழுத்துரிமை போர்” நடைபெறும். அந்தப் போரில் தடைசெய்யப்பட்ட ஆரியமாயை நூலைத் திமுகவினர் வீதிக்கு வீதி நின்று அனைவருக்கும் கேட்கும் வகையில் உரத்த குரலில் முழுமையாகப் படிப்பார்கள். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள 550 கிளைகளிலும் நடைபெறும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எழுத்துரிமைப் போர் வெற்றிகரமாக நடைபெற்றது. திராவிடர் கழகத்தினர் பெரியாருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர். தமிழகம் தந்தை – மகன் சிறையிலிருப்பதைக் கண்டித்துப் போர்க்கோலம் பூண்டது. மாநில அரசு திக, திமுக போராட்டங்களை நசுக்க எடுத்து முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் 6 மாதத் தண்டனை வழங்கப்பட்ட பெரியாரும் அண்ணாவும் 10 நாள்களில் திருச்சி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மீண்டும் ஒரே வேனில்

பெரியார் – அண்ணா விடுதலை உடனடியாக அறிவிக்கப்பட்டது. திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து பெரியாரை அழைத்துச் செல்ல வேன் வந்துவிட்டது. அண்ணா விடுதலை செய்யப்பட்ட செய்தி திருச்சி திமுகவினருக்குக் காலம் தாழ்ந்து கிடைத்தது. அதனால் அண்ணாவுக்குக் கார் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. பெரியார் வேனில் ஏறி அமர்ந்துவிட்டார். தன் ஓட்டுநரைப் பார்த்துப் பெரியார்,“அண்ணாதுரையை நம்ம வேனுக்கு வரசொல்லுங்க. எங்க போகவிரும்புகின்றாரோ அங்கே விடலாம்“ என்று தெரிவித்த செய்தி அண்ணாவிடம் சொல்லப்பட்டபோது,“வரவில்லை. எனக்குக் கார் வந்துவிடும்” என்று பதில் கூறினார். பெரியார் உரத்த குரலில், “அண்ணாதுரை வாய்யா வேனில் போலாம்” என்றவுடன் அண்ணா மறுப்பு சொல்லாமல் வேனில் ஏறிப் பெரியாருக்கு எதிராக அமர்ந்து கொண்டார். வேன் புறப்பட்டது. பெரியார் மாளிகையை வேன் அடைந்தது. அண்ணாவும் பெரியாரும் பேசிக்கொள்ளவேயில்லை. பெரியார் மாளிகையில் பெரியார் இறங்கிக் கொண்டார். அண்ணா ‘சங்கரன்பிள்ளை சத்திரம் செல்லவேண்டும்’ என்று வேன் ஓட்டுநரிடம் கூற, அண்ணா சங்கரன்பிள்ளை சத்திரத்தில் இறங்கிக் கொண்டார். மக்கள் கிளர்ச்சியால் விடுதலை செய்யப்பட்ட பெரியார் – அண்ணா மீது அரசு பழிவாங்கியது. “பெரியார் பயன்பாட்டிலிருந்த வேனைப் பறிமுதல் செய்தது. திராவிட நாடு அச்சிட வைத்திருந்த தாள்களை அரசு அண்ணாவிடமிருந்து பறிமுதல் செய்தது. பெரியார் வழக்கு தொடுத்து வேனை மீட்டுக் கொண்டார். அண்ணா தாள்கள் பறிமுதல் செய்ததை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்பதால் அண்ணாவுக்கு நட்டம் ஏற்பட்டது” என்ற வரலாற்று நிகழ்வுகளை என்திருச்சி மின்இதழுக்காக திராவிட இயக்கப் பேரூரையாளர் புலவர் செந்தலை ந.கவுதமன் பதிவு செய்தார்.

தளராத திராவிடப் பண்ணை

காங்கிரஸ் கட்சியின் அடக்குமுறை, நீதிமன்ற வழக்கு, சிறை தண்டனை, தண்டத் தொகை என்று திராவிடப் பண்ணை அரச வன்முறை கண்டு அஞ்சாது தன் பணியைத் தொடர்ந்து தொய்வில்லாது செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நூலின் பதிப்பும் 9-இலிருந்து 16 பதிப்பு வரை வெளியிடப்பட்டுள்ளது என்பதன் மூலம் பண்ணையின் மனஉறுதியை எளிதில் அறிந்துகொள்ளலாம். அண்ணாவின் கலைஞரின் பேரன்பைப் பெற்றிருந்த முத்துகிருட்டிணன் கட்சியில் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளவில்லை. சட்டமன்றம், சட்டமன்ற மேலவைகளில் உறுப்பினர் என்ற பதவியையும் பெறவில்லை. பதவிகள் தேடிவந்தபோதும் தந்தை பெரியாரையும் பேரறிஞர் அண்ணாவையும் ஏற்றுக்கொண்டு கொள்கை வழியில் பயணம் செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன். பதவிகள் கொள்கை வழி பயணத்தைக் கெடுத்துவிடும் என்பதில் இறுதி வரை முத்துகிருட்டிணன் உறுதியாக இருந்தார். மேலும் அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் (புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர்) கட்சியில் பிரச்சனை, கட்சிக்காரர் மனக்குறையோடு இருக்கிறார் என்றால் அங்கே பிரச்சனையைத் தீர்க்கவும் கட்சிக்காரரைச் சமாதானம் செய்யவும் தூது செல்லும் சமாதானப் புறாவாக முத்துகிருட்டிணன் திகழ்ந்துள்ளார். 1953இல் அண்ணா கைத்தறி துணிகளைத் திருச்சியில் விற்பனை செய்த நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடும்போது, இந் நிகழ்ச்சியில் பொன்மலை பராங்குசம், அன்பில், எம்.எஸ்.மணி நண்பர் திராவிடப் பண்ணை முத்துகிருட்டிணன் ஆகியோர் பங்குபெற்றனர்” என்று திராவிட நாடு இதழில் குறிப்பிடும் அளவுக்கு அண்ணாவின் நன்மதிப்பைப் பண்ணை பெற்றிருந்தார் என்பதை அறியமுடிகின்றது.

கலைஞர் – ஸ்டாலின் அரவணைப்பில்

முத்துகிருட்டிணன் மகன்கள் இராஜேந்திரன், இரவீந்திரன் திருமணம் திருச்சியில் கலைஞர் தலைமையில்தான் நடைபெற்றது. திருமண விழாக்களில் கலைஞரின் துணைவியார் தயாளுஅம்மாள் கலந்துகொண்டுள்ளார் என்பது சிறப்பான செய்தியாகும். திருச்சிக்கு வரும்போது திராவிடப் பண்ணை குடும்பத்தார் கலைஞரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரவீந்திரன் திருமணவிழாவில் பேசிய கலைஞர்,“குளித்தலை தொகுதியில் 1957-இல் போட்டியிட்டேன். அப்போது நான் கழகத்தின் பொருளாளர். தேர்தலில் போட்டியிட்டபோது எனக்குப் பொருளாளராக இருந்தவர் பண்ணை முத்துகிருட்டிணன். வெற்றி பெற்று 6 மாதம் கழித்துத் தொடர்வண்டியில் திருச்சி வந்துகொண்டிருந்தபோது, அரசு அதிகாரி ஒருவர், “திருச்சியில் எங்கே தங்குவீர்கள்” என்று கேட்டார்.

“பண்ணையில்தான் தங்குவேன்” என்றவுடன் அவர் நினைத்திருப்பார் சட்டமன்ற உறுப்பினராகி 6 மாதத்தில் பண்ணை வாங்கிவிட்டார் என்று. நான் சொன்னேன். ”பண்ணை என்பது எங்கள் இயக்கத்தின் திராவிடப் பண்ணை என்றேன். அவர் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் ரேகைகள் கலையவில்லை” என்பதன் மூலம் முத்துகிருட்டிணன் மீது கலைஞர் கொண்ட பேரன்பைப் புரிந்துகொள்ளமுடியும். கலைஞரைத் தொடர்ந்து திமுக தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் திருச்சி வந்தால் திராவிடப் பண்ணைக் குடும்பத்தாரைச் சந்திப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். முத்துக்கிருட்டிணன் மனைவி சீதாலெட்சுமி அம்மாளின் வாழ்த்துகளைப் பெறுவதை ஸ்டாலின் இன்றளவும் பெருமையாக எண்ணுகிறார். கடந்த மாதத்தில் முத்துகிருட்டிணன் மூத்த மகன் பண்ணை இராஜேந்திரனைச் சந்தித்து, திருச்சி (தெற்கு) மாவட்டச் செயலர், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்ட செய்தி முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

திராவிடப் பண்ணைக் குடும்பத்தினர்

திராவிடப் பண்ணை முத்துகிருட்டிணனின் 100ஆவது ஆண்டுவிழா அடுத்த ஆண்டில் வருகின்றது. தற்போது 99 வயது நிறைவடைந்துள்ள நிலையில் என்திருச்சி மின்இதழில் கட்டுரை எழுதுவதற்கான ஆதாரங்களையும் குறிப்பாகக் கடவுச் சீட்டு வழியாக முத்துகிருட்டிணன் பிறந்த ஆண்டு 1921 என்பதை அவரின் இளைய மகன் இரவீந்திரன் உறுதி செய்தார். முத்துகிருட்டிணன் மனைவி, அவர் இலங்கையின் கண்டி நகரில் பிறந்தார் என்பதை உறுதி செய்தார். முத்துகிருட்டிணன் மூத்த மகன் இராஜேந்திரனின் மகன் திராவிடப் பண்ணை கௌதம் இராஜேந்திரன் என்திருச்சி மின்இதழிடம் உரையாடினார். “எங்கள் தாத்தாவின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட இப்போதே தயாராகி வருகிறோம். அண்ணாவும் கலைஞரும் தாத்தாவை அன்பொழுக ‘பண்ணை’ என்றே அழைப்பர். கழகத் தலைவர் ஸ்டாலின் ‘பண்ணை மாமா’ என்றே அன்புடன் அழைப்பார். தாத்தா வழியில் நான் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர், திருச்சி தெற்கு மாவட்டச் செயலர் அன்பில் மகேஷ் அவர்களுடன் இருந்து கழகப் பணியாற்றி வருகிறேன்” என்றார்.

முத்துகிருட்டிணன் இளைய மகன் வழி பெயரன் முத்துதீபக் என்திருச்சி மின்இதழிடம். “அன்பிலும் தாத்தாவும் நண்பர்களாக இருந்தனர். என் அப்பாவும் பெரியப்பாவும் அன்பில் பொய்யாமொழி, அன்பில் பெரியசாமியும் இருவரிடம் கழக ரீதியில் நண்பர்களாக இருந்தனர். கழக ரீதியில் அன்பில் மகேஷ் அவர்களுடன் நான் நட்பில் இருந்து வருகிறேன். மலைக்கோட்டை பகுதி இளைஞர் அணி துணைஅமைப்பாளராக இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினால் நியமிக்கப்பட்டிருக்கிறேன். தாத்தாவைப் போலத் திராவிட இயக்கத்தின் வலிமைக்கும் திமுகவின் வெற்றிக்கும் அரசியல் களத்தில் உழைப்பேன். தாத்தாவின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட எண்ணம் கொண்டுள்ளேன். மீண்டும் திராவிடப் பண்ணை திராவிட இயக்க வரலாற்றில் வலம் வரவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று உரையாடினார்.

அண்ணாவோடும் கலைஞரோடும் அடர்த்தியான நட்பு கொண்டிருந்த முத்துகிருட்டிணன் கட்சியிலும் ஆட்சியிலும் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளாமல், திராவிட இயக்கத்தின் கருத்துப் பயிர்கள் வளர்வதற்குரிய பண்ணையாகத் திராவிடப் பண்ணையில் செயலாற்றித் திராவிட இயக்க வரலாற்றில் அழியாப் புகழுடன் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் முத்துகிருட்டிணன் 21.07.1990ஆம் நாள் இயற்கை எய்தினார். ஆரியமாயை என்னும் பார்ப்பன மேலாதிக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலச் சூழலிலும் திராவிடப் பண்ணைகளின் தேவைகள் பெருகிக் கொண்டேயிருக்கும். முத்துகிருட்டிணன்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும். www.digtialtamilbooks.com என்னும் இணையத் தளத்தில் ஆரியமாயை நூலின் பதிவிறக்கம் 7 இலட்சத்தைத் தாண்டியும் பதிவிறக்கம் நாள்தோறும் நடந்துகொண்டே இருக்கின்றது என்பது திராவிடப் பண்ணையின் உழைப்புக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக எண்ணலாம்.

——–

 

திராவிடப் பண்ணை வெளியீடுகள்

அண்ணா

 1. ரோமாபுரி ராணிகள்
 2. கம்பரசம் – 1
 3. கம்பரசம் – 2
 4. ‘ஆரியமாயை
 5. கபோதிபுரத்துக் காதல்
 6. கற்பனைச் சித்திரம்
 7. சிறுகதைகள்
 8. அண்ணாவின் ஆறு கதைகள்
 9. நிலையும் நினைப்பும்
 10. ஏ! தாழ்ந்த தமிழகமே
 11. குமரிக்கோட்டம்
 12. 1858 – 1948
 13. மே தினம்
 14. விடுதலைப்போர்
 15. அறப்போர்
 16. இலட்சிய வரலாறு
 17. பணத்தோட்டம்
 18. தீப் பரவட்டும்
 19. வர்ணாசிரமம்
 20. கலிங்கராணி
 21. உலகப் பெரியார்
 22. ஜமீன் இனாம் ஒழிப்பு
 23. ரேடியோவில் அண்ணா
 24. அவர்கள் சந்திப்பு

நாவலர் நெடுஞ்செழியன்

 1. மொழிப் போராட்டம்
 2. பண்டைய கிரேக்கம்
 3. மதமும் மூடநம்பிக்கையும்
 4. கலித்தொகையும் காதல் காட்சிகளும்

கலைஞர் கருணாநிதி

 1. பழக்கூடை
 2. நாடும் நாடகமும்
 3. கண்ணடக்கம்
 4. இரத்தக்கண்ணீர்
 5. ஆறுமாதக் கடுங்காவல்
 6. முத்தாரம்
 7. வெள்ளிக்கிழமை
 8. விடுதலைக் கிளர்ச்சி
 9. பூந்தோட்டம்

சி.பி.சிற்றரசு

 1. கொலம்பஸ்
 2. சாக்ரடீஸ்

இராம. அரங்கண்ணல்

 1. இராசுப்புட்டீன்
 2. ரோம்
 3. இதயகீதம்
 4. உடைந்த இதயம்

முரசொலி மாறன்

 1. வால் நட்சத்திரம்

கே.ஏ.மதியழகன்

 1. நன்றி யாருக்கு
 2. டாக்டரம்மா

தில்லை வில்லாளன்

 1. இருளும் ஒளியும்
 2. கிளிக்கூண்டு

ஜே.ஜே.இராதாமணாளன்

 1. எழிலரசி கிளியோபாட்ரா
 1. பசி

 

3 half

Leave A Reply

Your email address will not be published.